இலங்கைத் தமிழரது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதிக முன்னெடுப்புகள் நிகழ்கின்றன. தென் இலங்கை அரசாங்கம் மட்டுமல்லாது புதுடில்லி, வோசிங்டன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் என அவர்களது நலனுக்கு அமைவாக ஈழத்தமிழரது அரசியல் தீர்வு உரையாடப்படுகிறது. இதில் ஈழத்தமிழரது அரசியல் அபிலாசை எதுவென்ற கோணத்தில் எந்த சக்தியும் தீர்வைப்பற்றி தீர்மானம் எடுக்க முயலவில்லை. இந்தியாவை இலங்கைத் தீவுக்குள் சிக்கவைத்த 13வது சீர்திருத்தம் பற்றியே மீண்டும் முதன்மைப்படுத்த எல்லாத்தரப்பும் ஆரம்பித்துள்ளன. அதனையே தீர்வு எனக்கருதுகின்றதாகவே தெரிகிறது. ஈழத்தமிழர் சமஷ்டியை ஒரு நிரந்தர தீர்வாக அதிக காலம் போராடியவர்கள் அது சாத்தியமற்றுப் போகவே தனிநாடு பற்றிய கோரிக்கைக்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் முன்னுரிமை கொடுத்தனர். ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்திலும் அகிம்சைப் போராட்டத்திலும் அதன் எல்லையை தொட்டுள்ளனர். கடந்த ஒரு நூற்றாண்டாக ஈழத்தமிழர்களது இழப்பீடும், துயரமும், தியாகமும் தனித்துவமானது. அதன் எல்லையிலிருந்து கொண்டே ஈழத்தமிழருக்கான இனமோதலுக்கு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். தென் இலங்கையின் அரசியல் உத்திகளுடனேயே ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு முன்மொழியப்பட வேண்டும். இக்கட்டுரையும் அண்மிய காலத்தில் ஈழத்தமிழர் தீர்வு பற்றி முன்வைக்கப்படும் தீர்வு முயற்சியையும் அதன் விளைவையும் தேடுவதாக அமையவுள்ளது.
முதலாவது, ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்கள் பிரித்தானியாவில் ஆற்றிய உரையினை நோக்குவது அவசியமானது. இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியுமென தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் வரலாற்றிலேயே துயரமான ஆண்டாக 2009 உள்ளது எனவும் அதற்கு அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கமே காரணம் எனவும் குறிப்பிட்டார். மேலும் அவர் கடந்த நரேந்திர மோடி அரசாங்கத்தின் காலத்திலேயே பாரிய வீடமைப்புத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது, கலாசார மையத்தை யாழ்ப்பாணத்தில் அமைத்துக் கொடுத்துள்ளது, கொழும்பு -யாழ்ப்பாண புகையிரதப் போக்குவரத்தை அமைத்துக் கொடுத்துள்ளது, பலாலி-சென்னை விமானப் போக்குவரத்தை தினசரி மேற்கொள்ள உதவியுள்ளது, காரைக்கால்-காங்கேசன் துறைமுகச் சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு உதவும்விதத்தில் 380கோடி டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஈழத்தில் சைவத்தை பின்பற்றும் மக்கள் தொகை குறைந்துவருகிறது. இந்த மாற்றத்தை தடுக்க நரேந்திர மோடி இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுகிறார். பௌத்தம், தொல்லியல், இராணுவம் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கிறது. மலையகப்பகுதியில் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகைய நியமனம் தமிழர் பெரும்பாலான பிரச்சினையை தீர்க்கும் என்கிறார் அண்ணாமலை. இது மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களின் சமஉரிமையை வழங்கும் 13 ஆம் சட்டத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கைப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என மோடி தனது இலங்கைப்பயணத்தில் வலியுறுத்தியுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது, மாகாணசபைத் தேர்தல், 13வது திருத்தம் ஆகியவை இந்தியா, அமெரிக்காவால் முழுமையாக ஆதரிக்கப்படுகின்றன. எனவே அனைத்து தமிழ் கட்சிகளும் அதன் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து 13வது திருத்தத்தை ஏற்பதுடன் தேர்தலுக்கான இலக்காக இதனை அடையவும் உடன் ஒன்றிணைய வேண்டும் என இலங்கைவாழ் தமிழ் நலன்விரும்பிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அவ்வமைப்பின் அறிக்கையில் மேலும் 13 ஆம் திருத்தத்தை வடக்கு கிழக்கில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவான ஆதரவு உள்ளது. இது அவர்களது தேவையான நம்பிக்கையை அளிப்பதுடன் நிலையான முதலீட்டு வாய்ப்புக்களை கொண்டுவரும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இது மட்டுமல்லாது ஜனாதிபதியுடன் தமிழ் கட்சிகள் உரையாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு அறிக்கைகளும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு 13 வது திருத்தம் பற்றியதாகவே அமைந்துள்ளது. இத்தகைய உரைகளும் அறிக்கைகளும் சரியானவையாகவே தென்படும். தமிழர்களுக்காக எஞ்சியிருக்கும் ஒரே தீர்வு 13 தான் என விவாதிப்பவர்கள் உண்டு. வேறு எதுவும் தமிழரிடம் இல்லை என்ற நியாயப்பாட்டையும் அத்தரப்பு முன்வைக்காமலில்லை. அப்படியானால் போர் முடிவுற்று 14 வருடங்கள் கடந்த நிலையில் ஏன் அது முழுமையாக அரசியலமைப்பிலுள்ளது அமுலாகவில்லை என்ற கேள்வி நியாயமானதாகவே தெரிகிறது.
ஆரம்பத்திலிருந்தே நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதற்காக வடிவமைக்கப்பட்ட திருத்தமே 13வது திருத்தமாகும். அது இலங்கை அரசியல் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக முன்வைக்கப்பட்ட சீர்திருத்தம் மட்டும் கிடையாது. அது இந்து சமுத்திர அரசியலின் தீர்மானங்களை கட்டமைக்கவும் புவிசார் அரசியலைத் தீர்மானிக்கவும் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடாகும். 13 ஐ அதிகாரப் பகிர்வுடன் மட்டும் சுருக்கிக் கொள்ள முடியாது. அது பரந்த பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் நலன்களுடன் தொடர்பு கொண்டது. இலங்கை-இந்திய உடன்பாடு சார்ந்து அமெரிக்க சதிவலையொன்றுள்ளதாக அதிகமான ஆய்வுகள் உண்டு. அது பற்றி மு.திருநாவுக்கரசு எனும் ஈழத்து அரசியல் ஆய்வாளர் தமிழில் இந்திய-இலங்கை உடன்படிக்கை ஓர் அமெரிக்க சதி என 1988 இல் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். பனிப்போர் கால உலக அரசியலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் அமெரிக்க ஜனாதிபதி றொனாட் றேகனும் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவை 13இன் மூலம் இலங்கைத் தீவின் அரசியலுக்குள் சிக்க வைப்பதில் வெற்றி கண்டனர். பனிப் போர் முடிந்தும் அதிலிருந்து இந்தியா மீளமுடியாத பொறிக்குள் அகப்பட்டுள்ளது.
இதில் அதிக வாய்ப்புக்களை தென் இலங்கை அரசியல் ஈட்டிக் கொண்டது. இத்தகைய 13 இன் மூலமே வடக்கு-கிழக்கு தாயகம் காணாமல் போனது. ஈழத்தமிழர் தமக்குள் தாமே விரோதிகளானார்கள். வடக்கு எதிர் கிழக்கு என்ற நிலை ஈழத்தமிழர்களுக்குள்ளேயே பாரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்-முஸ்லீம்களுடன் மோதிக் கொண்டனர். ஒரே மொழியை வடக்கு கிழக்கில் பயன்படுத்தும் இரு பிரிவினரும் பகையாளிகளானார்கள். ஈழத்தமிழரின் நட்பு சக்தி பகையாளிகளானார்கள். ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் வடக்கு கிழக்கு உடைந்து போனதாகவே எல்லோரும் கருதுகின்றனர் ஆனால் ஈழத்தமிழர்கள் இரு துண்டுகளாக உடைந்து போனார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் அரசியல் ரீதியில் நிரந்தரமாக பிரிந்துள்ளனர்.
இது மட்டுமல்ல ஈழத்தமதிழர் இந்தியாவுடன் நிரந்தரப் பகையாளியானார்கள். இதனால் எந்த தீர்வையும் அடைய முடியாதவர்களாக உள்ளானார்கள். இந்தியாவின் தயவில் செயல்படுதல் என்பதெல்லாம் போலியானது. இந்தியா தனது நலனை மட்டும் கருத்தில் கொள்கிறது. அதற்காகவே அதன் வெளியுறவுக் கொள்கையை கட்டமைத்து அதன் கீழ் பொருளாதார உதவியையும் கலாசார உதவிகளையும் இலங்கைத் தீவுக்குள் மேற்கொள்கிறது. சீனா உலகம் முழுவதும் கன்பூசியஸ் அமைப்பினை உருவாக்கி தனது வெளியுறவை கட்டமைப்பது போல் இந்தியா யோகா மூலம் உலகளாவிய உறவை கட்டமைக்கிறது. மென் அதிகாரத்தின் வெளியுறவை கலாசாரம் மற்றும் விழுமியம் சார்ந்த உறவாகவே வளர்ந்து வருகிறது. அதனையே இந்தியாவும் யோகா தினத்தின் மூலம் அடைந்துவருகிறது. 2023 ஆம் ஆண்டு இந்தியா சர்வதேச யோகா தினத்தை இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் மூலம் யோகா சமுத்திர வளையத்தை உருவாக்கி நிகழ்த்தி வருகிறது. இதற்கமைய 3500 இந்தியக் கடற்படையினரும் 19 போர்க்கப்பல்களும் ஒரு நீர்மூழ்கியும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளன. அண்ணாமலை குறிப்பிட்ட அனைத்து உதவிகளும் இலங்கைக்கான இந்தியாவின் வெளியுறவின் உத்திகள். ஈழத்தமிழர் கோருவதெல்லாம் தமது இருப்புக்கான சுயநிர்ணய உரிமையாகும். தென் இலங்கை மக்களுக்கு சமமான உரிமைகளையும் அதிகாரத்தையும் பெறுவதற்கான கோரிக்கையேயாகும். 13 இல் சமஉரிமை உண்டு என்ற உரையாடல் அதன் முழுமையையும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஏற்படுத்தும் பிரமையான உரையாடல் மட்டுமே. அதனை இன முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வென்ற வகையில் ஓர் அதிகார அமைப்பாகவோ அதிகாரப் பகிர்வுக்கான அமைப்பாகவோ கருத முடியாது. ஏன் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இனமோதலுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் சமஷ்டியையோ அல்லது கூட்டுச் சமஷ்டியையோ அல்லது இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி (2014) முன்வைத்த கூட்டுறவுச் சமஷ்டியையோ பாரதீய ஜனதா கட்சி முன்வைக்க முடியாது என்ற கேள்வி நியாயமானதே. 2009 இல் காங்கிரஸ் ஈழத்தமிழருக்கு துரோகமிளைத்தது எனக்கூறும் அண்ணாமலையும் பாரதீய ஜனதாக்கட்சியும் ஏன் காங்கிரஸ் வரைந்த இலங்கை-இந்திய உடன்படிக்கையையும் 13 ஐயும் கைவிட மறுக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்திற்கு இருக்கும் பலம் இலங்கையுடன் புதிய உடன்பாடென்றுக்கு ஏன் போக முடியாதுள்ளது.
இவை எல்லாவற்றையும் கடந்து 13 ஐ முழுமையாக அமுலாக்குவதற்கு தடையாக உள்ள பிரதான சக்தியான மகா சங்கங்களின் நிலைப்பாட்டை எந்த தரப்பும் கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை. அவர்களே இலங்கையின் அரசு. அவர்களே இலங்கை அரசாங்கம். அவர்களே தீர்மானம் எடுக்கும் சக்திகள். அவர்களது முடிபு பற்றிய தெளிவு புலத்திலுள்ள தமிழர்களுக்கு அதிகம் உண்டு. அவர்களது முடிபின் பிரகாரமே 13 இன் அமுலாக்கம் சாத்தியமாகும். தமிழர்களது அல்லது ஏனைய இனத்தவரது பிரச்சினைக்கு தீர்வை சாத்தியப்படுத்துபவர்களாக பௌத்த மகாசங்கத்தினரே உள்ளனர். எந்த அரசியல் கட்சியுடனோ அல்லது ஜனாதிபதியுடனோ உரையாடுவதை விட மகாசங்கத்தினருடன் உரையாடுவதே தீர்வுக்கு சாத்தியமான வழிமுறையாகும். அரசியல்வாதிகளுடனான உரையாடலென்பது அவர்களது அரசியலின் ஆட்சிக்காலத்தை சுமூகமாக்குவதே அன்றி வேறு எதுவுமில்லை.
ஆனால் தற்போதைய சூழலை அவதானிக்கும் போது ஈழத்தமிழருக்கு ஏதாவது அரைகுறைத் தீர்வை வழங்கிவிடுவதன் மூலம் ஏற்பட்டுள்ள அரசியல்-பொருளாதார நெருக்கடியை கையாள முடியுமென ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பிராந்திய சர்வதேச சக்திகளும் கருதுகின்றன. அதனை நோக்கிய நகர்வொன்று நிகழ்கிறது. இதனை நிராகரிப்பதை விடுத்து முகங்கொடுக்க ஈழத்து சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் புலம்பெயர்ந்த அமைப்புக்களும் தயாராக வேண்டும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
