இலங்கைத் தீவின் அரசியல் அதிக எதிர்வினைகளை சமகாலத்தில் தந்துள்ளதை காணமுடிகிறது. வெளிப்படையாக நாடுகளுக்கு இடையிலான விஜயங்களும் தூதுவர்களது உரைகளும் வெளிநாடுகளிலிருந்து முன்னாள் இராணுவத்தினரது வருகைகளும் சாதாரணமான விடயமாகவே ஊடக வெளி கடந்து செல்கிறது. ஆனால் அவற்றின் ஆழத்தை தேடுகின்ற போது அவை தரக்கூடிய விளைவுகளும் முக்கியத்துவங்களும் தனித்துவமாக தெரிகிறது. அவ்வகையான விடயங்களை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. அதன் விளைவுகள் இலங்கை தீவுக்கானது மட்டுமல்ல பிராந்தியத்திற்கும் உரியதாகவே தெரிகிறது. ஆனால் இவையெல்லாம் ஏதோ ஓர் அடிப்படையில் முழுமையான அரசியலிலும் பாதிப்பை தரக்கூடியவை என்பதை மறுக்க முடியாது. இக்கட்டுரையும் அத்தகைய விடயங்களை நோக்கி அவதானத்தைக் கொள்வதை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலாவது, இலங்கைக்கான இந்திய தூதுவரது அண்மைய உரையாடல்கள் முக்கியமான விடயமாக காணப்படுகிறது. பிரதானமாக மலையக மக்களுக்கான வீட்டு திட்டங்களை கையளிக்கின்ற நிகழ்வின் போது இலங்கைக்கான இந்திய தூதர் இந்தியா பூர்வீகமான தமிழர் சமூகத்திற்காதன ஆதரவு எப்போதும் தொடரும், வீடுகள் மட்டுமல்ல எதிர்காலத்தை கட்டியெழுப்புவததும் எமது இலக்கு என்றார். அத்தகைய உரையாடலின் பின்னால் இருக்கும் அரசியல் ஆழமான அவதானிப்புக்குள் கொண்டு வரப்பட வேண்டியது. இலங்கை தீவில் கொழும்பில் மட்டுமன்றி யாழ்ப்பாணம், கண்டி போன்ற பகுதிகளில் துணை தூதரகங்களை கொண்டுள்ள இந்தியா பூர்வீக இந்திய மக்களை நோக்கி அவர்களது நலன்களை நோக்கி தமது உதவி திட்டங்களை முதன்மைபடுத்துவதாக தெரியப்படுத்தியுள்ளமை கவனத்திற்குரியது. இது காலத்தாழ்த்திய திட்டமிடலாக அமைந்தாலும் முதன்மைப்படுத்தப்பட வேண்டியது. ஏனைய பிரதேச மக்கள் அனுபவிப்பது போன்று மலையக மக்களும் இந்தியாவின் ஒத்துழைப்பினால் கட்டமைக்கப்பட வேண்டும். தனித்து பொருளாதார உதவியாக இல்லாது மலையக மக்களுக்கான அரசியல் அங்கீகாரமும் அவசியமாதல் வேண்டும். வடக்கு கிழக்கு பொறுத்தவரையில் கல்வி,பொருளாதார ஒத்துழைப்பு மட்டுமன்றி அரசியல் ரீதியான ஒத்துழைப்பும் சமூக மட்டத்திலான உதவிகளுக்கான வாய்ப்புகளையும் இந்தியா வழங்கி வருவதோடு இந்தியாவின் கரிசனைக்கு உட்பட்டதாக வடக்கு கிழக்கு பிரதேசம் காணப்படுகிறது.
இவ்வாறே இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ; ஜா இலங்கையின் தற்போது சக்திவாய்ந்த நபராகவும் ஜே.வி.பி.இன் பொதுச் செயலாளருமான ரிவின் டி சில்வாவுடன் வீடமைப்புத் திட்டம் தொடர்பிலும் பொருளாதார உதவிகளை வழங்குவது பொறுத்தும் உரையாடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா தொடர்ச்சியாக மலையக மக்களுக்கான உதவிகளை வழஙகுவதில்; கரிசனை கொள்வதோடு நம்பிக்கை ஊட்டக்கூடிய விதத்திலான அணுகுமுறைகளை இலங்கையின் பொருளாதாரத்தில் பின்பற்றும் எனவும் உறுதியளித்தார். இத்தகைய சந்திப்பு இந்தியாவின் கொள்கையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் சார்ந்தது ஒன்றாக நோக்கப்படுகின்றது. புவிசார் அரசியல் நெருக்கத்தினால் வடக்கு கிழக்கு இந்தியாவுடன் அதிக புவியியல் தொடர்பையும் அதனால் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பினை உள்ளடக்கியுள்ளது. இத் தொடர்பு வலுவான நட்புறவை இந்தியாவோடு பேணுவதற்கான சந்தர்ப்பத்தை தந்துள்ளது. அத்தகைய வாய்ப்புகள் கடந்த காலத்தை விட தற்போது அதிகமானதாக நிலவுகிறது. ஆனால் மலையகம் இந்திய இலங்கை உறவில் பிரதான பங்கை வகிக்கிறது என்பதை இலங்கைக்கான இந்தியத் தூதர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது உரையாடல் முழுவதும் இந்தியா மலையகத்தை நோக்கி ஆரோக்கியமான மாற்றங்களை அமைப்பதற்கு திட்டமிடுவதை வெளிப்படுத்துகின்றது. அதாவது வடகிழக்கு மட்டுமின்றி தென் இலங்கையும் இந்தியாவுடன் நெருக்கத்தை கொண்டு இருப்பதற்கான வாய்ப்புகளை இந்தியா உருவாக்கத் திட்டமிடுவதாகவே தெரிகிறது. இதுவரை இந்தியா வடக்கு கிழக்கையே இலக்கு வைத்திருந்தது. தற்போது தென் இலங்கையிலும் அதீத கவனத்தை கொள்ளத் தொடங்கியுள்ளது.
இரண்டாவது, இலங்கையின் இடதுசாரி அரசாங்கத்தின் வலதுசாரி பிரதமர் கலாநிதி ஹருணி அமரக்சூரியாவின் சீனாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்;. சீனாவில் நடைபெறும் பெண்கள் தொடர்பிலான மாநாடு ஒன்றில் உரையாற்றுவதற்காக சென்றிருந்த இலங்கை பிரதமர் சீன ஜனாதிபதியோடு பிரதமருடனும்; நீண்ட உரையாடலை நிகழ்த்தியுள்ளார். இலங்கையின் முதலீட்டுக்கும் பொருளாதார ஒத்துழைப்புக்கும் சீனாவின் பங்களிப்பை நன்றியோடு நினைவு கூர்ந்த பிரதமர் மேலும் அதற்கான வாய்ப்புகளை விரிவு படுத்துவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் சீன உறவு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. அதில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டரநாயக்கா முக்கியமான பாத்திரத்தை வகித்தது போன்று ஹருணி அமரசூரியாவும் இலங்கை சீன உறவை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பவராகவே விளங்குகின்றார். ஆனால் பிரதமரது சீன விஜயம் இரு பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக தெரிகின்றது. ஒன்று, சர்வதேச நாணய நிதியத்துடன் இடதுசாரி அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான மாற்றினை சரி செய்கின்ற விதத்தில் அவரது பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றதாக நோக்கப்படுகிறது. இரண்டு, இலங்கை தீவை நோக்கி மேற்குலக நாடுகளும் இந்தியாவும் கொண்டிருக்கின்ற அதீதமான அழுத்தத்தை சமப்படுத்துவது அல்லது அதனை முறியடிப்பது என்ற தளத்தில் கையாளுவதற்கான உத்தியோடு இலங்கை பிரதமரது சீன விஜயம் நோக்கப்படுகின்றது. இத்தகைய விஜயத்தில் பின்புலமாகவே இந்திய தூதுவரது மேற்குறித்த உரையாடல்கள் நோக்கப்படுவது அதிக பொருத்தமுடையதாக தெரிகின்றது. இந்திய சீன ஒத்துழைப்பு பலமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இரு நாடுகளையும் சம தூரத்தில் கொள்ளுகின்ற வெளியுறவை வகுக்கும் நிலை இடதுசாரி அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. அத்தகைய இலக்கு பிரதமரது இந்திய விஜயத்தின் மூலம் அடையப்பட முடியுமென கணக்கு போடுகிறது இடதுசாரி அரசாங்கம்.
மூன்றாவது, இலங்கைக்கு முன்னாள் இராணுவ வீரர்களை உள்ளடக்கிய குழு ஒன்றின் வருகை சமகாலத்தில் நிகழ்ந்துள்ளது. அவர்களுடைய வருகையில் ஒரு தொகுதியினர் யாழ்ப்பாணத்துக்கும் இன்னுமொரு தொகுதியினர் கிழக்கு மாகாணத்திற்கும் பயணம் செய்திருப்பதாக தகவல்கள் உண்டு. ஆனால் அத்தகைய தரப்பினரது வருகையும் அதனை பற்றிய அதற்கான செய்திகள் போணப்படும் இரகசியத் தன்மையும் அவர்களது விஜயத்தின் முக்கியமான நகர்வா தெரிகிறது. குறிப்பாக கரையோரங்களை நோக்கியும் தீவுகளை நோக்கியும் இராணுவ வீரர்களின் விஜயங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஊடகங்கள் பெரிய அளவில் அதனை முதன்மைப்படுத்தாத நிலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாக தெரிகின்றது. ஸ்கன்டினோவிய நாடுகளின் முன்னாள் இராணுவ வீரர்களை கொண்டு சமாதான காலத்தில் கண்காணிப்பு குழுக்களையும் கண்காணிப்பையும் சர்வதேச மட்டத்திலுள்ள நாடுகள் மேற்கொண்டிருந்தன என்பது நினைவு கொள்ளத்தக்கது. அதேபோன்று ஒரு சூழல் ஒன்றிற்கான தேவைப்பாடு இல்லாத சந்தர்ப்பத்தில் முன்னாள் இராணுவ வீரர்களின் வருகை அதிகமான சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது. பிரதானமாக கரையோரங்களை நோக்கி அவர்களது விஜயம் அமைந்திருப்பதும் முக்கியமான நகரங்களை மையப்படுத்தி அவர்கள் பயணம் செய்வதும் அதிக சந்தேகத்தை தருகின்றது. இவை ஒவ்வொன்றும் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகவுள்ளது.
எனவே இலங்கை சர்வதேச நாடுகளின் அரசியலுக்குள்ளால் நகர்ந்து செல்கின்ற தீவாக விளங்குகிறது. உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் அதிக கவனம் ஏற்பட்டிருப்பதோடு சமக்காலத்தில் அதற்கான முக்கியத்துவம் இராணுவ ரீதியில் அதிகரித்துள்ளதா என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கின்றது. தென் இலங்கையில்; எதிர்க்கட்சிகளினுடைய அணி திரட்டல் ஒரு புறமும் இந்திய சீனாவின் நகர்வுகள் மறுபுறமுமாக இலங்கைத் தீவு குழப்பகரமான போக்கினை பிரதிபலிப்பதாக உள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
