அரசியல் கட்டுரைகள்

வீழ்ச்சியை நோக்கி நகர்கிறதா அமெரிக்கா?

சர்வதேச அரசியலில் அண்மைக்காலமாக அமெரிக்காவின் பேரரசுவாதம் முடிவுக்கு வருவதாக ஆய்வுகளும் கருத்துகளும் உரையாடப்படுகிறது. அதிலும் அமெரிக்கப் பொருளியல் பேராசிரியர் றிச்சட் வேல்ப் , அமெரிக்காவின் அத்தியாயம் சரிவடைவதாக விவாதித்து வருகிறார். அமெரிக்கப் பேரரசின் வீழ்ச்சி மட்டுமல்லாது சீனாவின் எழுச்சியையும் முதன்மைப்படுத்தி வருகிறார். றிச்சட் வேல்ப் விவாதம் முழுமையாக பொருளாதாரம் சார்ந்ததாக அமைந்தாலும் அரசியல் பொருளாதாரமாக உரையாடும் அனைவரும் அமெரிக்காவின் யுகம் முடிவுக்கு வருவதாக கருத்துரைக்கின்றனர். அமெரிக்காவின் கடற்படைத் தளபதியும் அமெரிக்க கடற்படை உருவாக்கத்திற்கு வழிகோலியவருமான தயார் மாகன் 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு எனக் குறிப்பிட்டதை நோக்கி றிச்சட் வேல்ப் தனது கருத்துக்களை குவிவடைச் செய்கின்றார். இக்கட்டுரையும் அமெரிக்கப் பேரரசுவாதம் சரிவடைகிறதா என்பதை தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது றிச்சட் வேல்ப் முன்வைக்கும் கருத்துக்களை நோக்குவது பொருத்தமானது. அதாவது றிச்சட் வேல்ப் நான்கு விடயங்களை முதன்மைப்படுத்துகிறார். ஒன்று, முதலாளித்துவம் நவதாராளவாதத்திலிருந்தும் பூகோளவாதத்திலிருந்தும் தேசியவாத முதலாளித்துவத்திற்கு மாறுகிறது என்கிறார். அதாவது மேற்கு ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ஆசியா மற்றும் தென்பூகோளத்திற்கு முதலாளித்துவத்தின் மையம் மாறுவதும் பெரும்பாலான நாடுகளில் ஆழமாகிவரும் பொருளாதார சமத்துவமின்மையும் இதற்குள் அடங்குவன என்கிறார். இரண்டு, தனியார் மற்றும் அரச முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவம் எதிர் சோஸலிஸம் மற்றும் அரசு தனியார் சேர்ந்த கலப்பு முதலாளித்துவம் என்ற கோட்பாடுகள் முடிவுக்கு வருவதாக குறிப்பிடுகின்றார். மூன்று, அமெரிக்கப் பேரரசின் உச்சக்கட்ட சரிவு. நான்கு, புதிய முதலாளித்துவத்தின் எழுச்சி. அதாவது பல்லின உலகம் அல்லது முதலாளித்துவ பணியாளர் பணியிட அமைப்புக்களை, தனியார் மற்றும் பொது ஜனநாயக முறைமையில் இயங்கும் தொழிலாளர் கூட்டுறவு அமைப்புக்களுடன் மாற்றும் புதிய முதலாளித்துவ அமைப்பின் உருவாக்கம் என்கிறார்.

இன்னோர் தளத்தில் ரஷ்ய -உக்ரைன் போருக்கு அமெரிக்க வழங்கிவரும் ஆதரவு தவறானது என்கிறார். அது வெறும் ரஷ்யாவின் GDP இன் அளவை வைத்துக் கொண்டு திட்டமிடப்பட்ட போர் எனக் குறிப்பிடுகிறார். ரஷ்யா வேகமாக சரிந்துவிடும் என்ற கணக்கு அமெரிக்காவிடம் இருந்ததாகவும் ஆனால் ரஷ்யா புதிய நண்பர்களைக் கொண்ட அணியாக தன்னை மாற்றிக் கொண்டு தக்கவைத்துள்ளது. எனக்குறிப்பிடுகிறார்.

அது மட்டுமல்ல ஐரோப்பாவுக்குள் எழுந்துள்ள அமெரிக்காவுக்கு எதிரான முரண்பாடும் இத்தகைய போரின் இன்னோர் விளைவு எனக்குறிப்பிடும் றிச்சட் வேல்ப் ஐரோப்பிய முதலாளித்துவம் இடம்மாற இதுவொரு காரணம் என்கிறார்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும் றிச்சட் வேல்ப் அதன் GDP அமெரிக்காவைவிட அதிகமானது எனவும் அது தென் பூகோள நாடுகளின் பொருளாதார உறவின் மூலம் பலமானதாக வைத்துள்ளது என்கிறார். புதிய எழுச்சி பெறும் முதலாளித்துவத்திற்கு சீனாவே பின்புலமாகவுள்ளது எனக் குறிபிடும் வேல்ப் சீனாவே அடுத்த பேரரசு எனவும் விவாதிக்கின்றார்.

சீனாவின் அரசியல் நகர்வையும் சுட்டிக்காட்டும் றிச்சர்ட் மிக மோசமான விரோதியாக விளங்கிய ஈரானையும் -சவுதி அரேபியாவையும் நட்பு நாடுகளாக மாற்றியதில் சீனாவின் பங்கு உலகளாவிய அரசியலில் ஈடுபாட்டை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது என்பதை காட்டுகிறது என்கிறார். இதற்கு வலுச்சேர்க்கும் விதத்திலுள்ள புறவயமான காரணிகளை புரிவது அவசியமானது.

முதலாவது, பென்டகன் கசிவு எனக் குறிப்பிடப்படும் அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் வெளியான விடயம் கவனத்திற்குரியது. குறிப்பாக உலகப் பெருவல்லரசின் இராணுவ இரகசியங்கள் உலக நாடுகளைப் பற்றிய தகவல்கள் தனது நட்பு நாடுகளில் அமெரிக்கா மேற்கொள்ளும் ஆபத்தான கண்காணிப்புக்கள் மற்றும் ரஷ்ய, -உக்ரைன் போரில் நேட்டோ நாடுகளின் விசேட இராணுவப் பிரிவுகளின் பெயரில் நிகழும் படைக்குவிப்பு போன்ற விடயங்கள் அதிக நெருக்கடியை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதுவொரு பேரரசின் சரிவுக்குரிய அடையாளமாகவே தென்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் விக்கிலீக்ஸ் கசிவு ஏற்பட்ட போதும் இவ்வாறான உரையாடல்களே மேலோங்கியிருந்தன. ஆனால் அமெரிக்காவின் இருப்பு தளர்ந்து போகவில்லை என்றே கூறவேண்டும். காரணம் அமெரிக்கா என்பது தனியான பேரரசாக இல்லாது முதலாளித்துவத்தின் பேரரசாக அல்லது ஏகாதிபத்தியத்தின் பேரரசாக விளங்குவதாகும். தற்போது தென் கொரியா அமெரிக்காவால் கண்காணிக்கப்படுகிறதென்ற பென்டகன் கசிவு வெளியான பின்பும் இரு நாட்டுக்குமான உறவு பலமானதாகவே உள்ளது. அதன் பின்னரே இருநாட்டுக்குமான அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் தென் கொரியாவில் நிறுத்தப்பட்டு, வோசிங்டன் உடன்பாடு எட்டப்பட்டமை கவனிக்கத்தக்கது.

இரண்டு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சி பற்றியது. குறிப்பாக அமெரிக்காவின் வங்கிகளின் வீழ்ச்சியும் டொலரின் வீழ்ச்சியும் அமெரிக்கப் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உட்படுத்துவதாக வேல்ப் குறிப்பிடுகின்றார். 2023 இல் மட்டும் மூன்று வங்கிகள் சரிவடைந்துள்ளன. Fist Republic Bank, Signature Bank, Silicon Bank என்பன மார்ச்-, மே மாதகாலப்பகுதியில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆனால் இத்தகைய அனுபவத்தை அமெரிக்கா 1873 ஆண்டு முதல் எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் உண்டு. 2008ஆம் ஆண்டு அமெரிக்கா பாரிய வீழ்ச்சியை எதிர் கொண்டிருந்தது. அத்தகைய நிதி நெருக்கடியிலிருந்து மீண்டுவந்ததுடன் உலகளாவிய அரசியல் இருப்பையும் அமெரிக்கா பாதுகாத்துக் கொண்டது என்பது முக்கியமான விடயமாகும்.

மூன்றாவது, அமெரிக்க டொலருக்கு எதிரான உலகளாவிய நாணயங்களின் கூட்டு வலுவான நெருக்கடியை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. அதில் இந்தியா, ர‌ஷ்யா, சீன மற்றும் பிறிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்திருப்பதும் புதிய நாணயத்தில் வர்த்தக செய்முறை நிகழ்வதற்கு முனைவதும் டொலருக்கு ஆபத்தானதாகவே உள்ளது. இந்தியா பல நாடுகளுடன் தனது ரூபாயிலேயே வர்த்தகம் செய்ய ஆரம்பித்துள்ளதாக தகவல் உண்டு. இது டொலருக்கு பெரும் ஆபத்தாகவே அமைய வாய்ப்புள்ளது. காரணம் உலகளாவிய பொருளாதாரமானது சந்தையிலும் வர்த்தகத்திலுமே தங்கியுள்ளது. அமெரிக்க வர்த்தகம் முழுமையாக டொலர் மூலம் எழுச்சியடைந்ததே. அதிலும் சந்தை வலுவைக் கொண்ட இந்தியா சீனா பிறேசில் உட்பட்ட தென்பூகோள நாடுகளது சந்தையே அமெரிக்கப் பொருளாதாரமாக விளங்கியது. இதற்கு ஏற்பட்ட நெருக்கடியாகவே பிறிக்ஸ்ன் புதிய நாணயம் அமைய வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி மேற்காசியா முழுமையாக அமெரிக்காவை விட்டு விலகுவதாகவே தெரிகிறது. எண்ணெய்வள நாடுகளது நடவடிக்கை அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியிலான ஆபத்தை தருவதோடு அரசியல் இராணுவ பரிமாணத்தில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

நான்காவது, கடந்த காலங்களில் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியின் போதெல்லாம் இந்தியா, சீனாவின் ஒத்துழைப்பு பலமானதாக அமைந்திருந்தது. அது மட்டுமன்றி அமெரிக்காவுக்கு சோவியத்யூனியனது வீழ்ச்சிக்கு பின்னர் உலகளாவிய ரீதியில் தலைமைதாங்கும் வலுவுள்ள நாடு எதுவும் இருக்கவில்லை. ஆனால் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா என பல நாடுகள் அத்தகைய சக்திகளாக எழுச்சியடைந்துள்ளன. அதனால் றிச்சர்ட் வேல்ப்பின் விவாதத்தை இலகுவில் வீசிவிட முடியாது. இதுவே அவர் அமெரிக்காவின் உச்சக்கட்ட வீழ்ச்சி என விவாதிக்க காரணமாக அமையலாம். தற்போது எழுந்துள்ள தாக்குதல் கூட்டுத்தன்மை பொருந்தியது. இதில்’ மேற்கு ஐரோப்பாவுக்குள்ளும் அமெரிக்காவுக்கு எதிரான விவாதம் எழுந்துள்ளது.

எனவே அமெரிக்கா Grate Space கொண்ட தேசமாக இல்லாதுவிட்டாலும் தேசிய அரசாகவும் நாடாகவும் விளங்கும் பேரரசாகும். அதாவது அத்திலாந்து மற்றும் பசுபிக் சமுத்திரங்களால் சூழப்பட்ட அதேநேரம் அமெரிக்காவுக்கு சமதையான வலுவுடைய எந்த நாடும் இல்லாத கண்டத்திலே அமெரிக்கா அமைந்துள்ளது. அமெரிக்காவுக்கு அதன் அரசியல் புவியியலும் பாதுகாப்பானது. புவிசார் அரசியலும் பாதுகாப்பானது. விரைவில் வீழ்ந்துவிடும் என கருதுவது கடினமானது.

-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)