December 7, 2022
அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவு மீது இந்தியா கடும்போக்கினை கையாள முனைகிறதா?

சீன-இலங்கை நெருக்கமான உறவினால் இந்தியா அதிக நெருக்கடியை எதிர் கொண்டுவருகிறது என்பது பொதுவான அவதானிப்பாக அமைந்தாலும் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான வர்த்தக உறவு பலமாக உள்ளது என்பது பலரது வாதமாக அமைந்துள்ளது. அதனால் இந்தியா -சீனா அடிப்படையில் முரண்பாட்டை தவிர்த்து எல்லைக் கோட்டில் தள்ளுமுள்ளுபடுகிறதே அன்றி மோதல் அல்லது போர் என்பதற்கான வாய்ப்பினை தவிர்த்து வருகின்றன. அதில் இந்தியாவே அதிக கவனம் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. சீனாவுடன் ஒரு பெரும் போரை இந்தியா எதிர்கொள்ளாது தவிர்த்து வருகிறது. ஆனால் இலங்கைத் தீவில் இந்தியா சீனாவை எதிர் கொள்வது போல் தொழில்படுவதைக் காணமுடிகிறது. இக்கட்டுரையும் இந்தியா இலங்கை மீது கடும் போக்கினை மேற்கொள்ள திட்டமிடுகிறதா என்பதை தேடுவதாகவே உள்ளது.

கடந்தவாரம் இதே பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராஜீக உறவில் குழப்பம் நிலவுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான காரணங்களும் உரையாடப்பட்டது. தற்போது அதற்குரிய சூழலும் காரணமும் நீடிப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக இலங்கைக் கடன் வழங்குவதில் இந்தியாவும் சீனாவும் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளன. இருநாட்டுடனும் இலங்கை வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை பலமானதாக அமைந்துள்ளது. அத்தகைய நிபந்தனையை சீனா இலங்கைக்கு வழங்குவது முதல் தடவை அல்ல. ஏற்கனவே இயற்கை உரம் தொடர்பில் எவ்வகையான முரண்பாட்டை சீனா மேற்கொண்டது என்பது தெரிந்த விடயம் ஆனால் இந்தியா அவ்வாறு நிபந்தனை விதிப்பதென்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் இந்தியா நிபந்தனை விதிக்கவும், இராஜீக ரீதியில் முரண்படவும் முயலுகிறது. அதன் மூலம் எதனை இந்தியா அடைய விரும்புகிறது. போன்ற சந்தேகங்கள் தவிர்க்க முடியாதது.

குறிப்பாக இந்திய ஆட்சியாளர்களில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே அத்தகைய கடும் போக்கினை இலங்கை மீது ஏற்படுத்தியவர். அவரது திட்டமிடலுடனேயே ராஜீவ்காந்தியும் முயன்று தோற்றுப் போன வரலாறு நிகழ்ந்து முடிந்தது. ஆனால் இலங்கை ஆட்சியாளர்களை கட்டுப்பாட்டுக் கொண்டுவர இந்தியா கடும் போக்கினை மேற்கொள்வதென்பது தவிர்க்க முடியாதது என்பது 1971ஆம் ஆண்டு வங்களாதேஷ் பிரிவினையின் போதும் 1983ஆம் ஆண்டு யூலை இனக்கலவரத்தின் போதும் 1987ஆம் ஆண்டு வடமராட்சி ஒப்ரேசன் லிபரேசன் போதும் காணக்கூடியதாக இருந்தது. அத்தகைய மூன்று சம்பவங்களிலும் நேரு குடும்பமே பிரதான காரணமாக இருந்தது. அதற்குப் பின்னர் தற்போது அதாவது நரேந்திர மோடி ஆட்சிக்காலத்திலேயே அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால் அதனை முழுமையாக மேற்கொள்வார்களா என்ற குழப்பமும் இல்லாமலில்லை. இருந்த போதும் அதறகான சூழல் ஒன்று நிலவுகிறது. அதற்கான காரணம் இலங்கை ஆடசியாளர்களது போக்கு எப்போதும் இந்தழியாவுக்கு எதிரானதாகவே உள்ளதென்பதாகும். குறிப்பாக இலங்கைத் தீவின் வெளியுறவுக் கொள்கையை அவதானித்தால் இந்திய எதிர்ப்புவாதத்தையே கொண்டுள்ளது தெளிவாக தெரியும்.

அதாவது சுதந்திரம் அடைந்த போது பிரித்தான சார்பான வெளியுறவுக் கொள்கையையே அன்றைய முதல் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கா கொண்டிருந்தார். அப்போது சுதந்திரப் போராட்டத்தை இந்தியா நடத்தியதாலும் பிரிததானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயல்பட்டதாலும் இந்தியா -பிரிட்டன் உறவு முரண்பாடுடையதாவே காணப்பட்டது. அவ்வாறே பனிப்போர்க காலம முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராகவும் சோவியத் யூனியனுக்கு ஆதரவாகவும் இந்தியா செயல்பட்ட போது அமெரிக்க-இலங்கை நட்பு பலமானதாக அமைந்திருந்தது. அதிலும் இந்திராகாந்தி காலம் அமெரிக்க-இந்திய முரண்பாடு அதீதமாகக் காணப்பட்ட காலமாகும். அப்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவை முதன்மைப்படுத்திக் கொண்டு இந்தியாவை இலங்கைத் தீவில் தலையிட விடாது செயல்பட்டார். அவ்வாறே புதிய உலக ஒழுங்கு உருவான பின்பு சீனாவுடனான இலங்கையின் நட்புறவு பலமானதாக மாறியது. அதன் பிரகாரம் இந்தியாவுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கையை இலங்கை கைக்கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது. ஏனைய காலப்பகுதியை விட தற்போதைய காலப்பகுதி அதிக ஆபத்தானதாக அமைந்துள்ளது. காரணம் இந்தியா-சீன எல்லை நாடுகளாகவும் எல்லை முரண்பாடுடைய நாடுகளாகவும் காணப்படுகின்றன. 1962 முதல் இரு நாடுகளும் பலமான நட்புறவை கொண்டிராத நாடுகளாக விளங்கின என்பதும் இந்திய எல்லைக்குள் நுழைந்து சீனா கைபபற்றிய நிலப்பகுதியை இந்தியா என்னுமே மீட்டெடுக்கவில்லை என்பதும் நினைவு கொள்ளத்தக்கதாகும். இத்தகைய முரண்பாடுகளைக் கொண்ட இந்தியா சீனாவை இலங்கைத் தீவில் அதிகம் எதிர்கொள்ளவே முனைகிறது.

அதாவது இந்தியாவின் புவிசார் அரசியல் பரப்பக்குள் அமைந்துள்ள இலங்கைத் தீவை பிற வல்லரசுகள் தலையிடவிடாது தடுத்து செயல்படுவதென்பது அவசியமானதாக உள்ளது. அதனை மேற்கொள்வதற்கு இலங்கை ஆட்சியாளர் மீது கடும்போக்கினை கடைப்பிடிப்பது தவிர்க்க முடியாததாகும். கடந்த காலத்திலும் அத்தகைய நகர்வுகளாலேயே இலங்கைத் தீவை தமது செல்வாக்குப் பகுதியாக வைத்துக் கொள்ள முடிந்தது. அத்தகைய நகர்வில் ஒரு பகுதியாகவே 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் இலங்கை மீதான படையெடுப்பு அமைந்திருந்தது. அன்றைய படைக்குவிப்பு பிறவல்லரசுகளது ஆதிக்கத்தை தடுப்பதற்காக அமைந்திருந்தது. அது அமெரிக்க இராணுவத்தின் நிலைகொள்ளலை தடுப்பதற்கானதென்றாக அமைந்திருந்தது. அத்தகைய சூழல் ஒன்று மீளவும் ஏற்பட்டுள்ளதாகவே சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது. இது சீன இராணுவத்தின் பிரசன்னமாக அமையுமா என்ற கேள்வியை இந்தழிய புலனாய்வுத் துறையின் தமிழக பிரிவு அண்மையில் தெரிவித்துள்ளது. சீன இராணுவத்தின் உதலவியுடன் யாழ்ப்பாணத்தில் இயங்கும் இறால் பண்ணைகள்மற்றும் கடல் அட்டைப் பண்ணைகள் இயங்குவதாக சந்தேகம் வெளியிட்டுள்ளது. அத்தகைய தகவலை சீன அரசாங்கம் அடியோடு மறுத்துள்ளது என்பதும் கவனத்திற்குரியதாகும்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்திலேயே இந்தியா பொறுத்து அதிக குழப்பம் நிலவுகிறது. குறிப்பாக இந்தியா தனது மண்ணில் சீனாவின் நகர்வுகளை எதிர்த்து பாரிய அளவான நடவடிக்கையை மேற்கொள்ளாத போது ஏன் இலங்கைத் தீவில் அதிக அக்கறை செலுத்துகிறது என்பதாகும். இதற்கு இரண்டு காரணங்கள் கருத்தில் கொள்ளலாம். ஒன்று இலங்கைத் தீவின் முக்கியத்துவம் இந்தியாவுக்கு எவ்வளவு அவசியமானதென்பதை புரிந்து கொண்டதன் மூலம் அத்தகைய அக்கறை அதிகரித்தமைக்கு காரணமாகலாம். இரண்டாவது, சீனாவுடன் இந்தியாவுக்கு ஒத்துழைப்பதென்றும் இந்தியாவுக்கு வெளியே சீனாவை எதிப்பதென்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். ஆனால் இவற்றுக்கு அப்பால் இன்னோர் காரணமும் சுட்டிக் காட்டப்படுகிறது. அதாவது இந்தியா பொருளாதார ரீதியிலோ இராணுவ ரீதியிலோ சீனாவை எதிர்கொள்ள முடியாத நிலையிலுள்ளதாகவே கருதப்படுகிறது. அவ்வகை மோதல் இராணுவ ரீதியில் ஏற்பட்டால் இந்தியா சீனாவை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதனால் இந்திய மண்ணில் சீனாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. ரஷ்சிய-இந்திய நெருக்கமும் இன்னோர் வலவான விடயமாகத் தெரிகிறது. அதாவது சீனா-ரஷ்சிய கூட்டும் இந்தியா சீனப் புரிதலை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது. இதனாலேயே இந்தியா தனது மண்ணில் சீனாவுடன் மோதுவதை விடுத்து இலங்கைத் தீவில் மோதுவது போல் காட்ட முயலுகிறது. அதனைக்கூட முழுமையான பகைமையாகக் கொள்ளலாமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

அதாவது இலங்கை தீவின் ஆட்சியயாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் சீனாவுடனான உறவை கையாள முனைகிறதே அன்றி சீனாவுடன் நேரடியான பகைமையை வெளிப்படுத்துவதாக தெரியவில்லை. இந்தியா சீனாவுடன் கொண்டுள்ள வர்த்தக மற்றும் பொருளாதார உறவு பலவீனமடைந்துவிடும் என்ற அடிப்படையில் செயல்படுகின்றதே அன்றி சீனாவை எதிர்கொள்வதென்ற நோக்கில் அல்ல. இலங்கைத் தீவை மட்டுமல்ல முழு தென்னாசிய நாடுகளையும் இந்தியா அவ்வாறே கையாளுகிறது. அதாவது சீனாவுக்கு எதிராக அந்த நாடுகளின் ஆட்சியாளர்களை தூண்டுவதன் மூலம் சீனாவை அகற்ற முயலுகிறது. அவ்வாறு இந்தியா கருதுவது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே. காரணம் ஒன்று, இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் கட்சி பேதமின்றி சீனாவின் மூலமே இந்தியாவை கையாள முடியுமெனக் கருதுகிறவர்கள். ஏற்கனவே அத்தகைய சூழலை எதிர்கொண்ட அனுபவத்தைக் கொண்டவர்கள். அதனால் இறுதியிலும் இறுதியாக சீனாவின் நண்பர்களாவே காணப்படுவார்கள். இன்னொன்று சீனா இந்து சமுத்திரத்தில் மையமான இலங்கைத் தீவை கைவிடுவதென்பது இந்து சமுத்திரத்தையே கைவிடுவதாக அமைந்துவிடும். அதனால் எதனை இழந்தேனும் இலங்கைத் தீவை பாதுகாக்கவே முனையும். அத்தகை நிலையில் தென் இலங்கை ஆட்சியாளர்கள் முழுமையாக சீனாவுடன் ஒத்துழைப்பதுடன் சீனாவின் நட்புறவும் இலங்கைத் தீவில் பலமானதாக அமையும் இலங்கைத் தீவை சீனா ஒரு போதும் இழக்கத் தயாராகாது. குறைந்த பட்சம் தென் இலங்கையாவது சீனாவின் ஆதிக்கத்திற்குள் அமைய வாய்புள்ளது.

எனவே, இந்தியாவின் கடும்போக்கினை இலங்கைத் தீவில் மேற்கொள்வதென்பது கடினமானதாகவே தெரிகிறது. கடந்த காலத்தில் இந்திரா காந்தி மேற்கொண்டது போல் இலகுவில் அத்தகை போக்கினை சாத்தியப்படுத்த முடியாத நிலையில் இலங்கைத் தீவில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்துள்ளது. அதுமட்டுமன்றி சீனாவை எதிர்கொள்வதென்பது இந்தியாவால் முடியாத நிலை காணப்படும் வரை இலங்கைத் தீவை முழுமையாக இந்தியா கையாளுவதென்பது கடினமான இலக்காகும். மாறாக வடக்கு கிழக்கு மீது கவனம் கொள்வதன் மூலம் ஓரளவு பாதுகாப்பினை இந்தியா உருவாக்கலாமே அன்றி தென் இலங்கையை மீட்பது கடினமாகவே தெரிகிறது. அவ்வாறு கடினமான போக்கினை கடைப்பிடிக்க இந்தியா முயலுவதென்பது மடடுமே இந்தியா இலங்கைத் தீவின் இருப்புக்கான வாய்பான சூழலாகும். அது மிக அபாயமானதாக அமைய வாய்ப்புள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)