இந்தியா இலங்கையுடன் உறவு சுமுக நிலைக்கு கொண்டு வருவதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் பெரும்பிரயத்தனத்தை எடுத்து வருகின்றார் என்பது, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுடைய அண்மைக்கால உரையாடல்களும் நடவடிக்கைகளும் உணர்த்துகின்றது. இலங்கை-இந்திய உறவானது, புவிசார் அரசியல் வரலாற்றை புரிந்து கொள்வதன் ஊடாகவே விளங்கிக் கொள்ள முடியும். அத்தகைய ஒரு உறவில் விரிசல்களும் நெருக்கமும், அவ்வப்போது இந்திய-இலங்கை உறவின் பரிமாணத்தை கோடிட்டுக் காட்டி உள்ளது. ஒரு நீண்ட புவிசார் அரசியல் வரலாற்றை கொண்டிருக்கும் இரு தேசங்களிலும், கட்சிகளாலும் அவற்றின் தலைமைகளாலும் அவ்வப்போது தவறான முடிவுகளும் சரியான முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் ஒரு அங்கமாகவே தற்போதைய இந்திய வெளியுற அமைச்சரின் அண்மைக்காலஇலங்கை வருகையும் நடவடிக்கைகளும் அமைகின்றது. இக்கட்டுரையும் 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை மீது நிகழ்த்திய படையெடுப்பு தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சையை புரிந்து கொள்ள முயல்வதாக அமைய உள்ளது.
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பியது மாபெரும் தவறு என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய நூலை சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்த பார்க் பைந் அமைப்பு அத்தகைய விடடயத்தை முதன்மைப்படுத்தியதோடு, அது தொடர்பில் அதிகமான விளக்கங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. நூலில் இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிடுகின்ற போது, ‘தொடக்கம் முதலே இந்தியாவுக்கு இலங்கை சவாலாக இருந்தது. இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினைக்கு அக்கறை கொண்டு இந்தியா உத்தரவாதம் அளிக்கும் தேர்வினை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இது ஆரம்பத்தில் இருந்தே தவறிவிட்டதாக’ குறிப்பிடுகின்றார். மேலும், ‘ஆனால் இது சாதாரண நடவடிக்கை அல்ல. இலங்கையில் அமைதியை கொண்டு வரும் பணிக்காக இந்தியா கடுமையாக உழைத்த போதும், அது குறைவான கவனத்தை பெற்றிருந்தது’ எனவும் தெரியப்படுத்தியுள்ளார். இவ்விடயம் சார்ந்து ஆழமான தேடல் ஒன்று அவசியமானது. காரணம் இலங்கை-இந்திய உடன்பாடு என்பது, இந்தியாவுக்கு கடந்த 37 வருடங்களாக இலங்கையுடனான உறவை அல்லது ஈழத்தமிழர் பற்றிய உறவை கையாளுவதற்கு தேவையான ஒன்றாக அமைந்து உள்ளது. அதனால் இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்ட விடயம் ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதன் அடிப்படையில்;
ஒன்று, இலங்கை-இந்தியா உறவானது 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிக முரண்பாடுகளையும் நெருக்கடிகளையும் அனுபவித்தது என்பது இலங்கைத் தீவின் அரசியலில் முக்கியமான ஒரு பகுதியாக காணப்படுகிறது. ஆனால் இத்தகைய அனுபவம் என்பது குறுகிய காலத்துக்கு அல்லது 1980களுக்கு பின்னான இலங்கைக்கு இந்திய உறவின் அடிப்படை என்றோ கருதி விட முடியாது. அதற்கான அடிப்படை காரணம் இலங்கை-இந்திய உறவு என்பது புவிசார் அரசியல் வரலாற்றின் அனுபவங்களில் இருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டும். அசோக சக்கரவர்த்தியின் இலங்கை மீதான பௌத்த மத பரவல் அடிப்படையில் இருந்து தொடக்கப்பட்ட இந்த வரலாறு; இரு தேசங்களுக்குமான மோதலையும், முரண்பாட்டையும், சமூகத்தன்மையும் அவ்வப்போது ஏற்படுத்தி உள்ளது. இந்திய தேசத்தில் தோன்றிய பௌத்தத்தின் பேணுகைக்குரிய நிலமாக இலங்கைத் தீவின் தென்னிலங்கை காணப்படுகிறது. வடக்கு-கிழக்கு தமிழ் பௌத்தத்தை தழுவியபோதும், காலப்போக்கில் எழுந்த குறிப்பாக தமிழகத்தில் எழுந்த மாற்றங்களோடு நவீன தேசியவாத வரலாறு கட்டமைக்கப்படுகின்ற சூழல், இலங்கைத் தீவின் இரு பரிமாணங்களை மத அடிப்படையில் உருவாக்கியுள்ளது. வடக்கு-கிழக்கு இந்து அல்லது சைவ மதத்தோடும், தென்னிலங்கை பௌத்த மதத்தோடும் செயல்படுகின்ற போக்கு ஒன்றை முன்னிறுத்துகின்றது. இதன்போது இப்புவிசார் அரசியல் வரலாறு, முரண்பாடுகளை மதத்தின் அடிப்படையில் அரசுகளுக்கு இடையிலே தோற்றுவிக்கின்றது. இத்தளத்தில் இருந்து 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா உடன்படிக்கையும் அதன் பிரகாரம் எழுந்த இந்திய இராணுவத்தின் வடக்கு-கிழக்கு மீதான நடவடிக்கையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்தோடு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட உடன்பாட்டின் விளைவு, வடக்கு-கிழக்கு மீதான இராணுவ நடவடிக்கைக்கான பரிமாணமாகவே காணப்பட்டது. ஆனால் இலங்கைத் தீவின் முழுவதற்குமான இலங்கை-இந்தியா உடன்பாடு 13ஆம் திருத்தச் சட்டமூலம் மற்றும் மாகாண சபை முறைமை என்பன அமைய; இந்திய இராணுவம் வடக்கு-கிழக்குக்கானதாக, வடக்கு-கிழக்கு மீதான போராக வடிவமைக்கப்பட்டது. இதன் விளைவு இலங்கை-இந்திய உறவின் தனித்துவத்தையும் ஈழத்தமிழர் உடனான உறவின் முரண்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இலங்கை-இந்திய உறவில் இந்திய இராணுவத்தின் படையெடுப்பானது, ஈழத்தமிழர் உடைய அரசியலில் ஏற்படுத்தப்பட்ட பலவீனங்களை சரி செய்வதற்கான அணுகுமுறையோடு, இந்திய வெளிவிவகார அமைச்சரின் வெளிப்பாடு அமைந்திருக்குமாயின், அதற்கான அணுகுமுறைகள் தற்போதைய ஆட்சி கால பகுதியில் ஏற்பட்டிருக்க வேண்டும். மாறாக பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைகளைப் பற்றிய உரையாடலை செய்ய முயலுகின்ற ஒரு சூழலை கொண்டிருக்குமானால், இந்திய வெளியுறவு மிக மோசமான அணுகுமுறையாக அமையும். வெளியுறவு கொள்கை வடிவமைப்பு வரலாற்றுரீதியாக தனித்துவமானதாகவும், தேச நலனை மையப்படுத்தியதாகவும் அமைந்திருப்பது முக்கியமானது. ஒரு நாட்டின் வெளியுறவு என்பது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களை கையாளுகின்ற செய்முறை என்றே வெளியுறவின் கோட்பாட்டு வாதம் வெளிப்படுத்துகின்றது. அவ்வாறாயின் இந்தியா இலங்கை மீதான இராணுவ நகரை எவ்வாறு நிராகரிக்கும் என்பது பிரதான கேள்வியாகும். அவ்வாறு அது நிராகரிக்க முயலுகின்ற போது அதன் வெளியுறவு தனித்துவமானதாகவும் புதியதாகவும் அமைந்திருத்தல் வேண்டும். அதே மரபுக்குள்ளும் அதே அணுகுமுறைகளுக்குள்ளும் செயற்பட்டு கொண்டு, கடந்த கால நகர்வுகளை நிராகரித்தல் என்பது தேச நலனுக்கு முரண்பட்ட விதத்திலான விடயமாகவே தென்படுகிறது. அவ்வாறான சூழலுக்குள் இந்திய வெளியுறவு அமைச்சரின் உரையாடல் அமைகின்றது எனில், அதன் விளைவுகள் அனைத்தும் இந்தியாவின் பிராந்திய ரீதியான இருப்பையும் சர்வதேச அரசியலின் இருப்பையும் அதிகம் கேள்விக்கு உட்படுத்தும். இந்தியா ஒரு பெரும் தேசம் என்ற அடிப்படையில், இலங்கையால் ஏற்படுகின்ற பாதிப்புகளை அது எதிர்கொள்ளாமல் தப்பிக் கொள்ள முயலுகின்றது என்பது நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கக் கூடிய ஒன்றாக அமையாது. மாறாக இலங்கை இன்னோர் வலுவான சக்தியோடு கைகோர்க்கும் போது அதன் விளைவுகளை இந்திய தேசம் எதிர்கொள்ள வேண்டும். அதனால் ஏற்பட போகும் பாதிப்புகளில் இருந்து இந்திய வெளியுறவு மீள்வது என்பது கடினமான விடயமாக அல்லது இலக்காக அமையும்.
இரண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சரின் அத்தகைய வெளிப்பாடானது, இலங்கை அரசின் நலன்களை பராமரிப்பதோடு பலமான ஒரு நட்புறவை கட்டமைப்பதற்கான உத்தியாக உள்ளதா என்ற கேள்வியும் தவிர்க்க முடியாது. காரணம் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன்களை தள்ளுபடி செய்வதிலும் இலங்கை ஆட்சியோடு நெருக்கமான உறவை பேண முயல்வதையும் கடந்த சில ஆண்டுகளாக அவதானிக்க முடிந்தது.அதிலும் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சி காலம் முழுவதும் இலங்கை தீவுடன் நெருக்கமான உறவினை கடைப்பிடிப்பதில் இந்திய வெளியுறவு அதிகம் விட்டுக்கொடுப்புகளையும் சலுகைகளையும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இத்தொடர்சியான ஒத்துழைப்பும் ஆதரவும் இலங்கை ஆட்சியாளர்களின் இருப்பையும் அல்லது அதன் நிலைத்திருப்பையும் உத்தரவாதப்படுத்தும் விதத்தில், இத்தகைய வெளிப்பாடுகளும் உதவிகளும் ஒத்துழைப்புக்களும் காணப்படுவதாகவே தெரிகின்றது. இந்தியா தனது சகார் திட்டத்தின் கீழ் அடைந்திருக்கும் பிராந்திய ரீதியான நெருக்கடி மீள் அமைப்பதற்கு அதிக விட்டுக் கொடுப்புகளை பிராந்திய நாடுகளில் ஏற்படுத்த முனைகின்றது. அதனுடைய அடிப்படையிலேயே இலங்கை ஆட்சி அதிலும் குறிப்பாக தென்னிலங்கையை திருப்திப்படுத்தும் விதத்தில் செயல்பட முனைகின்றது. இலங்கைக்கு இந்திய இராணுவம் குவிக்கப்பட்டதன் பிரதான நோக்கம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுத பலத்தையும் போராட்டத்தினை அழிப்பது மட்டுமின்றி, தென்னிலங்கையில் எழுச்சி பெற்று இருந்த ஜனதா விமுக்தி பெரமுன ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் வழி வகுத்தது. ஏறக்குறைய இலங்கைத் தீவு முழுவதும் எழுச்சி அடைந்திருந்த ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் இலக்கோடு இந்திய இராணுவத்தின் வருகை இலங்கையில் நிகழ்ந்திருந்தது. அத்தகைய நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே வடக்கு-கிழக்கு மட்டுமின்றி தென்னிலங்கையும் அகப்பட்டிருந்தது. பிராந்தியரீதியில் தனது நலனுக்கு உட்படாத விதத்தில் எழுச்சி பெற்ற அனைத்து விடுதலைப் போராட்டங்களை அழித்தொழித்ததோடு, அத்தகைய போராட்டங்களுக்கான முனைப்புகளை முடிவுக்கு கொண்டு வரும் யுத்தியோடு இந்தியா பிராந்திய அரசுகளையும் பிராந்திய அரசுகளுக்குள் எழுச்சி பெற்ற விடுதலைப் போராட்டங்களையும் கையாண்டிருந்தது. அதேநேரம் பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து இருந்தது. இத்தகைய இரட்டை நிலைப்பாடு பிராந்தியரீதியான கொதி நிலைக்கும், இந்திய மீதான எதிர்ப்பு வாதத்துக்கும் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. ஈழ விடுதலைப் போராட்டத்தை தோற்றுவித்து, அதனை கட்டமைத்ததில் அதிக கவனம் கொண்ட இந்தியா, அத்தகைய போராட்டத்தை 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா உடன்படிக்கையின் ஊடாக முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டது. அது சாத்தியமற்று போகவே 2009களில் அனைத்து பிராந்திய சர்வதேச சக்திகளோடு இணைந்து அத்தகைய போர் நடவடிக்கையை முனைப்போடு கையாண்டது. அதுமட்டுமன்றி, 1987களில் படையெடுப்புக்களும் ஆக்கிரமிப்புகளும் முடிவுக்கு வரும் ஒரு சகாப்தத்தில், இறுதிக்கால பகுதியில் இப்படையெடுப்பை இந்தியா இலங்கை மீது நிகழ்த்தி இருந்தது. 1987ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஆட்சிக்கு வந்த மிகையில் கோர்பச்சேவ், அமெரிக்காவோடு மேற்கொண்ட உடன்பாட்டின் பிரகாரம், படைத்தரப்புக்களையும் ஆக்கிரமிப்புகளையும் கைவிடும் உலக ஒழுங்கொன்று பரிணமித்ததது. இக்காலப்பகுதியில், இந்தியா இலங்கை மீது படையெடுப்பை சாத்தியப்படுத்தியது. எனவே மிக நீண்டதும் ஆழமானதும் தேவையின் பிரகாரமாகவும் அத்தகைய நடவடிக்கை இலங்கை மீது இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டது. அதுக்கு பின்னால் அமெரிக்க வல்லரசும் பிரதான பங்காளியாக விளங்கியது. இலங்கை-இந்தியா ஒப்பந்தம் அமெரிக்காவினுடைய சதி என்ற விமர்சனமும் அக்கால பகுதியில் முதன்மைப்படுத்தப்பட்டது. அவை அத்தகைய இலக்கிற்கூடாக இலங்கை-இந்தியா உடன்படிக்கையின், இலங்கை மீதான இந்திய இராணுவ வருகையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். கடந்த கால அரசுகளை நிராகரிப்பது என்பதை விட புவிசார் அரசியல் வரலாற்றையும் அதன் நீட்சியையும் புரிந்து கொள்வதன் ஊடாகவே இலங்கை மீதான இந்திய இராணுவத்தின் நகர்வுகளை இனம் கண்டு கொள்ள முடியும். அத்தகைய வரலாற்றின் பதிவுகள் இன்று வரை தொடர்ச்சியான ஒன்றாகவே இந்தியாவினால் இலங்கை மீது நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் குறிப்பாக இந்திரா காந்தியின் உடைய காலப்பகுதி மேலாதிக்க யுத்திகளை முதன்மைப்படுத்திய இந்தியா, தற்போது விட்டுக் கொடுப்புகளையும் இணக்கமான உறவாடல்களையும் பொருளாதார ஒத்துழைப்புகளையும் தீவிர படுத்துவதன் மூலம், சுமூகமான தன்மையை கொண்டு வர முடியும் என கருதுகின்றது. இந்தியாவின் மென் அதிகார அணுகுமுறைக்குள்ளால் இலங்கைத் தீவு அரசியல் கையாளப்படுகின்றது.
எனவே, இந்தியாவின் வெளியுறவு கடந்த கால இந்தியாவின் கொள்கையை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது என்பது அதன் தேசிய நலனை பலவீனப்படுத்துவதாகவே தெரிகின்றது.அத்தகைய பலவீனப்படுத்தல்கள் எதிர்கால ஆட்சி முறையிலும் அதன் கொள்கையிலும் பலவீனத்தை தோற்றுவிக்கும். இத்தகைய பலவீனங்களுக்குள்ளால் பிராந்திய நாடுகள் மீதான உறவின் விரிசல் மட்டுமின்றி, பிராந்திய மக்களுக்கிடையிலான உறவின் விரிசலும் தவிர்க்க முடியாததாக வளர்ச்சியடையக் கூடியது. இலங்கை-இந்திய உறவானது நீண்ட புவிசார் அரசியல் வரலாற்றை பிரதிபலிப்பது. அத்தகைய பிரதிபலிப்புக்கூடாகவே இந்தியாவின் நகர்வுகள் ஒவ்வொன்றையும் இலங்கைத் தீவின் அரசியலோடு முதன்மைப்படுத்துதல் அவசியமானது.
-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)