April 30, 2026
அரசியல் கட்டுரைகள்

நேபாளிய இளையோர் கிளர்ச்சியும் தென்னாசிய அனுபவமும்?

தென்னாசிய நாடான நேபாளத்தில் நிகழ்ந்திருக்கும் இளைய தலைமுறையின் (Gen-z- the generation born approximately between the late 1990s and early 2010s) கிளர்ச்சி மீண்டும் பிராந்திய ரீதியான மாற்றத்தை நோக்கிய எண்ணத்தை விதைத்துள்ளது. அரசியல் ரீதியில் இலங்கை தொடங்கி வைத்த இளம்தலைமுறையினரின் எழுச்சி பங்களாதேஷ், நேபாளம் என விரிவடைகிறது. இது ஏனைய தென்னாசிய நாடுகளுக்கும் ஒரு பாடமாக அமையும் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்திருக்கிறது. மரபுகளோடும் பாரம்பரியங்களோடும் உலகிலேயே இந்துத்துவ நாடு என்ற அடையாளப்படுத்தப்பட்ட நாட்டின் மாணவர்களின் எழுச்சி கடந்தகாலத்தில் மாவோஸ்ட்டுகளின் புரட்சி முடியாட்சி பாரம்பரியத்துக்கு சவால் விட்டது போல் அத்தகைய முடியாட்சியின் எச்சங்களை நேபாளிய இளம் தலைமுறை தோற்கடிக்க முயன்றுள்ளது. இக்கட்டுரையும் நேபாளி மாணவர்களின் கிளர்ச்சி ஏற்படுத்தியுள்ள விளைவுகளைத் தேடுவதாக உள்ளது.

2020ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க மண்ணில் கருப்பு இனத்தவர் ஒருவரை (George Floyd) வெள்ளையின பொலீசார் (Derek Chauvin) தனது சப்பாத்துகால்களால் மிதித்து கொலை செய்த சம்பவத்தின் போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அத்தகைய நடவடிக்கைக்கு எதிராக கிளர்ச்சி பெற்ற மக்களின் போராட்டங்களை பற்றி குறிப்பிடுகின்றபோது பின்வருமாறு தெரிவித்தார்.

இந்த நாட்டின் முன்னேற்றத்தில் ஒவடவொரு அடியும் சுதந்திரத்தில் ஒவ்வொரு விரிவாக்கமும் எமது ஆழ்ந்த இலட்சியங்களில் ஒவ்வொரு வெளிப்பாடும் அவ்வப்போது காணப்பட்ட பழைய நிலைகளை நெருக்கடிக்குள்ளாக்கிய முயற்சிகள் மூலம் வென்றெடுக்கப்பட்டன என குறிப்பிட்டார். அதாவது அமெரிக்க ஜனநாயகம் கிளர்ச்சிகளாலும் புரட்சிகளாலும் போராட்டங்களாலும் கட்டமைக்கப்பட்டது. கறுப்பினத்தவர்களின் அதிக பேராட்டங்கனள் அமெரிக்க ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தியது என்ற புரிதலை ஏற்படுத்தினார். அதனையே நேபாள இளம்தலைமுறை Gen-z என்று அழைக்கப்படும் தரப்பு கிளர்ச்சியை நிகழ்த்தி இருக்கிறது. அந்த கிளர்ச்சியின் உள்ளடக்கங்களை பார்த்தால் இளம் தலைமுறையினர் எண்ணங்களின் பிரதிபலிப்புகள் உணர்ச்சிகள் சாத்தியமற்றவற்றை சாத்தியமாக்குவது பற்றிய புரிதலாக காணப்படுகிறது. அதன் விளைவுகள் பழைமையான அரச கட்டமைப்புக்குள் பணியாற்றிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சுகீலா கார்கி (Sukila Karki) தற்காலிக பிரதமராக் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார். நேபாளின் முதல் பெண் பிரதமர். இத்தகைய நேபாளிய இளம்தலைமுறையின் கிளர்ச்சி பற்றி ஆழமான புரிதல் அவசியமானது.

நேபாளம் இந்துத்துவ நாடாகவும் வறிய நாடாகவும் இந்திய-சீன எல்லைகளால் அதிகம் பங்கிரப்பட்ட நாடாகவும் காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் வறுமை, வேலையின்மை, சமூகத்தின் உறுதியற்ற தன்மை, ஏற்றத்தாழ்வு என பாரிய நெருக்கடிகளை கொண்ட நாடாகவும் இந்தியாவோடு அதீதமான தரைத் தொடர்புகளை புவியியல் ரீதியாகவும் ஆரம்பகாலத்தில் அரசியல் ரீதியாகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த நாடு. முடியாட்சியினுடைய சரிவுக்கு பின்னர் அந்த நாடு சீன சார்பு நிலைக்குள் மவோஸ்டுகளின் எழுச்சியை அடுத்து நகர்ந்துள்ளது. மாவோஸ்டுகளின் புரட்சியின் போது இந்திய-சீன தலையீடு பற்றியும் அதற்கான இழுபறி பற்றியும் அதிகம் உரையாடப்பட்டது. ஆனால் புவிசார் அரசியல் ரீதியில் அரசியல்-பொருளாதார கொள்கை ரீதியில் இந்தியாவுடன் அதிக நெருக்கம் பேணுகிறது. நாணய பரிமாற்ற செய்முறைகளில் இந்தியாவோடு பிணைக்கப்பட்டு இருக்கும் ஒரு நாடாகவே காணப்படுகிறது. நேபாளத்தின் உள்நாட்டு கட்டமைப்புகளையும் பொருளாதார அடிப்படைகளையும் அரசியல் ரீதியான மாற்றங்களையும் மாவோஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் ஒரு காலப்பகுதியில் அதீதமான தலையிட்டை மேற்கொண்டு மாற்றங்களை சாத்தியப்படுத்தியது. ஆனால் அதன் எழுச்சி வளர்ச்சிகரமான நிலைக்கு அந்த நாட்டை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதுவே அந்த நாட்டின் அடிப்படை நிலையாகும்.

இரண்டாவது நேபாளி அரசாங்கம் சமூக வலைத்தளங்களையும் அதற்கு உரித்தான பல அமைப்புகளை தடை செய்ததன் விளைவாக இப் போராட்டம் எழுச்சி பெற்றதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் அது ஒரு உந்துதலே அன்றி அடிப்படையில் நேபாள இளம்தலைமுறையின் பொருளாதார நெருக்கடி வேலையின்மை வறுமை சமூக நலத் திட்டங்களின் தோல்விகரமான அரச கொள்கைகள் உறுதியற்ற ஆட்சியின் போக்கு என்பன இளம் தலைமுறையினரை பாதித்ததோடு ஊழலை மேற்கொண்ட ஆட்சியாளரை அகற்ற வேண்டும் என்ற இலக்கு அவர்களிடம் காணப்பட்டது. ஆட்சியாளரின் நடத்தை இளையோரின் எதிர்காலம் பற்றி கேள்வியை ஏற்படுத்த தொடங்கியது. இத்தகைய குமுறல்களின் வெளிப்பாடாகவே கிளர்ச்சி சாத்தியமானது.

மூன்றாவது ஆட்சியாளர்கள் மீதும் அரசாங்கத்தின் மீதும் இளம்தலைமுறை கொண்ட கோபமானது நேபாளத்தில் வளர்ந்திருந்த நெப்போட்டிசத்தின் (Nepotism) கொடுமையான அணுகுமுறைக்கு எதிரானதாகவே நோக்கப்பட வேண்டும். இது ஆட்சியாளர்களின் இரத்த உறவுகளதும், உறவுகளதும், நண்பர்களதும், இணைந்திருக்கும் தரப்புக்களதும் அதிகாரத்தின் பங்கீட்டைக் குறிப்பதாகும். 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் உறுதியற்ற ஆட்சி முறையிலேயே கண்டுகொள்ள முடிந்தது. ஏறக்குறைய 15 வருடங்களில் 14 அரசாங்கங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளனர். அது மட்டுமின்றி ஆட்சியாளர்களின் குடும்பங்கள் அவற்றின் உறவினர்கள் நண்பர்கள் ஆட்சி அதிகாரத்தில் சலுகைகளையும் வாய்ப்புகளையும் அனுபவித்துக் கொண்டு நேபாளத்திற்கு வெளியே உள்ள நாடுகளில் சுகபோகமான வாழ்க்கை பங்கீடு செய்து கொண்டனர். இத்தகைய நெப்போட்டிச அரசாட்சி முறையே காணப்பட்டது. இத்தகைய மனோநிலை ஆட்சிக்கு வந்த அனைவரையும் பீடித்ததோடு தேசத்தை மக்களை எத்தகைய கவனமும் கொள்ளாது தமது இரத்த உறவுகள், உறவுகள், நண்பர்கள் என்ற ஒரு பாதுகாப்பு அரணைக் கொண்டு அல்லது அத்தகைய தரப்புக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு ஆட்சி பாதுகாக்கும் வடிவமே காணப்பட்டது. இதனை சமூக வலைத்தளங்களுக்கு ஊடாக இளம் தலைமுறை பகிர்ந்து கொண்டதன் பிரதிபலிப்பே போராட்ட வளர்ச்சிக்கு பின்னால் இருந்த வலிமையான காரணம் என்ற விவாதம் முதன்மைப்படுத்தப்படுகிறது. இது ஒரு அபாயகரமான நிலையை அதேசத்தின் பாதிக்கப்பட்ட தரப்பு எழுச்சி பெறுவதற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டு அரபிய வசந்தம் போன்று இளம் தலைமுறையினரின் வசந்தம் ஒன்றுக்கான எழுச்சி நிகழ்துள்து. தெனாசிய நாடுகளில் நிகழ்ந்து வரும் அனைத்து கிளர்ச்சிகளுக்கும் பின்னால் இளம் தலைமுறையினரின் எழுச்சி அரசியலில் ஏற்படுகிறது. அத்தகைய இளையோர் வசந்தம் தென்னாசியா முழுவதும் மாற்றத்திற்கான கோரிக்கையை முன் நகர்த்துவதில் கவனம் கொண்டுள்ளது. இது எஞ்சியிருக்கும் ஏனைய தென்னாசிய நாடுகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்கின்றது.

நான்காவது, இளம் தலைமுறையினரின்; கிளர்ச்சியானது நேபாளிய ஆட்சியாளர்களை விரட்டி அடித்துள்ளமை யதார்த்தமானதென்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆட்சியாளர் மீதான தீவிர வெளிபாடு கிளர்ச்சியின் நீடித்த திட்டமிடலற்று போக்கினைக் காட்டுகிறது. காரணம் கிளர்ச்சிக்கு பின்னர் எத்தகைய அணுகுமுறையில் செயல்படுவதென்ற எண்ணம் கிளர்ச்சியை முன்னெடுத்தவர்களிடம் காணவில்லை. அதனால் நேபாளம் அடைய வேண்டியதை அடைய முடியவில்லை. மாறாக ஆட்சி மாற்றமும் தலைமை மாற்றமும் சிறந்த ஆளுகை உள்ள தலைமையும் அவசியமென்ற விவாதமே அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சியாளர்களை விரட்டுவது மட்டுமன்றி அவர்களை அழித்தொழிப்பது என்பதே கிளர்ச்சியாளர்களிடம் காணப்பட்டது. இறுதியில் நேபாளிய சட்ட வரைவுகளுக்குள் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்த ஒருவரை மீளவும் ஆட்சியாளராக நியமித்திருக்கும் துயரம் இளம் தலைமுறையினரின் கிளர்ச்சியின் பலவீனத்தை அல்லது அது ஒரு புரட்சி அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் அரசியல் ரீதியில் அதிக பின்னடைவை சந்திக்கும் துயரத்தை அனுபவித்துக் கொண்டனர். இதனையே மாவோஸ்டுக்களும் கடந்த காலத்தில் ஏற்படுத்தியிருந்தனர். மாவோஸ்டுகளால் கட்டி எழுப்பப்பட்ட அரசியலின் வறுமையை Gen-Z யாளரின் எழுச்சிக்கு பின்னால் இருந்த காரணமாகும். இதுவே இலங்கை தீவிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜே.வி.பி. இன் அரசாங்கம் மாவோயிஸ்டுகளின் அரசியல் பிரவேசம் போன்றே அடையாளப்படுத்தப்படுகிறது. அத்தகைய இடதுசாரி மரபோடு இருந்த ஜே.வி.பி. தனக்கு உரித்தான மரபுகளை விடுத்து ஏகாதிபத்திய மனோநிலை கொண்டவர்களை பின்பற்றுமாக இருந்தால் Gen-Z போன்ற கிளர்ச்சிகளை அடுத்து வரும் தசாப்தங்களில் அல்லது அதற்கு குறுகிய காலத்தில் இலங்கைத் தீவு அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது அனைத்து தெனாசிய நாடுகளுக்கும் பாடமாக அமைதல் வேண்டும்.

ஐந்தாவது, கிளர்ச்சியில் திட்டமிடலோ அணுகுமுறைகளோ உத்திகளோ அதிகம் இருந்ததாக தென்படவில்லை. கிளர்ச்சியாளர்களின் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறை பலவீனமாக இருக்கும் உள்நாட்டு கட்டமைப்பு அனைத்தும் தகர்ந்து போய் இருக்கின்றது. அதனை மீளச் சரி செய்வது என்பது நீண்ட காலப் பகுதி நேபாளத்துக்கு தேவைப்படும். நேபாள இளைஞர்கள் கருதுவது போன்று ஒரு தேசத்தின் உட்கட்டமைப்பு முறையின் வளர்ச்சியே அதன் பொருளாதார எழுச்சிக்கான பிரதான அடிப்படை என்பதை கிளர்ச்சியாளர்கள் உணர தவறியுள்ளனர். இதனை இலங்கையில் நிகழ்ந்த கிளர்ச்சியின் போது அதிகமாக கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் பங்களாதேஷிலும் நேபாளத்திலும் தமது நாடுகளின் உட்கட்டமைப்பு முறைகளையும் அதன் சொத்துக்களையும் சேதப்படுத்துவதில் அவர்களது உணர்ச்சி மேலோங்கி இருந்தது. அது பங்களாதேiஷவிடவும் நேபாளத்தில் அதீதமாக காணப்பட்டது. நேபாளம் போன்ற நாடுகளின் உட்கட்டமைப்பு என்பது வெளிநாட்டு முதலீடுகளாலும் வெளிநாடுகளில் பொருளாதார உதவிகளாலும் கட்டமைக்கப்பட்டமை. அதனை தகர்ப்பது என்பது அதனை மீளமைப்பதற்கான காலத்தை அதிகப்படுத்தும். இளம் தலைமுறையினரின் கிளர்ச்சிகளின் மிகப் பிரதான பலவீன அல்லது திட்டமிடப்படாத கிளர்ச்சிகளின் பலவீனம் அல்லது தூர நோக்கற்ற கிளர்ச்சிகளின் பலவீனம் இவ்வகையானதாகவே காணப்படுகிறது.

எனவே இளையோரின் வசந்தம் (Gen-Spring) எனும் கிளர்ச்சி மூலம் நேபாள அரசியலை மாற்றத்துக்கு உள்ளாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய மாற்றம் தலைமுறையினரின் பங்களிப்போடு நிகழ்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படுத்த முடியாதுள்ளது. சமூக வலைத்தளங்களை இலக்காகக் கொண்டு எழுச்சிகள் நிகழ்த்தப்படுகின்ற போது அதன் பின்னால் உள்ள ஆபத்துக்களையும் விளைவுகளையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நேபாளிய கிளர்ச்சி ஆட்சியாளரை விரட்டியுள்ளது. ஆனால் ஊறிப்போன நேபாளிய மத, வர்க்க நலன்களுக்குள் மீளவும் அகப்படாத வகையில் மாற்றங்களை நோக்கி நகர்வது Gen-Zன் வெற்றிகரமான அணுகுமுறையாக அமையும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)