ஈழத்தமிழர் அரசியல் சூறையாடப்படும் நிலை கண்முன்னே நிகழ்வதை அவதானிக்க முடிகிறது. ஒர் இனத்தின் தேசிய அடையாளம் அதன் வாழ்விடத்தில் தங்கியுள்ளது. வாழ்விடமாகிய நிலம் பறிபோகுமாக இருக்குமாயின் அத்தேசிய இனத்தின் அனைத்து அடையாளமும் காணாமல் போய்விடும். காரணம் வாழ்விடமே பண்பாட்டையும் காலாசாரத்தையும் பொருளாதாரத்தையும் அதனோடு கூடிய அரசியலையும் தருகிறது. அத்தகைய நிலத்தோடு கூடிய அரசியலை கல்லோயா விவசாயக் குடியேற்றத்துடன் ஆரம்பித்து கச்சதீவு வரையும் நீட்சி பெற்றுதுள்ளது. கௌதம புத்தரின் குடியேற்றமும் சிங்களப் பேரினவாதத்தின் பரம்பலும் ஒரேவிதமான துயரத்தையே தமிழரது வாழ்விடங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அரசுகளின் திட்டமிடலும் ஆட்சியாளரின் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களும் தமிழர்களை நிலத்திலிருந்து அகற்ற முயலுகிறது. இக்கட்டுரையும் ஈழத்தமிரது அரசியல் இருப்பின் சிதைவையும் அதனைத் தடுக்க பின்பற்ற வேண்டிய அரசியலையும் தேடுவதாக உள்ளது.
ஈழத்தமிழரது அரசியலில் மிதவாதத்தின் காலப்பகுதி முழுவதும் வடக்கு கிழக்கு மீதான ஆக்கிரமிப்பு ஏதோவொரு வடிவத்தில் நிகழ்ந்து கொண்டே நகர்கிறது. அதனைத் தடுக்கும் வலிமையற்றும் அதன் விளைவுகளின் நிலைகுறித்தும் எந்த எண்ணமும் இன்றி தமிழ் தேசியத்தை தாங்கிய கட்சிகளும் அதன் தலைமைகளும் காணப்பட்டன. தற்போது எத்தகைய இயலுமையுமின்றி ஒரு சில எண்ணிக்கையான கட்சி தொண்டர்களைக் கொண்ட கவனயீர்ப்பை மேற்கொள்கின்றனர். அதனை சில ஊடகங்கள் போராட்டம் என்றும் ஆர்ப்பாட்டம் என்றும் தலைப்பிடுகின்றன. அதனைக்கூட ஏனைய கட்சிகள் செய்யமுடியாது காணப்படுகின்றனர். மக்கள் எழுச்சிப் போராட்டம் என்பது பாரிய அளவிலும் திரட்சி பெற்றதாகவும் அமைவதுடன் அதற்கு ஒரு இலக்கும் அதனை அடைவதற்கான வழிமுறையும் கொண்டதாக அமைவது அவசியமானது. உலகளாவிய ரீதியில் மக்கள் எழுச்சியானது அரசாங்கங்களின் அணுகுமுறையை மாற்றக்கூடியதாக அமைகிறது. அதுவே மக்கள் போராட்டத்தின் இலக்காகவும் அமைகிறது. ஈழத்தமிழர் அரசியாகவோ அல்லது அரசியல் மயவாக்கத்தின் வாயிலாகவோ கட்டமைக்கப்படவில்லை. கட்சி அரசியலாகவே வடிவமைக்கப்பட்டுள்ளனர். அதிலும் வாக்கு அரசியலுக்கு மட்டுமான தாயார்படுத்தலுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர். ஈழத்தமிழரது அரசியல் அறிவுமயப்படுத்தப்படவில்லை. உணர்சிவசதி;திற்கும் அறிவுமயத்திற்கும் இடைப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். அதுவே மிதவாத்தின் தோல்வியாகவுள்ளது. மிதவாதத்தின் தோல்வியே ஆயுத அரசியலுக்கான அடிப்படைக்கு வித்திட்டிருந்தது. ஆயுத அரசியலைக் கூட அறிவியல் தளத்தில் திட்டமிடமுடியாததன் விளைவையே ஈழத்தமிழர் முள்ளிவாய்க்காலில் எதிர்கொண்டனர். அதன் விளைவுகளின் பின்பும் அரசியல் அறிவியலாக்கப்படாது உணர்வுகளுக்கும் தனிமனித அல்லது கட்சி நலனுக்கும் உட்படுத்தப்பட்டது. அதனால் கிடைத்த வாய்ப்புக்களை நலன்பாற்பட்டு அரசியல் கட்சிகளும் அதன் பங்காளர்களும் கைவிட்டனர். சிலர் தென் இலங்கை அரசியலின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டுக் கொண்டு அத்தகைய விருப்பு அரசியலை அரங்கேற்றினர். ஒட்டு மொத்தத்தில் எச்சரிக்கைகளையும் இடித்துரைப்புகளையும் நிராகரித்துவிட்டு விருப்பு அரசியலை ஓரினத்தின் அரசியலாகாக்க முயன்றனர். இறுதியில் விருப்பு அரசியலும் அற்;றுப் போனதுடன் ஓரினத்தின் அரசியலும் நான்கு திசைகளிலும் காணாமல் போயுள்ளதை தெளிவாகக் காணமுடிகிறது. நாவற்குழி, வெடுக்குநாறி, வெடியரசன் கோட்டை, மற்றும் கச்சதீவு என வடக்கு மக்களின் இருப்புக்கு எதிரான ஆக்கிரமிப்பு அரசியல் அரங்கேற்றப்படுகிறது. பலஸ்தீனர்களது குடியிருப்புகள் மீது யூதர்களது அணுகுமுறையும் யூத அரசாங்கங்களின் திட்டமிடல் போன்ற நிலை வடக்கில் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது. கிழக்கிலங்கையின் இருப்பு கடந்த காலங்களில் கையாளப்பட்டது போன்றே தற்போது வடக்கு காணப்படுகிறது.
உள்நாட்டுச் சூழலை தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தோற்கடித்தது போல் பிராந்திய பலத்தையும் தோற்கடித்துவருகின்றனர். இதற்கு மிகப்பிந்திய இந்திய மீனவர் தொடர்பில் எழுந்துள்ள சர்சையை கையாண்டவிதமே போதுமானதாக உள்ளது. தமிழக மீனவர்களுடன் ஈழத்தமிழ் மீனவர்கள் மோதவேண்டும் என்பதில் தென் இலங்கை கவனமாக உள்ளது என்பது அனைவரும் தெரிந்து கொண்ட அரசியலாகும். தமிழகம் மட்டுமல்ல இந்தியாவுடன் ஈழத்தமிழர் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் தென் இலங்கையின் பிரதான அரசியலாகவே உள்ளது. அதனை எதிர்கொள்வதற்கு பதிலாக தமிழ் தேசிய அரசியல் சக்திகள் தென் இலங்கையின் அதே நிகழ்ச்சி நிரலுக்குள் பயணிப்பதைக் கண்டு கொள்ள முடிந்தது. ஈழத்தமிழர்களுக்காக எத்தனை தமிழக இளைஞர்கள் தீக்குழித்தார்கள் என்பதைக் கூட நினைவில் கொள்ளாது தென் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய போராட்டங்களை இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் எதிராக நிகழ்த்தினார்கள். தமிழக மீனவர்களது நகர்வுகள் ஈழத்தமிழ் மீனவர்களது வாழ்வியலில் பாரிய பாதிப்புகளை தருகிறது என்பது யதார்தமானதே. ஆனால் அதனை அரசியலாக கையாளுகிற போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தனித்துவமானதாக அமைந்திருக்க வேண்டும். ஈழத்தமிழ் மீனவர்களது கோரிக்கை நியாயமானது. தமிழக மீனவர்களையும் அவர்களது சங்கங்களையும் அரசியல் தலைவர்களையும் அதனோடு தொடர்புள்ள அமைப்புக்களையும் சந்தித்து உரையாடி தீர்வு காண்பதொன்றும் கடினமானதல்லவே. அவர்கள் ஈழத்தமிழரது அயலவர்கள். அதனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. இத்தகைய முரண்பாட்டை நீடிப்பதென்பது தென் இலங்கைக்கு இலாபமானதாக அமையுமே அன்றி ஈழத்தமிழருக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக மீளவும் எதிர்ப்பு வாதங்களால் மக்களுக்கும்-மக்களுக்குமான உறவு சிதைவடையும். வெளியுறவில் மிக முக்கியமான ஒருவிடயம் மக்கள்-மக்கள் உறவு நிலையாகும். ஈழத்தமிழ்-தமிழக உறவு புவிசார் அரசியலால் ஏற்பட்டதுடன் இன உறவினாலும் கட்டமைக்கப்பட்டதொன்றாகும். அது மிகப்பலமானது. அதனை போணுவதும் பாதுகாப்பதும் ஈழத்தமிழரது எதிர்காலத்திற்கு அவசியமானது.
இத்தகைய பிராந்திய அரசியல் சூழல் ஈழத்தமிழரது அரசியல் இருப்பை பாதிக்கச் செய்யக்கூடியது. அதனை மீட்டெடுக்க வேண்டிய நிலை அனைத்து தரப்பிடமும் உள்ளது. அது தனித்து தமிழகத்துடனானது மட்டுமல்ல. இந்தியாவுடனானதுமாகும். காரணம் இந்தியாவுடனேயே சர்வதேச அரசியலும் பூகோள அரசியலும் இயங்குகிறது. இந்துசமுத்திர பிராந்திய அரசியல் மற்றும் தென்னாசிய பிராந்திய அரசியல் இந்தியாவை மையப்படுத்தியே சுழல்கிறது. அதுவே சர்வதேச அரசியலிலும் பூகோள அரசியலிலும் தெறிப்படைகிறது. அமெரிக்காவும் சீனாவும் இலங்கைத்தீவில் மையங்கொள்வதென்பது இந்தியாவின் இருப்பில் தங்கியுள்ளது. இந்த இரு நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் பொருளாதாரமே ஓரளவு பலமானது. சந்தையே இந்தியாவின் இருப்பு. இராணுவரீதியில் பலவீனமானது. இந்தியாவின் சமூக உறுதியின்மை அரசியல் கட்டமைப்பின் பலவீனம் என்பவற்றைக் கடந்து அமெரிக்காவின் அணியும் சீனா, ரஷ்சிய அணியும் பிராந்திய அரசியலை இந்தியாவுக்குள்ளாலேயே கையாளுகின்றன. இந்தியாவும் தனது பாரம்பரிய கொள்கையான நடுநிலைக்குள்ளால் இரு தரப்பையும் கையாளுகிறது. அது இரு அணியிலும் ஏதாவதொன்றைப் பலவீனமாக்கும். அதுவே பனிப்போhக் காலத்திலும் நிகழ்ந்தது.
ஆனால் இவ்வாறு கட்டப்படும் புதிய உலகத்திற்கான ஒழுங்கானது ஈழத்தமிழர் போன்ற தேசிய இனங்களது இருப்புக்கு ஆபத்தானவையாகவே அமைய வாய்ப்புள்ளது. புதிய உலக ஒழுங்கு பற்றி விவாதிக்கும் அனைத்து ஆய்வுகளும் இருதுருவ அரசியலை நோக்கி உலகம் பயணிப்பதாக கருதுகின்றனர். அத்தகைய இருதுருவம் ஒரு போதும் கடந்த கால இருதுருவம் போல் அமையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பழைய சோவித்யூனியன் தலைமையிலான அணியானது ஏதோ ஒரு அடிப்படையில் தெளிவான இடதுசாரி சிந்தனையை கொண்டிருந்தது. அது கார்ல்மார்க்ஸ், லெனின் சிந்தனையால் கட்டப்பட்ட யுகம். அதனிடம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தொடர்பில் தெளிவான சிந்தனையை கொண்டிருந்தது. அதனிடம் சில பலவீனங்கள் பிற்பகுதியில் நிலவினாலும் தேசிய இனங்களது பாதுகாப்புக்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு நிகரானதாக இன்றைய முகாம் அரசியல்ட அமையப் போவதில்லை என்பதை எல்லா ஆய்வாளர்களும் கோடிட்டுக் காட்ட முயலுகின்றனர். அப்படியாயின் ஈழத்தமிழர் தற்போது எழுந்துள்ள நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வதென்பது பிரதான கேள்வியாகும்.
ஒன்று, ஈழத்தமிழரது மட்டுமல்ல உலகளாவிய தளத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களது தேசியவாதமானது சர்வதேசவாத்தாலும், பூகோளவாதத்தாலும் உருவாக்கப்பட வேண்டும். இதனையே அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு பூகோளவாதமு; புதிய தேசியவாதமும் என்ற நூலில் தெளிவாக ஆராய்ந்துள்ளார். இந்த இடத்திலேயே புலம்பெயர்ந்த ஈழத்தமிழரது அரசியல் விரிவடைய வேண்டிய தேவை எழுந்துள்ளது. அவர்களுக்கே அத்தகைய பலமும் சூழலும் உண்டு. புலத்திற்கான அரசியலை புலம்பெயர்ந்த தளத்திலிருந்து கட்டமைக்கும் போது சர்வதேசவாதமும், பூகோளவாதமும் உறுதுணையாக வேண்டும். அதற்குள்ளாலேயே தேசியங்கள் மீள் எழுச்சி சாத்தியமாகும். அது சித்தாந்தங்களால் கட்டமைக்கப்படக் கூடியதல்ல. யதார்த்த உலகத்திற்குள்ளால் உருவாக்கப்பட வேண்டியது.
இரண்டு, ஈழத்தமிழரது அரசியலில் பிராந்தியமும் புலமும் புரிதலுடன் இயங்க வேண்டும். அதற்கான கட்டமைப்புக்கள் அரசியல் கட்சிகளால் மட்டுமல்ல சிவில் மற்றும் தொழில் சங்கங்களாலும் ஏற்படுத்தப்பட வேண்டும். அதனை அறிவியல்பூர்வமானதாக உருவாக்கப்பட வேண்டும். அதனை கட்சி அரசியலுக்குள்ளால் பார்காது, தனிப்பட்ட விருப்புக்களால் நோக்காது ஒட்டுமொத்த தேசிய இனத்தின் வடிவமாக நோக்கப்படுதல் வேண்டும். இதற்கான உரையாடல் அவசியமானது. சொத்தையும் வாக்கையும் பாதுகாக்கும் அரசியலை கைவிட்டுவிட்டு தேசிய அடையாளத்தை பாதுகாக்கும் அரசியலை கவனத்தில் கொள்ள வேண்டும். அக,புற முரண்பாடுகளை வளர்க்காது செயல்பட முனைய வேண்டும்.
மூன்று, புலத்தில் ஒன்றிணையும் தேவை அனைத்துத் தரப்புக்கும் ஏற்பட்டுள்ளது. தேசியத்தை பற்றிய புரிதலுள்ள அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து எழுச்சி பெறுவதுடன் தொடர்ச்சியாக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் தேவையாகவுள்ளது. அவை அனைத்தும் உலகளாலிய ஜனநாயக நியமங்களுக்குட்பட்டதாக அமைய வேண்டும். சர்வதேச சட்டவிதிகளை நிராகரித்துவிட்டு செயல்படாத போக்கும் அதற்கான புரிதலும் தேவையானதாக உள்ளது. இதற்குள் இணைந்து கொள்ளாத எந்த அரசியல் கட்சியையும் தேர்தல் அரசியலிலிருந்து மக்கள் விலக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான புரிதலும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
எனவே ஈழத்தமிழரது அரசியல் முழுமையாக சூறையாடப்படும் நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கான எண்ணங்கள் நல்லாட்சிக் காலத்தில் புறந்தள்ளப்பட்டது போல் புறந்தள்ளப்படுமாயின் ஒட்டுமொத்தமாக தேசிய அடையாளம் காணாமல் போக வாய்ப்புள்ளது. அப்போது திருவள்ளுவரையும், நடராசர் சிலையையும் பற்றிய அரசியலை வளர்த்து அகமுரண்பாடுகளை உருவாக்கி கிறிஸ்தவனா? சைவனா? இந்துவா? சிறந்தவனென மேடை போட்டு விவாதம் செய்து காலத்தை கழிக்கலாம். அல்லது வயிற்றுப் பிளைப்பை தேடும் நிலையை உருவாக்கலாம். அல்லது மீண்டுமொரு சங்கிலிய மன்னனை தோற்றுவிக்கலாம். வரலாறு எப்போதும் பழைய கதைகளை பேசுவதல்ல. வரலாறு என்பது கடந்த காலத்திலுள்ளவற்றை தெரிந்து கொள்வதுடன் நிகழ்காலத்தை அளவீடு செய்து கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதாகும். செயல்களிலிருந்தும் விளைவுகளிலிருந்தும் கட்டப்படுவதே வரலாறு. வரலாற்றுத் தவறுகளை திருத்திக் கொள்வதே மனித நாகரீகத்தின் வளர்ச்சி.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

