July 11, 2025
அரசியல் கட்டுரைகள்

இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் நீண்ட போராக மாறுமா?

இஸ்லாமிய நாகரீகத்திற்கு எதிரான போரை மேற்குலகம் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறது. சிலுவை யுத்தங்கள் முதல் சமகாலம் வரை மேற்குலக நாகரிகத்துக்கும் இஸ்லாமிய நாகரீகத்துக்குமான மோதல் ஒரு நீண்ட அழிப்புக்குரிய போராக உள்ளது. ஈரானிய அணு உலைகள் மீதான இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கு ஆசியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலிய அரசின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் போரின் தீவிரத்தையும் நீட்சியையும் சாத்தியப்படுத்துகின்ற விதத்தில் நகர்கின்றது. ஈரானின் அணுவாயுத திறனை முறியடிக்கவே போரை நடத்துவதாக மேற்குலகமும் இஸ்ரேலும் வெளிப்படையாக தெரிவித்துள்ளன. இச் சூழலில் ஐக்கிய நாடு சபையின் சர்வதேச அணுசக்தி முகவரமைப்பின் நடவடிக்கைகள் ஈரான் மீதான இஸ்ரேலின் போரை தூண்டிய விடயமாகக் கருதப்படுகிறது. International Atomic Energy Agency  அறிக்கையை அடுத்தே ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேலின் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இஸ்ரேல்-ஈரானியப் போர் நீண்ட போராக மாறுமா என்ற தேடலாக கட்டுரை அமையவுள்ளது.

13.06.2025 இஸ்ரேலியா விமானங்கள் ஈரானின் தலைநகரில் அமைந்திருந்த அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர படைப்பிரிவின் இராணுவ தளபதி ஹிசைன் ஹலாமி (Husseion salami) மற்றும் இரு இராணுவ தளபதிகள் உட்பட ஆறு அணு விஞ்ஞானிகளையும் கொலை (Mohammad Mehdi Tehranchi and Fereydoun Abbasi as ‘major nuclear scientists’) செய்திருப்பதாக ஈரானிய உயரிய மதத் தலைவர் அயதுல்லாச் அலி ஹமேனி (Ayatollah Ali Khamenei) தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி 78 பொதுமக்கள் இஸ்ரேலியத் தாக்குதல் கொல்லப்பட்டதுடன் 320க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதல் இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ்வை பாதித்திருப்பதாகவும் கண்டம் விட்டு கண்டம் பாயும் 100க்கு மேற்பட்ட ஏவுகணைகள் பிரயோகப்படுத்தப்பட்டதாகவும் நூற்றுக்கு மேற்பட்ட ஆளில்லாத விமானங்களை கொண்டும் ஈரான் தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. ஆளில்லா விமானங்களை இஸ்ரேலிய எதிர்ப்பு ஆயுதங்களால் அழித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நேரம் இஸ்ரேலின் தலைநகர் மீதான தாக்குதலில் இரு பொது மக்கள் காயமடைந்ததாகவும் கட்டிடங்கள் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேலின் அணுவாயுத அமைந்துள்ள கட்டிடத்தை ஈரான் இலக்கு வைத்துள்ளதாகுவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் இத்தாக்குதலை Operation Rising of Lion  என்று பெயரிட்டுள்ளது. இத்தாக்குதல் தொடரும் என்றும் 14 நாட்களுக்கு தொடர்ச்சியாக தாக்குதலை நிகழ்த்துவது என்றும் இஸ்ரேலிய மூத்த இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இரானிய அணு ஆயுதங்கள் இஸ்ரேலின் எதிர்காலத்தை இல்லாமல் செய்து விடும் என்றும் இஸ்ரேலின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே தாக்குதலை மேற்கொண்டிருப்பதாகவும் அணுவாயுத உற்பத்தி தொடர்பில் அமெரிக்காவுடன் நிகழ்ந்திய பேச்சுவார்த்தை முன்னேற்றம் ஏதும் இன்றி முடிவடைந்ததை அடுத்து தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பதிலுக்கு ஈரானிய மதத் தலைவர் தாக்குதலின் விளைவுகளை இஸ்ரேல் அதீதமாக அனுபவிக்க வேண்டிவரும் என்றும் இது ஒரு போர் பிரகடனம் என்று தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஈரான் தனது இராணுவ தளபதிகளையும் அணு விஞ்ஞானிகளையும் தொடர்ச்சியாக இழந்து வருகின்ற நிலையில் தற்போது அதிக பதட்டத்தை மேற்காசியாவில் ஏற்படுத்தி உள்ளது. இப்போரின் உண்மை தன்மைகளையும், நீடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஆழமாக தேடுதல் அவசியமானது.

முதலாவது, இஸ்லாமிய நாகரிகத்துக்கு எதிரான போரை மேற்குலக ஏதோ ஒரு வடிவத்தில் நிகழ்த்தி வருகின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அனுசரணையிலேயே இஸ்ரேல் இஸ்லாமிய நாகரீகத்துக்கு எதிரான போரை முன்னெடுத்து வருகிறது. 1981ஆம் ஆண்டு ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேன் ஒசிராக் என்னும் இடத்தில் நிர்மாணித்த அணு உலைகளை இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி முற்றாகவே தகர்த்தன. அவ்வாறே Darioush Rezaeinejad (2011), Mostafa Ahmadi Roshan (2012), Mohsen Fakhrizadeh(2020) ஆண்டுகளில் ஈரானின் அணு விஞ்ஞானிகள் இராணுவ தளபதிகள் இஸ்ரேலிய-அமெரிக்க கூட்டு நடவடிக்கையால் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை படுகொலைகளுக்கும் காரணம் ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளேயாகும். இத்தகைய ஒரு நீண்ட போரை இஸ்லாமிய நாகரிகம் மீது தொடர்ச்சியாக மேற்குலக நாடுகள் நிகழ்த்தி வருகின்றன. ஈராக் சிரிய லிபியா துருக்கி போன்ற நாடுகள் மேற்குலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. தற்போது அதிக சவால் மிக்க தேசமாக மேற்காசியாவில் ஈரான் மட்டுமே காணப்படுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்புக்கும் மேற்குலகின் நலன்களுக்கும் உத்தரவாதம் அளிப்பதாக அமையும். அதன் அடிப்படையிலேயே இப்போரை இஸ்ரேல் தொடருகிறது.

இரண்டாவது, ஈரான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளோடு 2015இல் மேற்கொண்ட அணு உடன்படிக்கையில் இருந்து (P5+1 – the US, UK, France, China, Russia and Germany) டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா விலகியதும் அணு உடன்படிக்கையை தொடர்ச்சியாக பேணுவதற்கு ஈரான் முன்வரவில்லை என்றும் அணுக்குண்டுகளை தயாரிப்பதற்கான யுரேனியத்தை செறிவூட்டும் திறனைக் கொண்டிருப்பதாகவும் ஏறக்குறைய ஆறு அணுகுண்டுகளை தயார் செய்யக்கூடிய அளவுக்கு யுரேனிய செரியூட்டல் பூர்த்தி அடைந்திருப்பதாகவும் மொஹாட் மற்றும் சி.ஐ.ஏ புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் ட்ரம்ப் இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்த பிற்பாடு இரண்டு நாடுகளும் அணுவாயுத உடன்படிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு பேச்சுக்களில் ஈடுபட்டன. இதற்காக ஐ.நா.வின் அணுவாயுத முகவராண்மை நகர்வுகளை மேற்கொண்டது. அத்தகைய நகர்வுகளில் ஈரான் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தவறியதோடு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நெருக்கடிக்கு உள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டதோடு அது தாக்குதலின் நோக்கத்தையும் வெளிப்படையாக தெரிவித்திருந்தது. இதில் அமெரிக்காவின் பங்கு என்பது போரை நேரடியாக பங்கெடுக்காத போதும் இஸரேலிய தாக்குதலுக்குரிய அனைத்து ஆயுதங்களையும் அதற்கான பாதுகாப்பு சபை உத்தரவாதங்களையும் அமெரிக்காவே வழங்கி உள்ளது. இதனால் அமெரிக்காவின் திட்டமிடலோடு இப்போர் தொடங்கியுள்ளது. இஸ்ரேலியர் தாக்குதலுக்கு பின்னால் அமெரிக்க ஜனாதிபதி இப்பதாகவே தெரிகிறது. காரணம் தாக்குதலின் பின்னர் ஈரான் ஒரு உடன்பாட்டுக்கு வருவதைத் தவிர வேறு மார்க்கங்கள் எதுவும் இல்லை என தெரிவித்ததோடு ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதற்கான யுரேனிய செறிவூட்டலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் அனுசரணை இன்றி இஸ்ரேல் நகர்வுகள் அமைந்திருக்க வாய்ப்பில்லை. அது மட்டுமன்றி இஸ்ரேலிய தாக்குதல் பெரும் அச்சுறுத்தலையும் அதிக குழப்பத்தையும் ஈரானி ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது, ஈரான் தனது பதில் தாக்குதலை இஸ்ரேலிய தலைநகரை நோக்கி நகர்ந்திருப்பதுடன் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏகவுகணைகளின் வளர்ச்சி நிலை ஈரான் அடைந்து இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இது ஒரு நீண்ட போரை மேற்கொள்வதற்கு சர்வதேச மட்டத்திலான ஒத்துழைப்பு அவசியமானதாக உள்ளது. ரஷ;சியா இப்போரின் நகர்வுகளை தவிர்க்குமாறும் ஏதோ ஒரு அச்சுறுத்தலுக்குரிய விடயம் என்றும் மட்டும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா வெளிப்படையாக எதிரான எச்சரித்திருக்கின்ற சூழலில் ரஷ்சியாவின் நடவடிக்கை இஸ்ரேல் மீதான அல்லது ஈரானுடன் ஆதரவை வெளிப்படுத்தாத போக்கு ஒன்றை அவதானிக்கின்றபோது ஈரான் உடைய இராணுவ வலுவும் அதன் பொருளாதார இருப்பும் ஒரு நீண்ட போரை நகர்த்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி தவிர்க்க முடியாது. ஈரானை தரை வழியாக தாக்குவது என்பது கடினமானது. இஸ்ரேல் பின்பற்றுகின்ற வழிமுறைகள் ஊடாக ஈரானை தாக்கி அழிப்பது என்பது கடினமானதாக இல்லை. அது மட்டுமன்றி மேற்கு நாடுகளின் ஒத்துழைப்பு இஸ்லாமிய நாகரிகத்துக்கு எதிரான அதன் அணுகுமுறை ஈரானுக்கு எப்போதுமே ஆபத்துக்குரியதாகும். ஈரானின் பின்புலத்தில் வெளிப்படையாக வடகொரியா மட்டுமே ஆதரவளிக்க நிலையில் உள்ளது. ரஷ;சியா சீனா வடகொரியா என்பன தொடர்ச்சியாக ஈரானுக்கு ஒத்துழைப்பு வழங்குமானால் முழு நீளப் போராக நகர்த்துவது ஈரான் முனைப்பு காட்டு. அவ்வாறு அன்றி ஈரான் ஒரு முழு நீளப் போரை இச்சூழலில் ஈடுபடுவது அதிக ஆபத்தானதாக அமையும். காசா நிலப்பரப்பின் மீதான இஸ்ரேலின் போர் வெற்றியும் ஈரான் மீதான அழிவுகளினால் சாத்தியப்படக் கூடியது. ஆனால் இஸ்ரேலைப் பொருத்தவரை அது ஒரு வலுவான இராணுவ கட்டமைப்பையும் பின்தளத்தையும் போரியல் உத்திகளையும் கொண்டிருக்கின்றது. அதனால் அதனை இலகுவில் தோற்கடிப்பது கடினம். ஈரானை கட்டுப்படுத்த இஸ்ரேல் எடுக்கின்ற முயற்சிகள் பெருமளவு ஈரான் இஸ்ரேல கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் வேறுபட்ட வடிவங்களை கொண்டது. முழுமையாக கூறுவதான ஈரான் யூதர்களை இலக்கு வைக்குமாக இருந்தால் அதன் விளைவு உலகளாவிய ரீதியில் ஈரானுக்கு ஆபத்தானதாகும். ஆனால் அதுவே இஸ்லாமிய நாடுகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பான அம்சமுமாகும். யூதர்கள் பாரிய அளவில் கொல்லப்படுவதையோ அழிவடைவதையோ, இஸ்ரேலிய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. ஆனால் அத்தகைய நெருக்கடி ஒன்றும் இஸ்ரேலை எதிர்கால இருப்புக்கு ஆபத்தானதாகவும் மாறக்கூடியது. எனவே அதனை நோக்கி இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் அரசுகள் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உண்டு. ஈரானின் அணுப்பரிசோதனை ஆபத்தானது என கருதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்வதோடு அணு உலைகளை முற்றாக அளிக்கும் வரையும் தாக்குதலை அது திட்டமிட்டு இருக்கிறது என்பது அதன் முன்னயத்தங்களில் கண்டு கொள்ளக்கூடியதாகும்.

எனவே, இஸ்ரேல்-ஈரானிய போர் என்பது ஒரு நீண்ட போராக மாறுவதற்குரிய வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கவில்லை. மாறாக அணு உலைகளை தாக்கி அழித்துவிட்டு இஸ்ரேல் தனது போர் முகத்தை காசா மீது திட்டமிட உள்ளது. அதன் பிரதான குழப்பம் மேற்கின் பிரதான குழப்பமும் ஈரானின் அணு ஆயுதமே. இது அணு ஆயுதத்திற்கு எதிரான அல்லது அணு ஆயுத உற்பத்திக்கு எதிரான போராகவே தெரிகின்றது. அத்தகைய இலக்கு சாத்தியப்படுகிற போது போரின் முடிவு இஸ்ரேலிய தரப்பில் முடிவுறுத்தப்படும். ஆனால் ஈரான் இதில் நகர்த்தப் போகும் நடவடிக்கை பொறுத்தே இப்போர் நீட்ச்சி தீர்மானிக்கப்படும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)