April 30, 2026
அரசியல் கட்டுரைகள்

ஜே.வி.பி.இன் ஆட்சியை தக்கவைப்பதே இலங்கைப் பிரதமரது இந்திய விஜயம்?

சமகாலத்தில் இலங்கைத் தீவில் இடதுசாரி அரசாங்கம் ஓர் அரசியலமைப்பை கொண்டுவரப் போவதாக உரையாடப்படுகிறது. அதே நேரம் இலங்கை பிரதமர் ஹருணி அமரசூரியாவின் (18-19-20.10.2025) இந்திய விஜயமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. இலங்கைப் பிரதமரது இந்திய விஜயமும் இலங்கைத் தீவில் ஜே.வி.பி.அரசாங்கம் கொண்டுவரவிருக்கின்ற அரசியலமைப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகும். பிரதமரது இந்திய விஜயத்தில் பொருளாதார அடிப்படையிலும் வர்த்தக ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றதாக அரசாங்க தரப்பும், ஊடகங்களும் வாதிடுகின்ற போது அவை எல்லாவற்றையும் கடந்து அரசியல் ரீதியில் அதி முக்கியத்துவம் நிலவுகிறதை கண்டு கொள்ள முடிகின்றது. இக்கட்டுரையும் அதற்கான முக்கியத்துவம் எது என்பதை தேட முயலுகிறது.

இலங்கையின் பிரதமர் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் முக்கிய நிகழ்வாக என். டீ.ரி.வி. உலக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற நோக்கு பிரதானமானதாக காணப்பட்டது. அங்கு பிரதமர் உரையாற்றுகின்ற போது இலங்கையின் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறந்த சமூகத்தையும் தொலைநோக்குடைய ஜனநாகத்தையும் கட்டி எழுப்புதல் மற்றும் சுபீட்சமான இலங்கையை உருவாக்குகின்ற நோக்கில் இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்; இலங்கை அண்மையில் முகம் கொடுத்து நெருக்கடியான சூழலில் இருந்து மீளுவதற்கு ஒரு சவாலான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. வெளிப்படை தன்மையும் பொறுப்பு கூறல் உள்ளடங்கிய நிர்வாகத்துக்கான மக்களின் கோரிக்கையின் பேரில் தற்போதைய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றுமை ஒரு முக்கிய திருப்புமுனை என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு இலங்கை பிரதமர் குறிப்பிட்டிருக்கும் விடயத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது அவசியம். அதனை விரிவாக நோக்குவோம்.

முதலாவது இலங்கை பிரதமரின் உரையில் காணப்படும் முக்கிய விடயம் இந்தியா மன்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான அவாவை அதிகம் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை தீவானது இந்தியாவோடு அதிக நெருக்கம் கொண்டிருக்கும் நாடாக வெளித் தோற்றத்தில் காணப்படுகிறது. ஆனால் உள்ளார்ந்த அர்த்தத்தில் இலங்கையின் வெளியுறவு இந்தியாவுக்கு எதிரானது என்பது அதன் வரலாற்றைக் கண்டு கொள்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள். அதிலும் ஜே.வி.பி. இந்திய எதிர்ப்புவாதத்தால் கட்டியெழுப்பப்பட்ட அரசியல் இயக்கம் என்பதை மறுக்க முடியாது. அப்படியான இயக்கம் தனது ஆட்சியைத் தக்க வைப்பதற்கும் புவிசார் நியதியை கருத்தில் கொண்டும் இந்தியாவுடன் அணுகிப் போகும் கொள்கையை பின்பற்றி வருகிறதே அன்றி வேறு எதற்கானதும் அல்ல. புதிய அரசியல் அமைப்பு என்ற போர்வையில் ஏக்கய ராட்சிய அரசியல் அமைப்புக்கான முயற்சியை இரகசியமாக நிகழ்த்துவதில் ஜே.வி.பி.அரசாங்கம் கவனம் கொள்கிறது. முன்னைய அரசாங்கம் வகுத்திருந்த அரசியல் அமைப்பை மீளவும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஜே.வி.பி. அதிகம் ஈடுபட்டு வருகின்றது. அதற்கான ஆதாரங்களை பாராளுமன்றத்துக்குள்ளும் சுவிஸ்நாட்டு தூதரகத்துடனான உரையாடலின் போதும் வெளிப்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது. அது மட்டுமன்றி ஜே.வி.பி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அடியொற்றி ஏக்கய ராச்சிய அரசியலமைப்பை கொண்டு வர திட்டமிடுகிறது. ஆனால் அதனை அமுல்படுத்த அனுமதித்தால் இந்தியாவின் இலங்கை மீதான பிடி பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவே இந்தியத் தரப்பு கருதுகிறது. ஏற்கனவே இலங்கை-இந்திய உடன்படிக்கை சீனாவுடனான ஹம்பாந்தோட்டை உடன்பாட்டினால் கலாவதியாகிவிட்டது. எஞ்சியிருப்பது பதின்மூன்றாவது சீர்திருத்தம் மட்டுமே. அதுவும் ஏக்கய ராட்சிய அரசியலமைப்பின் வருகையால் கணாமல் போக வாய்ப்புள்ளது. அதனை முறியடிக்க தவறும் பட்சத்தில் இந்தியாவின் பிடி இலங்கைத் தீவில் பலவீனமடைந்துவிடும். எனவே பதின்மூன்றாவது சீர்திருத்தத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்திய தரப்பு அதிக கவனம் கொண்டு வருகிறது. அதற்கு அமைவாகவே வடக்கு கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் அதிகம் பதின்மூன்றாவது சிபார்சு உரையாடப்படுகிறது. 37 வருடங்களாக 13 வது திருத்த சட்டம் மூலத்தை அரசியலமைப்பில் வைத்துக் கொண்டு அமுல்படுத்தாமல் செயல்படும் இலங்கை அரசாங்கத்தை எத்தகைய நெருக்கடிக்கும் உட்படுத்தாது கடந்து சென்ற இந்தியாவின் அணுகுமுறைக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கை தீவில் அரசியல் அமைப்பு ரீதியில் இந்தியாவுக்கு இருக்கும் செல்வாக்கும் அற்றுப்போகும் நிலை அதிகரித்துள்ளது. பதின்மூன்றாவது சீர்திருத்தத்திற்கான தீவிர ஆதரவுப் பிரச்சாரம் ஏறக்குறைய ஏக்கய ராச்சிய அரசியலமைப்பின் வடிவத்தை குழப்பத்துக்கு உள்ளாக்குகின்ற ஒரு செய்முறையாகவே தெரிகின்றது. அத்தகைய செய்முறையை நெருக்கடி உள்ளாக்கும் விதத்தில் அல்லது சுமூகமாக இந்தியாவோடு இணங்கிப் போகின்ற விதத்திலான அணுகுமுறை ஒன்றை இலங்கையின் இடதுசாரி ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர். தற்காலிக விட்டுக் கொடுப்பின் மூலம் நிரந்தர இலக்கை அடைவதே இலங்கை ஆட்சியாளரின் நோக்கமாகும். அதன் ஓர் அம்சமாகவே புதுடில்லி நோக்கிய இலங்கை பிரதமரின் பயணமும் அங்கு அவர் வெளிப்படுத்திய கருத்தின் சாராம்சமும் அமைந்திருக்கின்றது.

இரண்டாவது அத்தகைய நிலையை பலப்படுத்தும் விதத்தில் இலங்கையை இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகப்படுத்துவதும் அதன் மீது அதிக நம்பிக்கை கொள்ளும் விதத்திலும் அனுசரணைகளை கட்டி எழுப்புகின்ற வார்த்தைகளை முன்மொழிவதும் வழமையான இலங்கை தீவின் வெளியுறவு அமைந்திருக்கின்றது. இந்தியாவை எதிர்த்து வெல்வதைவிட அணைத்து வெல்வதே இலங்கை இராஜதந்திரத்தின் உத்தி. அதனையே பிரதமர் புதுடில்லியில் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நினைவு கொள்வதன் மூலம் நெருக்கமான உறவை அடையாளப்படுத்தி அத்தகைய வாய்ப்புக்கூடாக இலங்கை தீவில் இருப்பையும் ஆட்சியின் அதிகாரத்தையும் தக்க வைக்க முயலுதனை பிரதமரது உரை புலப்படுத்துகின்றது. இந்தியா பொருளாதார ரீதியான நெருக்கடியின் போதும் கொரனோ தொற்று ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீள்வதற்க்கும் வழங்கிய ஒத்துழைப்பு நன்றியுடன் நினைவு கூர்ந்தது முக்கியமான அம்சமாக தெரிகின்றது. இலங்கை தீவில் ஆட்சியாளர்கள் அனைவரும் 2019 க்கு பின்னர் இந்தியா சீனா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்கிற போது அந்த நாடுகளை திருப்திப்படுத்தும் விதத்தில் கடந்த காலத்தில் வழங்கிய உதவிகளை நினைவு கூர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தை நினைவுபடுத்தி இந்த நாடுகளை திருப்திப்படுத்தி வந்தனர். தற்போது அந்த நாடுகள் வழங்கிய பொருளாதார உதவிகளையும் மற்றும் மருத்துவ சேவைகளையும் நினைவு கொள்வதன் மூலம் அந்த அரசுகளை தங்களது பங்காளிகளாக மாற்றிக்கொள்வதில் வெற்றிகரமான இராஜதந்திரத்தை பிரயோகித்து வருகின்றனர். இலங்கை ஆட்சியாளர்களை பொறுத்தவரையில் இந்தியா சீனா போன்ற நாடுகளில் வெற்றி கொள்வதில் அதிக கவனம் கொள்ளுகின்ற செயல்பாட்டை பின்பற்ற வருகின்றனர்.

மூன்றாவது இலங்கைத் தீவில் ஏற்படுகின்ற அனைத்து நெருக்கடிகளையும் இந்தியா சீனா என்ற தளத்தில் கையாளுவதில் இலங்கை ஆட்சியாளர்களுக்கு சிறந்த அனுபவம் உண்டு. குறிப்பாக இந்தியாவை முன்னுறுத்தி சீனாவையும் சீனாவை முன்னிறுத்தி இந்தியாவையும் எதிர்கொள்வதில் வெற்றிகரமானவர்களாக இலங்கை ஆட்சியாளர்கள் காணப்படுகின்றனர். இலங்கையின் பாரம்பரியமான வெளியுறவுக் கொள்கை 2000 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய-சீன அரசியல் சார்ந்து கட்டி எழுப்பப்பட்டது. அதற்கு முன்னரான காலப் பகுதியில் பிரிட்டிஷ்-இந்தியா சார்ந்தும், அமெரிக்கா-இந்தியா சார்ந்தும் அத்தகைய வெளியுறவு பின்பற்றப்பட்டது. இலங்கையில் வெளியுறவு என்பது உள்நாட்டு விவகாரங்களை பிராந்திய அரசின் புவிசார் அரசியல் நிலைகளை சரியான முறையில் கையாளும் சர்வதேச மட்ட சக்திகளுடன் உறவுக்கூடாக முதன்மைப்படுத்தி வந்துள்ளது. அதனையே ஜே.வி.பி. அரசாங்கமும் முன்னிலைப்படுத்துகின்றது. இலங்கையின் பிரதமர் சீனா விஜயத்தை முடித்துக் கொண்டு சீனாவில் இருந்து நேரடியாக இந்தியா செல்லாது இலங்கை வந்து பின்னர் இலங்கையில் இருந்து சீனாவுக்கு மேற்கொண்ட விஜயம் என்பது இராஜதந்திர ரீதியில் நோக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் இராஜதந்திரத்திற்கென நியமிக்கப்பட்டவர்களே. அவர்கள் அனைவருமே இராஜதந்திரிகளாகவே நோக்கப்படுகின்றனர். அந்த வகையிலே பிரதமரின் இந்திய விஜயம் இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

எனவே இலங்கை பிரதமரது இந்திய விஜயம் பல்வேறு நோக்கங்களை பிரதிபலித்தாலும் அதிகம் ஏக்கய ராச்சிய அரசியல் அமைப்பை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கையாகத் தெரிகிறது. அது மட்டுமன்றி இலங்கையிலுள்ள ஜே.வி.பி.இன் ஆட்சியை இந்தியா குழப்பாமல் இருப்பதற்கும் பிரதமர் மேற்கொண்ட விஜயம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏக்கய ராச்சியம் இலங்கைத்தீவின் புதிய அரசியல் அமைப்பாக கட்டமைக்கப்படுகின்ற போது அது இந்தியாவால் நெருக்கடிக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்வதே ஜே.வி.பி.அரசாங்கத்தின் நோக்கமாகத் தெரிகிறது. இலங்கையின் அத்தகைய முயற்சி யாப்பு ரீதியான தலையீடுகள் எதுவுமற்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படுகின்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏக்கய ராச்சியத்தை குழப்புவது அல்லது அதனை தடுத்து நிறுத்துவது அல்லது அதன் மீதான விமர்சனங்களை அதிகப்படுத்துவதன் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என இந்தியா கருதுகின்ற நிலையை தடுப்பதே பிரதமரது இந்திய விஜயத்தின் பிரதான நோக்கமாகத் தென்படுகின்றது. இலங்கை தீவில் ஜே.வி.பி. ஆட்சியை குழப்பத்துக்கு உள்ளாக்குகின்ற விதத்தில் இந்தியாவின் அணுகுமுறை காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றது. எனவே இவற்றை எதிர்கொள்ளுகின்ற விதத்தில் ஜே.வி.பி. அரசாங்கத்தின் அணுகுமுறைகள் காணப்படுகின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)