அரசியல் கட்டுரைகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் மீள் எழுச்சியால் இந்தியா நெருக்கடியை எதிர்கொள்ளப் போகிறதா?

ஆப்கானிஸ்தான் தலிபான்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் எழுந்துள்ள உலக அரசியல் போக்கானது அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் நிலைகளை அடையாளப்படுத்த ஆரம்பித்துள்ளது. தலிபான்களின் மீளெழுச்சி உலக ஏகாதிபத்திய சக்திகளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும் அதன் விளைவுகள் ஏகாதிபத்தியங்கள் மீதான தாக்குதலை கடந்து இஸ்லாமிய ஆட்சி முறைகளையும் அமெரிக்க எதிர்ப்புவாதத்தையும் புதியதொரு கோணத்தில் அவதானிக்க வழிவகுத்துள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தென்னாசியா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியாவின் புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதில் அதிகம் நெருக்கடியை சந்திக்கும் நாடாக இந்தியா காணப்படும் என்பதுவே பிரதான வாதமாக உள்ளது. இக்கட்டுரை தலிபான்களின் எழுச்சிக்கு பின்னரான இந்திய-சீன அரசியலை உரையாடுவதாக உள்ளது.

முதலாவது, ‘ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா போராடி சுதந்திரம் பெற்றது. தலிபான்கள் தங்களது நாடு சுதந்திரமடையவும் அந்நியர் பிடியிலிருந்து விடுபடவும் போராடி வந்தனர். தற்போது வென்றுள்ளனர். தங்கள் நாட்டை தாங்களே வழிநடத்த விரும்புகிறார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்’ என சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷபிக்குர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது, ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க அமெரிக்க படைகள் போர் செய்து கொண்டிருக்க முடியாது. எனது ஆட்சியில் இந்தப்போர் முடிவுக்கு வரட்டும். இனியும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் போராட வேண்டியது கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது, அமெரிக்க மற்றும் அனைத்து பிராந்திய நாடுகளுக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்றும், வெளிநாட்டு தூதரகங்களும் அவற்றின் பணி நடவடிக்கைகளும் காபூலில் பாதுகாக்கப்படும் என்றும், தலிபான்கள் ஏனைய நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிறதெனவும், உறுதியளிக்கிறேன் என ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்ட பின்பு தலிபான்கள் நடாத்திய உத்தியோகபூர்வ செய்தியாளர் மாநாட்டில்(17.08.2021) தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஹாஜித் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த மூன்று தகவல்களும் வெளிப்படுத்தும் செய்தியானது, ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் ஆட்சி உறுதியாகிறது என்பதையும் நிலைத்திருக்க வழிவகுக்கின்றது என்பதையுதம் கோடிட்டு காட்டுகிறது. அமெரிக்காவின் பலவீனமும் இந்தியாவுக்குள் இருக்கும் முரண்பாடுகளும் தலிபான்களின் உறுதிப்பாடும் தெளிவாக உணர முடிகிறது. ஆனால் தலிபான்களோடு மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கும் சீனா இப்பிராந்திய அரசியலில் மேலெழுச்சி பெறுவதற்கான உத்திகளை கடந்த ஒரு தசாப்தகாலமாக நிறைவேற்றி வருகிறது. அதிலொரு மைற்கல்லாக ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியமை அமைந்துள்ளது. மேற்காசிய, மத்திய ஆசியா, தென்னாசியவை இணைக்கும் மத்திய நிலமாகிய ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியமை அதன் தோல்வியை உறுதிப்படுத்தவதாகும். அமெரிக்காவின் பலவீனமாக வெளியுறவுக்கொள்கை என்றும் அமெரிக்க செனட்டர்களால் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களாலும் விமர்சிக்கப்படுகிறது. இத்தகைய நெருக்கடி என்பது அமெரிக்காவிற்கு மட்டம் உரியதாக பார்க்கப்படுகின்ற நிலையைக் மட்டுமன்றி உலக ஏகாதிபத்தியங்களை கடந்து இந்தியாவின் இருப்பிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் எழுச்சிக்கும் பாரிய நெருக்கடியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே தெரிகின்றது. அதனை விரிவாக விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும்.

ஒன்று, தலிபான்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் கட்டியெழுப்பப்பட்டவர்கள். அதன் சட்டங்களையும் வரைபுகளையும் அவதானிக்கும் போது இஸ்லாமிய அடிப்படைவாதத்தினை நினைவுபடுத்தவதாகவே அமைகின்றது. எனவே ஒரு இந்துமத தேசியவாதத்தை கட்டியெழுப்பும் இந்தியாவும் நரேந்திர மோடி அரசாங்கமும் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழலை ஏற்படுத்தக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. மேற்கு ஆய்வாளர்கள் வெளிப்படுத்துவது போல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அமெரிக்கா கடந்த 20ஆண்டுகளில் முடிவுக்கு கொண்ட வந்துள்ளது என்றும் தற்போது அமெரிக்காவின் பிரதான சவால் சீனா என்றும் சீனாவை முறியடிவதற்கான வியூகங்களை வகுப்பதே அவசியமானதென்றும் சொல்லப்படும் வாதங்கள் பலவீனமானதாகவே அமையவுள்ளது. காரணம் சீனாவோ அல்லது இஸ்லாமோ ஒன்று சேர முடியாவிட்டாலும் நலன்களுக்காக இணைந்து பயணிக்கும் உலக ஒழுங்கு ஒன்றினை தலிபானூடாக சீனா கட்டியெழுப்பும். அவ்வகைச்சூழல் இஸ்லாத்தின் எழுச்சியை மேற்கிற்கு எதிரானதாக மட்டுமன்றி இந்தியாவிற்கு எதிரானதாகவும் கட்டமைக்க வழி ஏற்படும். மறுவளமாக இது இந்து தேசியவாதத்தின் எழுச்சிக்கு வழிவகுத்து இந்தியாவின் பல்லின தேசிய முகத்தை முடிவுக்கு கொண்டுவர வாய்பினை அதிகரிக்கும்.

இரண்டு, ஆப்கானிஸ்தான் இந்தியாவின் எல்லையோர நாடு என்பது மாத்திரமின்றி, இந்தியாவின் பிரதான எதிரியான பாகிஸ்தானின் அரசியல், பொருளாதார, இராணுவ, மத ரீதியான நட்பு நாடாக விளங்குகிறது. எனவே தலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவு இந்தியாவின் மேற்கு எல்லையை தகர்ப்பதுடன் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள காஷ்மீர் விவகாரத்தை தீவிர அரசியல் நிலைக்குள் நகர்த்த முயற்சிக்கும். அதுமட்டுமன்றி காஷ்மீரை முழுமைப்படுத்தி இஸ்லாமிய தேசியவாதத்தை கட்டமைத்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இணைந்து அதனை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. எறக்குறைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திபெத், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய பகுதிகள் முழுமையாக சீனாவின் பிடிக்குள்ளும் நெருக்கமான உறவுக்குள்ளும் இந்தியாவிற்கு எதிராக பயணிக்க வாய்ப்பு அதிகரிக்கும். அதில் காஷ்மீர் முக்கிய புளட்ளியாக அமைய வாய்ப்புள்ளது.

மூன்று, சீனாவின் உறவு ஆப்கானிஸ்தானோடு வலுவடையும் போது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு சவால்விடும் போர் முனையமாக ஆப்கானிஸ்தான் இந்தியா எல்லை மாறுவதுடன், எற்கனவே உள்ள போர் முனையங்களோடு ஒப்பிடும் போது அதிக முக்கியத்துவம் பெற்ற பகுதியாக இந்திய-ஆப்கானிஸ்தான் பகுதி அமையும். வரலாற்று காலம் முழுவதும் டில்லியை நோக்கிய இஸ்லாமிய படையெடுப்புக்கள் அனைத்தும் இந்திய-ஆப்கானிஸ்தான் எல்லை வழியே (ஹைபர் கணவாய்) நகர்த்தப்பட்டது என்றும் குறிப்பிடப்படுகின்றது. இதனால் பிரிட்டிஷ் இந்தியா தனது பாதுகாப்பு கொள்கையை இந்து சமுத்திரத்துக்கு நிகரானதாக ஆப்கானிஸ்தான்-இந்திய எல்லையை கருதி செயற்பட்டது. எனவே இப்பகுதி இஸ்லாமிய மக்களை அதிகமாக கொண்டுள்ள இந்தியாவுக்கு ஆபத்தான அரசியலையும் இராணுவ சவாலையும் ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.

நான்கு, சீனாவின் இந்து சமுத்திரம் நோக்கிய விஷ்தரிப்பில் இலங்கை, மாலைதீவு என்பன பலமான அணியாக அமைகின்ற போது தரைரீதியிலான விஷ்தரிப்பும் சீனாவுக்கு கிடைக்கின்ற போது இந்திய முழுமையாக சுற்றி வளைப்புக்குள் அகப்படும். இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை கிழக்கு நோக்கியும் (Look East) தென்சீனக்கடல் நோக்கியும் அமைய சீனாவோ இந்தியாவின் நிலப்பரப்பை நோக்கி தனது நகர்வுகளை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவின் இராணுவம், பொருளாதாரம் என்பன நெருக்கடிக்குள் தள்ளப்படுவதுடன் மீட்சி பெற முடியாத அதிர்ச்சிக்குள் இந்தியாவின் இருப்பு நகர்த்தப்படுவதற்கான உலக ஒழுங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. தென்சீனக்கடலை நோக்கிய மேற்கு ஏகாதிபத்தியத்தின் உபாயங்கள் தலிபான்களின் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதன் மூலம் நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அவ்வாறே குவாட் நாடுகளின் உபாயமும் தீர்வற்ற சூழலுக்குள் இழுக்கப்படும் நிலை ஆப்கானிஸ்தானில் எற்பட்ட ஆட்சி மாற்றத்தினூடாக சாத்தியமாக வாய்ப்புள்ளது.

எனவே சீனாவாலும் ரஷ்சியாவாலும் அரவணைக்கப்படும் தலிபானின் எழுச்சிமிகு நகர்வானது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும், இஸ்லாமிய எழுச்சிக்கும் காரணமாக அமைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் எல்லையிலும் அதன் பொருளாதார இராணுவ வாய்ப்புக்களும் நெருக்கடிக்கு உள்ளாவதோடு மூர்க்கத்தனமாக இந்துத்துவவாத எழுச்சி, இஸ்லாத்துக்கு எதிரான போராட்டங்களின் வீரியம் இந்தியாவின் கட்டமைப்பு மாற்றங்களை நோக்கி நகர்த்த வழிஏற்படுத்தும். எனவே தலிபான்களின் ஆப்கானிஸ்தானின் மீளெழுச்சி புவிசார் அரசியல் ரீதியிலும் பிராந்தியக்கட்டமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய முனைப்புக்களை உருவாக்கும். இதனை இந்தியா எதிர்கொள்ளப்போக உள்ள உபாயத்திலேயே தென்னாசிய மீதான இருப்பும் அதன் புவிசார் கட்டமைப்பும் பாதுகாக்கப்படும்.

-பேராசிரியர்.கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)