December 7, 2022
அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழர் மீது மீளவும் ஒரு போலியான அரசியல் தீர்வை திணிக்க இந்தியா முயலுகிறதா?

இலங்கை அரசியலில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியை அடுத்து பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. உள்நாட்டு அரசியலிலும் பிராந்திய சர்வதேசத் தளத்திலும் ஈழத்தமிழர் விடயம் பொறுத்து அதிக மாற்றங்கள் அரங்கேறிவருகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் ஜெனீவாவில் நிகழ்ந்த வாக்கெடுப்பை அடுத்து நேர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக்சொலஹொம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாமை, விடுதலைப்புலிகளின் போராளிகள் கட்சியினர் புதுடில்லி சென்று உரையாடி திரும்பியுள்ளமை, சீனாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வடக்கில் கோஷங்கள் எழுந்துள்ளமை, மீளவும் நாவலப்பிட்டியில் பொதுஜனப் பெரமுன கட்சியினரது எழுச்சி மகாநாடு நடைபெற்றுள்ளமை போன்ற அரசியல் விடயங்கள் சமகாலத்தில் அரங்கேறியுள்ளன. இவை யாவற்றையும் வெறும் அரசியலாக நோக்காது ஈழத்தமிழரது அரசியலுடன் தொடர்புபடுத்தி நோக்குவதே இக்கட்டுரையின் புரிதலாகும்.

இலங்கையில் சீன இராணுவத்தின் நடவடிக்கை இந்திய தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தமிழக மாநில புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக சீன இராணுவத்தின் நடமாட்டம் செய்மதிகள் மூலமான கண்காணிப்பு சார்ந்த உயர் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு ஆளில்லாத விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றமை போன்றவற்றால் கரையோரக் கண்காணிப்பினை அதிகரிக்குமாறு அனைத்து கரையேர மாவட்டங்களுக்கும் மாநில புலனாய்வுப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.இத்தகைய அறிவிப்பு தொடர்பில் கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்பே வடக்கு கிழக்கு புலமைத்தளத்திலும் ஊடகத்தளத்திலும் உரையாடப்பட்டிருந்ததுடன் இந்திய-தமிழக மட்டத்திலும் அத்தகைய எச்சரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. ஆனால் புதுடில்லி மட்டுமல்ல இலங்கைக்கான இந்தியத் தூதரகமும் அதனை அசட்டை செய்திருந்தது. சீனா சார்ந்த விடயத்தை தாம் பார்த்துக் கொள்வதாகக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான உரையாடலில் தூதுவர் தெரிவித்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. இவை அனைத்துமே காலதாமதமான எச்சரிக்கைகளே. சீனா இந்து சமுத்திரத்தையும் இலங்கைத் தீவையும் தனது செல்வாக்குக்குள் வைத்துள்ளது என்பது வெளிப்படையான செய்தியாகும். தற்போது வடக்கு கிழக்குக்குள்ளும் அதன் செல்வாக்கு வளர்ச்சியடைந்துவருகிறது.

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்தமானத்திற்கு ஆதரவான வாக்குகளாலும் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தாலும் பொருளாதார நெருக்கடியாலும் அதிக குழப்பத்தை தென் இலங்கை எதிர் கொண்டுள்ளது. இத்தகைய தீர்மானத்தின் வளர்ச்சி ஈழத்தமிழருக்கு சாதகமானதாக அமைந்துவிடுமா என்ற குழப்பத்தில் தென் இலங்கை காணப்படுகிறது. அதனாலேயே ஏதோ ஒரு தீர்வுக்கு செல்லவேண்டிய நிலைக்குள் உலகளாவிய சூழலும் பிராந்திய சூழலும் காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே நேர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராக செயல்பட்ட எரிக்சொல்ஹொம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஐக்கிய நாடுகள் சபை மட்டத்திலேயே அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்வாதி என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டத்தையும் அரசியலையும் முடிபுக்கு கொண்டுவந்தவர் என்ற விமர்சனமும் அவர் மீது உண்டு. அதுமட்டுமல்ல பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தையும் அதன் அமைப்பையும் தலைமைத்துவத்தையும் அழித்தொழிப்பதில் அதிக பங்காற்றியவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.குறிப்பாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் செய்துகொண்ட ஒஸ்லோ உடன்பாட்டுக்கும் , விடுதலைப்புலிகள் -ரணில்விக்கிரமசிங்ஹா அரசாங்கம் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்பாட்டுக்கும் பின்னால் செயல்பட்டவர் எரிக்செல்ஹெய்ம் என்பது தெரிந்த விடயமே. ஈழத்தமிழரது அரசியலோடு அதிகம் பரீட்சயமும் தொடர்பும் உடையவர். சமாதான காலம் முழுவதும் கொழும்பு, புதுடில்லி, வோசிங்டன் மற்றும் கிளிநொச்சி என்ற ஒழுங்கை பேணியதுடன் அதனூடாக ஆயுதப் போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றவர் என்பதை கருத்தில் கொள்ளுதல் அவசியமானது. அத்தகைய இராஜதந்திரியை ஜனாதிபதி ஆலோசகரா நியமித்துள்ளமை சாதாரணவிடயமாக நோக்க முடியாது.

தென் இலங்கை அரசாங்கமும், அரசியல்வாதிகளும் அதிகம் குழப்படைந்திருப்பது ஜெனீவாவில் ஏற்பட்ட நெருக்கடியினால் ஏதாவது ஈழத்தமிழருக்கு ஏற்பட்டுவிடுமா என்தே. இதில் மேற்குலகம் மட்டுமல்ல தற்போது இந்தியாவும் அந்தவிடயத்தில் தென் இலங்கையின் நிகழ்ச்சி நிரலை குழப்ப முயல்வதாகவே இலங்கை அரசாங்கம் கருதுகிறது. இந்தியாவுக்கு எதிராக இலங்கை காணப்பட்டாலும் தனது நிகழ்ச்சி நிரலை இந்தியா மூலம் தென் இலங்கை கையாண்டு வந்தது என்பது கடந்த கால பதிவுகளாகும். ஆனால் தற்போது வடக்கு கிழக்கு மீது சீனாவின் செல்வாக்கு அதிகரிப்படைய இந்தியா குழப்பமடைந்துள்ளதுடன் ஈழத்தமிழரது அரசியலை முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதில் இலங்கை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் வருமாயின் அதாவது இந்தியாவின் விருப்புக்களை திருப்திப்படுத்த தென் இலங்கை உடன்படுமாயின் ஈழத்தமிழரது அரசியல் அந்த இடத்திலிருந்து நகராது விளங்கும் போக்கினையே இந்தியா கடைப்பிடித்து வந்தள்ளது. ஆனால் தற்போது தென் இலங்கையின் கட்டுப்பாட்டில் சீனா இல்லை என்பதும் சீனாவின் செல்வாக்குக்குள்ளேயே இலங்கை அரசியல் காணப்படுகின்றது என்பதுவுமே இந்தியாவின் குழப்பமாகும். சீனா வடக்கு கிழக்கில் ஆழமாக தனது செல்வாக்கினை வலுப்படுத்திவருகிறது. அது சீனாவின் இந்து சமுத்திர அரசியலின் ஓரு பகுதியாக மாறியுள்ளது. இந்தியா சீனாவின் அரசியலை முறியடிக்க மீண்டும் ஈழத்தமிழரது அரசியலை முன்னிறுத்தரியுள்ளது. 1970-1980 களில் அமெரிக்காவின் செல்வாக்கு இலங்கைத் தீவில் வலுவடைய முயன்ற போது ஈழத்தமிழர்கள் முதன்மைப்படுத்தப்பட்டது போல் இந்தியாவால் மீளவும் சீனாவின் செல்வாக்கினை கையாள ஈழத்தமிழர்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளனர் அதில் ஓரங்கமாகவே ஈழத்தமிழர் -புதுடில்லி சந்திப்புகளும் மகாநாடுகளும் நிகழ்ந்துள்ளது. அவ்வாறான நிகழ்சி நிரலாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கைகள் தமிழ் அரசியல் கட்சிகளது பாராளுமன்ற உரையாடல்கள் மற்றும் தமிழகம் நோக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரது சந்திப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவும் ஜெனீவாவில் இலங்கைத் தீவின் பொருளாதார தீர்வும் அரசியல் தீர்வும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றதெனக் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். ஆனால் இத்தகைய உரையாடல்கள் வழமையானதாக அமையாது ஈழத்தமிழருக்கு ஒரு தெளிவான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமாக அமைந்தால் ஆரோக்கியமானது. அதனைக்கடந்து சீனாவை மட்டுமே கையாளுவதற்கானதாக அமைந்தால் அதன் விளைவுகள் பாரதூரமானதாகவே அமையவாய்ப்புள்ளது.

இந்திய- சீன உறவானது பொருளாதார ரீதியில் பரஸ்பரம் வலுவானதாகும். இரு நாட்டினது வர்த்தகம் பலமானது. அது மட்டுமன்றி இந்தியா சீனாவுடன் வெளிப்படையாக மோதிக் கொள்ள தயாரில்லாத நிலை உள்ளது. சங்ஹாய் மகாநாட்டிலும் பிரிக்ஸ் ஒத்துழைப்பிலும் நெருக்கமான உறவுள்ள இரு நாடுகளும் ரஷ்சிய-உக்ரையின் போருக்கு பின்னர் பலமான உறவை கட்டியெழுப்பிவருகின்ற நாடுகள் ஈழத்மிழருக்காக ஒருபோதும் மோதிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் ஈழத்தமிழரை கொண்டு சீனாவின் இலங்கைத் தீவு மீதான பிரசன்னத்தை முடிபுக்கு கொண்டுவர முயலுகிறது. அதனையே தென்னாசிய பிராந்திய நாடுகளது உறவின் மூலம் ஏற்படுத்த விளைகிறது. இத்தகைய அரசியலை ஈழத்தமிழர்கள் கவனத்தில் கொள்ளத் தவறக்கூடாது.

இத்தகைய சூழலிலேயே தென் இலங்கையில் மீளவும் எழுச்சிகரமான அரசியலுக்கான தளத்தை மொட்டுக் கட்சியினர் போடத்திட்டமிட்டுள்ளனர். ஜெனீவா முதல் வடக்கு கிழக்கு வரையான மாற்றங்களை கண்டு கொண்ட தென் இலங்கை அரசியல் சக்திகள் உணர்சிவசமான தேசியவாதத்தை மீளவும் பலப்படுத்திக் கொள்வதன் மூலம் தமது அரசியலை வலுவானதாக்க முனைகிறனர். கடந்த காலத்திலும் உணர்சிகரமான தேசியவாமே அவர்களது அரசியல் முதலீடாகும். இன்னோர் வகையில் கூறுவதாயின் ஏனைய தேசியங்களுக்கு எதிரான உணர்சிவசமான தேசியவாதமே தென் இலங்கை அரசியல்வாதிகளின் அரசியலாகும். அதனை மீளவும் முதன்மைப்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழருக்கான வாய்ப்புக்களை தோற்கடிப்பதுடன் தமது அரசியல் பலத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனக் கருதுகின்றனர்.

இதில் இரு நகர்வுகளை தென் இலங்கை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதாவது ஈழத்மிழர்-புதுடில்லி உறவு பலமடைய ஆரம்பித்துள்ளதை அடுத்து ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா தலைமையிலான அரசாங்கம் தனது மிதவாத முகத்தை மேற்குலகத்திற்கு காட்டும் விதத்தரில் சில நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. கைதிகள் விடுதலை, காணாமல்போனோருக்கான கொடுப்பனவு, உள்நாட்டுப் பொறிமுறை உருவாக்கம் என பலவிடயங்களை வெளிப்படுத்துவதோடு ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வென்றை நோக்கிய நகர்வை முன்வைக்க ஆரம்பித்துள்ளது. அத்தகைய விருப்புகளை மேற்கொள்ளும் தளத்திலேயே எரிக்சொல்ஹெய்ம் நிறுத்தப்பட்டுள்ளார். அவரின் மூலம் மேற்குலகம் திருப்திப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மறுபக்கத்தில் தீவிர போக்குடைய அதேநேரம் அரசாங்க கட்சியான பொதுஜனப் பெரமுனவையும் அதன் தலைமையையும் உணர்சிவசமான தேசியவாதத்தின் மூலம் உலகளாவிய, பிராந்திய, மிதவாதப் போக்குகளை தகர்ப்பதற்கான நகர்வாவுள்ளது. 1948 முதல் இத்தகைய உத்தியையே தென் இலங்கை பயன்படுத்தி வந்துள்ளது என்பது கவனத்தில் கொள்வது அவசியமானதாகும்.அதாவது ஒன்றின் மூலம் தமது நலன்களை சாதிக்க முடியாதுவிட்டால் இரண்டாவது நகர்வை மேற்கொண்டு அத்தகைய நலனை அடைவதே அத்தகைய உத்தியாகும்.

இலங்கைத் தீவில் இத்தகைய இக்கட்டான சூழலை பயன்படுத்திக் கொண்டு இந்தியா மட்டுமல்ல அனைத்துத் தரப்புகளும் பதின்மூன்றை ஈழத்தமிழரது அரசியல் தீர்வாக அமுல்படுத்திவிட முயல்வது போல் தெரிகிறது.தென் இலங்கை ஒற்றையாட்சிக்குள் தீர்வை திட்டமிடுகிறது. இந்தியாவும் மேற்கும் பதின்மூன்றுக்குள் தீர்வு அமைய வேண்டும் என விரும்புகின்றன. இதில் ஈழத்தமிழர்களே தமக்கான தீர்வைப் பற்றிய புரிதலையும் உரையாடலையும் உருவாக்க வேணடும். ஈழத்தமிழர் -புதுடில்லி சந்திப்புக்களிலும் அதன் பின்பும் பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்தல் என்ற உச்சரிப்பு அதிகரித்துள்ளது. பதின்மூன்றை அமுல்படுத்தாது விட்டால் ஈழத்தமிழர் வடக்கு கிழக்கில் கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என தென் இலங்கை புலமையாளர்கள் எச்சரிக்கை செய்யுமளவுக்கு நிலமை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானது. ஆனால் கடந்த 35 வருட கால உலகளாவிய மாற்றத்தையும் ஈழத்தமிழர் எதிர்கொண்ட நெருக்கடியையும் கவனத்தில் கொள்ளாது செயல்படுவது பொருத்தமற்றது.

எனவே நெருக்கடி மிக்க சூழலில் மீளவும் ஈழத்தமிழருக்கான வாய்பு அமைந்துள்ளது. அதனை அரசியல் நலன்கருதி கையாளாது ஈழத்தமிழரது நலன் கருதி நகர்த்தப்பட வேண்டும். தென் இலங்கையும் இந்தியாவும் சர்வதேசமும் எதனை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஈழத்தமிழருக்கான தீர்வை ஈழத்தமிழரே முன்வைக்க வேண்டும். அனைத்து அரசியல் சக்திகளுடனும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்பதற்காக அடிமைப்பட முடியாது. அவர்களது விருப்புகளுக்கு தலையாட்ட முடியாது.தீர்வின் மூலம் ஈழத்தமிழரது எதிர்காலம் கட்டமைக்கப்பட வேண்டும். இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை கையாளுவதற்காகவோ, இந்தியாவின் நலனை பாதிக்கும் சீனாவை கையாளுவதற்காகவோ, மேற்குலகத்தின் செல்வாக்கினை பலப்படுத்துவதற்காகவோ, தென் இலங்கையின் அரசியல் மீளெழுச்சிக்காகவோ ஈழத்தமிழர் மீது போலியான தீர்வை சுமத்த அனுமதிக்க முடியாது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)