June 23, 2024
அரசியல் கட்டுரைகள்

இந்திய அரசியலில் நரேந்திரமோடியின் ஆட்சி நீடிப்பும் இலங்கை அரசியல் தலைவர்களின் உத்திகளும்!

இந்தியத் தேர்தல் முடிபுகள் 04.06.2024 வெளியாகியது. அதன்பிரகாரம் பாரதீய ஜனதாக் கட்சி தனித்து 240 ஆசங்களை பெற்றதோடு அதன் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் 293 ஆசனங்களை கொண்டுள்ளதால் ஆட்சியமைக்கும் உரிமையைக் கோரியுள்ளது. இதன்படி நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அமையவுள்ளது. மூன்றாவது தடவையாக நரேந்திர மோடி பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜவகர்லால் நேருவுக்கு பின்னர் மூன்றாவது தடவை பிரதமராக நரேந்திர மோடியே பதவி வகிக்கப் போவது குறிப்பிடத்தக்கதாகும் அதே நேரம் அனைத்து கருத்துக்கணிப்பையும் கடந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 ஆசனங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா ஒரு பிராந்திய அரசாக மட்டுமல்லாது உலகளாவிய அரசாகவும் தற்போது பொருளாதாரத்தில் வலுவான சக்தியாகவும் எழுச்சியடைந்துவரும் நிலையில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் ஆட்சியமைக்கும் தகுதியைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இச்சந்தர்பத்திலேயே இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள நீட்சி இலங்கைக்கு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள இக்கட்டுரை முயலுகிறது.

இந்தியாவின் தேர்தல் முடிபுகள் வெளியான போது நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி சாத்தியமாகும் நிலையில் இலங்கைத் தலைவர்கள் வெளிப்படுத்திய வாழ்த்துச் செய்திகள் ஈழத்தமிழர்களும் அதன் அரசியல் வாதிகளும் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

இலங்கையின் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா பிரதமர் நரேந்திர மோடியின் பதியேற்பு விழாவில் (09.06.2024) நேரடியாக பங்கேற்க புதுடில்லி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எப்போது அயல்நாட்டில் ஒரு தலைவரது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பதுவும் அழைப்பை ஏற்று கலந்துகொள்வதுவும் வழமையான அரசியலாகும். ஆனால் இலங்கை-இந்திய உறவில் கடந்தகால வரலாற்றோடு அவதானிக்கும் போது தற்போதுள்ள நிலமை அதிகம் இந்தியாவை முதன்மைப்படுத்தும் போக்கும் மறுபக்கத்தில் கூட்டாக தென் இலங்கைதம் தலைவர்கள் செயல்படும் நிலையும் அவதானிக்க் கூடியதாக உள்ளது. ரணில்விக்கிரமசிங்ஹா தனது வாழ்த்துச் செய்தியில் இந்த வெற்றி நரேந்திர மோடி தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது எனவும் நெருங்கிய அயல்நாடான இலங்கை இந்தியாவுடன் கூட்டுறவை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து நரேந்திர மோடி இந்திய-இலங்கை பொருளாதார கூட்டுறவில் எங்களது தொடர்ச்சியான ஒத்துழைப்பு நிலவும் எனத் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி எதிர்கட்சித் தலைவர் சஜித்பிறேமதாஸா, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.இவற்றுக்கு பதிலளித்த மோடி இலங்கையுடனான உறவு சிறப்பானது மற்றும் தனித்துவமானது மட்டுமன்றி சகோதரத்துவமானது என்றார். மகிந்த ராஜபக்ஷவை நண்பர் எனவிழித்த மோடி இந்திய-இலங்கை கூட்டாண்மையின் எல்லைகளை பட்டியல்படுத்தும் போது உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் என்றார். முன்னாள் இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவிக்கும் போது இலங்கையுடனான உறவு விசேடமானவை. மேலும் அதனை ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம் எனக்குறிப்பிட்டிருந்தார்.

ஏனைய நாட்டுத் தலைவர்களைவிட இலங்கைத் தலைவர்கள் இந்தியாவுடனும் அதிலும் குறிப்பாக நரேந்திர மோடியுடனும் நெருக்கமான நட்பினை பாராட்ட அதிகம் முனைவதைக் கண்டு கொள்ள முடிகிறது. அதற்கான காரணங்களை விளங்கிக் கொள்டவது அவசியமானது.

முதலாவது, நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு பலமான பொருளாதார வளர்ச்சியை தொட்டுள்ளது. பிராந்திய ரீதியில் எந்த அரசாலும் எட்டமுடியாத வளர்ச்சியை இந்திய அடைந்துள்ளது. இந்தியா பிராந்தியத்தை கடந்து உலகப் பொருளாதாரத்திலும் இணையான அனுசரணையை அடைந்துள்ளது. அதனால் எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதா நிலை வலுவானதாக அமையும் என்பதுடன் இயல்நாடுகளது பொருளாதார இருப்பை பாதுகாப்பதிஜல் இந்தியாவுக்கு பங்குள்ளதாகவே தெரிகிறது. கடந்தகாலத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொள்ளவைத்ததில் இந்தியாவுக்கு முக்கிய பங்கிருந்தது. அதற்’கு நன்றி தெரிவிப்பதன் மூலம் அரசியலை இலங்கைத் தலைவர்கள் வளர்த்துள்ளனர். இந்தியாவுக்கும் அத்தகைய நட்புறவு அவசியமானதாக உள்ளது. இலங்கையின் பொருளாதார மற்றும் கொவிட்-19 நெருக்கடிக்கு பின்னர் இலங்கை ஆட்சியாளரிடம் ஏற்பட்டுள்ள ஓர் அரசியலாக நன்றி அரசியல் மாறியுள்ளது. அத்தகைய சரணடைதல் என்பதை இந்தியாவிடம் மேற்கொள்வதென்றும் தென் இலங்கைக்கு புதியதல்ல. ஆனால் அவர்கள் அத்தகைய அரசியலை தலைகீழாக மாற்றவும் தயங்குவதில்லை என்பது கடந்தகால் அனுபவமாகவே உள்ளது.

இரண்டு, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாது அரசியல் ரீதியிலும் பிராந்திய நாடுகள் மீதும் அதிகமான செல்வாக்கினை மேற்கொள்வதில் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா முக்கியம் வகிக்கின்றது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை நோக்கி நகரும் (2024) நிலையில் அதன் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய நாடாகவும் தலைவராகவும் நரேந்திர மோடி காணப்படுகிறார். கடந்தகாலத்தில் (2015) அத்தகைய நகர்வை அமெரிக்காவுடன் இணைந்து நகர்த்தியது நினைவு கொள்ளத்தக்கது. இவற்றைக் கவனத்தில் கொண்டு இலங்கைத் தலைவர்கள் இந்தியாவை நோக்கிய கரிசனையை வெளிப்படுத்துகின்றனர். அடுத்த ஜனாதிபதி பதவியை அடைவதில் கவனம் கொண்டுள்ள தலைவர்கள் மட்டுமல்லாது எதிர்கால அரசியல் இருப்பினை பாதுகாக்க முயலும் தலைவர்களும் இந்தியா நோக்கி நகர்கின்றனர்.

மூன்று, அறுதிப் பெரும்பான்மையில்லா நரேந்திர மோடி அரசாங்கத்துடன் உரையாடித் தீர்வுகளை எட்டமுடியும் என்ற நோக்கிலும் இலங்கைத் தலைவர்கள் மோடியை அணுக முயலுகின்றனர். குறிப்பாக இலங்கை இந்தியாவிடம் பொருளாதார அடிப்படையிலான உறவுகளில் அதிகம் தங்கியிருக்கின்றது. அதனால் இந்தியாவுக்கு கட்டுப்டபடுவதென்பது இயல்பான விடயமாகவே அமையும். ஆனால் கூட்டணி ஆட்சியில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான ஒத்துழைப்பாக அத்தகைய பொருளாதமார உறவை கையாள முடியுமென்ற உத்தியுடன் இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை அணுகமுயலுகின்றனர். அதற்கான ஒரு கூட்டுத்தயாரிப்பையே இலங்கைத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் தமக்கிடையே அதிக முரண்பாடுடையதாக வெளிப்படுத்தினாலும் தேசிய விடயங்களில் ஒன்றாக பயணிப்பதில் தென் இலங்கைத் தலைவர்கள் முனைப்புக் கொண்டுள்ளனர். தென் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களும் அச்சமும் ஊட்டப்படும் போது ஆட்சியாளர்கள் கவனத்துடன் செயல்பட எத்தனிக்கின்றனர். குறிப்பாக இலங்கைத் தீவு இந்தியாவின் மாநிலமாக மாறுகின்றது என்ற உரையாடல் தென் இலங்கையின் அரசியல் உரையாடலாக உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் அத்தகைய நிலையை பொருளாதார அர்த்தத்தில் எட்டிவிட்டதாக விமர்சனங்கள் உண்டு.இதனை கருத்தில் கொண்டே தென் இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை கையாள முனைகின்றனர். அத்தகைய முயற்சி மோடி பலவீனமாக உள்ள சந்தர்ப்பத்தில் சாத்தியமாக்க முடியுமென்பதே தென் இலங்கையின் அனுபவமாகும்.

நான்கு, இந்தியா பொறுத்து இலங்கையின் இனப்பிரச்சினையும் வடக்கு கிழக்கும் முக்கியமான நோக்காக தென் இலங்கைக்கு உண்டு. அதனை நரேந்திர மோடி அரசு தமிழ் மக்களது அபிலாசைக்குள் தீர்த்துவிடாது தடுப்பதென்பது இந்தியாவுடனான நெருக்கத்திலேயே தங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொண்டுள்ளனர். இந்தியாவுடன் எவ்வளவுக்கு நெருக்கமாக இருக்க முடியுமோ அவ்வளவுக்கு இந்தியா இலங்கைக்கு கட்டுப்பட்டு செயல்படும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். அதனை தந்திரமாக அல்லது உத்தியாக தென் இலங்கை கொண்டுள்ளது. கடந்தகாலம் முழுவதும் தென் இலங்கையின் நகர்வுக்குகளுக்கு பின்னால் அத்தகைபய உத்தியே காணப்பட்டது. எந்தச் சூழலிலும் இந்திய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுடன் நெருங்கிவிடக் கூடாது என்பதில் கவனமும் கரிசனையும் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு. அதற்காக எதனையும் இழப்பது போல் காட்டிக் கொள்ளக்கூடியவர்கள்.

இதில் தமிழ் அரசியல்வாதிகளது பக்கம் எப்படியானது என்பதும் விளங்கிக் கொள்வது அவசியம். இக்கட்டுரை எழுதப்படும் வரை நரேந்திர மோடியை வாழ்த்தி ஏதாவது ஒரு தமிழ் அரசியல்வாதி வாழ்த்து தெரிவித்ததாக தெரியவில்லை. அத்தகைய செய்திகள் எதுவும் ஊடகத்திற்கு பரப்பப்படவுமில்லை. அந்தளவுக்கு தமிழ் அரசியலின் வங்குரோத்துத்தனம் உள்ளது. உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனத்தின் அரசியல் நட்புக்களையும் உறவுகளையும் வளர்ப்பதே அதற்கு பாதுகாப்பானது. தனிப்பட்ட கருத்துநிலை வேறு இனத்தின் இருப்புக்கான பலம் வேறு. அதனைப் புரிந்து கொள்ளாதவரை ஈழத்தமிழரது அரசியல் இருப்பு எத்தகைய மாறுதலையும் எட்டப்போவதில்லை. இருபத்தியோராம் நூற்றாண்டு உலகம் பொருளாதார ஒத்துழைப்பினால் கட்டுகிற அரசியலை முதன்மைப்படுத்துகிறது. அத்தகைய கட்டமைப்பில் நட்பும் கூட்டுக்களும் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமானது. அதனை அடைவதே இனத்தின் பாதுகாப்புக்கு உகந்ததாகும். அதிலும் பலவீனமானதும் நெருக்கடிக்குள்ளும் இருக்கும் தேசிய இனத்தின் இருப்பு பொருளாதாரத்தால் கட்டமுடியாது விட்டாலும் அரசியல் ஒத்துழைப்பினால் கட்டியெழுப்ப முடியும் என்பதே பிறதேசியங்களது அனுபவமாக தெரிகிறது.

-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)