இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு வரைபு நிறைவடைந்ததாகவும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் விசேடமாக அவ்வூடகங்கள் 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டமூலம் நீக்கப்பட்டு கிராம இராச்சியங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் இச்செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. அதற்காக அச்செய்தி முற்றிலும் தவறானதென்று குறிப்பிட முடியாது. மாறாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் 13வது திருத்தச் சட்டமூலத்தினால் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை நீக்கப்பட வேண்டும் என பலதடவை தெரிவித்துள்ளார். அதனை விட உள்ளூராட்சி மன்றங்கள் போதுமானவை எனவும் மாகாண சபையினால் பாரிய பொருளாதார இழப்பீடு உண்டு எனவும் வாதிட்டிருந்தார். அதனையே அரசாங்க அமைச்சர்களும் தென் இலங்கை ஊடகங்களும் தென் இலங்கையின் புத்திஜீவிகளும் அதிகம் கொண்டுள்ளனர். 13ஐ முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதில் தற்போதைய ஆட்சியாளர்களும் கவனம் கொள்வதனை அவதானிக்க முடிகிறது. இக்கட்டுரையும் இந்தியாவை அணைத்துக் கொண்டு 13ஐ முற்றாக நீக்க வேண்டும் என தென் இலங்கை கருதுகிறது என்பதை தேடுவதாக அமையவுள்ளது.
முதலாவது 30.01.2022 அன்று யாழ்ப்பாணத்தில் 13க்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை முடக்கிவிடக் கூடாதென கூறிக்கொண்டு அதனை முற்றாக நீக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு போராட்டத்தை நிகழ்த்தியுள்ளது. அப்போராட்டத்தை அங்கீகரிப்பது போன்று தென்இலங்கை ஊடகங்கள் அன்றய தினமே அத்தகைய செய்தியை வெளிப்படுத்தின. தென் இலங்கை புத்திஜீவிகளும் அத்தகைய செய்தியை அங்கீகரிப்பது போன்று கருத்துக்களை பொது வெளியில் பரப்பி வருகின்றன. ஏறக்குறை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த போராட்டம் தென் இலங்கை ஆட்சியாளருக்கு இலாபகரமானதாகவே அமைந்துள்ளதை அவர்களின் தரப்புக்கள் வெளிப்படுத்தும் செய்திகளில் தெரிகின்றன. அதாவது தமிழர் போராட்டம் தென்இலங்கைத் தரப்புக்கு சேவை செய்துள்ளது.
இரண்டாவது இலங்கையின் அரசியல் நியமத்தில் அரசியலமைப்பென்பது De-evolution மாதிரியைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. உலகளாவிய அனுபவம் அப்படியானதல்ல அது எல்லா நாடுகளிலும் நஎழடரவழைn ஆகவே அரசியலமைப்புக்கள் அமைந்துள்ளன. குறிப்பாக சோல்பரி யாப்பின் கீழான 29வது திருத்தம் டொனமூர் அரசியலமைப்பில் தனிச்சிங்கள மந்திரி சபை குடியரசின் இரண்டாவது யாப்பில் 13ஆம் திருத்தச் சட்டம் என்பன எல்லாமே De-evolution என்ற நிபந்தனைக்குள்ளே அமைந்துள்ளது. அதனால் 13ஐ அகற்றுவதன் மூலம் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்பதை சாத்தியப்படுத்தலாம். அதுமட்டுமல்லாது தமிழர் ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளாத நிலையையும் அதற்கான புறச்சூழலைப் போன்று சட்டச் சூழலையும் உருவாக்க தென் இலங்கைக்கு வாய்ப்பானதாக அமையலாம். அதனை நோக்கியே தென் இலங்கையின் ஆட்சி இயந்திரம் செயல்படுகிறது.
மூன்றாவது 13ஐ எதிர்ப்பதென்பது ஈழத்தமிழரால் அங்கீகரித்தல் வேண்டும் என்பது தென் இலங்கைக்கு அவசியமானது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அத்தகைய போராட்டம் தென் இலங்கை ஊடகங்களாலும் புத்திஜீவிகளாலும் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதற்கான காரணமும் அதுவாகவே உள்ளது. கிட்டுப்பூங்காவை நோக்கிய போராட்டம் கட்சியை மையப்படுத்திய போதும் கலந்து கொண்ட பொது மக்களது எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்த போதும் தென் இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அதிகம் பேசப்படுவதற்கான காரணமும் அதுவாகவே உள்ளது.ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் தேசியத்திற்கான போராட்டமாக கிட்டுப்பூங்காப் போராட்டத்தை கருதுகின்றனர். ஆயுதப் போராட்டத்தின் போது எப்படி விடுதலைப் புலிகள் 13க்கு எதிராக நகர்ந்தார்களோ அப்படியே தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி நகர்வதாக கருதுகின்றனர். ஆனால் விடுதலைப் புலிகள் 13ஐ இடைக்கால வரைபாக ஏற்றுக் கொண்டதாக புலம்பெயர்ந்த தரப்பு அடேல் பாசிங்கத்தின் நூலை ஆதாரப்படுத்தி செய்திகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். அது மட்டுமன்றி விடுதலைப் புலிகள் 13ஐ எதிர்க்கும் போது அவர்களிடம் தெளிவான இலக்கும் உத்திகளும் மட்டுமல்லாது அதற்கான ஆயுதப் போராட்டமும் காணப்பட்டது.
நான்காவது 13ஐ எதிர்ப்பதென்பது இந்தியாவை நோக்கிய ஈழத்தாமிழரது உறவை நிராகரிப்பதாகவே தெரிகிறது. அதாவது இந்தியாவால் கொண்டுவரப்பட்ட அடிப்படை அம்சத்தை எதிர்ப்பதென்பது இந்தியாவுடனான உறவை பகைப்பதாகவே அமையும். புவிசார் அரசியலை விளங்கிக் கொண்ட எந்த தரப்பும் இந்தியாவை நிராகரித்துவிட்டு எத்தகைய மாற்றத்தையும் ஈழத்தமிழர் எட்டமுடியாது என்பதை புரிந்து கொள்வார்கள். இந்தியாவின் நலன்களும் பாதுகாப்பும் ஈழத்தமிழரால் உத்தரவா தப்படுத்தப்படுவதென்பது இந்தியாவின் நலனுக்குட்பட்டதே அன்றி ஈழத்தமிழருக்கானது அல்ல. ஆனால் அத்தகைய நகர்வென்பது ஈழத்தமிழர்களின் இருப்புக்கான அணுகுமுறையே அன்றி முடீபல்ல. இந்தியாவால் ஈழத்தமிழரது பிரச்சினை தீர்க்கப்படுமா முடியாதா என்பது கடந்த கால அனுபவத்தினால் ஏற்பட வேண்டியதே அன்றி இறுதித் தீர்மானமல்ல. அண்மைய நடவடிக்கையான திருகோணமலை எண்ணெய்குதங்களை 75 வருடத்திற்கு பின்பு இந்தியா கையகப்படுத்தியுள்ளதாகவே இந்தியத் தரப்பு வாதிக்கின்றது. அப்படியானால் இந்தியா இலங்கை பொறுத்து எத்தகைய உபாயங்களைக் கொண்டுள்ளது என்பதும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஐந்தாவது மறுபக்கத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் நெருக்கமான உறவை அதிகப்படுதிவருகின்றதைக் காணமுடிகிறது. ஏற்கனவே நான்கு நிகழ்ச்சித்திட்டத்துடன் இலங்கையின் நிதி அமைச்சர் இந்தியாவுக்கு முன்வைத்த திட்டத்தை இந்தியா அங்கீகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட எட்டு அம்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இரு நாட்டுக்குமான நெருக்கத்தை அதிகரிக்கும் விதத்தில் முதலீட்டுத்திட்டத்தை ஊக்குவிக்கும் அணுகுமுறைகளை விருத்தி செய்துவதற்கான நடைமுறைகளை புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கும் விவேகானந்த சர்வதேச பவுண்டேசன் உரையாடல் ஒன்றின் தெரிவித்துள்ளார்.அதாவது அதிகமாக இந்தியாவை இலங்கையுடன் இணைத்துக் கொள்ள தற்போதைய தென் இலங்கை அரசாங்கம் முயலுகிறது. அதற்கான அடிப்படை 13ஐ இந்தியாவாலேயே கைவிடப்படும் நிலையை உருவாக்குவதேயாகும். அதற்கான களமுனைப்புக்களையும் நகர்வுகளையும் சாத்தியப்படுத்திக் கொண்டு இந்தியாவுக்கான அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்வதன் மூலம் இலக்கை சாத்தியப்படுத்த முடியுமென தென் இலங்கை கருதுகிறது. இதில் இந்தியாவின் பதில் எவ்வாறானதாக அமையும் என்பது வேறு கோணத்தில் பார்க்கப்பட வேண்டும். ஆனாலும் இந்தியா இலங்கையுடன் அதிகமாக ஒத்துழைத்து தனது நலன்களை எட்டுவதில் குறியாகச் செயல்படுவது ஒன்றும் விசேடமானதல்ல. பரஸ்பரம் அரசுகள் அவ்வாறான கோணத்திலேயே அரசியலை மேற்கொள்வன. அதுவே யதார்தமானதாகும். இந்தியாவை அணுகுதல் என்பது நட்புச்சக்திக்கான உத்தியே அன்றி தீர்வுக்கான திட்டமல்ல. தீர்வு எதுவேன்பது ஈழத்தமிழருக்கானது. அதனை இந்தியாவிடமும் உலக நாடுகளிடமும் ஒப்படைத்துவிட்டு அரசியல் செய்யாது இருப்பதென்பதற்கு இந்தியா பொறுப்புடையதல்ல.
எனவே இந்தியா பொறுத்தும் சரி உலகநாடுகள் பொறுத்தும் சரி ஈழத்தமிழருக்குரிய பலம் நட்புறவை விருத்தி செய்வதும் அதற்கான அரவணைப்பினை கையாளுவதுமேயாகும். அதனை நோக்கிய நகர்வை முன்னெடுப்பதே தமிழருக்கு அவசியமான நகர்வாகும். தென் இலங்கை அதனை சரிவரக் கண்டு கொண்டு நகர்கிறது. அதனால் அது இந்தியாவையும் சீனாவையும் கையாளுகிறது. மட்டுமல்ல உலகத்தையும் கையாளுகிறது. அதன் வலிமைக்குள்ளேயே 13இன் இருப்பும் முடிபும் அமைய ஈழத்தமிழர் வழியமைப்பதென்பது தீர்வுக்கான அணுகுமுறையல்ல உத்தியாக கொள்வதாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
