April 25, 2024
அரசியல் கட்டுரைகள்

இலங்கை அரசியலில் ஜீலி சுங்கும் கோபால் பாக்லேவும்

இலங்கைத் தீவின் அரசியலுக்குள் இந்திய அமெரிக்க செல்வாக்கு அதிகரித்து வருகிறதென்பது அந்த நாடுகளின் தூதுமுவர்களது நடவடிக்கைகள் மூலம் உணரமுடிகிறது. இலங்கைத்தீவு எப்போதும் வல்லரசுகளது செல்வாக்குள் இயங்கும் நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. அரசியல் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அத்தகைய அத்தகைய நிலை அதிகரித்துள்ளது. அவ்வாறு இந்திய அமெரிக்க போன்ற நாடுகளது செல்வாக்கு அதிகரிப்பதென்பது இலங்கைத் தீவிலுள்ள மக்களின் நலன்களுக்கானது என்ற கருத்து தவறுதலாக பரப்பப்படுகிறது. அந்த நாடுகள் தமது நலனுக்குட்பட்டே இலங்கைத் தீவில் தூதராலயங்களையும் தூதுவர்களையும் நிறுத்தியுள்ளனர் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இலங்கைத் தீவிலுள்ள அனைத்து மக்களையும் விட ஈழத்தமிழ் மக்கள் அமெரிக்காவும் இந்தியாவும் தீர்வை பெற்றுத் தருவார்கள் என்ற மயைக்குள் அதிகம் பயணித்துவிட்டார்கள். அதனை அரசியல் கட்சியின் தலைவர்களும் அரசியல் வாதிகளும் அதிகம் ஊக்குவித்துள்ளனர். உலக வல்லருசுகளாலும் அதன் நிறுவனங்களாலுமே தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல தேசங்களுக்கும் பாதுகாப்பு என்பது யதார்த்தமானது. அதற்கான அரசியலை செயல்படுத்துவதன் மூலமாகவே தீர்வை எட்ட முடியும். தமிழ் மக்கள் தமக்கான அரசியலை செய்யாது உலக நாடுகளையும் வல்லருசுகளையும் நோக்கி அறைகூவல் விடுவதில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. இக்கட்டுரையும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரது அமெரிக்க நிலையத் திறப்பு நிகழ்வும் இலங்கைக்கான இந்தியத் தூதுவரது திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கான விஜயங்களின் அரசியலை நோக்கியதாக உள்ளது.

29.09.2022 அன்று கொழும்பிலுள்ள அமெரிக்க மத்திய நிலையம் (American Center) புதிய அமெரிக்க தூதரக கட்டத் தொகுதிக்கு இடமாற்றம் செயயப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையம் நூலக பாவனையாளர்களுக்கும் இளைஞர் மன்ற உறுப்பினர்களுக்கும் கடந்தகாலத்தில் அமெரிக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் நிகழ்காலத்தில் செயல்படுபவர்களுக்கும் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பங்காளர்களுக்குமானதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்புதிய நிலையம் இளைஞர்களுக்கான எதிர்காலத்திற்கான வெற்றி கொள்வதற்கு தேவையான திறன்களை வழங்கும் நோக்குடன் நூலகம் மற்றும் நிகழ்ச்சிகளை நடாத்தும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. கற்றல் டிஜிற்றல் கட்டுப்பாட்டுக்கான இடமாகவும் மெய்நிலை நிதர்சனம் மற்றும் 3D அச்சுப்பதிப்பு போன்ற தொழில்நுட்பங்களுக்கான நவீன அமைவிடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய நிலையம் ஆங்கிலமொழிப் பயிற்சி மேடைப் பேச்சு தொழில் முனைவு அபிவிருத்தி இணையத்தள விருத்தி ஊடக அறிவாற்றல் விஞ்ஞான தொழில் நுட்பபொறியியல் கலை மற்றும் கணிதம் ஆகியவற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரியவருகிறது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்த கருததுக்கள் கவனத்திற்கு உரியதாகும்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் பல பொதுவான விழுமியங்கள் மற்றும் அதிகளவு பொதுவான வரலாற்றைக் கொண்ட நண்பர்கள் மற்றும் பங்காளர்கள் உண்டு. இது அனைத்தும் இலங்கையர்களுக்கு சவாலான தருணம். எனினும் இலங்கை மக்கள் இரு தரப்பின் உறவின் முக்கியத்துவத்தையும் இரு நாடுகளுக்குமான எதிர்காலம் ஆகியவற்றில் முதலீடு செய்வதை அமெரிக்கா தொடர்கிறது.அத்தகைய பங்காண்மைக்கும் நட்புக்கும் எதிர்கால முதலீட்டுக்கும் இந்த நிலையம் சிறந்த உதாரணமாகும் எனத் தெரிவித்தார்.

அமெரிக்க தூதுவரது கருத்தும் அமெரிக்க நிலையமும் இலங்கைத் தீவின் அமெரிக்காவுக்கான அவசியப்பாட்டை உணர்த்துகிறது. இலங்கையின் எதிர்காலத்தை கட்டமைக்கவும் இளம் தலைமுறையை கையாளவும் அமெரிக்க நிலையம் முயலுகிறது என்பதை அதன் நிகழ்சிகள் உணர்த்துகின்றன. இலங்கையின் எதிர்கால இளைஞர்களையும் அவர்களது ஆளுமைகளையும் திறன்களையும் வளர்ப்பதோடு அவர்களை அமெரிக்க பண்பாட்டு முறைமைக்குள் நகர்ததுவதே நோக்கமாகத் தெரிகிறது. ஏற்கனவே கொழும்பு நகரத்தை மட்டுமல்லாது ஏறக்குறைய அனைத்து நகரங்களும் மேற்கத்தேச கலாசார மரபுக்குள் அகப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவே தெரிகிறது. அதிலும் தென் இலங்கையின் போக்கில் மேற்குத்தேச பண்பாட்டின் தாக்கம் அதிகமாகவே உள்ளதைக் காணமுடிகிறது. இதன் மூலம் எதிர்கால சந்ததியின் கட்டமைப்பும் அரசியல் சமூக பொருளாதார வடிவங்களும் மேற்குலக மரபுகளால் உருவாக்கப்படும் போது அரசியல் தலைமைத்துவங்களும் பங்காளர்களதும் செல்வாக்கு அதிகரிப்பதுடன் மேற்குலகம் விரும்பும் ஆட்சியை இலங்கைத் தீவில் இலகுவில் கட்டமைக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி மேற்குலக மரபுக்குளளால் மேற்கு ஜனநாயகத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பரவலடையச் செய்வதோடு ஜனநாயக விழுமியங்களை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்க நிலையம் பயணிக்கத் திட்டமிடுகிறது. ஆட்சியாளர்களை உருவாக்குவதுடன் அவர்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான வெளியை திறப்பதே அமெரிக்க நிலையத்தின் நோக்கமாகத் தெரிகிறது. ஆரோக்கியமான சமூகத்தை கட்டுவதென்பதும் மேற்குக்கு பொருத்தமான சமூகத்in வடிவமைப்பதென்பதும் ஒரே மாதிரியான அர்த்தத்தைக் கொண்டதல்ல. ஆனால் நடைமுறையில் அவ்வாறாகவே புரியப்படுகிறது. அதாவது நவீனத்துவம் என்பதும் மேற்கை இறக்குமதியாக்கம் செய்யப்பட்டதாகவே அமைந்திருந்தது. ஏறக்குறைய அனைத்து கோட்பாட்டாக்கங்களும் மேற்கிலிருந்து இறக்குமதி செய்வதாகவே அமைந்துள்ளது. அத்தகைய நிலையை மீளவும் பலப்படுத்தும் உத்தியுடன் அமெரிக்க நிலையத்தின் நகர்வு அமைய வாய்ப்புள்ளது.

அத்தகைய நிலைக்கு ஓரளவு ஒப்பானதாகவே இந்திய தூதுவரது திருகோணேஸ்வரத்திற்கான விஜயம் அமைந்துள்ளது. 02.10.2022 அன்று திருக்கோணேஸ்வரத்தில்பூசை வழிபாட்டில் கலந்து கொண்ட இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆலய வளர்ச்சிக்குகும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அங்கு அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது ஆலயத்தினுடைய வரலாற்றுத் தொன்மைகளும் பூர்வீகமான விடயங்களும் ஆலய நிர்வாகத்தினரும் அறிஞர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த ஆலயம் புனிதமானது மட்டுமல்ல நாயன்மார்களால் பாடப்பட்ட ஓர் ஆலயம் என்பதை அறியமுடிகிறது. அந்த வகையில் ஆலயத்தின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும். இங்கு ஒர் இராஜகோபுரம் அமைக்கப்பட இருக்கின்றதையும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள். அந்த விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தும் எனத் தெரிவித்தார்.

இந்தியத் தூதுவரது கோணேஸ்வர விஜயமும் அவரது கருத்தும் ஈழத்து இந்துக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவே தெரிகிறது. ஈழத்தமிழரது தமிழகத்துடனான தொப்பிள் கொடியுறவை மீள ஒருதடவை தூதுவர் நினைவு கொண்டுள்ளனார். சிறப்பாது. ஆனால் ஈழத்தமிழரது தேவை எதுவாக உள்ளது என்பதில் தூதுவர் கவனம் கொள்ளாமை வேதனையான விடயமாகவே உள்ளது. ஆலயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவுவதுடன் இராஜகோபுரத்திற்கு உதவி செய்வதென்பது எல்லாம் சாதரண விடயங்களே. அதனை எந்த நாடும் செய்துவிட்டுப்ட போகலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கான நிதியை செய்துவிட்டு போக முடியும். வேண்டுமாயின் தூதுவரது திருக்கோணேஸ்வரர் விஜயம் ஒரு இராஜதந்திர நகர்வாக அளவிடலாமே அன்றி வேறு எந்தக் கோணத்திலும் அவரது விஜயம் ஈழத்தமிழரது இறைமையிலோ அல்லது அவர்கள் கோரும் வடக்கிழக்கு வாழ்விடம் சார்ந்த சுயநிர்ணயத்திலோ சுயாட்சியிலேயோ எந்தத் தாக்கத்தையும் செலுத்தப் போவதில்லை. வடக்கு கிழக்கு மீதான ஆக்கிரமிப்பினைத் தடுப்பதற்கான அதிகாரம் அற்ற நிலையில் உள்ள ஈழத்தமிழரது அரசியலில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

ஈழத்தமிழரது கோரிக்கை ஒன்றும் ஆலய வளர்ச்சிக்கான உதவியோ அல்லது இராஜகோபுரம் அமைப்பதற்காதன உதவியோ அல்ல. மாறாக ஆலய பிரதேசத்தில் உள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் எதிர்காலத்தில் அத்தகைய ஆக்கிரமிப்பு நிகழாத வகையில் செயல்பட வழிவகுப்பதுமேயாகும். அதாவது வடக்கு கிழக்கு மீதான ஆக்கிரமிப்பாளரது ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான கோரிக்கையையே ஈழத்மிழர் இந்தியாவிடம் மட்டுமல்ல உலக நீதிப் பொறிமுறையிடமும் கோருகின்றனர். அதனை விடுத்து உதவியளிப்பதும் கட்டிடங்களை கட்டிக் கொடுப்பதும் ஆலயங்களை புணரமைப்பதும் பாடசாலைகளை மீளமைப்பதும் அதற்குரிய உட்கட்டமைப்பை மேற்கொள்வதும் அல்ல. அவை தூதரகங்களின் பணியாக கொள்ளப்பட்டாலும் ஈழத்தமிழர் அதனை கோரி நிற்கவில்லை. அது மட்டுமல்ல அத்தகைய பகுதியளவான உதவியையும் ஒத்துழைப்பையும் வழங்குவதன் மூலம் நிரந்தரமான இழப்பீட்டை தடுக்க முடியாது. ஈழத்தமிழரது நிரந்தரமான வாழ்விடமும் பண்பாடும் அதனை மையப்படுத்திய பொருளாதாரமும் இழக்கப்பட்ட பின்பு உதவிகளாலும் உட்கட்டுமான வளர்ச்சியினாலும் எந்த மாற்றத்தையும் தொட்டுப்பார்க்கக் கூட முடியாது. இலங்கைத் தீவு முழுமையாக ஆக்கிரமிப்பாளரிடம் சென்றுவிடும். அதன்பின்பு வடக்கு கிழக்கை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே அமெரிக்க, இந்திய தூதுவர்களது நகர்வு தமது நாடுகளின் நலன்களை அடைவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதனையே அவர்களது நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. தென் இலய்கை அரசியலை அமெரிக்கத் தூதுவரும் வடக்கு கிழக்கு அரசியலை இந்தியத் தூதுவரும் கையாளும் நிலை இலங்கைத் தீவு மக்களுக்கானதல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.தூதுவர்கள் இராஜதந்திர பணியையே ஆற்றுபவர்கள். அதனை அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கும் செய்திகளிலோ அல்லது தமது உரைகளிலோ தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இரு நாட்டுத் தூதுவரது வெளிப்பாட்டிலும் அத்தகைய உபாயங்களை கண்டு கொள்ள முடியவில்லை. அதிலும் இந்தியத் தூதுவர் இராஜகோபுரத்திற்கு உதவியளிக்க திருக்கோணேஸ்வரம் சென்றமை விஜயத்தின் பலவீனத்தை அம்பலப்படுத்துகிறது. விழிப்படைய வேண்டியவர்கள் ஈழத்மிழர்களே. அமெரிக்கத் தூதுவர் தென் இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்களை விடுத்து செயல்படுவது போல் இந்தியத் தூதுவர் ஈழத்மதிழரது அரசியல் இருப்புப் பற்றி எந்தவித அக்கறையும் அற்று தமது நாட்டின் நலனை நோக்கி செயல்படுகின்றனர்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)