March 29, 2024
அரசியல் கட்டுரைகள்

மலேசிய அரசியல் குழப்பமும் புதிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பதவியேற்பும்

உலகளாவிய அரசியலில் நிகழும் ஆட்சி மாற்றங்கள் ஜனநாயகத்தின் பயிற்சிக்களமாக காணப்படுகின்றது. அதனை மட்டுமே ஜனநாயகம் என்று கருதும், அரசுகளும் உண்டு. அனேக ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அ​ெமரிக்க அரசுகள் ஜனநாயகம் என்பது ஆட்சி மாற்றம் என்றே கருதுகின்றன. அதனைக் கடந்து ஆட்சி நிர்வாகத்திலும், பொருளாதாரப் பண்பிலும், சமூக கட்டமைப்புகளிலும் ஜனநாயகத்தின் பக்கங்களை பின்பற்றும் எத்தகைய செய்முறையும் இல்லாத போக்கினைக் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் கீழைத்தேசங்கள் மதத்தையும் மரபுகளையும் முன்னிறுத்துவதன் மூலம் ஜனநாயகத்தின் சரியான பிரயோகத்தை சாத்தியமற்றதாக்கிவருகின்றன. அந்த வகையில் பிந்திய மலேசிய அரசின் நீண்ட இழுபறியின் பின்னர் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்துக்கான சூழலையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அரசியல் ரீதியில் உறுதியான அரசாங்கம் அமைய முடியாத குழப்பம் நிலவுகிறது. இதுவரை மூன்று பிரதமர்கள் ஆட்சியமைத்துள்ளனர். அத்தகைய மூன்று அரசாங்கங்களும் தொங்கு பாராளுமன்றத்தினாலும் கூட்டணிக் கட்சிகளுக்குள் குழப்பத்தாலும் ஆட்சியை இழந்துள்ளன. இதனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி 19.11.2022 அன்று தேர்தல் நடைபெற்றது. அதிலும் மீளவும் தொங்கு பாராளுமன்றமே அமைந்துள்ளது. அதனடிப்படையில் 222 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹீம் தலைமையிலான சீர்திருத்தவாதக் கூட்டணி 82 இடங்களை கைப்பற்றியுள்ளது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசியவாதக் கூட்டணி 72 இடங்களில் வெற்றி பெற்றது. பரந்த மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களில் வெற்றியை உறுதிப்படுத்தியது. அதேநேரம் மலேசியாவின் சுதந்திர காலத்திலிருந்து ஆட்சியமைத்த (2018) ஐக்கிய மலாய் தேசியவாதக் கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. ஆட்சி அமைப்பதற்காக 112 இடங்கள் பாராளுமன்றத்தில் தேவை, என்ற அடிப்படையில், எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் குழப்பம் நிலவியது. அதேநேரம் தமக்கு போதுமான பெரும்பான்மை இருப்பதாக அன்வர் மற்றும் முகைதீன் இருவரும் கூறிவருகின்ற சூழலில் மலேசியாவின் மன்னர் அன்வர் இப்ராஹீமை பத்தாவது பிரதமராக அறிவித்துள்ளார். 25.11.2022 அன்று அன்வர் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். 1998இல் துணைப்பிரதமராக பதவிவகித்த அன்வர் ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளால் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். அரசியல் நோக்கத்தோடு அத்தகைய குற்றச்சாட்டுக்கள் தம்மீது சுமத்தப்பட்டதாக குறிப்பிட்ட அன்வர் மீளவும் நீண்ட கால போராட்டத்திற்கு பின்னர் தேர்தல் மூலம் பிரதமராக தெரிவாகியுள்ளார்.

மலேசியப் பாராளுமன்றம் உறுதியான ஆட்சியை கொடுக்க முடியாமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் நடைமுறையில், மலேசியாவின் இன அடிப்படையிலும் மத அடிப்படையிலும் மற்றும் மொழி அடிப்படையிலும் காணப்படும் வேறுபாடே பிரதானமான அம்சமாக தெரிகிறது. குறிப்பாக மலாயக்காரர்கள், சீனர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் முதன்மையானவர்களாகக் காணப்பட்டாலும், இஸ்லாமியர்களே அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை காணப்படுகிறது. ஆனால் அஸ்லி, டயாக், ஆனாக் நகிரி (62.5)ஆகிய மலேசியர்கள் அந்த நாட்டின் சுதேசியர்களாக உள்ளனர். இரண்டாவது நிலையில் சீனர்கள் (20.6) காணப்படுகின்றனர். பிரித்தானிய குடியேற்ற காலத்தில் குடியமர்த்தப்பட்ட இந்தியர்களும் (6.2) அரசியல் செல்வாக்குடையவர்களாக விளங்குகின்றனர்.

கூட்டாட்சி பாராளுமன்றத்தைக் கொண்ட மலேசியா அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சியைக் கொண்ட நாடாக உள்ளது. 1948இல் மலேசியா பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற்றாலும் 1959இன் பின்னரே பாராளுமன்றக் கட்டமைப்பைக் கொண்ட சுதேச அரசியலமைப்பை கட்டமைத்தது. மலேசியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பானது மேற்சபையான செனற்சபை எனவும் கீழ்சபையான பிரதிநிதிகள் அவையையும் கொண்ட கூட்டாண்மை அரசாங்கத்தையும் அமைத்துள்ளது. 1963இல் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு கூட்டாண்மையை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதனடிப்படையில் 13 கூட்டாட்சி அலகுகளையும் மூன்று கூட்டாட்சி பிராந்தியங்களையும் கொண்டுள்ளது.

பொருளாதார ரீதியில் தொழில்துறையின் ஆதிக்கம் சீனர்களது கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. சட்டம் ஒழுங்கு முதன்மையானதாக அமைந்திருந்தாலும் மலேசியாவின் அரசியலிலும் சமூக அமைப்பிலும் தீவிரவாத அமைப்புக்களின் செல்வாக்கு காணப்படுகிறது. சுதேச பண்பாட்டைக் கொண்டிருந்தாலும் மேற்குலக நாகரீகத்தின் செல்வாக்கு அதீதமானதாக அமைந்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஊடுருவலும் மலேசியாவில் பிரதான முரண்பாட்டுக்குரிய விடயமாக தெரிகிறது. ஆயுதக்குழுக்களது செல்வாக்கு சமூக விரோத நடவடிக்கைகள் மலேசிய அரசியலை அதிகம் குழப்பும் விடயமாக தெரிகிறது. இத்தகைய நிலையிலேயே, அன்வர் இப்ராஹீம் ஆட்சி தனிப்பெரும்பான்மை இன்றி அமைந்துள்ளது. புதிய அரசாங்கத்திற்கு முன்னே உள்ள சவால்கள் அதிகமானவை. அவற்றை விரிவாக தேடுவது அவசியமானது.

முதலாவது, உறுதியான அரசாங்கம் ஒன்றினைக் கட்டமைப்பது பிரதானமான சவாலாக மலேசியாவில் எழுந்துள்ளது. இது அனைத்து நாடுகளுக்குமே பொருத்தமானதாக மாறியுள்ளது. அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சியைக் கொண்ட மலேசியாவின் ஆட்சி முறைமை நிறைவேற்றதிகாரத்தை பிரமரிடம் ஒப்படைத்துள்ளது. அது மட்டுமன்றி பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கான உறுதிப்படுத்தலும் கூட்டாட்சியின் உறுதிப்பாடும் அரசியலமைப்புக்குட்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் உறுதியான அரசாங்கத்தை அமைப்பதில் கடந்த 2018 முதல் அதிக குழப்பத்தைக் கொண்டிருக்கும் மலேசியாவின் அரசியல் தொடர்ந்து சாத்தியமான வழிமுறைகளை உருவாக்குவது அவசியமானதாக தெரிகிறது.

இரண்டாவது, உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மலேசியாவின் பொருளாதாரத்தை தக்கவைப்பது பிரதான சவாலாக தெரிகிறது. சராசரியாக 3.1 சதவீத பொருளாதார வளர்ச்சியை கடந்த காலத்தில் கொண்டிருந்த மலேசிய அரசு அதனை நிலைப்படுத்துவதும் பேணுவதும் அவசியமானதாக உள்ளது. இது ஆசியான் அமைப்பிலும் ஆசிய,- பசுபிக் பொருளாதாரத்திலும் வலுவான பங்கினைச் செலுத்தும் மலேசியாவின் ஆட்சித் துறையிடமே தங்கியுள்ளது. ஆனால் மலேசிய மக்களது உழைப்பின் திறனும் போட்டித் தன்மையும் கூட்டு இருப்பின் அடையாளங்களும் அதன் பொருளாதாரத்திற்கான இருப்பை உறுதிப்படுத்துகின்றது. அந்த நாட்டின் தொழில் துறையில் சீனாவின் பங்கு மட்டுமல்ல மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் பங்கு உயர்வானதாக அமைந்துள்ளது. இந்திய, -மலேசிய பொருளாதார ஒத்துழைப்பு பலமானதாக அமைந்துள்ளது. ஆனால் இவற்றை பாதுகாப்பது புதிய பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் சவாலாகவே தெரிகிறது. அன்வர் துணைப் பிரதமராக இருந்தபோது இந்தியாவையும் சீனாவையும் சமமாக கையாளும் கொள்கையை அதிகம் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக அமைந்திருந்தது. ஆனால் 25 வருடகால இடைவெளிக்குப் பின்னர் அவரது ஆட்சியும் தென்கிழக்காசிய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் அதற்கான வாய்ப்புக்களை சாத்தியப்படுத்த உதவுமா என்பது குழப்பமாகவே உள்ளது.

மூன்றாவது புதிய அரசாங்கத்திற்கு முன்னால் உள்ள பிரதான சவாலாக அமைந்திருப்பது மலேசியாவின் அரசியல் காலாசாரத்தின் கூட்டுறவை வலுப்படுத்துவதாகும். அதுவே தற்போது அனைத்து சவாலுக்கும் தீர்வாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்குலகத்தின் செல்வாக்கும் தழுவலும் ஒருபக்கம் அமைய, சீனாவின் ஊடுருவலும் இந்தியாவின் செல்வாக்கும் நிலையான சுதேச அரசியல் கலாசாரத்துடன் மோதுண்டு பயணிகிறது. மலேசியா பல்லினப் பண்பாட்டைக் கொண்டிருப்பதோடு ஒரு கூட்டாட்சித் தத்துவத்தையும் தனக்குள் வரைந்துள்ளது. அதனால் அதிக குழப்பங்களுக்குள் ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் கட்டிவளர்க்க வேண்டிய பொறுப்பாண்மை புதிய ஆட்சிக்கு உரியதாகும். அதனைவிட, இனங்களுக்கும் மதங்களுக்கும் எனக் காணப்படும் தனித்துவமான கட்சிகளும் அவை மத்தியிலுள்ள ஆட்சியை கட்டமைப்பதில் செலுத்தும் செல்வாக்கு பிரதான நெருக்கடியாகக் காணப்படுகிறது. அதனால் அதனை சரிசெய்வதும் கையாள்வதும் புதிய அரசாங்கத்தின் பணியாகவுள்ளது.

நான்காவது, ஜனநாயகத்தின் அங்கங்களாக அமைந்துள்ள அரசியல், சமூக, பொருளாதார குறிகாட்டிகளை மலேசியாவில் ஏற்படுத்துவது அவசியமான விடயமாக தெரிகிறது. அதனை நடைமுறைப்படுத்துவதில் சுதேச வடிவங்களும் மத அடையாளங்களும் பெரும் தடையாக அமைந்துள்ளன. அவற்றைத் தகர்த்து மலேசியாவின் இருப்பில் மாற்றத்தை சாத்தியப்படுத்த முடியுமா என்பது பிரதான கேள்வியாகும். காரணம் தென் மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் தனிக்கட்சியின் ஆதிக்கம் தனிமனித சர்வாதிகாரத்தின் முதன்மை தேர்தல் மூலமான சர்வாதிகார ஆட்சியின் வடிவங்கள் என பலவிடயங்கள் முதன்மையானதாக காணப்படுகிறது. அதாவது பொருளாதார வளர்ச்சிக்கும் சட்ட ஒழுங்குக்கும் சர்வாதிகாரத் தலைமைத்துவமே பொருத்தமானது என்ற வாதத்தை இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து என்பன 2000 ஆம் ஆண்டுவரை வெற்றிகரமாக செயல்பட்டு ஆட்சியதிகாரத்தை செலுத்தியதன் மூலம் நிரூபித்தன. ஆனால் அனைத்து ஆட்சியும் இருபத்தியோராம் நூற்றாண்டு அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது அதிக நெருக்கடிக்குள்ளாகின. ஆனால் அந்த நாடுகளது பொருளாதார இருப்பானது தனிமனித அல்லது கட்சி சர்வாதிகாரத்தால் வடிவமைக்கப்பட்டதென்பதை நிராகரித்துவிட முடியாது. அதற்கு புவிசார் அரசியலும் பௌத்த மற்றும் இஸ்லாம் மதங்களின் அடிப்படைகளும் காரணமாகக் கொள்ள முடியும். அதனோடு அப்பிராந்தியம் சோசலிஸத்தினதோ அல்லது சீனா, சோவியத்தினதோ செல்வாக்கு வலயமாகிவிடக் கூடாது என்பதன் பிரதிபலிப்பாகவும் அத்தகைய பொருளாதார செழிப்பும் சாத்தியமானது. அதனால் மேற்குலகம் தனிமனித மற்றும் தனிக்கட்சி சர்வாதிகாரத்தை அங்கீகரித்திருந்தது.

எனவே மலேசிய அரசியலில் ஏற்பட்டுவரும் தொங்கு பாராளுமன்றமும் உறுப்பாடற்ற அரசாங்க அமைப்பும் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளதா அல்லது நிரந்தரமாக தடுக்கப்பட்டுள்ளதா என்பது அன்வரது அரசியல் நகர்வுகளிலேயே தங்கியுள்ளது. அன்வர் நீண்ட அனுபவம் கொண்ட அரசியல்வாதி என்பதை மறுக்க முடியாது. அதனால் மாற்றத்தை இலகுவில் சாத்தியப்படுத்த வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் தற்போது எழுந்துள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஒழுங்கில் காணப்படும் மாற்றங்களும் மலேசியாவின் உறுதியான அரசாங்கத்தை மட்டுமல்ல மலேசியாவின் அரசியலையும் தீர்மானிக்கும் விடயமாகவே அமைய வாய்ப்புள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)