இலங்கை அரசியல் நிர்வாக கட்டமைப்பில் ஒன்றான 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத்திற்கான தேர்தல் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. தென் இலங்கையின் ஆதிக்கத்தை மீளவும் தேசிய மக்கள் சக்தி(NPP) கைப்பற்றிய போதும் அதன் வாக்கு வாங்கி பலவீனம் அடைந்துள்ளதாக விமர்சனங்கள் உண்டு. 2024 பாராளுமன்றத் தேர்தலில் 61.56 சதவீதம் பெற்ற வாக்கு விகிதம் உள்ளூராட்சியில் 43.26 வீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரம் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கடந்த பாராளுமன்ற தேர்தலோடு ஒப்பிடும் போது அதிக மாற்றங்களை அடைந்திருப்பதாக தெரிய வருகிறது. 2024 பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 19.47 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையிலிருந்து 31.95 சதவீதத்தை தமிழரசுக் கட்சி பெற்றுள்ளது. அது போன்று தமிழ் காங்கிரரஸ் 8.60 சதவீதத்தை பெற்ற நிலை மாறி 18.44 சதவீதத்தை தற்போது பெற்றுள்ளது. இவற்றைக் கொண்டு தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கு அதிகமாக வாக்களித்திருக்கின்றனர் என்ற முடிபுக்கு வரமுடியும். இக்கட்டுரையும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கு வழங்கிய வாக்குகள் சார்ந்து அதன் எதார்த்தத்தை புரிந்து கொள்ள முயலுகிறது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த பாராளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகின்ற விதத்திலே தேடல்களும் அவதானிப்புகளும் முன்வைக்கப்படுகிறது. அதனால் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்றிருப்பதாக எல்லோரும் விவாதிக்கின்றனர். ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுடைய வாக்களிப்பு தமிழ் கட்சிகளை முற்றிலும் புறந்தள்ளியதாக அமையவில்லை. மாறாக கட்சிகள் தமக்குள்ளே ஏற்பட்ட போட்டியும் பிரிவினையும் அத்தகைய தோல்விக்கு அடிப்படை காரணமாக இருந்தது என்பதை அளவீடு செய்ய தவறக்கூடாது. நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் குறிப்பாக தமிழ் தேசிய பேரவையின் பெயரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகள் அதிகமான வாக்குகளையும் ஆசனங்களையும் பெறக்கூடியதாக அமைந்திருக்கின்றது. அதற்கான அடிப்படை காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஐக்கியம், விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு என்ற அடிப்படையில் ஏனைய கட்சிகளை அரவணைத்ததன் விளைவாகவே தெரிகிறது. இதனை அக்கட்சியும் அதில் இணைந்து கொண்ட ஏனைய கட்சிகளும் தெளிவாக உணர்ந்து கொண்டிருப்பர். மக்கள் தமது வாக்களிப்பு நிகழ்த்துகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் கட்சிகளின் ஐக்கியம், ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் அதிக விவாதங்களை கொண்டிருந்தனர். இது ஒரு விவாத ஜனநாயக காலம் (Deliberative democracy) என்பதை கட்சிகளும் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய ஐக்கியமே அவர்களுக்கான வாய்ப்பை சாத்தியப்படுத்தியது. அத்தகைய ஐக்கியத்தையே எதிர்காலத்திலும் மக்கள் விரும்புகின்ற அரசியல் என்பதை கட்சிகள் உணரத் தலைப்பட வேண்டும். அரசியலில் மாற்றம் நிகழ வேண்டுமாயின் ஐக்கியம் ஒருமைப்பாடு கூட்டுத்தன்மை என்பன எழுச்சி அடைவதற்கான விட்டுக் கொடுப்பு போன்றவற்றை மக்கள் எதிர்பார்க்கின்றார். நடந்து முடிந்த தேர்தலில் அநேகமான மாநகர சபைகளும் நகர சபைகளும் பிரதேச சபைகளும் தனித்து ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை சரியாகப் பயன்படுத்த தவறுகின்ற பட்சத்தில் மீளவும் ஒரு நெருக்கடியை தமிழ் கட்சிகள் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழரசு கட்சியை பொறுத்த வரையில் அது ஒரு பாரம்பரியமானதும் நீண்டு அனுபவங்களை கொண்டதுமான கட்சியாகும். ஆனால் அதன் தலைமைகளும் கட்சி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும் மேற்கொண்டு வருகின்ற அணுகுமுறை அதனை மேலும் மேலும் பலவீனப்படுத்துவதாகவே காணப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலோடு உள்ளூhராட்சி மன்ற தேர்தலை ஒப்பிடுகிறார்கள். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் இருப்போடு இந்த தேர்தலை கருத்தில் கொள்ள தவறுகின்றனர். காரணம் இத்தேர்தலில் தமிழ் கட்சிகள் உடைய வெற்றி என்பது தேசியமட்ட தேர்தலோடு ஒப்பீடு செய்யக் கூடியது ஒன்று அல்ல. இது பெருமளவுக்கு உள்ளூர் மட்டங்களை பிரதிபலிப்பது. குறிப்பாக இத்தேர்தல் வெற்றியை தமிழ்த் தேசியம் அடைந்த வெற்றியாக கூட அளவிடுகின்றனர். தமிழ் தேசியம் என்பது அல்லது தேசியம் என்பது மக்கள் திரளை பிரதிபலிக்கும் ஒன்று என்பதை புரிந்து கொள்ள தவறுகின்றனர். கூட்டுத்தன்மையும் ஒருமைப்பாடும் ஐக்கியமே தேசியத்தின் அடிப்படைகளாகும். தேசியத்தின் அடிப்படைகளை தமிழ் கட்சிகள் திட்டமிட்டு இருக்குமேயானால் எந்த ஒரு தென்னிலங்கை கட்சியும் ஒரு ஆசனத்தை கூட பெற்றிருக்க முடியாத நிலையை உருவாக்கி இருக்க முடியும். குறைந்தபட்சம் போட்டி தவிர்ப்பேனும் வடக்கு கிழக்கு சாத்தியப்படுத்தி இருப்பார்களாயின் அத்தகைய நிலையை அடைந்திருக்க முடியும். ஆரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசும் அரசியல் விமர்சகர் நிலாந்தனும் இன்னோர் அரசியல் விமர்சகர் ஐ.வி.மகாசேனனும் போட்டி தவிர்ப்பு உடன்படிக்கையை தொடர்ச்சியாக வலியுறுத்தியவர்கள். ஆதனை எந்தக் கட்சியினரும் கவனத்தில் கொள்ளவில்லை. எப்படி பொது வேட்பாளரை நிராகரித்து அதனை கேவலமாக விமர்சனம் செய்தார்களோ அதே போன்று இதனையும் கருத்தில் கொள்ளத் தவறினர். போட்டி தவிர்ப்பு எதிர்காலத்திலும் தமிழர் அரசியலில் தேவை என்பதை உணர வேண்டிய நிலை ஏற்படும். தவறும் பட்சத்தில் மீண்டும் தென் இலங்கை கட்சிகளிடம் தமிழ் மக்கள் சரணடையும் நிலை தோன்றும். போட்டி தவிர்ப்புச் சூழல் ஒன்றை நோக்கி தமிழ் கட்சிகள் எதிர்காலத் தேர்தல்களில் பயணிக்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாதது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் என்பது சாதி வாக்குகளாலும் மத வாக்குகளாலும் பிரதேச வாக்குகளாலும் உறவினர் வாக்குகளாலும் நட்பு வாக்குகளாலும் கட்டமைக்கப்பட்டது. அது அந்தந்த பிரதேசங்களில் உள்ள அதிகாரத்தின் கட்டமைப்பை பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கே வாக்களித்து இருக்கிறார் என்ற விவாதம் சற்று அதீதமானது. இங்கு கட்சிகள் என்பதைவிட தமது சமூக உணர்வுகள் அதிகம் பிரதிபலித்துள்ளது. தேசியம் சாதி, மத, பிரதேச உணர்வுகளைக் கடந்தது. அவற்றால் கட்டுப்படுத்தக் கூடியதல்ல. ஏதோ ஒரு இலட்சியத்திற்க்கான மக்கள் திரட்சியாகும். இந்த விடயத்தில் எப்போதும் தமிழ் கட்சிகள் எச்சரிக்கையாக இருத்தல் அவசியமானது. காரணம் இத்தகைய சூழலில் கூட தேசிய மக்கள் சக்தியை நோக்கியும் ஐக்கிய மக்கள் சக்தி நோக்கியும் மக்கள் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாநகர சபையில் 10 ஆசனங்களையும் (22.01) மட்டக்களப்பு மாநகர சபையில் 9 ஆசனங்களைப் (25.94) பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோரிவிட்டு உள்ளூராட்சித் தேர்தல்களிலும் பாராளுமன்ற தேர்தல்களிலும் மாகாணசபை தேர்தல்களிலும் மக்களை தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க கோருவதன் விளைவுகள் அவை என்பதை தமிழ் கட்சிகள் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
இத்தேர்தல் முடிவு இளையவர்களை புதியவர்களை பெண்களை அதிகமான அளவு தேர்வு செய்வதில் கவனம் கொண்டுள்ளது. பழையவர்களை விட புதியவர்களுக்கான வாய்ப்புகளை உள்ளூர் மட்டத்தில் ஏற்படுத்துகின்ற விதத்தில் கட்சிகள் கவனம் செலுத்தி இருக்கின்றன. அதற்கான அடிப்படை காரணம் மூத்தவர்களின் அனுபவங்களையும் அவர்களுடைய அணுகு முறையில் காணப்படும் பலவீனங்களை கைவிட்டு புதியவர்களை அங்கீகாரம் கொடுப்பதும் அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் அவசியத்தை உணர்ந்து கொண்டதன் விளைவாகும். இளையவர்களையும் பெண்களையும் கவனத்தில் கொள்வதன் மூலமே அரசியல் கட்சியின்; தேர்தல் அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியும். இதனால் புதிய அரசியரலை நோக்கிய அடுத்த சந்ததியும் நகர்வதில் கவனம் கொள்ளும். பிரபலங்களை முன்னிறுத்தி கட்சிகள் எழுச்சி அடைவதை விட கட்சிகளுக்கு ஊடாக புதியவர்களை பிரபலமாக்குவது உலகத்தின் அரசியல் வரலாற்றின் வடிவமாகும். அதனை நோக்கி செயல்பட வேண்டிய தேவைப்பாடு தமிழ் கட்சிகளை உண்டு. உள்ளூராட்சி தேர்தல் என்பது அத்தகையவர்களுக்கான வாய்ப்புகளை கொடுப்பதும் அவர்களை முன்னிறுத்துவதும் அவசியமானது.
இளையவர்களையும் புதியவர்களை அடையாளம் காட்டுவதும் அவர்களுக்கு ஊடாக ஒரு அரசியல் புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று அடையாளத்தை பாதுகாப்பதும் அதற்காக போராடுவதும் அரசியல் கட்சிகளின் பிரதான கொள்கையாக இருத்தல் வேண்டும். புதியவர்கள் அரசியலுக்கு அறிமுகப்படுத்துகின்ற போது எதிர்காலம் என்பதை நோக்கி ஈழத்தமிழர்களுடைய அரசியல் நகர்வதற்கான வாய்ப்பு உண்டு. அதற்கான இருப்பும் தகமையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் அதன் தலைமையிடமும் உண்டு. அதன் கொள்கை பற்றுறுதியும் தொடர்ச்சியான போராட்ட குணமும் தேசியத்தை கட்டமைக்க எடுத்த நகர்வுகளும் அதிக நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முண்ணணியின் தலைமை ஏனைய கட்சிகளை அரவணைத்துக் கொண்டு செயல்பட எடுத்த முடிவுகள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய வழிமுறையை எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் தேசிய பேரவை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும். புதிய சின்னம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே முன்வைக்கப்பட்ட சின்னம் அந்த கட்சிக்குள் பேணப்படுகின்ற அதே சந்தர்ப்பத்தில் ஒரு புதிய சின்னத்தையும் புதிய உறுப்பினர்களையும் முன்னிறுத்திக் கொண்டு வடக்கு கிழக்கு முழுவதும் அத்தகைய கட்டமைப்பு விஸ்தரிக்கப்பட வேண்டும். பலமான கட்சி கட்டமைபு தமிழரசு கட்சிக்கு இருக்கும் அளவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இல்லை என்பது எதார்த்தமானது. அதனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய பேரவை கூடாக வடக்கு கிழக்கு எங்கும் கட்சி கட்டமைப்புகளை உருவாக்குதல் வேண்டும். அதனூடாகவே ஈழத்தமிழர்களுடைய அரசியல் மாற்றத்தை அடைய முடியும். அதனை நோக்கி மக்கள் கவனம் கொள்ளும் நிலை ஏற்படும். உள்ளூராட்சி தேர்தல் ஒரு களத்தை தந்திருக்கின்றது. அத்தகைய அனுபவத்தை சரியாக பயன்படுத்துகின்ற போது மட்டுமே புதியதும் சாத்தியமானதுமான அரசியல் விளைவை கண்டுகொள்ள முடியும்.
உள்ளூராட்சி மன்றங்கள் கைப்பற்றி இருக்கின்ற உறுப்பினர்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்படுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் தேவைகளையும் சமூக பொருளாதார பண்பாட்டு உரிமைகளையும் அங்கீகரிக்கும் விதத்தில் பயணிக்க வேண்டும். வெற்றியின் பின்னர் அக்கட்சியினரும் உறுப்பினர்களும் தேசிய இயக்கம் போன்று செயல்பட வேண்டும். அதற்கான பயிற்சியும் அனுபவமும் அக்கட்சி உறுப்பினர்களுக்கு அதிகம் உண்டு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கின்றார்கள். அதனை அடைவதற்கான இலக்குகளை தேர்ந்தெடுத்தல் வேண்டும். சபைகளும் சபைகளின் வரவு செலவுத் திட்டங்களும் அரசியலுக்கானதாக பயன்படுத்துவதை விட மக்களின் நலனுக்கானதாக அவற்றை பயன்படுத்துவது அவசியமானது. இழுபறிகளும் விவாதங்களும் அல்லது வாக்குவாதங்களும் குழிப்பறிப்புகளும் தமிழர்களுடைய பிரதேச சபைகளிலும் நகர சபையிலும் மாநகர சபையிலும் அரங்கேற்கின்ற கடந்த கால அனுபவங்கள் சீரமைக்கப்பட வேண்டும். அர்பணிப்போடு வென்ற ஒவ்வொரு வேட்பாளர்களும் பணி புரிவதற்கான ஒரு களத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளை நோக்கி அரசியல் கட்சிகள் இயக்கங்களாகவே பணிபுரிதல் வேண்டும். அதனை எதிர்பார்த்தே மக்கள் தங்கள் வாக்களிப்புகளை திசை திருப்பி உள்ளனர். இதன் தொடர்ச்சி பேணப்படுவது என்பது அடுத்து வரும் காலப்பகுதிகளில் தென் இலங்கை தீர்மானம் எடுப்பதை விடுத்து தமிழர்கள் தாமே தீர்மானம் எடுக்க நிலைக்குள் கொண்டு செல்ல உதவும்.
எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தமிழர் அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பானதாக இருந்தாலும் அதிக சவால் மிக்கது. அடுத்து வரும் தேர்தல்களையும் மக்களுடைய பிரச்சனைகளை மையப்படுத்தி மக்களின் எதிர்பார்க்கைகளை முன்னிறுத்திக் கொண்டு கையாளுவதே தமிழர்களின் அடையாளத்தையும் தேசியத்தையும் கட்டமைக்கும். தேசியம் என்பது கட்சிகளின் ஆசனங்களின் எண்ணிக்கைகள் அல்ல மாறாக மக்களின் ஒருமைப்பாடும் ஐக்கியமும் திரட்சியமே. தேசியத்தை கட்சிக்குள் பார்ப்பதைவிட மக்களிடம் பார்த்தல் வேண்டும். அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதன் ஊடாகவே தேசியத்தை பாதுகாக்க முடியும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி:தினக்குரல்)
