November 6, 2025
அரசியல் கட்டுரைகள்

ஹமாஸ்-இஸ்ரேல் போர்நிறுத்த உடன்பாடு முடிபை நோக்கி நகருகிறதா?

சமகால உலக அரசியல் மேற்காசியாவை மையப்படுத்தியதாக நகர்ந்து செல்கிறது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் காசா அமைதி உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அத்தகைய உடன்படிக்கை எகிப்தில் நிகழ்கின்ற பொழுது இருபதற்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்திருந்தார்கள். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான உடன்பாடு மேற்காசிய அமைதிக்கான புரிந்துணர்வை சாத்தியமாகியுள்ளது. இக்கட்டுரையும் உடன்படிக்கையின் பின்னான காசாவின் சூழலையும் உடன்படிக்கையின் நிலையையும் தேடுவதாக உள்ளது.

13.10.2025 இல் எகிப்தின் நகரமான ஷரம் எல் ஷேக்ல் (Sharm El Sheikh) காசா போருக்கான முடிவை முன் வைக்கும் போர் நிறுத்த உடன்பாட்டிகை எட்டப்பட்டுள்ளது. இதில் எகிப்து, துருக்கி, கட்டார் போன்ற நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதியும் எகிப்திய தலைவர் அப்துல் ப்தார் எல் சிசி (Abdel-Fattah el-Sissi) போரை முடிபுக்கு கொண்டுவருவதற்கான உடன்பாட்டில் ஒப்பமிட்டனர். ஏனைய ஐரோப்பிய ஆசிய நாட்டுத் தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். இச்சமாதான உடன்பாடு ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதோடு பரஸ்பரம் இருதரப்பும் கைதிகளையும் பிணை கைதிகளையும் பரிமாற்றம் செய்கின்ற நடைமுறையில் அல்லது விடுதலை செய்கின்ற நடைமுறையில் ஈடுபட்டனர். இருதரப்பிலும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த உடன்பாடு இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசட் (Knesset)இல் அதிக குழப்பத்தை தந்தாலும் உடன்பாட்டுக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இருபது அம்சத் திட்டத்தையும் படிப்படியாக நடைமுறைப்படுத்துவது என உடன்பாடு தெரிவிப்பதோடு ஹமாஸ் தனது பிடிகுள் இருந்து இறந்து போன பணையக்கைதிகளின் உடலங்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்து விட்டதாகவும் ஏனையவை இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலை உண்டு என்றும் அதற்கான முயற்சிகள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய ஹமாசிடம் இன்னும் ஆறு உடலங்கள் இருக்கலாம் என இஸ்ரேலிய தரப்பினர் குறிப்பிடுகின்றனர். அதே நேரம் பாலஸ்தீனியர்களின் 120 உடலங்களை இஸ்ரேல் ஹமாசிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவை பெருமளவுக்கு கொடூரமான தாக்குதலின் மூலம் கொல்லப்பட்ட அடையாளங்கள் இருப்பதாகவும் காசாவில் இயங்கும் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ராபா போக்குவரத்து கடைவை இஸ்ரேலினால் மூடப்பட்டுள்ளது என்றும் ஹமாஸ் மீதமாக வைத்துள்ள பிணை கைதிகளின் உடல்ங்களை ஒப்படைப்பதற்கான அழுத்தத்தை கொடுக்கும் நோக்கோடு பாதை மூடப்பட்டது என்றும் 600 உணவுப்பொருளை கொண்ட பாரஊர்திகளை அனுப்புவதற்கு பதிலாக 300 பாரஊர்திகளை காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதித்துள்ளதாகவும் இஸ்ரேலிய தரப்பு அறிவித்துள்ளது. இவ்வாறான சூழலில் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க தவறுமாக இருந்தால் இஸ்ரேலிய படைகள் காசாவில் மீண்டும் போரைத்; தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இத்தகைய உடன்பாட்டின் பிரகாரம் ஏற்படக்கூடிய குழப்பங்களை ஆழமாக அவதானிக்க வேண்டியுள்ளது. அதனை விரிவாக நோக்குவது அவசியமாகும்.

முதலாவது உடன்பாட்டின் பிரகாரம் இருதரப்பும் தமது நிலைகளை மீறுவதாக பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இரு தரப்பினதும் பணையக் கைதிகளும், கைதிகள் பரிமாற்றமும் சாத்தியப்பாடானது முடிவற்றிருந்தாலும் கொல்லப்பட்டவர்களை பரிமாற்றம் செய்வதில் இரு தரப்பும் முன்பின் முரணான தகவல்களையும் இழுபறிகளையும் வெளிப்படுத்தி வருகிறன. ஆனால் அமெரிக்கா ஹமாஸ் கூறியது போன்று இடிபாடுகளுக்குள் அகப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணையக் கைதிகளின் உடலங்களை மீட்பதற்கான தொழில் நுட்ப உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது ஓரளவுக்கு இருதரப்புக்கும் இடையில் காணப்படும் இழுபறிக்கு ஒரு சுமூக நிலையே ஏற்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இது பெரும் அளவுக்கு போர் நிறுத்த உடன்பாட்டின் உள்ளடக்கத்தை பலவீனப்படுத்துவதாகவே அவதானிக்க முடிகிறது.

இரண்டாவது காசா பகுதியில் ஹமாஸ் பிற ஆயுத குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்த உடன்பாட்டின் பின்னர் ஏனைய ஆயுத குழுக்கள் மீது தாக்குதலையும் பகிரங்க மரண தண்டனையும் ஹமஸ் தரப்பு வழங்கியுள்ளது. இது பெருமளவுக்கு போர் நிறுத்த உடன்பாட்டின் நிலையை கேள்விக்கு உட்படுத்துகின்ற விதத்தில் மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகின்றது. அதிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே அத்தகைய தண்டனையை ஹமாஸ் வழங்கியதாக அறிவித்துள்ளது. அதாவது ஹமாஸ் அமைப்பு தனது பலமான இருப்பை காசா பகுதியில் நிலை எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது போர்நிறுத்தல் உடன்பாட்டை கைவிடும் முயற்சியில் உள்ள இஸ்ரேலுக்கு வாய்ப்பானதாகவே தெரிகிறது.

மூன்றாவது ராபா எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலில் மூன்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அத்தகைய சூழல் போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாகவே நிராகரிப்பதற்கான நடவடிக்கை என்று ஹமாஸ் தரப்பு குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறே உடன்பாட்டின் பிரகாரம் உணவு பொதிகளை ஏற்றிய 600 பாரஊர்திகளை அனுமதிப்பதற்கு பதிலாக 300 பாரஊர்திகளையே இஸ்ரேல் காசாவுக்குள் நுழைவதற்கு அனுமதித்துள்ளது. இதுவும் பெரும் அளவுக்கு போர் நிறுத்த உடன்பாட்டை மீறுவதற்கான நடைமுறையாகவே தெரிகிறது.

நான்காவது ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாட்டை மீறுமாக இருந்தால் காசா மீது மீண்டும் போரை தொடங்குவதற்கும் ஹமாசை அழிப்பதற்கான பூர்வாங்க திட்டமிடலை தொடங்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஹாட்ஸ்(Katz) இஸ்ரேலிய இராணுவத்துக்கு அறிவிப்பு விடுத்துள்ளார். அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் செயல்படுத்த மறுத்தால் போரை மீண்டும் தொடங்குவது அவசியமாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார். விரிவான திட்டமிடலை தயாரிக்குமாறு இராணுவத்தை கோரியுள்ளார். இது போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகின்ற நடவடிக்கையாகவே தெரிகின்றது. ஏற்கனவே இஸ்ரேலிய தீவிர வலதுசாரிகள் போர்நிறுத்தத்தை நிராகரித்திருப்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்த தயாராக உள்ளனர். அதே நேரம் ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறுமானால் அமெரிக்கா ஈஸ்ரேலுடன் சேர்ந்து மீண்டும் போரை மேற்கொள்ளும் எனவும் ஹமாசை முழுமையாக தோற்கடிக்க திட்டமிடுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்குறித்த அனைத்து நகர்வுகளும் அமைதி உடன்படிக்கை முடிவுக்கு வரும் நிலையே அதிகம் பிரதிபலிக்கின்றது. போர்நிறுத்த உடன்பாடு மீறப்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்ள முடியாமல் பாலஸ்தீன தரப்பு விளங்கும். அமெரிக்காவின் முயற்சிகள் பாரிய அளவில் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும். காசாவில் இருந்து முழுமையாக அழிப்பது அல்லது காசா மக்களை வெளியேற்றுவது என்ற நியதியுடன் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராணுவம் நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் ஈடுபட வாய்ப்புள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் காசா நிலப்பரப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் உட்பட வேண்டும் என்பதிலும் கவனம் கொள்ளுகிறது. சமாதான உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் அமெரிக்க தரப்பை அல்லது அமெரிக்கத் திட்டமிடலை காசாவில் அமுல்படுத்துவதற்கான செயல்முறையாகவே தெரிகிறது. அமைதி உடன்படிக்கையின் கீழ் காசாவை கைப்பற்ற முயற்சியை இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு முன்னெடுக்க முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் தவறுமாக இருந்தால் போரின் மூலம் அதனை கைப்பற்றுவதற்கு தயங்காது என்பதை அமெரிக்காவும் இஸ்ரேல் தரப்பும் வலியுறுத்துகின்றன.

எனவே இது ஆபத்தான தருணமாகும். இந்த உடன்படிக்கை ஹமாசை மட்டுமின்றி காசா நிலப்பரப்பை பாலஸ்தீனத்தையும் பாதுகாக்க உதவும் ஓர் அம்சமாகவே தெரிகிறது. அதனைப் தற்காலிகமான விட்டுக் கொடுப்டபுகள் மூலம் அடைய முயற்சிப்பதே பொருத்தப்பாடானது. இது வாய்ப்பான தந்திரமான உத்திகள் நிறைந்த உடன்பாடாகும். ஆதனை கையாளும் தரப்பிடமே காசாவின் எதிர்காலம் அமையும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)