அரசியல் கட்டுரைகள்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்ங்களில் தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பது நியாயமானதா?

இலங்கைத் தீவு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். வடக்கு கிழக்கு மாகாணத்தை காட்டிலும் தென் இலங்கை முழுமையாக வீதியிலிறங்கி போராடிவருவதுடன் பொதுஜன பெறமுன அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது. ஏறக்குறைய அரசாங்கம் இல்லாத சூழல் ஒன்று இலங்கையில் ஏற்பட்டுள்ளது. 2019 இலும் இத்தகைய நெருக்கடி ஒன்றினை இலங்கைத் தீவு எதிர்கொண்டது. இலங்கையின் தேசியவாதிகளாக தம்மை கூறிக் கொள்ளும் தரப்பு ஏற்படுத்திவரும் நெருக்கடியாகவே தெரிகிறது. மக்களையும் தேசத்தையும் நேசிப்பவர்கள் ஆட்சியிலிருந்து விலக எதிர்கொள்ளும் அச்சமும் அவர்கள் தேசத்திற்கு ஏற்படுத்திவரும் நெருக்கடியும் அபாயகரமானதாகவுள்ளது. இவர்கள் தேசத்தை நேசிக்கிறார்களா பதவியை நேசிக்கிறார்களா என்ற குழப்பம் வாக்களித்த மக்களுக்கே ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்களது நிலைப்பாடு சார்ந்து தேடவுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்திலும் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திலும் மட்டக்களப்பு மற்றும் வவுனியாவில் நிகழ்ந்த போராட்டங்களிலும் ஓரளவு தமிழ் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் தனித்து எந்தப் போராட்டத்தையும் தமிழ் தரப்பு முன்னெடுக்கவில்லை. பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்ந்த விதத்திலேயே பேராட்டங்களில் தழிம் மக்களது போராட்ட பங்கெடுப்பு நிகழ்ந்துள்ளது. ஒட்டுமொத்ததில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முழுமையாக ஈடுபடவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. அதற்கான காரணத்தை விரிவாகத் தேடுவது அவசியமானது.

முதலாவது தற்போதுள்ள ஜனாதிபதி பெரும்பான்மை சிங்கள் வாக்காளர்களாலேயே தாம் தெரிவு செய்யப்பட்டதாக பலதடவை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறுவது போல் தமிழ் மக்களது வாக்குகளும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கே அளிக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்கள் முற்றாக வாக்களிக்காது விட்டதாகவோ அல்லது இலங்கைத் தீவில் ஜனாதிபதி என்பதையே கவனம் கொள்ளாத வெளிப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்துவருவது தமிழ் மக்களது உணர்வாகவே தெரிகிறது. அதாவது தமிழ் மக்கள் தற்போதைய ஆட்சியுடன் எத்தகைய நெருக்கமும் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்துள்ளனர். அதனையே வெளிப்படுத்தியுமுள்ளனர். இந்த ஆட்சியாளர்களை தெரிவு செய்த அடிப்படையில் தமிழ் மக்கள் செயல்படுகின்றனர்.

இரண்டாவது 2009 முள்ளிவாய்க்கால் போரினை வழிநடத்திய ஆட்சியாளர்கள் என்ற வகையிலும் தமிழ் மக்களின் அழிவுக்கு அடிப்படையானவர்கள் என்ற எண்ணப்பாங்கிலும் தமிழ் மக்களது உணர்வுகள் முதன்மையானதாக காணப்படுகிறது. தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு வீதிகளில் துயரத்துடன் நீதி கேட்டு போராடும் போதெல்லாம் எந்த ஆட்சியாளரும் பதிலளிக்காமை மட்டுமல்ல அதனை அடக்குவதற்கு இராணுவத்தையும் காhவல்துறையையும் புலனாய்வுத் துறையையும் கொண்டு அத்தகைய போராட்டங்களை அழிப்பதற்கு திட்டமிட்டதை தமிழ் மக்கள் மறக்காத மனோநிலையை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இது மட்டமல்ல முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அங்கவீனமாக்கப்பட்ட காணாமல்போன உறவுகளைப் பற்றிய நினைவுகளுடன் தமிழ் மக்கள் என்றுமே பயணிக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக தெரிகிறது.

மூன்றாவது தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் அழிவுக்கு உள்ளாக்கும் போது பெரும்பான்மை மக்கள் மௌனமாக இருந்துவிட்டு தற்போது அதே ஆட்சியாளரால் கட்டமைக்கப்பட்ட அரசாங்கதட்திற்கு எதிராக போராட தமிழ் மக்களை அழைப்பது நியாயமானதா என்ற கேள்வியை வெளிப்படுத்துவது போல் அவர்களது மனோநிலை உள்ளது. முள்ளிவாய்க்கால் போரும் அதற்கு பின்பான இராணுவச் செலவீனமுமே இன்றைய பொருளாதா நெருக்கடிக்கு ஒரு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அதனை அடிப்படையாகக் கொண்ட சீனாவுடனான நெருக்கமும் மேற்குலகத்தினது எதிர்பும் இன்றைய நெருக்கடிக்கு கொதிநிலைக்கு காரணம் என்பதை பெரும்பான்மை புலமையாளர்களும் ஆட்சியாளரும் ஏற்றுக்கொள்வில்லை என்பதை தமிழ் மக்கள் உணர்வுகளாக வெளிப்படுத்தியுள்ளனர். இதனை ஒரு அரசியல் பொருளாதார நெருக்கடியாக பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தவறுவதுடன் அது சார்ந்த கருத்து முன்வைப்பவர்களை அழிக்கும் செயல்பாட்டில் ஈடுபடுவதையும் தமிழ் மக்கள் நன்கு கண்டுள்ளனர்.

நான்காவது பொருளாதாரத் தடையினால் ஒரு வருடம் இரு வருடமல்ல ஏறக்குறைய முப்பது வருடங்களாக தமிழ் மக்கள் துயரப்பட்ட போது எந்த தென்இலங்கை ஆட்சியாளரும் கண்டு கொள்ளாதது மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு ஆதரவாக எந்த குரலும் தென் இலங்கையிலிருந்து வருவில்லை என்பதை தமிழ் மக்கள் மறக்க முடியாதுள்ளனர். வலதுசாரிகள் மட்டமல்ல இடதுசாரிகளும் சரி புலமையாளர்களும் சரி யாருமே முன்வராததை தமிழ் மக்கள் உணர்வுரீதியாக மனங்கொள்கின்றனர். அத்தகைய வலியிலிருந்து விடுபடுவது கடினமானதே. அதனை உடனடியாக மறந்துவிடவும் முடியாத நிலை காணப்படுகிறது. தமிழ் மக்கள் அடைந்த பொருளாதாச் சுமையை தற்போதே தென் இலங்கை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். அதனடிப்படையிலேயே தமிழ் மக்களிடம் ஏதாவது மாற்றம் நிகழ வாய்பு ஏற்படலாம்.

ஐந்தாவது அவசர காலசட்சட்டத்தை அரசாங்கம் விலக்கிக் கொண்டாலும் தமிழ் மக்கள் மீதான பயங்கரவாதத் தடைச்சட்டம் சில மாற்றங்களுடன் பிரயோகத்தில் காணப்படுகிறது. அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் அத்தகைய சட்டத்திலேயே நிறுத்தப்பட்டதுடன் அவர்கள் அடிப்படைவாதிகள் எனவும் சுட்டப்படுகின்றனர். எனவே அத்தகைய சூழலை 1979 முதல் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் நிலையில் மீளவும் அதற்குள் தம்மை உட்படுத்த விரும்பாத நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் சில போராட்டகளத்தில் காவல் துறையினர் மீதும் இராணுவம் மீதும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போதும் எதிர்த்து போராடும் போதும் காவல்துறையினர் விலகி ஓடுவதும் திரும்ப தாக்காது விலகுவதையும் பார்க்கும் போது தமிழ் மக்கள் தமது நிலையை உணரத் தவறவில்லை. இதனை ஒரு தமிழ் போராட்டக்காரர்கள் மேற்கொண்டிருந்தால் காவல்துறையும் இராணுவமும் துப்பாக்கிகளால் பதில் தாக்குதல் மேற்கொண்டிருக்கும் என்பதை கடந்த பல போராட்டங்களில் தமிழ் மக்கள்; கண்டிருப்பார்கள். அனுபவித்தும் முள்ளனர். அத்தகைய ஜனநாயகப் போராட்ட களத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போதும் சிறையிலுள்ளனர்.

ஆறாவது தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை உண்டு என்பதையும் அவர்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்பதையும் உணராத நிலையில் காணாமல் போனவர்களுக்கு நீதியில்லாத போது நில ஆக்கிரமிப்பு கைவிடப்படாத போது தமிழ் மக்கள் எப்படி ஒன்று சேர்ந்து போராடுவதென்ற கேள்வி நியாயமானதே. இலங்கைத்’ தீவு என்ற அடிப்படையில் பொருளாதாரப் பிரச்சினை தமிழ் மக்களையும் பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இத்தகைய பொருளாதார சுமையை தமிழ் மக்கள் அதிக காலம் அனுபவித்தவர்கள். ஆனால் தமிழ் மக்களது அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது அதற்கு தீர்வு முன்வைக்காத நிலையில் அதுவே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என்பதை உணராத வரையில் தமிழ் மக்களது போக்கு நியாயமற்றதென கூறிவிடுவது கடினமாகும்.

எனவே தமிழ் மக்களது தற்போதைய போராட்டகளத்தில் மௌனித்திருப்பதற்கு காரணங்கள் ஒன்றும் தவறானதாக தெரியவில்லை. இது அவர்களது ஆதங்கம் என்றே கூறமுடியும். தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கும் அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அவர்களது அணுகுமுறை நியாயமானதாகவே தெரிகிறது. ஆனால் தென் இலங்கையில் தமிழ் மக்களது நிலை தொடர்பில் சில புரிதல்’ ஏற்பட்டுள்ளதையும் மறுக்க முடியாது. அது வலுவானதாக அமையும் சூழல் ஏற்படும் போது ஆரோக்கியமான ஒத்துழைப்பும் ஒன்றிணைவும் சாத்தியமாக வாய்ப்புள்ளது.

-பேராசிரியர் கே. ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)