அரசியல் கட்டுரைகள்

இந்திய எதிர்ப்புவாதம் ஈழத்தமிழரது அரசியலுக்கு ஆரோக்கியமானதா?

ஈழத்தமிழர் அரசியலில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலம் அதிக சர்ச்சசைகளை நோக்கி நகர்கிறது. மிக நீண்டகாலமாக பேசப்பட்ட விடயம் மீளவும் ஒரு போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வுக்கான வாய்ப்புக்களை 13க்குள் சுருக்கிக்கொள்ள திட்டமிடும் தமிழ் கட்சிகளின் நகர்வுகள் எனும் குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டு அதற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு நகர்வைத் தொடக்கியுள்ளது. அது பகிரங்கமாக ஒரு பேராட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதற்கான பிரச்சாரங்களை வடக்கில் தொடக்கியுள்ளது. இக்கட்டுரையும் இத்தகைய பேராட்டங்கள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை தேடுவதாக அமையவுள்ளது.

ஒடுக்கப்படும் தேசியம் இனம் ஒன்று தனது இருப்பினை பாதுகாக்கவும் உரிமையை நிலைநாட்டவும் ஜனநாயக வழியிலான பேராட்டங்கள் அவசியமானவை. ஈழத்தமிழர்கள் மத்தியில் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விடயத்திற்கான போராட்டத்தை வருடக்கணக்காக காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோர்கள், குடும்பத்தவர்கள் தொடர்கின்றனர். அவ்வாறே நிலமீட்புப் போராட்டங்கள், ஆக்கிரமிப்புக்கு எதிரான பேராட்டங்கள் அவ்வப்போது நிகழ்த்தப்படும் போராட்டங்களாக அமைந்துள்ளன. அவற்றைவிட அண்மையில் மீனவர்களது போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. அது முழுமையாக இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமாகவே அமைந்திருந்தது. தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக போராடப் போவதாக அறிவித்துள்ளது.

2009களுக்கு பின்னர் ஈழத்தமிழர் மத்தியில் பேராட்டங்கள் மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நிகழ்ந்து வருகிறன. குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை மற்றும் பி2பி(P2P) போன்ற சிவில் அமைப்புக்கள் போராடினாலும் அதனை அரசியல் கட்சிகளும் தலைமைகளும் தமக்கானதாக மாற்ற முயலுகின்றன. ஆனால் அனைத்துமே தமிழ் மக்களுக்கான போராட்டங்களாகவே கருத வேண்டும் என்பது குறிப்பான விடயமாகும். ஆனால் இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்கும் தரப்புக்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் ஈழத்தமிழரது அரசியல் சார்ந்ததாக அமைநட்துள்ளதாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவற்றை ஆழமாக நோக்குவது அவசியம்.

முதலாவது, தென் இலங்கை ஆட்சியாளர்கள் தமக்கு ஏற்படும் அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் போதும் தமிழர் அரசியலில் அதிக கவனம் கொள்பவர்களாகவே காணப்படுகிறார்கள். அடுத்துவரும் மாதங்களில் புதிய அரசியலமைப்பினை பாராளுமன்றத்தில் சமர்பிக்க தயாராகும் அரசாங்கம் அதில் 13வது திருத்தத்தை தற்போதைய வடிவத்தில் வரைபுக்குள் உட்படுத்த முனைகிற போக்குத் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரமற்ற 13வது திருத்தத்தை தமிழர்களுக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைப்பதில் தென் இலங்கை ஆட்சியாளர்கள் கவனம் கொண்டு செயற்படுகின்றனர். எப்படியாவது 13க்குள் தமிழ் மக்களது இனப்பிரச்சினையை முடிபுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளமை தெளிவாக தெரிகிறது. 13ஐ நிராகரிப்பதென்பது இந்தியாவை பகைப்பதாக அமைவதுடன் அது ஒரு சர்வதேச பரிமாணம் பெற்ற உடன்பாடு என்பதை தென் இலங்கை ஆட்சியாளர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளனர்.

இரண்டாவது, அத்தகைய தென் இலங்கை அரசாங்கத்தின் நகர்வை இந்தியாவும் அனுசரிப்பதாகவே தெரிகிறது. இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றை இலங்கை எந்த வடிவத்தில் அமுல்படுத்த எத்தனிக்கிறதோ அந்த வடிவத்தில் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்து வருகிறதை இந்திய இராஜதந்திரிகளது இலங்கை விஜயங்களின் போது அவதானிக்க முடிகிறது. அதன் உள்ளடக்கம் எதுவாயினும் பெயரளவிலாவது இலங்கை ஆடசித்துறை அமுல்படுத்துமாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

மூன்றாவது, இலங்கைத் தீவிலிருந்து சீனாவை அகற்றுவதற்கான உத்தியுடன் இந்திய ஆட்சியாளர்கள் தென் இலங்கை ஆட்சியாளர்களை நோக்குகிறார்கள். இந்திய ஆளும் தரப்பும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவுடனான உறவை கைவிட்டு இந்தியாவுடன் இணைந்து செயல்படுவார்கள் என்ற எண்ணத்துடன் தென் இலங்கை அரசாங்கதட்திற்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள் ஆனால் தென் இலங்கை ஆட்சியாளர் மீதான இந்தியாவின் நம்பிக்கை ஆபத்தான விளைவையே ஏற்படுத்தக் கூடியது. அதனையே கடந்த காலத்திலும் இந்திய ஆட்சியாளர்கள் அனுபவித்துள்ளனர். மீண்டும் அதற்கான வாய்பட்பினை தென் இலங்கை ஆட்சியாளரிடம் இந்தியா பெறப் போகின்றதாஎன்பதே பிரதான கேள்வியாகும்.

நான்காவது, 1987 இலங்கை-இந்திய உடன்படிக்கையின் கீழ் ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்குமான முரண்பபாட்டை தென் இலங்கை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவதில் வெற்றி கொண்டனர். அதன் நீட்சியே முள்ளிவாய்க்கால் வரையும் நகர்ந்தது. அதன் பின்னரும் அதனை பாதுகாப்பதில் தென் இலங்கை ஆட்சியாளரும் அதற்கு ஆலோசனை வழங்கும் புத்தியீவிகளும் கவனம் கொள்கின்றனர். ஈழத்தமிழர்களை இந்தியாவுடன் இணைய விடாது தடுப்பதே தென் இலங்கை ஆட்சியாளரின் பிரான உத்தியாக உள்ளது. அதே நேரம் இந்தியாவை தென் இலங்கையுடன் இயங்க வைக்கும் அனைத்து நகர்வுகளையும் முதன்மைப்படுத்தி வருவதில் அக்கறையுடன் செயல்படுவதனைக் காணமுடிகிறது. அது மட்டுமனட்றி இந்தியாவும் தென் இலங்கையுடன் ஒத்துழைப்பதில் அதிக கரிசனை கொண்டு இயங்குகிறது. தென் இலங்கையுடன் இணைந்து கொண்டு ஈழத்தமிழரது அரசியலை பலவீனப்படுத்தும் நகர்வுகளை இந்தியாவும் மேற்கொண்டுவருகிறதைக் காணமுடிகிறது. அதற்கு ஈழத் தமிழரது அரசியல் பக்கமும் அணுகுமுறையும் பிரதான காரணமாகவே தெரிகிறது.

ஐந்தாவது, 13 வது திருத்தத்தை எதிர்ப்பதும் இந்தியாவை எதிர்ப்பதும் ஒன்றாகவே மேற்கொள்ளப்படுகின்றது. அதிகாரம் எதுவுமற்ற 13 ஆல் தமிழ் கட்சிகள் தமக்குள் மோதிக்கொள்வதுடன் இந்திய எதிர்ப்புவாதத்தை உருவாக்குகின்றனர். இந்தியா தமிழர்களுக்கு எதையும் தராது விட்டாலும் தமிழக மக்களும் இந்திய அரசியலும் ஈழத்தமிழருக்கு அவசியமான சக்திகளே. உலகிலுள்ள எந்த அரசும் தேசிய இனங்களுக்கோ அரசுகளுக்கோ எதனையும் தமது நலனுக்கு அப்பால்பட்டு வழங்குவதில்லை. அதனை அந்த தேசிய இனத்தின் அரசியல் சக்திகளே போராடி பெற வேண்டும். இந்திய அரசுமட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து அரசுகளும் தமது தேசிய நலனுக்குட்பட்டே செயல்படுவதென்பது அரசியல் விதியாகும். 2009 முற்பட்ட சூழல் வேறு தற்போதுள்ள சூழல் வேறு என்பதை தமிழ் தரப்புக்கள் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். ஒடுக்கப்படும் தேசிய இனம் தனது நட்புச்சக்திகளை அணுகவும் எதிர்ப்புச் சக்திகளை கையாளவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஆறாவது, ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் இருப்புபற்றிய சர்வதேச அனுபவங்கள் பிராந்திய வல்லரசு சக்தி பிரதான நிலையை பெறுகிறன. குறிப்பாக கிழக்கு தீமோர் விடுதலை, பங்களாதேஷ் பிரிவினை மற்றும் பின்லாந்து விடுதலை போன்றவற்றில் தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டங்களின் இருப்பு பிராந்திய அரசுகளின் ஆதரவுத்தளம் பிரதானமாக காணப்பட்டது. ஆனால் ஈழத்தமிழருக்கு இருந்த அத்தகைய ஆதரவுத் தளத்தை தென் இலங்கை கையாண்டு அழித்துள்ளதன் பிரதிபலிப்பை ஈழத்தமிழர் அனுபவித்துள்ளனர். அதற்கான சூழலைக் கையாளும் உத்தியுடன் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் செயல்பட வேண்டும். 13 ஐ எதிர்க்கும் போராட்டம் இந்திய எதிர்ப்புவாதத்தை ஏற்படுத்தாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல இவ்வகைப் போராட்டங்கள் கட்சி நலனைக்கடந்து மக்கள் நலனுக்குட்பட்டதாக அமைய வேண்டும். ஏற்கனவே மீனவர் போராடட்டமும் இந்திய எதிர்ப்பு போராட்டமாக மாற்றப்பட்டிருந்தமை கவனத்திற்குரியதாகும்.

எனவே, போராட்டங்கள் ஈழத்தமிழருக்கான பிராந்திய சர்வதேச அரசியல் மட்டத்திலுள்ள ஆதரவுத் தளத்தை பாதிக்காத வகையில் அமைதல் வேண்டும். அது மட்டுமல்லாது போராட்டங்கள் தமிழ் மக்களது நோக்கு நிலையிலிருந்து நிகழ்தப்பட வேண்டும். தென் இலங்கை 13 க்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை முடக்க முனைவதை எதிர்க்கும் அதே வேளை அதனை முறியடிக்கும் தொடர் போராட்டங்களும் பிற உத்திகளும் வகுக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளது எதிர்ப்புவாத அரசியலால் ஏற்படட்ட விளைவுகளை மதிப்பீடு செய்து நகர்வுகளை முதன்மைப்படுத்த வேண்டும். தமிழ் தரப்புக்குள் மோதலை மீளவும் ஏற்படுத்தும் அணுகுமுறையாக அமைவது தமிழ் மக்களுக்கு எத்தகை பாதிப்பு ஏற்படும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எது எவ்வாறாயினும் ஒடுக்கப்பட்ட தேசங்கள் போராடுவது அவசியம். அது இருக்கும் வாய்ப்புக்களை குலைப்பதாகவே கட்சி நலனை முதன்மைப்படுத்துவதாகவோ அல்லாது நீண்ட நோக்கில் தமிழ் மக்களுக்கு நலன் சேர்ப்பதாக அமைதல் அவசியம்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)