அரசியல் கட்டுரைகள்

அநுராகுமரா கனடாவில் ஆற்றிய உரை தேர்தல் அரசியலுக்கான உத்தியா?

இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்களது அரசியலை மற்றும் பொருளாதார இருப்பை பற்றிய உரையாடலை மீளவும் முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளது. தென் இலங்கையின் அனைத்து ஜனாதிபதி வேட்பாளரும் தமிழ் மக்களுடனான உறவை பலப்படுத்தும் உத்தியுடன் மேடைப் பேச்சுக்களையும் வெளிப்படுத்தல் நடவடிக்கைகளையும் அதிகப்படுத்துகின்றனர். பராளுமன்றத்தில் சஜித் பிறேமதாஸாவும் வடக்கில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவும் கனடாவில் அநுராகுமார திசாநாயக்காவும் வெளிப்படுத்திய அரசியல் தமிழ் மக்களது வாக்குகளை இலக்கு வைத்ததாகவே தெரிகிறது. அதில் பாராளுமன்ற செய்முறை இரண்டு மணித்தியாலத்தில் வெடுக்குநாறி கைதுக்கு விடுதலையை சாத்தியப்படுத்தியிருந்தது. இதில் எத்தரப்பு தமிழ் மக்களது வாக்குகளை ஈர்ப்பது என்ற போட்டியைக் கண்டு கொள்ள முடிந்தது. இவை யாவும் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டதென்பது மட்டுமல்ல கடந்தகாலத்திலும் தேர்தலுக்கு முன் தேர்தலுகடகு பின் தமிழ் மக்களது அரசியல் என இரு வடிவத்தை கொண்டிருந்தது. சுதந்திர இலங்கையில் அனேகமான சிங்களத் தலைவர்களது இரட்டை முகத்தை தமிழ் மக்கள் கண்டு கொண்டுள்ளனர். ஆனால் அத்தகைய இரட்டை முகத்தோற்ற அரசியலில் தமிழ் மக்கள் ஏமாற்றத்தையே அனுபவித்தனர். தற்போது அநுராகுமாரா கனடாவில் கடந்த 23.03.2024 இல் ஆற்றிய உரையை விளங்கிக் கொள்ளுதல் அவசியமானது.

அநுராவின் உரை ஒரு நீண்டது. அதிகம் தமிழ் சிங்கள் உறவு சார்ந்தது. கனடாவில் ரொறன்ரோ நகரில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் உரையாடியுள்ளார். அதன் சாரத்தை மட்டும் பார்ப்பது பொருத்தமானது.

இலங்கையின் அரசியலில் தமிழ் சிங்கள் முஸ்லீம் ஐக்கியம் பற்றி உரையாடல் அமைந்திருந்தது. இலங்கையா ஒற்றுமையாக இருந்ததாகவும் அரசியல் தலைவர்களே அத்தகைய ஒற்றுமையை குலைக்கும் இனவாத உணர்வுகளை உருவாக்கினார்கள் எனவும் அநுரா குறிப்பிடுகின்றார். அத்தகைய இனவாத உணர்வுக்கு பின்னால் அத்தகைய அரசியல் தலைவர்களது தேர்தல் தோல்வியே பிரதான காரணம் என்பதையும் அநுரா முதன்மைப்படுத்துகின்றார். பௌத்த மதப்பண்பாட்டையும் அதன் உணர்வுகளையும் அத்தகைய தோல்விகண்ட அரசியல் தலைவர்கள் வலுப்படுத்தி உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறார்கள். தேரவாதத்தை அழிக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தை பௌத்தப் பண்பாட்டை பின்பற்றுபவர்களிடம் ஏற்படுத்துவார்கள் என்று அனைத்து மதப்பண்பாட்டின் ஊடாக உரையாடுகிறார். இதனால் பொருளாதாரம், கல்வி, சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் மற்றும் அபிவிருத்திப ற்றி எந்த சிந்தனையும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

தோல்விகண்ட அரசியல் தலைவர்களது பிரதான சுலோகம் சிங்கள இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதாகவே உள்ளது. அவ்வாறே புலிகள் புத்துயிர்பெற விரும்புகிறார்கள் என்பதாகும். அடுத்து 2050 இல் முஸ்லீம் மக்கள் இலங்கைத் தீவில் பெரும்பான்மையை அடைந்துவிடுவார்கள் என்பதாகும். இத்தகைய சுலோகங்கள் பௌத்தமதப் பண்பாட்டில் உள்ள உணர்வுகளை தூண்டுவதாக அமைந்துவிடுகிறது. ஆவ்வாறே முஸ்லீம்களும் தமிழர்களும் தமது இனத்தையும் மதத்தையும் பாதுகாபதற்கு தமது பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இலங்கையில் எந்த மக்களும் அரசாங்கம் தமக்கு என்ன செய்தது என்பதற்காக வாக்களிக்கவில்லை மாறாக தமது இன மதத்தை பாதுகாப்பதற்காகவே தேர்தலில் வாக்களிக்கிறார்கள். இலங்கையில் இனவாத அரசியல் ஒன்று உள்ளது. அதனை துடைத்தெறிந்துவிட்டு ஐக்கிய அரசியலை கட்டிணெழுப்ப வேண்டும் என்ற எண்ணமே தேசிய மக்கள் சக்தியின் அடிப்படையாகும் எனக்குறிப்பிடுகிறார்.

இலங்கைத் தீவில் சட்டஒழுங்கு, கலாசாரம், மொழி உரிமை என்பன பாதுகாக்கப்படவில்லை என்ற ஒப்புதலை தருவதாக அவரது பேச்சு அமைந்துள்ளது. அது மட்டுமல்ல காலாசார அடையாளங்கள் வேறுபாட்டைக் காட்டவேண்டுமா என்ற கோள்வியையும் எழுப்புகின்றார். இன்னெருவரது மனதைப் புண்படுத்துவதல்ல கலாசாரம் என்கிறார். ஆவ்வாறானதே மதமும் அதன் மீதான நம்பிக்கையும். முத நம்பிக்கை அனைவருக்கும் சமமானது. எனது மதம் மேலானது என்ற எண்ணமே முரண்பாட்டுக்கு அடிப்படையானதாக உள்ளது என்கிறார் அநுரா. ஓவ்வொரு இனத்தின் அரசியல் உரிமையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மகாணசபை முழுமையான தீர்வாக இல்லாதுவிட்டாலும் அதனை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொள்கிறது எனகூறுகிறார் அநுராகுமாரா.

வடக்கிலும் தெற்கிலும் போர் பாரிய சிதைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தென் இலங்கையில் ஒரு படம்போட்டு காட்சிபடுத்தல் நிகழ்கிறது. வடக்கில் தாய்மார்கள் குழந்தைகளை பெறுவது போருக்கு என்று. அது பொய்யானது. அவர்களும் தென் இலங்கைத் தாய்மார்களைப் போன்று நல்ல கல்வி சிறந்த வாழ்க்கை முறையை உருவாக்கி அந்தப் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதே அவர்களதும் நோக்கமாகும் என விவாதிக்கின்றார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர். மிக வேகமாக அபிவிருத்தித் திட்டங்களை பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டும் என நீண்ட உரையொன்றையும் அதன் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலையும் தந்துள்ளார்.

அநுராகுமாரவின் உரையில் ஒரு புதிய யுகத்தை ஏற்படுத்துவது போல் வெளித் தோற்றத்தில் தெரிகிறது. ஆனால் அதன் அடிப்படைகள் அனைத்தும் அல்லது தேசிய மக்கள் சக்தியினது எண்ணங்கள் அனைத்தும் ஒரே ஜனாதிபதி தேர்தலில் சாத்தியமாகக் கூடியதா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. இவ்வாறு பல தென் இலங்கைத் தலைவர்களது உரைகளை பார்த்தவர்கள் தமிழர்கள். இந்த உரையே அநுராவின் அண்மிய வெற்றிவாய்ப்பின் சூழலைத் தகர்த்துவிடும். இது சிறப்பான உரை. ஆனால் நடைமுறைச் சாத்தியமாவது பற்றி அதிக கேள்விகள் உண்டு. யதார்த்தை வைத்தக் கொண்டே பிரச்சினைக்கு தீர்வுகளை எட்ட வேண்டும். இதனை விரிவாக பார்ப்பது தேவையாக உள்ளது.

முதலாவது, இடதுசாரிகளும் இலங்கைத் தீவின் அரசியலும் பற்றியது. அநுராவும் இடதுசாரிப் பாரம்பரியத்திற்குள் வந்ததாக தென் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் கருதப்படுகின்றார். ஆனால் சன்முகதாசனைத் தாண்டி இலங்கைத் தீவில் எவரும் இடதுசாரியாக இல்லை என்ற விமர்சனம் உண்டு. அனைவரும் அரைகுறை இடதுசாரிகளாகவே சிங்கள் அரசியலில் இடதுசாரிகள் காணப்பட்டனர். இது அநுராவுக்கும் பொருந்தும். ஏனெனில் அவரை அடையாளப்படுத்துவது ஜனதாவிமுத்தி பெரமுன (ஜே.வி.பி) என்பதை யாரும் நிராகரிக்க முடியாது. இடதுசாரித்துவத்தின் அடிப்படை பிற தேசியங்களை அங்கீகரிப்பது. பிரச்சினைகளை யாரும் கூறிவிட்டுச் செல்லலாம். ஆனால் அதற்கு தீர்வு காண்பதும் அத்தீர்வின் அடிப்படை எதுவென்பதும் முதலில் கண்டு கொள்ளப்பட வேண்டும். ஈழத்தமிழர் பிரச்சினையானது அவர்கள் ஒரு தேசியமாக இரத்தலிலிருந்து தொடங்குகிறது. இதனை பொருளாதார அபிவிருத்தியினால் தீர்க்க முடியாது. அரசியல் அதிகாரமற்ற அபிவிருத்தியைத்தான் வலதுசாரித் தலைவர்கள் இதுவரை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைத்தார்கள். அவற்றால் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உலகம் அரசியல் பொருளாதாரம் பற்றிய உரையாடலைத் தொடக்கிவிட்டது. மார்க்சிஸத்தின் பிந்திய விருத்தியில் மேல்கட்டுமானம், கீழ்கட்டுமானம் எனும் உற்பத்திக்கும் கலாசாரத்திற்குமான வலிமையானதாக உறவு உண்டு. அதாவது அதனை அரசியலாகவும் பொருளாதாரமாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் இலங்கைத் தீவின் இடதுசாரிகள் தமிழர்களை ஒரு தேசிய இனமாகக் கொள்வதிலேயே அதிக இணக்கப்பாடு இல்லாதவர்களாக உள்ளனர்.

1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச்சட்டத்தை விமர்சனம் செய்த இடதுசாரிக்கள் 1972 இல் தலைகீழான முடிபுகளை எடுத்ததுடன் தமிழருக்கு உர்மை வழங்கும் வாய்ப்பினை நிராகரித்தார்கள். இலங்கையின் இடதுசாரிகள் என அடையாளப்படுத்தப்பட்ட என்.எம்.பெரேரா இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வுகாணத் தவறினால் தமிழர் பிரிந்து சென்று இந்தியாவுடன் இணைந்துவிடக் கூடிய வழிமுறைகளை இருப்பது குறித்து எச்சரித்தார். அவ்வாறே இலங்கையின் அப்போதைய கம்யூனிஸ்க் கட்சியின் பொதுச் செயலாளர், ‘Ceylon will be another Korea’  என்று கூறியது நினைவு கொள்ளத்தக்கது. அவ்வாறே இடதுசாரிகள் தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் ‘மசாலவடைய் அப்பிட்ட எப்ப’ என முழக்கமிட்டார்கள். அதே வேளை 1944 இல் ஆண்டு இலங்கையின் கம்யூனிஸக் கட்சி ‘தமிழர்கள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமையை உடையவர்கள்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதுவே அவர்களது அரசியல் பரிபாசையாக உள்ளது.

இலங்கை அரசியலில் ஆழமாக உரையாடப்பட வேண்டிய முக்கிய விடயம் சிங்கள பெரும்பான்மை மக்கள் பற்றியது. அவர்களது மனேநிலை பற்றியது. அவர்கள் அளிக்கும் வாக்குகளை மையப்படுத்தியே சிங்களத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அநுரா சிங்களத் தலைவர்களையே அதிகம் கறைகூறுகின்றார். தலைவர்களது தோல்வியே இனஉணர்வைத் தூண்டுவதற்கு காரணம் என்கிறார். ஆனால் 1956 ஆம் ஆண்டு பண்டரநாயக்கா தனிச்சிங்களச் சட்டம் தொடர்பில் இடதுசரித் தலைவர்கள் பாராளுமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் அதனை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் தேர்தலில் பண்டரநாயக்கா பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து தனிச்சிங்களச் சட்டத்தை சட்டமாக்கினார். மக்களிடம் தேர்தல் காலத்தில் போதிய அறிவூட்டலை சிங்கள இடதுசாரி தலைவர்கள் முன்வைத்ததுடன் அத்தகைய தலைவர்களது கட்சியை ஆட்சியில் அமர்த்தும் திறனும் தகமையும் மக்களிடம் இருந்தது. ஆனால் சிங்கள மக்கள் அத்தகைய தெரிவை மேற்கொள்ளாதமை தலைவர்களைவிட மக்களிடம் இருந்த மனோநிலை அடிப்படையானது. அதனையே சிங்கள் மக்கள் போரின் போதும் அதற்கு பின்னரும் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ளனர். 1983 ஆண்டு தமிழருக்கு எதிரான ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு எத்தகைய நீதி பொறிமுறை அமைந்துள்ளது என்பது தெரிந்தவிடயம். அதன் மூலம் தென் இலங்கை நிர்வாகிகளும் அதிகாரிகளும் தமிழருக்கு ஆதரவாக செயல்படும் தன்மை இல்லாமை என்பதைக் கண்டு கொள்ள முடிகிறது. இதனை சமகாலத்தில் தொல்லியல் திணைக்களம் காணி ஆணைக்குழுக்கள் என்பனவற்றின் இயல்புகளைக் கொண்டு விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் நிர்வாகிகள் மக்கள் என எல்லாத்தரப்பும் ஒன்றிணைந்தே தமிழருக்கு எதிரான அனைத்து அடக்கு முறைகளையும் மேற்கொள்கின்றனர் என்பதை தவிர்க்க முடியாது புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அநுராகுமார குறிப்பிடுவது சிறப்பான விடயமாக அமைந்தாலும் அதன் நடைமுறை சாத்தியமற்றதை கடந்த கால அனுபவங்களைக் கொண்டு உணர முடிகிறது. அநுரா திடீரென மூளைசலவை செய்யப்பட்டவர் போல் உரையாடுவதாக விமர்சனம் உண்டு. இதனை தேர்தல் உத்திகவே கருதப்படுகிறது. அது மட்டுமன்றி தென் இலங்கைத் தலைவர்களும் மக்களும் அநுராகுமார போன்று குறைந்தபட்சமான இடதுசாரி மனோநிலை கூட இல்லாதவர்கள். அவர்களது மனோநிலை ஏனைய தேசியங்களுக்கு எதிரானதாக கட்டியெழுப்ப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அத்தகைய மனோநிலை வளர்க்கப்பட்டுள்ளது. அதனை மாற்றத்திற்கு உள்ளாக்குவதென்பது இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். தொல்லியல் ஆய்வாளர் கலாநிதி ஈ.டபிள்யூ.அதிகாரம் குறிப்பிடும் போது 1983 ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலையைக் கண்டு ‘இத்தகைய பெரும் துயரம் இனிமேல் மீண்டும் மீண்டும் நடைபெறாது இருக்க வேண்டுமாயின் ஒரு பிரதியைக்கூட மிஞ்சி விடாமல் அனைத்து மகாவம்ச பிரதிகளையும் தீயிட்டுக் கொழுத்த வேண்டும்’ என்பதை நினைவு கொள்வது பொருத்தமானதாக அமையும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)