உலக அரசியல் ஒரு போர்ச் சூழலை நோக்கி நகர்வதாக தெரிகிறது. ஈரோசியாவில் தொடங்கிய போர்ப் பதற்றம் தற்போது ஆசியா முழுவதும் பரவலடையத் தொடங்கியுள்ளது. கிழக்கு ஆசியா மேற்கு ஆசியா மற்றும் தென்னாசியா என ஆசியா முழுவதும் போர்ச் சூழல் அதிகரித்துவருகிறது. ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது அமெரிக்கா டொலர் மீதான தாக்குதல் பாரிய அபாயத்தை மேற்குலகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் ஆதிக்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மேற்கு அதனை இழப்பதற்கு தயாரில்லா நிலையை தோற்றுவிக்க முயலுகிறது. அதற்கானதாகவே ஒரு போர் உலகளாவிய ரீதியில் அல்லது பிராந்திய ரீதியில் மேற்குக்கு அவசியமானதாக உள்ளது. அத்தகைய மேற்கின் உபாயத்தை தோற்கடிக்கும் உத்தியில் இறங்கியுள்ள கிழக்கு நாடுகள் போரை தமக்கு சாதகமானதாக்க முயலுகின்றன. ரஷ்யாவும் சீனாவும் அத்தகைய நகர்வுக்குள் மேற்குலகத்தை தோற்கடிக்க திட்டமிடுகின்றன. ஆனாலும் மேற்குலகம் தனது திட்டமிடலை கைவிட்டதாக தெரியவில்லை. இக்கட்டுரையும் அமெரிக்க-,தென்கொரிய அணுவாயுத வோஷிங்டன் உடன்பாடு பற்றிய தேடலாக அமையவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் தென்கொரிய ஜனாதிபதி யூன்சுக் யோல் க்கும் இடையில் அணுவாதயுதம் தொடர்பான உடன்பாடொன்று 26 ஏப்ரல் (2023) கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தென்கொரியா அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துவதற்கான திட்டம் உட்பட பலவிடயங்கள் உடன்பாட்டில் எட்டப்பட்டன. பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக்களை விட அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை தென்கொரியாவில் நிலைநிறுத்தும் விடயம் முதன்மையானதாகவே தெரிகிறது. வட, -தென் கொரிய போருக்கு பின்னர் முதல் தடவையாக அமெரிக்க அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் தென் கொரியாவின் கடல்பரப்புக்குள் பிரவேசித்துள்ளன. அதேநேரம் சொந்தமாக அணுவாயுதங்களை தயார்செய்ய முயற்சிக்காது என்ற உத்தரவாதத்தையும் தென் கொரியா வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. எதுவாயினும் கொரியக் குடாவில் பாரிய அணுவாயுதப் போருக்கான நகர்வுகள் நிகழ்ந்து கொண்டுள்ளன.
ஏற்கனவே வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை பரிசோதிப்பதும் அணுவாயுதங்களை பரிசோதிப்பதும் வழமையான நிகழ்வாக உள்ளது. ஜப்பானும் இராணுவரீதியில் மீளவும் எழுச்சியடையத் தொடங்கியுள்ளது.
இத்தகைய உடன்படிக்கை கொரிய பிராந்தியத்தை மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் அமைதிக்கான நடவடிக்கை என அமெரிக்காவும் பிராந்திய ஒருமைப்பாட்டை சிதைப்பதுடன் உலகளாவிய அமைதியையும் பாதுகாப்பினையும் பாதிப்பதாக அமையுமெனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சும் அறிவித்துள்ளது. மேலும் வட-, தென் கொரியாவுக்கு இடையில் உள்ள போரற்ற பிரதேசத்தை பாதிப்பதுடன் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி அமெரிக்காவும் நேட்டோவும் இராணுவ மேலாதிக்கத்தை அடைய முயலுவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இவ்வாறான மோதல் போக்கின் உண்மைத்தன்மையை விளங்கிக் கொள்வது அவசியமானது.
முதலாவது, வடகொரியாவின் அணுவாயுத மற்றும் இராணுவ வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது அமெரிக்கா திணறுகிறதாகவே தெரிகிறது. வடகொரியாவை முன்நிறுத்திக் கொண்டு ரஷ்யா, சீனாவின் கொரியக்குடா அரசியல் தனித்துவமாக கையாளப்படுகிறது. அமெரிக்காவின் ஒக்கினாவா மற்றும் குவாம் தீவு தொடர்பிலான பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை அதிகரித்து வருகிறது. வடகொரியாவின் இராணுவ வளர்ச்சியை அதன் பொருளாதார பலவீனத்தால் மேற்கு கையாள முடியுமென கருதுகிற போதும் நடைமுறையில் சீனாவும், ரஷ்யாவும் வடகொரியாவை பாதுகாத்து வருகின்றன. இதனால் அமெரிக்கா பிராந்திய அரசுகளை இராணுவ ரீதியில் பலப்படுத்துவதன் மூலம் வடகொரியாவை கையாள முடியுமென கருதுகிறது. ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலப்பகுதியில் வடகொரியாவுடன் நிகழ்ந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தமை ஜப்பானை இராணுவ ரீதியில் வளர்ச்சியடைய வழிவகுத்தது.
இரண்டாம் உலக போருக்கு பின்னர் இராணுவத்துக்கு நிதி ஒதுக்க முடியாது என்ற நிபந்தனையை நீக்கிய அமெரிக்கா ஜப்பானை இராணு ரீதியில் வலுப்படுத்திவருகிறது. அதனால் கொரியப் பிராந்தியத்தின் அதிகாரச் சமநிலையை அமெரிக்கா ேபணமுடியுமென கருதுகிறது. இரண்டாவது, ஆனால் இதனை ஒரு பிராந்திய இராணுவ அரசியலாக கருதுமுடியாது. மாறாக உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் வியூகமாகவே தெரிகிறது. காரணம் அமெரிக்காவினதும் நேட்டோவினதும் இருப்பு உக்ரைன் ரஷ்யப் போருக்கு பின்னர் ஐரோப்பாவுக்குள் அதிக சர்ச்சையை தரத்தொடங்கியுள்ளது. அமெரிக்கா வகுத்த இன்னோர் தந்திரோபாயமான இந்தோ,- பசுபிக் அதிக நெருக்கடிக்குள் உள்ளது. பசுபிக் முழுவதும் சீனா மற்றும் ரஷ்யாவின் செல்வாக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் அரசுகளை இராணுவ ரீதியில் வலுப்படுத்துவதுடன் ஒரு போர்ப் பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் இந்நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்த முடியுமென அமெரிக்கா கருதுகிறது. அந்நாடுகளுக்கும் வடகொரியாவிடமிருந்து எழுந்துள்ள இராணுவ அச்சுறுத்தலை கையாள அமெரிக்காவினதும் மேற்குலகத்தினதும் ஆதரவு அவசியமாகிறது. அதனால் அமெரிக்காவுடன் கூட்டாக இராணுவ ஒத்திகைகளையும் பயிற்சிகளையும் தென்கொரியா மட்டுமல்ல ஏனைய நாடுகளும் மேற்கொள்ள முயலுகின்றன. அதற்கு எதிர்வினையாற்ற முயலும் ரஷ்ய, சீன, வடகொரியக் கூட்டு முயலுகிறது.
மூன்றாவது, சர்வதேச அரசியலில் யதார்த்தவாத கோட்பாட்டுவாதிகள் இராணுவ பலம் உலகளாவிய சமாதானத்தை தந்துள்ளது என விவாதிக்கின்றனர். இராணுவ ரீதியிலான ஆயுததளபாடங்களின் பெருக்கம் நாடுகளை போருக்குள் நுழையவிடாது தடுத்துள்ளதுடன் அத்தகைய போர் வலிமை உலகளாவிய பாதுகாப்பினையும் தந்துள்ளதாகவே விவாதிக்கின்றனர். அதில் மிக முக்கியமான ஆயுதமாக அணுவாயுதம் உள்ளது. தற்போது கொரியக் குடாவில் காணப்படுவது அரசியல் அணுவாயுத அரசியலாகவே தெரிகிறது. வடகொரியாவுக்கு நிகரான ஆயுத வளர்ச்சியுடன் ஜப்பானும் தென்கொரியாவும் கட்டமைக்கப்படுகிறது. மேற்குலகத்தின் மிகப்பிரதான கூட்டு நாடுகளாக ஜப்பானும் தென்கொரியாவும் காணப்படுகின்றன. எனவே அமெரிக்காவின் அணுசக்தியைக் கொண்ட நீர்மூழ்கிகளது பிரசன்னம் வடகொரியாவின் போர்ச் சூழலை கட்டுப்படுத்தும் என்ற விவாதம் யாதார்த்தமானதாகவே தெரிகிறது. ஆனால் அதன் மூலம் அமெரிக்கா அடையவுள்ள விடயம் ரஷ்ய, சீன போர் உத்திகளை உக்ரைன் தாய்வான் பரப்பிலிருந்து மட்டுப்படுத்துவதாகவே உள்ளது.
நான்காவது, இதற்கு எதிர்வினையாற்றும் ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவுக்கான போர்க் களமாக கொரியக் குடாவை கையாளுவதென்ற உத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. அதாவது கொரியக் குடாவின் போர்ப் பதற்றம் அமெரிக்காவின் பிற பிராந்தியங்களின் கவனத்தை குறைப்பதுடன் எல்லைக்குட்பட்ட போருக்கான நகர்வுகளை தடுக்க முடியுமென கருதுகிறது. இத்தகைய நகர்வுகளை ரஷ்யாவும் சீனாவும் அண்மையில் அதிகரித்துள்ளன. குறிப்பாக இலங்கைத் தீவில் சீனா Dondra Bay இல் கட்டமைக்கும் ராடர் நிலையம் மட்டுமன்றி டொலருக்கு எதிராக பிறிக்ஸ் நாணயம் மற்றும் இலத்தீன் அமரிக்காவுக்கான ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் என்பதோடு சவுதி-, ஈரான் உடன்பாடு என்பனவும் அமெரிக்கா மற்றும் மேற்கு கூட்டணியை பலவீனப்படுத்தும் செய்முறையாகவே தெரிகிறது. இதற்கு பதிலளிக்கும் மேற்கும் ஈரானுக்கு எதிரான போர் ஒன்றைத் திட்டமிடுவதாகவும் தென்கொரியாவுடன் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதாகவும் சீன, -இந்திய பதற்றத்தை அதிகரிக்க முனைவதாகவும் தெரியவருகிறது.
ஐந்தாவது, அணுசக்தி நீர்மூழ்கிகளை தென்கொரியாவின் கடற்பகுதியில் நிறுத்துவதென்பது கடலாதிக்கத்தை அமெரிக்கா அதிகரிக்க திட்டமிடுவதாகவே தெரிகிறது. இந்தோ-, பசுபிக் உபாயத்தின் கீழ் ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கு அத்தகைய தொழில்நுட்பத்தை கைமாற்றியதுடன் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிகள் அவுஸ்திரேலியாவின் கடற்படையின் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பசுபிக் கடல் மட்டுமல்ல இந்து சமுத்திரக் கடலும் அமெரிக்க நீர்மூழ்கிகளின் கண்காணிப்புக்குள் அடங்கும் பிராந்தியமாக தெரிகிறது. இத்தகைய நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திறன் வடகொரியாவுக்கு உண்டு எனவும் ஏற்கனவே வடகொரியா அத்தகைய நீர்மூழ்கிகளை தயாரித்துள்ளதாகவும் தகவல் உண்டு.
எனவே அணுசக்தி நீர்மூழ்கிகள் கொரியக்குடாவை போர் எச்சரிக்கைக்குள் உட்படுத்தினாலும் மறுபக்கத்தில் உலகளாவிய நகர்வுகளை இரு தரப்பு நாடுகளும் முதன்மைப்படுத்தியே நகருகின்றன. மேற்குலகம் உலக ஆதிக்கத்தை கைவிடாத போக்கும் கிழக்கு நாடுகள் புதிதாக எழுச்சியடையும் உபாயமும் நகர்கிறது. கலப்பு முதலாளித்துவத்தின் எழுச்சி புதிய உலகத்தை நோக்கிய வடிவத்தை நோக்கி உலகத்தை நகர்த்துகிறது. முதலாளியம் புதிய நாடுகளாலும் புதிய உத்தியாலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வேல்ப் குறிப்பிடுகின்றார். அதில் சீனாவின் பங்கினை தனித்துவமாக அடையாளப்படுத்தும் வேல்ப் சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் அமெரிக்காவின் பலவீனத்தையும் மாற்றத்திற்கான அடிப்படைகளாக குறிப்பிட முயலுகிறார்.
-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)