September 30, 2023
அரசியல் கட்டுரைகள்

இந்தியாவின் புதிய எழுச்சியும் ஈழத்தமிழரது அரசியல் அதிகாரத்திற்கான எதிர்காலமும்?

இலங்கை-இந்திய அரசியல் -பொருளாதார உறவு வலுவான நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரும் இந்திய வெளியுறவு அமைச்சரும் அத்தகைய உறவு நிலையை அடையாளப்படுத்தும் விதத்தில் அண்மைக்கால வெளிப்பாடுகள் அமைந்துள்ளன. புரிதலோடு அவதானிக்ககும் போது புதுடில்லி-கொழும்பு உறவு பலமானதாகவே அமைந்துவருகிறது. இது கொழும்பு நோக்கில் இல்லாதிருந்தாலும் புதுடில்லியின் அணுகுமுறையில் அத்தகைய நட்புறவை பேணவே அதிகம் முனைகிறதென்பது மேற்குறித்த இரு இராஜதந்திரிகளது வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன. இக்கட்டுரை இந்திய-இலங்கை உறவையும் அதனைக்கடந்து இந்தியாவின் போக்குகள் சார்ந்தும் தேட முயலுகிறது.

வடமாகாண ஆளுநர் பி.எப்.எம்.சாள்ஸ்ஸை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பால்கே 27.05.2023 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடிய போது வடக்கு மாகாண மக்களின் நலனுக்காக இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்குப் போது வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலனில் இந்தியா அக்கறையுடன் செயல்படும் எனவும் வெளிப்படுத்தியிருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது, சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு நிதி உதவியினை வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். அவர் மேலும் வெளிப்படுத்தும் விடயங்களாக, இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவுகள், வளைகுடா நாடுகள்,தென்கிழக்காசிய நாடுகள் என்பவற்றை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலக உறவை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கவனம் செலுத்திவருகிறது. இந்தியா எழுச்சிபெறும் சக்தி என்ற தொனிப்பொருளில் கருத்துரைக்கும் போதே அத்தகைய இந்திய நிலைப்பாட்டை அடையாளப்படுத்தினார். மேலும் தொடர்புகளும் அண்டை நாடுகளில் இந்தியா பற்றிய பார்வையும் மாற்றமடைந்துள்ளது. இலங்கையில் கடந்த வருடம் நடைபெற்ற விடயங்களைவிட வேறு எதுவும் வியத்தகு விதத்தில் இதனை வெளிப்படுத்த முடியாது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் இந்தியா உதவியது.இந்த அரங்கிலிருக்கும் எவரேனும் இலங்கைக்கு சமீபத்தில் சென்றிருந்தால் இந்த உதவியால் இந்தியா குறித்த மாற்றமடைந்துள்ள கருத்தை அவதானிக்க முடியும். தற்போதைய இந்திய அரசாங்கம் தற்போது பெரும் இலட்சியம் மிக்க செல்வாக்கு மிக்க இந்தியாவுக்காக முயற்சிக்கிறது.இந்தியா தனது அயலக உறவை விஸ்தரிக்க முயலுகிறது. இந்தியா தனது அயலக உறவில் சுருக்கப்பட்ட பார்வையிலிருந்து இலட்சியம் மிக்க பார்வையை நோக்கி மாறமுயலுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இரு இந்திய இராஜதந்திரிகளதும் உரையாடலை அவதானிக்கும் போது பின்வரும் நியமங்களை நோக்கி இந்தியா நகர்வதாகவே விளங்கிக் கொள்வது பொருத்தமானது.

முதலாவது, இந்தியத் தூதுவர் கோபால் பால்கேவினது வடமாகாணம் பொறுத்த இந்திய நிலைப்பாடு பொருளாதார அபிவிருத்தி சார்ந்தது. அதிலும் இந்தியாவின் பொருளாதார முதலீட்டுத் திட்டங்கள் குறித்தே தூதுவர் வடக்கு ஆளுநருடன் அதிகம் உரையாடியுள்ளார். அவ்வாறாயின் இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள பொருளாதார திட்டங்களை முதன்மைப்படுத்தியே கவனம் கொள்கிறது. அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநருடனும் உரையாடும் போது தூதுவர் அத்தகைய பொருளாதார அபிவிருத்தி பற்றியே உரையாடியிருந்தார். வடக்கு கிழக்கில் உள்ள மக்களது நலன் பொருளாதார அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்ற முடிபையே இத்தகைய நகர்வுகள் தெளிவுபுடுத்துகின்றன. அரசியல் தீர்வு பற்றிய உரையாடலை அதிகம் உச்சரிக்கும் தமிழ் தரப்பு அதனை இந்தியாவுக்கூடாக மேற்கொள்ள முடியும் என்ற பிரமையை வெளிப்படுத்திவருகின்றனர். ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவும் என்ற நம்பிக்கையை அதிகம் வளர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவோ ஈழத்தமிழரது இனப்பிரச்சினைக்கு பொருளாதார அபிவிருத்தியை கருத்தில் கொள்வதுடன் வடக்கு கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியையே தற்போது முதன்மைப்படுத்தி வருகிறது. ஆனால் ஈழத்தமிழரது பிரச்சினை அரசியல் சார்ந்ததென்பதுடன் அதுவே முதன்மையானதும். அரசியல் பிரச்சினை தீர்க்கப்படுமாயின் பொருளாதாரமும் சமூக கட்டமைப்பும் விருத்தியடைவதுடன் வடக்கு கிழக்கின் இருப்பு மீதான தென் இலங்கையின் ஆதிக்கமும் முடிபுக்கு கொண்டுவர வாய்ப்பு ஏற்படும். ஜனநாயகத்தை ஏற்படுத்துவதனாலோ, மனித உரிமைகளை நிலைநாட்ட முயல்வதனாலோ, பொருளாதாரத்தை விருத்தி செய்வதனாலோ எந்த மாற்றமும் ஈழத்தமிழரது அரசியலில் ஏற்படப் போவதில்லை. கடந்த 14 ஆண்டுகளாக அனைத்து முயற்சிகளும் அத்தகைய நோக்குநிலையிலேயே உருவாகட்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் அத்தகைய முயற்சிகளால் ஈழத்தமிழர் எந்த நலனையும் அடையவில்லை. மாறாக முரண்பாடும் பகைமையும் அதிகரித்ததுடன் தென் இலங்கையின் ஆக்கிரமிப்பு மத. மொழி, பண்பாட்டு ரீதியாக அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது. ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியை இந்தியா முன்னெடுப்பதே தேவையான விடயமாகும். காரணம் வடக்கு கிழக்கை பொருளாதார விருத்தியாக நோக்க முயலும் போது ஈழத்தமிழர் இடப்பெயர்வும் புலம்பெயர்வம் அதிகரிக்க வாய்பு உருவாகும். இது வடக்கு கிழக்கை முழுமையாக ஈழத்தமிழர் இழக்கும் நிலை ஏற்படும். இது இந்தியாவின் செல்வாக்கை முழுமையாக இலங்கைத் தீவிலிருந்து அகற்றும். தென் இலங்கை ஆட்சியாளருடன் ஒன்றிணைந்து செயல்படலாம் என இந்திய இராஜதந்திரிகளும் கொள்கைவகுப்பாளர்களும் கருதலாம். ஆனால் கடந்தகால இராஜதந்திரிகளான ரொமேஸ்பண்டாரி, டீக்ஷித் மற்றும் வெங்கடேஸ்வரன் போன்றவர்களது அனுபவத்தை இவர்கள் விளங்கிக் கொள்வது சிறப்பானதாக அமையும். அவர்களது அனுபவத்தை கொண்டு நோக்கும் போது இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு அயல் நாடு என்ற அடிப்படையிலான தகமையைத் தவிர அனைத்தையும் இந்தியா இழக்க நேரிடும். இந்தியா இலங்கைத்தீவை இழந்தால் இந்து சமுத்திரத்தை இழக்கநேரிடும். தற்போது கூட அத்தகைய சவாலுக்குள் தான் இந்தியாவினது இந்துசமுத்திரம் பற்றிய நிலையுள்ளது. இதனை இந்தியா தவிர்க்க வேண்டுமாயின் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொள்ளாது ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கான அழுத்தங்களை தென் இலங்கை மீது பிரயோகிக்க வேண்டும். தற்போதுள்ள நிலை சாதகமானது. ஈழத்தமிழரது நலனும் தேவையும் இனப்பிரச்சினைக்கான தீர்வு மட்டுமே. அதற்கான வாய்ப்புக் கிடைக்குமாக அமைந்தால் பொருளாதார அபிவிருத்தியையும் சமூக பாதுகாப்பையும் ஈழத்தமிழரது நலனையும் அவர்களது அரசியல் கட்டமைப்பு சாத்தியப்படுத்தும். அது இறைமை பொருந்திய வடக்கு கிழக்கை கட்டமைக்கும். அரசியல் அதிகாரம் முதன்மையானதாக சாத்தியப்படும் போது பொருளாதார பலம் சாத்தியமாகும். அரசியல் அதிகாரமற்ற பொருளாதார கட்டுமானம் அனைத்தும் தென் இலங்கைக்கு சேவகம் செய்வதாகவே அமையும். 1983 ஆம் ஆண்டு யூலைக்கலவரம் ஈழத்தமிழருக்கு தந்த பாடமே அதுவாகும். அதாவது அரசியலதிகாரமின்மையால் பொருளாதாரத்தை பாதுகாக்க முடியாது ஏற்பட்டது. அதனையே மீளவும் ஏற்படுத்தும். 1983 இல் அது தென் இலங்கையை மையப்படுத்தி ஏற்பட்டது. இனி வடக்கு கிழக்க்கை மையப்படுத்தி ஏற்படும். அது கலவரமாக அமைந்தது. இனி கலகமாக அமையும். அமைதியாக அரங்கேறும்.

இரண்டாவது, இந்திய வெளியுறவு அயலக உறவை விஸ்தரிக்க திட்டமிடுகிறதே அன்றி இலங்கைத் தீவு போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றிய அணுகுமுறை எதனையும் கருத்தில் கொண்டிருக்கவில்லை என்பது இந்திய வெளியுறவு அமைச்சரது வெளிப்பாடு தருகிறது. இந்துசமுத்திர தீவு நாடுகளை நோக்கிய உறவானது பொருளாதார தேவைகளை வலுப்படுத்தும் உத்தியுடன் கட்டமைக்கப்படுவதாகவே தெரிகிறது. ஏற்கனவே இந்தியா ஏற்றுமதியை அதிகரிக்கவும் தனது நாணயத்தில் வர்த்தகத்தை மேற்கொள்ளவும் தயாராகிவிட்டது. அதனை செயல்வடிவமாக்கவும் இந்தோ-பசுபிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்தியாவின் நட்புறவை அயல் நாடுகள் மத்தியில் சுமூகமாக்கவும் திட்டமிடுகிறது. இலங்கைத் தீவுக்கு வழங்கிய நிதி உதவியின் அடிப்படையில் நட்புறவை வளப்படுத்த முடியுமென வெளியுறவு கருதுகிறது. இந்தியா பற்றிய இலங்கைத் தீவின் பார்வை மாறியுள்ளதாகவும் இந்திய வெளியுறவு குறிப்பிட்டு உரைகிறது. அதனை இலங்கைக்கு விஜயம் செய்யும் மக்கள் உணரமுடியுமெனவும் கருத்துக் கூற முனைகிறது. இவ்வாறு எத்தனை தடவை இந்தியாவை தென் இலங்கை கையாண்டதென்ற வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஓய்வு நிலையில் தென் இலங்கை அரசியல் தலைவர்களும் இராஜதந்திரிகளும் இந்தியாவை ஏமாற்றிவிட்டார்கள் என நூல் ஒன்றை எழுத முனையலாம். வேறு எந்த வாய்ப்பும் ஈழத்தமிழருக்கு சாத்தியமாகப் போவதில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் அத்தகைய அனுபவம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தமும் 13 வது தீத்தச்சட்டமூலமும் அதே அனுபவத்தை தந்தது. ஆனால் ஏனையவற்றைவிட 13வது திருத்தத்தால் இந்தியா மீளமுடியாத நிலைக்குள் அகப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல ஈழத்தமிழரும் அதற்குள் அடங்குவார்கள்.

எனவே, இந்தியாவின் போக்கினை ஈழத்தமிழர்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் அரசியல் தலைவர்களும் இந்தியா பொறுத்த நகர்வகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் பலவீனமாக உரையாடல்களை தவிர்க்க வேண்டும். இந்தியா பிராந்திய பாதுகாப்பையும் பொருளாதார அபிவிருத்தியையும் முதன்மைப்படுத்த முனைகிறதே அன்றி ஈழத்தமிழர் சார்ந்து எந்த முடிபையும் கவனத்தில் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இலங்கைத் தீவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈழத்ததமிழருக்கு வழங்கவில்லை என்பதை இரு இராஜதந்திரிகளும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா எழுச்சிபெறும் சக்தியாக மாறுகிறதென்பதைக் கடந்து அத்தகைய எழுச்சியானது ஈழத்தமிழருக்கு பொருளாதார அபிவிருத்தியையே கொடுக்கப் போகிறதென்ற உண்மையை இருவரது வெளிப்படுத்துகையும் உணர்த்துகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)