இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் ஒரு நெருக்கடிக்குள் அகப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் இலங்கைக்குள் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை பிராந்திய சர்வதேச நாடுகள் உதவியதன் மூலம் மீளமுடிந்தது. ஆனால் தற்போது உலகப் பொருளாதார நெருக்கடி ஒன்றிற்கான சூழல் எரிபொருள் சார்ந்து ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டின் தாக்குதல் பெற்றோலியத்தின் விலைப் பொறிமுறையை மட்டுமின்றி சுற்றுலாத்துறை வர்த்தகம் உற்பத்தி பரிமாற்றம் போன்ற அனைத்து அம்சங்களையும் பாதித்துள்ளது. இதன் வரிசைக்குள் இலங்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் மேலும் நெருக்கடியை எதிர்கொள்ள போகின்றது. அதிலிருந்து தப்பிக் கொள்வது பற்றிய உரையாடலை அரசாங்கமும் எதிர்கட்சிகளும் உரையாடுகின்றனர்.
இலங்கைக்கு தற்போது அவசியமானதும் தமிழ் மக்களுக்கு நன்கு பயிற்றப்பட்டதுமான பொருளாதார தேசியவாதம் நோக்கி நகர வேண்டிய தேவை எழுந்துள்ளது. அரசியல் ரீதியில் தேசியவாதம் பற்றிய உரையாடல்களில் அதிகம் பயிற்றுவிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு பொருளாதார தேசியவாதத்தின் அவசியம் உணர வேண்டிய காலப்பகுதி எழுந்துள்ளது.
பொருளாதார தேசியவாதம் என்பது ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை தொழில் துறைகள் மற்றும் தொழிலாளர்களின் சர்வதேச நலன்களை காட்டிலும் முன்னுரிமைப்படுத்தும் ஒரு அம்சத்தை குறிப்பதாகும். இது சுயசார்புப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான வழிமுறையாகும். ஒதுக்கீடுகள் மானியங்கள் போன்றவற்றுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை குறிப்பதாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. ஏறக்குறைய உலகமயமாக்கத்தில் இருந்து அரசின் தலையீட்டை நோக்கிய மாற்றத்திற்கான பொறிமுறையை குறிப்பதாகும். உலக நாடுகளின் போட்டியை எதிர்த்து போராடுவது பொருளாதார உறுதித்தன்மையை பாதுகாப்பது மற்றும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்குமான நடவடிக்கையாக காணப்படுகிறது. இதனையே சமீப காலங்களில் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பை இரண்டாவது தடவை ஏற்றுக்கொண்ட பின் அவ்வகையான பொருளாதார தேசியவாதம் அமெரிக்காவினால் முதன்மைப்படுத்தப்பட்டது. இதனை Pசழவநஉவழைn நுஉழழெஅல என்று அழைக்கின்றனர். இதற்கு அரசின் தலையீடு பொருளாதார பாதுகாப்பு சுயசார்பு மற்றும் வெற்றி-தோல்வி கோட்பாடு போன்ற அம்சங்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடியவையாக காணப்படுகின்றன. இதன் வரலாற்றை தேடுகின்ற போது வாணிபவாதத்தின் இன்னொரு பரிமாணமாக அடையாளப்படுத்தப்படுகிறது. உலக சந்தைகளின் சூழலில் தேசிய பொருளாதாரங்களை உருவாக்க, வலுப்படுத்த மற்றும் பாதுகாக்கும் நடைமுறைகளின் தொகுப்பாக பொருளாதார தேசியவாதம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவ்வகை பொருளாதார தேசியவாதத்தின் அவசியம் ஏன் அதிகம் உணரப்படுகின்றது. அதனை தமிழ் மக்கள் போர்க் காலத்தில் எவ்வாறு கட்டமைத்திருந்தனர் அல்லது எதிர்கொண்டிருந்தனர் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும்.
பொருளாதார தடை விதிக்கப்பட்ட சூழலில் சாதாரண மக்களில் இருந்து நகரவாள் உயர் வர்க்கங்கள் வரையும் வடக்கு கிழக்கு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தனர். சேமிப்பு சிக்கனம் சக்தி வளங்களின் பிரயோகத்தில் மட்டுப்பாடு நுகர்வின் அளவீடு உடல் ஆரோக்கியத்தை நோக்கிய பயிற்சியும் உழைப்பும் என்பன பாதுகாப்பான பொருளாதார கட்டமைப்பிற்கு உதவியது. இதனை கடந்து இலாபத்தில் எல்லைகளை அதிகம் நுகர்வதற்கு பல வர்த்தகர்களும் முதலாளிகளும் முயன்றனர் என்பது அக்காலப்பகுதியின் பதிவாக உள்ளது. ஆனாலும் சாதாரண மக்கள் மத்தியில் பொருளாதாரத்தடை எதிர்கொள்ளுகின்ற விதத்தில் உள்ளூர் உற்பத்திகளையும் நுகர்வின் மரபுகளையும் வகைப்படுத்திக் கொள்ள அத்தகைய வகைப்பாடு அவர்களின் இருப்பை உத்தரவாதப்படுத்தியது. அதில் ஓர் உள்ளூர் நலனும் காணப்பட்டது. அதாவது அன்றைய சூழலில் அரசமைவதற்கான கருத்தியல் தாக்கமும் ஒன்றிணைந்திருந்தது.
தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பது இலங்கை தீவு முழுவதுமான நெருக்கடிகவே அமைந்துள்ளது. அதனால் 1970 களில் இலங்கையின் மூடிய பொருளாதார அனுபவம் மற்றும் வடக்கு கிழக்கு மீதான பொருளாதாரத் தடையின் அனுபவமும் இலங்கைத் தீவில் உள்ள மக்களுக்கு உண்டு என்பது புரிந்து கொள்ள வேண்டிய அம்சமாகும். ஆனால் அன்றைய மரபுகளோடும் பாரம்பரியங்களோடும் இன்றைய இளம் தலைமுறையினர் அல்லது அடுத்து வந்து தலைமுறையினர் இல்லை என்ற அடிப்படையில் இவ்விடத்தை இலகுவில் யாரும் நிராகரித்து விட்டுப்போக முடியும். ஆனால் அவ்வாறான ஒரு சூழல் மிக மோசமான நெருக்கடியை தோற்றுவிக்கக்கூடியது. கடந்த வாரத்தில் முதல் இரு நாட்களில் அமெரிக்கா இஸ்ரேலிய தாக்குதல் வடக்கில் மட்டும் 30 கோடி பெற்றோலிய பொருட்களின் கொள்வனவை ஏற்படுத்தி இருந்ததாக சில தகவல்கள் உண்டு. இது ஒரு வகையில் விழிப்புணர்வாக பார்க்கப்பட்டாலும் நடைமுறையில் அசாதாரணமான நிலைமையே அச்சத்தை தந்துள்ளது. இது துரதிஷ்டவசமான முடிவுகளை தந்திருக்கின்றன. அதனால் இன்றைய தலைமுறையினரும் கடந்த தலைமுறைகளின் ஏற்பட்டுவரும் மாற்றமும் ஒன்றிணைந்து புதிய தலைமுறையின் போக்குகளை வடிவமைத்து வருகிறது. இதில் பொருளாதாரத் தேசியவாதத்தை நோக்கி ஒரு தேசம் நகர்வதென்பது கடினமான இலக்காகவே தெரிகிறது. இதனால் மூடிய பொருளாதாரத்துக்கோ பொருளாதார தடைக் காலபகுதிக்கும் செல்ல வேண்டும் என்ற விவாதம் அல்ல. மாறாக இந்த காலப் பகுதியை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுக்க வேண்டிய தேவைப்பாடு இலங்கை தீவில் உள்ள ஒவ்வொருவருக்கும் உரித்தான அம்சமாகும். இலங்கை முழுவதும் விசேடமாக வடக்கு சிறுகைதொழில் முயற்சியாளர்களையும் உற்பத்தி முயற்சியாளர்களையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அரசாங்க தரப்பினால் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. அது ஒரு ஆரோக்கியமான செய்முறையாக காணப்படுகிறது. அதனை மேலும் பலப்படுத்துவதும் அதற்கான அறிவியல் ரீதியான உரையாடல்களை வளர்ப்பதும் அதற்கு ஊடாக உற்பத்திகள் தமிழ் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதும் ஒட்டுமொத்த இலங்கை தீவின் உற்பத்தியின் அதிகரிப்பு சாத்தியப்படுத்துவதும் இன்றைய காலப் பகுதியை எதிர்கொள்வதற்கான வாய்ப்பானதாக தெரிகின்றன.
எனவே இலங்கை தீவின் பொருளாதாரம் நெருக்கடி பொருளாதார தேசிய வாதத்தின் ஊடாக கட்டி எழுப்பப்பட வேண்டிய ஒன்றாகவுள்ளது. அதிலும் குறிப்பாக உள்நாட்டின் உற்பத்தி சார்ந்த தேசிய உணர்வை கட்டமைப்பது நுகர்வின் பரிமாணங்களை நிர்ணயிப்பது ஊக்குவிப்புகளை சாத்தியப்படுத்துவது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அதனை நோக்கி தமிழ் மக்களும் இலங்கை தீவின் அனைத்து தரப்பினரும் பயணிக்க வேண்டிய ஒரு தேவைப்பாடு எழுந்திருக்கின்றது. அமெரிக்காவின் பொருளாதார தேசியவாதம் போன்ற பரிமாணத்தை இலங்கை மக்களும் தமிழ் மக்களும் அடைய முடியாது. ஆனால் தமது சுயசார்பு பொருளாதாரத்தை வளங்களை மையப்படுத்தி கூர்மைப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தெளிவான அரசியல் பொருளாதார நகர்வாகத் தெரிகின்றது. ஜே.வி.பி. பலமான உள்ளூர் கட்டமைப்புகளை தென்னிலங்கையில் கொண்டிருப்பதும் இதற்கான வாய்ப்பாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
