December 7, 2022
அரசியல் கட்டுரைகள்

இராஜதந்திர நெருக்கடிக்குள் இலங்கை-இந்திய உறவு சிக்கியுள்ளதா?

இலங்கை -இந்திய உறவு பொறுத்து இரு நாட்டுக்கும் பரஸ்பரம் புரிதலுண்டு என்ற அவதானிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இலங்கையின் ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்ஹா பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் நெருக்கடி நிலை உள்ளதாக இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திரிகளிடம் கருத்துள்ளதாக தெரியவருகிறது. குறிப்பாக, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்திய விஜயத்தை மேற்கொள்ள ரணில்விக்கிரமசிங்ஹா விரும்பிய போதும் இந்திய அரசாங்கம் அதற்கான ஒப்புதலை அலுவலக ரீதியில் வழங்கவில்லை என்ற விமர்சனம் காணப்படுவதாக அத்தகைய உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் தமது பதவியேற்புக்குப் பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்வதே மரபாக கொண்டுள்ளன. ஆனால் ரணில்விக்கிரமசிங்ஹா பதவியேற்ற பின்னர் மேற்கு நாடுகளுக்கே தனது முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் இத்தகைய இராஜதந்திர நெருக்கடிக்குப் பின்னாலுள்ள உண்மைத் தன்மையை தேடுவதாகவே இக்கட்டுரை அமையவுள்ளது.

ஜனாதிபதி -இந்தியா தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடியானது சாதாரணமானதாகவே விளங்கிக் கொள்வது போல் உரையாடல்கள் நிகழ்கிறது. ஜனாதிபதியின் பொதுவான இராஜதந்திர செயல்பாடுகள் வளைந்து போவதேயன்றி முரண்படுவதல்ல. நெருக்கடி நிலையை வளைந்து கொடுத்து வெற்றி கொள்வதே இயல்பாக அமைந்துள்ளது. அதாலால் ஜனாதிபதி பக்கமிருந்து நெருக்கடி எழவில்லை என்பதோடு இந்தியாவே அத்தகைய நெருக்கடியை கொண்டுள்ளதாக விளங்கிக்கொள்ள முடியும். அதற்கு சில ஆதாரங்களும் ஜனாதிபதி பதவி தொடர்பிலும் அதன் பின்பும் நிலவிவருகிறது.

குறிப்பாக ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மத்தியில் தேர்தல் நடைபெறும் போது ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கு எதிரான மனோநிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளும் உரையாடிக் கொண்டமை முக்கியமான தகவலாகவுள்ளது. அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ வெளிப்படையாக ரணில் விக்கிரமசிங்ஹாவைல இந்தியா ஜனாதிபதியாவதை விரும்பவில்லை எனத் தெரிவித்தமை மற்றும் ரணில்விக்கிரமசிங்ஹா பதவியேற்ற பின்னர் இலங்கையின் கடன் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தாமை மட்டுமன்றி ஜெனீவாவில் நடுநிலைமை இந்தியா வகுத்தமை போன்ற சம்பவங்களைக் குறிப்பிடமுடியும். ஏறக்குறைய இரு நாடுகளும் ஒர் இராதந்திர நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவே தெரிகிறது.இவ்வகை நெருக்கடியை சரிசெய்து இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறக்கொட மேற்கொண்டுவருவதைக் காணமுடிகிறது. அவரது நகர்வுகளில் இந்திய மத்தியரசு மட்டுன்றி தமிழக அரசையும் அதிகம் கவனத்திற்குள் கொண்டுவந்துள்ளார். இந்தியா ஆட்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதை அரசியலாக கொண்டு இயங்குகிறார். அதே நேரம் இன்னோர் பிரதான விடயத்தை மொறகொட வெளிப்படுத்தி வருகிறார். அதாவது இலங்கை நிலைமாறு கட்டத்தில் உள்ளது.அத்துடன் அரசியல், பொருளாதார ரீதியாக மீள் உரையாடலுக்குள் செல்லவேண்டிய தேவை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை பலபிராந்தியங்களையும் இனப்பிரிவுகளையும் கொண்ட சிக்கலான நாடு. இந்த விடயமே இலங்கையின் தோல்விக்கு காரணமாக உள்ளது. இதனால் நாங்கள் புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என இந்தியன் ரைம்ஸ்க்கு (Times of India) தெரிவித்துள்ளார்.

அதாவது பதின்மூன்றாவது சீர்திருத்தத்திற்கு பதிலாக புதிய உடன்பாடொன்றை உருவாக்க மொறகொட முயலுகிறதைக் அவரது நகர்வுகளில் கண்டு கொள்ள முடியும். அவர் தூதுவராக பதவியேற்க முன்பே மாகாணசபைகள் அதிக பொருளாதார இழப்பீட்டை தருவதாகவும் உள்ளூராட்சி மன்றங்களூடாக அதிகாரம் பரவலாக்க முடியுமென வாதித்தவர். அதனால் அவர் பதின்மூன்றை முற்றாக நீக்குவதற்கு அதிக பிரயத்தனம் செய்வதாகவே தெரிகிறது.

அதனையே இன்னோர் வழிமுறையூடாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா மேற்கொள்வதைக் காணமுடிகிறது. அதாவது பதின்மூன்றை வெளிப்படையாக தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்தின் ‘திருகோணமலை மூலோபாய அபிவிருத்தித் திட்டம்’ (Trincomalee Strategic Development Plan) ஒன்றினை முன்வைத்ததன் மூலம் பாரிய மாற்றங்களை கட்டமைக்க முயலுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தை துறைமுக நகரமாக மாற்றும் திட்டமிடல் ஒன்றையும் அத்தகைய அபிவிருத்தித் திட்டம் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. பெரும்பான்மை மக்களின் இனவிகிதாசாரத்தை நிலைப்படுத்தவும் நிலக்கட்டமைப்பினை மாற்றவும் அத்திட்டம் வழிவகுக்கும் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் திருகோணமலைப் பிரதேசத்தின் கட்டமைப்பு மாற்றம் பெறுவதுடன் பாரம்பரியமான அனைத்து வடிவங்களுக்கும் பாரிய சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவே உணரப்படுகிறது. இதனால் கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்க முடியுமென கருதப்படுகிறது.இது வடக்கு கிழக்கு மாகாணங்களின் தொடர்ச்சியை பாதிக்க வழிவகுக்குமெனவும் பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழான அனைத்தையும் வலுவற்றதாக்கிவிடும் என்ற விமர்சனத்தை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

இத்தகைய அபிவிருத்தித் திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டே மிலிந்த மொறகொட புதிய உடன்பாடு ஒன்றுக்கான நகர்வை முதன்மைப்படுத்தி வருகின்றார்.அத்தகைய நகர்வை இந்தியத் தரப்பு ஏற்றுக் கொள்வதற்கான செய்முறையொன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதைக் காணமுடிகிறது. சீனாவுக்கு ஹம்பாந்தோட்டையை ஒப்படைத்தது போல் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை அபிவிருத்தித் திட்டமிடலை நிறைவேற்ற மொறகொட முயல்வதைக் காணமுடிகிறது. அதன்வழி இரு நாட்டுக்குமான நகர்வுகளை இரு தரப்பும் அண்மைக்காலத்தில் திருகோணேஸ்வரத்தை மையப்படுத்தி மேற்கொண்டுள்ள அரசியலை அவதானிக்கும் போது அதிகம் உணரமுடிகிறது. அதாவது இந்தியத் தரப்பும் தென் இலங்கை ஆட்சியாளர்களும் தமது அரசியல் இலாபத்தை மையப்படுத்தி நகர்வதைக் காணக்கூடியதாக இருந்தது. எனவே இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரது நடவடிக்கைகள் புதிய உடன்படிக்கை ஒன்றுக்கான ஏற்பாடாக அமைவதன் மூலம் திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்குவதாகவும் அதன் மூலம் தமிழ் மக்களது இருப்பினை பலவீனப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதை காணக்கூடியதாக தெரிகிறது. இதில் இந்தியாவின் நகர்வே பிரதானமானது. அத்தகைய செய்முறைக்கு இந்தியா ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. மாறாக இந்திய தென் இலங்கையுடன் கூட்டுச்சேர்ந்து ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட திருகோணமலை மூலோபாய அபிவிருத்தி திட்டத்தை வெற்றிகரமானதாக மாற்றுமாயின் தமிழரின் பாரம்பரியமான பிரதேசம் முழுமையாக வலுவற்றதாக மாறும்.

அது மட்டுமன்றி அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகள் திருகோணமலையை மையப்படுத்தி அதிகமான பொருளாதார முயற்சிகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. அமெரிக்கா மிலேனிய உடன்பாட்டின் மூலம் திருகோணமலையை இரண்டாவது பாரிய நகரமாக்கும் முயற்சியில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தது கவனத்திற்குரியதாகும். அதற்கான வாய்ப்புக்களை கடந்த ஆட்சியாளர்கள் முற்றாக நிராகாழித்ததுடன் அத்தகைய உடன்பாட்டின் பலவீனங்களை அதிகம் அம்பலப்படுத்துவதன் வாயிலாக அத்திட்டத்தை கைவிட வழிவகுத்தனர். ஆனால் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங்ன் வருகைக்குப் பின்னர் அதற்கான நகர்வுகள் வேறு வடிவத்தில் மேற்கொள்ள முயல்வதைக் காணமுடிகிறது. அதற்கு ஆதாரமாக மிலேனிய உடன்பாட்டின் நன்மையான விளைவுகளை வெளிப்படுத்தி வருவதுடன் சுங் இலங்கை-அமெரிக்க உறவின் நெருக்கத்தை ஏற்படுத்திவருபவராகவும் காணப்படுகின்றார். அது மட்டுமன்றி அனைத்து மேற்கு நாட்டுத் தலைவர்களும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு தரக்கூடியவர் என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா பதவியேற்ற பின்னர் அமெரிக்கா இராஜதந்திரிகளது வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதிநிதிகள், அமெரிக்க திறைசேரியின் பிரதி செயலாளர் (இரு தடவை), மற்றும் தெற்காசியாவுக்கான பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான நிரந்தர பிரதிநிதி என பல இராஜதந்திரிகள் இலங்கையை நோக்கி பயணம் செய்துவருகின்றனர். இத்தகைய நகர்வுகள் திருகோணமலையை நோக்கிய மிலேனிய உடன்பாட்டின் இன்னோர் வடிவத்தை தயார் செய்வதற்கான வாய்ப்புள்ளது. அதனை நோக்கியே ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா நகர்வதாகவே தெரிகிறது. இதுவே இந்திய-இலங்கை அரசாங்க மட்டத்திலான இராஜதந்திர முரண்பாட்டுக்கு பின்னாலுள்ள வலுவான காரணமாகும். மேற்குடனான உறவு மட்டுமன்றி அமெரிக்காவுடன் அதிக நெருக்கத்தை கொண்டுள்ள ஜனாதிபதியின் நகர்வுகளால் இந்தியா மறைமுகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைகிறது.

அத்தகைய இந்தியாவின் நடவடிக்கைகளால் ஈழத்தமிழருக்கு எத்தகைய இலாபமும் நேரடியாக ஏற்படப் போவதில்லை மாறாக இந்தியாவுடன் ரணில் விக்கிரமசிங்ஹா அரசாங்கம் முழுமையான இணக்கத்தை சாத்தியப்படுத்துமாயின் இலங்கை-இந்திய உறவு பலமாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹாவின் திருகோணமலை மூலோபாய அபிவிருத்தித் திட்டம் சாதமாகவும் அமுலாக வாய்பு ஏற்படும். அது தென் இலங்கைக்கு சாதகமான புதிய உடன்படிக்கைக்கு வழிவகுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே தெரிகிறது. தற்போது எழுந்துள்ள முறுகலின் வேர் அமெரிக்கா இந்தியாவோ அல்ல மாறாக சீனாவை தக்கவைத்தலிலிருந்தே தொடங்குகிறது. அதில் ஜனாதிபதியின் கவனம் அதிகமாகவே உள்ளது. அமெரிக்காவையும் இந்தியாவையும் கையாளுவதில் ஜனாதிபதியின் திறன் அதீதமானது. சீனாவை வைத்துக் கொண்டு இந்தியாவையும், அமெரிக்காவையும் பயன்படுத்துதாகவே தெரிகிறது. அதன் வாயிலாக வடக்கு கிழக்கு புதிய வடிவத்தையும் கட்டமைப்பு மாற்றத்தையும் அடைய வாய்பு அதிகரித்துவருகிறது. அத்தகைய மாற்றம் இந்தியாவின் கனதியான நகர்விலேயே தங்கியுள்ளது.

எனவே இந்திய- இலங்கை இராஜீக நெருக்கடியானது தற்காலிகமானது. அதனை தென் இலங்கை அரசியலாகவே கையாள முனைகிறது. பொருளாதார நெருக்கடிக்குள்ளால் எழுந்துள்ள அரசியல் தேவைகளை நிறைவு செய்வதில் ஜனாதிபதியின் நகர்வு முதன்மையானதாக தெரிகிறது. திருகோணமலை மூலோபாய அபிவிருத்தித் திட்டம் வடக்கு கிழக்கின் கட்டமைப்பை மாற்றுவதில் சாதமானதாக அமைவதென்பது இந்தியாவின் அணுகுமுறையிலேயே தங்கியுள்ளது.

-போராசிரியர் கேரீகணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)