அரசியல் கட்டுரைகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதும் பகிஸ்கரிப்பதும் ஒன்றானதா?

இலங்கைத் தீவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முக்கியத்துவம் மீளவும் ஆரம்பித்துள்ளது. மே தினம் அத்தகைய தேர்தலுக்கான வெற்றிவாய்ப்புக்களை அடையாளப்படுத்தும் நகர்வொன்றைக் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது. அதே நேரம் (30.04.2024) தமிழ் மக்களின் 33 மேற்பட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றுகூடி தமக்கான தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவதாக தீர்மானித்துள்ளன. அத்தகைய தீர்மானத்திற்கான அடிப்படையாக தமிழர்கள் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கு தாயகம், மற்றும் சுயநிர்ணயத்திற்கு உரித்துடையவர்கள் என்பதனை முன்நிறுத்தி தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களது ஐக்கியத்தினதும், ஒருமைப்பாட்டினதும் அடையாளமாக ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தமிழ் பொது வேட்பாளர் தேர்தலில் நிறுத்துவதென்பதும் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதென்பதும் ஒரே விடயமாக விவாதிக்க முயலுகின்றனர். இக்கட்டுரையும் அத்தகைய விடயத்தின் புரிதலை நோக்கியதாக வடிவமைக்கப்படுகிறது.

1931 ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் பகிஸ்கரிப்பை ஒரு ஜனநாயக போராட்ட வழிமுறையாகப் பயன்படுத்தியவர்கள். ஆயுதப் போராட்டம் வளர்ந்த காலத்தில் அதற்கான முக்கியத்துவம் தனித்துவமானது. அதிலும் ஜனாதிபதி தேர்தலின் போது அதிகமான பகிஸ்கரிப்பு அரசியல் ஒரு போராட்டமாக தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டது. சில சர்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கட்சி தலைமைகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களும் கனவான் உடன்பாடுகளும் நிகழ்ததாக தெரியவருகிறது. அதனடிப்படையில் பகிஸ்கரிப்பு வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் உண்டு. இதனை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களும் மேற்கொண்டதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அது சார்ந்து தமிழ் மக்களுக்கு எதுவுமே தெரியாத நிலையில் பகிஸ்கரிப்பினை ஒரு போராட்ட வழிமுறையாக பிரயோகித்துள்ளனர். தற்போது கோரப்படும் பகிஸ்கரிப்பானது வெளிப்படையானதாக இருந்த போதும் அதிக கேள்விகளை ஏற்படுத்துகிறது. அத்தோடு அதனால் ஏற்படவுள்ள விளைவுகள் சார்ந்து அத்தகைய பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை புர்ரிந்து கொள்ள வேண்டும்.

முதலாவது, தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரித்தால் அளிக்கப்படும் வாக்குகளில் 8-10 சதவீதம் ஒரு வேட்பாளர் பெறும் வாக்குகளில் மட்டுப்படுத்தப்படும் நிலை ஏற்படும். காரணம் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடியான வாக்குகளின் 50 சதவீதத்திற்கு மேல் பெறும் ஒரு வேட்பாளரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் நிலை உள்ளது. அதனடிப்படையில் உதாரணத்திற்கு 100 வாக்குகள் மொத்தவாக்குகள் என்று வைத்துக் கொண்டால் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 81 ஆயின் அதில் பழுதடைந்த வாக்குகள் 02 என கருதுமிடத்தில் வெற்றிபெற தேவையான அறுதிப் பெரும்பான்மை வாக்கு (50.1%) அதாவது 79 இல் 40 வாக்குகள் பெற வேண்டும். ஆனால் தமிழர் பகிஸ்கரித்தால் அவர்களது 10 வாக்குகளும் விலக்களிக்கப்பட்டால் (79-10=69) தென் இலங்கை வேட்பாளர் ஒருவர் வெற்றிக்கு 69 இல் 50.1சதவீதம் 35 வாக்குகள் போதுமானது. அதாவது தமிழர் தேர்தலை பகிஸ்கரித்தால் தென் இலங்கை வேட்பாளர் முதலாவது சுற்றில் வெற்றிபெற அறுதிப் பெரும்பான்மை வாக்குகளாக 35 போதுமானதாக அமையும்.

இரண்டாவது, பகிஸ்கரித்தல் என்பது தேர்தலில் முழுமையாக வாக்களிக்காது தவிர்த்தல். அதனையே தமிழ் மக்கள் கடந்த காலத்தில் அனுபவமாகக் கொண்டவர்கள். பகிஸ்கரித்தல் வேறு தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தல் வேறு. தென் இலங்கை வேட்பாளரை புறக்கணித்து தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதே சரியான புரிதலாகும். அதற்கு நியாயமான காரணம் உண்டு. பகிஸ்கரித்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரையும் ஜனாதிபதியாக அமர்த்தியவர்கள் தமிழர்கள். அவ்வாறே வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச்செய்தவர்கள் தமிழர்கள். இரு வேறு அனுபவங்களிலும் தமிழ் மக்கள் எத்தகைய நிலையை அனுபவித்தவர்கள் என்பது நன்கு தெரிந்த விடயம். இதனால் பகிஸ்கரிப்பதும் தென் இலங்கை வேட்பாளருக்கு வாக்களிப்பதும் பற்றிய புரிதல் தமிழர்களுக்கு உண்டு. ஆட்சி மாற்றத்தை மேற்கொண்டு நல்லாட்சியிலேயே தமிழர்களின் வாழ்விடங்கள் காணாமல் போனது.

மூன்றாவது, தமிழர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதால் கிடைக்கப் போவது என்ன என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. தமிழர் தேசியமாக இருத்தல் என்பது இதன் அடிப்படையாகும். வடக்கு கிழக்காக இருத்தல் என்பதோடு ஐக்கியமாகவும் தேசியமாகவும் ஒருமைப்பாட்டுடனும் இருப்பதோடு அரசியல் தீர்வை வேண்டி நிற்கும் இனமாக தமிழர்கள் உள்ளனர் என்பது தென் இலங்கைக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் உலகளாவிய நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்துவதாகும். இனப்பிரச்சினை என்பது தேசியப்பிரச்சினை என்பதைவிட அது ஒரு சர்வதேசப் பிரச்சினையாகும். அதற்கான தீர்வும் சர்வதேச அரசியலிலே தங்கியுள்ளதென்பது அறிவுபூர்வமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். எனவே தமிழருக்கு தமிழர் வாக்களிப்பதென்பது தமிழர்களின் இருப்பையும் வாழ்விடத்தையும் வரலாற்றையும் தேசியத்தையும் ஒன்றிணைப்பதாகும். தமிழரின் அரசியல் பலத்தை உள்நாட்ரசியலிலும் வெளியுலக அரசியலிலும் நிலைநிறுத்த வாய்ப்புக்கிடைக்கும்.

நான்காவது, அதனைவிட அத்தகைய செயல் இனவாதத்தை தூண்டும், தமிழருக்கான வரலாற்றுச் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும் போன்ற உரையாடல்கள் மேலெழுகிறது. தற்போதும் இனவாதச் சூழலுக்குள்ளேயே தமிழர்கள் வாழ்கிறார்கள். கிழக்கு மாகாணத்தின் மீதான நகர்வுகள் வடக்கையும் நோக்கி ஆரம்பித்துவிட்டது. நில ஆக்கிரமிப்புக்கு பலகாரணம் கூறப்பட்டாலும் அடிப்படையில் தமிழர்கள் வாழ்விடத்தை அழிப்பதே தென் இலங்கை ஆட்சியாளரின் நோக்கமாகத் தெரிகிறது. வடக்கு கிழக்கு தமிழரது பாரம்பரிய வாழ்விடம் என்பதை முற்றாகவே தகர்ப்பதே ஜனாதிபதிகளது அரசியலாக அமைந்திருந்தது. அதில் தமிழரால் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல தமிழர் கொண்டுவந்த ஜனாதிபதிகளும் அதனையே மேற்கொண்டனர். அப்படியாயின் எந்த அடிப்படையில் தமிழர் தென் இலங்கை வேட்பாளரை ஆதரிப்பது. அவர்களோடு கடந்த 75 ஆண்டுகள் அரசியல் செய்து கிடைத்த விளைவு ஏதாவது தமிழருக்கு சாதகமானதாக அமைந்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் தரப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் ஒரே உத்தியை பயன்படுத்துவதில் விலங்குகளிடம் கூட கண்டுகொள்ள முடியாது. காட்டுக்கு ராஜாவான சிங்கம் கூட இருதடவைக்கு மேல் தனது உத்தியை மாற்றிக் கொள்ளும் என்பதை தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஐந்தாவது, தமிழர் யாரும் ஜனாதிபதியாக வரமுடியாது என்ற அம்சத்தையே தெரியாமல் தமிழ் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்பதை அதிமேதாவிகள் புரிந்து கொள்ள வேண்டும். இது ஜனாதிபதி போட்டிக்கான தேர்தல் அல்ல. தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அடையாளத்தை உறுதிப்படுத்து வதற்கான வேட்பாளர். அதுவும் இலங்கையின் அரசியல் அமைப்புக்குள் கிடைத்துள்ள வாய்ப்பாகும். அத்தகைய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வதென்பது தமிழரது அரசியலுக்கான எதிர்காலத்தினை கட்டமைப்பதாகும். தோற்கடிக்கப்பாட்ட தேசியம் என்ற குறுகிப்போன மனோநிலையை மாற்றியமைக்க தமிழ் பொது வேட்பாளருக்கான வாக்களிப்பு அவசியமானது. எந்தப் பிரகடனமும் அடையப்படாத வரை அது மீள வலியுறுத்தப்பட வேண்டியதென்றாகும். திம்பு பிரகடனமும், வட்டுக்கோட்டைத் தீர்மானமும் எந்த அடிப்படையிலும் நிறைவு பெறவில்லை என்பதனால் அவை முடிந்து போனவை கிடையாது. அவை தமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான அடிப்படைகள்.

எனவே தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுவதும், பகிஸ்கரித்தலும் ஒன்றாது கிடையாது. அவை இரண்டுமே அறிவுபூர்வமாக வேறுபட்டவை. தமிழ் மக்கள் பகிஸ்கரிப்பதால் ஜனநாயக உரிமையை மட்டும் இழப்பவர்களல்ல. தேசியமாக, தாயகமாக சுயநிர்ணயமாக சிந்திப்பதையும் செயல்படுவதையும் இழப்பவர்களாவார். பகிஸ்கரிப்பதென்பது ஒரு அரசியல் போராட்டமே. அதனை யார் கோருவதற்கு உரித்துண்டு. எந்தக் கட்சிக்கும் உரிமையுண்டு. அதனை நிராகரிக்க முடியாது. ஆனால் அதனால் கிடைக்கப்போகும் விளைவே முக்கியமானது. தமிழ் மக்கள் பகிஸ்கரிப்பதனால் முதல் சுற்றில் அறுதிப் பொரும்பான்மையை பெற்று தென் இலங்கை வேட்பாளர் வெற்றியடைய வாய்ப்புக் கிடைப்பதோடு, தமிழர் தமக்கான அரசியல் வெளியை திறக்க முடியாத துயரத்தை கொண்ட தோல்வியடையும் தேசிய இனமாக நீடிக்கும் நிலைக்கு வழிவகுக்கும். இவை யாவற்றையும் கடந்து தமிழ் மக்களது இருப்பை பாதுகாப்பதற்கு தனித்துவமான அரசியல் தீர்மானங்கள் அவசியமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)