அரசியல் கட்டுரைகள்

புதுடில்லி குண்டுவெடிப்பும் இந்திய-பாகிஸ்தான போர் பதற்றமும்?

1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் பகைமை கொண்ட நாடுகளாகவே நகர்ந்துள்ளன. இரு நாடுகளும் பாரிய போர்களையும் வன்முறைகளையும் பரஸ்பரம் தாக்குதல்களையும் நிகழ்த்தியிருந்தன. அத்தகைய இயல்பை தொடரும் நடவடிக்கைகள் மீளவும் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. இந்தியாவின் பாதுகாப்பு முழுவதுமே பாகிஸ்தானை எதிர்கொள்வது போன்று பாகிஸ்தான் இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அண்மையில் (10.11.2025) இந்தியத் தலைநகர் புதுடில்லியின் இருதயப் பகுதியான செங்கோட்டையின் புகையிரதப் நிலையத்திற்கு அருகாமையில் மக்கள் நடமாட்டம் கூடிய இடத்தில் நிகழ்ந்த கார்க் குண்டுவெடிப்பில் ஏற்பட்டவிளைவுகள் இருநாட்டுக்கும் இடையிலான பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது. புதுடில்லி தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் (08.11.2025) பாகிஸ்தான்; தலைநகரான இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல் ஒன்றின் 12 பெர் கொல்லப்பட்டனர். அதனை அடுத்து புதுடில்லி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இக்கட்டுரையும் இருநாட்டுக்கும் இடையில் நிலவும் பதற்றத்தின் பின்னணியை போருக்கான வாய்ப்புக்களையும் தேடமுயலுகிறது.

இந்திய-பாகிஸ்தான் தலைநகரங்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களின் பிரதிபலிப்புகள் இரு நாடுகளும் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டதோடு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகிறன. இஸ்லாமாபாத் குண்டு வெடிப்புக்கு இந்தியாவே காரணம் என்றும் புதுடில்லி குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் காரணம் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் (2025) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிகழ்ந்த போர் முடிவுக்கு வந்த பின்னர் இரு நாடுகளிலும் நிலவும் போருக்கான தயார்படுத்தலும் அதற்கான கொதி நிலையையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. தாக்குதல்கள் இருதரப்பையும் அச்சுறுத்தி இருப்பதோடு பாகிஸ்தான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போர் சூழல் என்பது தென்னாசியாவில் மீளவும் ஒரு நெருக்கடிக்குள் கொண்டு செல்ல திட்டமிடுவதாக தெரிகின்றது. இத்தகைய இருதரப்பினரதும் தாக்குதல்களுக்கும் உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது முக்கியமானதாகும். குறிப்பாக சீனா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் தாக்குதல் தொடர்பாக அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளன. மீண்டும் ஒரு போருக்குரிய சூழல் ஏற்படுமா என்ற எச்சரிக்கையை ஐக்கிய நாடு சபையின் பொதுச் செயலாளர் அன்ரெனியோ குட்ரெஸ் வெளிப்படுத்தியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் இத்தகைய போர் பதற்றம் அதிகரித்து வருவதற்கான காரணங்களை தேடுதல் அவசியமானது. அதனை விரிவாக நோக்குவோம்.

முதலாவது கடந்த மே மாதம் நான்கு நாள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிகழ்ந்த குறுகிய காலப்பகுதி போரில் பாகிஸ்தான் அதிகமான வெற்றிகளை அடைந்திருப்பதாக இந்திய இராணுவ ஆய்வாரள்களும் மற்றும் புலனாய்வு தரப்புகள் குறிப்பிட்டிருந்தன. அதனை பாகிஸ்தான அதீதமாக முதன்மைப்படுத்தியிருந்தது. அக்காலபகுதியிலிருந்து இந்தியா பாகிஸ்தான் மீது தொடர்ச்சியான வெறுப்பு உரையாடல்களையும் போருக்குரிய தயார்படுத்தல்களையும் மேற்கொண்டு வந்துள்ளது. இரு தரப்பும் வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு இருந்தன என்பது அதன் அணுகுமுறைகள் உணர்த்தி இருக்கிறன. குறிப்பாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து பயங்கரவாதிகளின் தாக்குதல் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது ஏற்படுத்தப்பட்டதிலிருந்து அதற்கான பதிலை வழங்குவதில் இந்தியா கவனம் கொண்டிருந்தது. இதேபோன்று பல சந்தர்ப்பங்களில் புதுடெல்லி நகரில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்ந்தியிருந்ததைக் கண்டுகொள்ள முடிகிறது. 2000 ஆம் ஆண்டு டிசம்பர் காலப்பகுதியில் புதுடில்லி செங்கோட்டைக்கு அண்மையில் சுற்றுலா தளத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பாரிய தாக்குதலில் மூன்று சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலைக் பாகிஸ்தானில் இயங்கும் லக்ஷரீப்-ஈ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. 2011 டிசம்பரில் ஜெய்ஷ்-ஈ-முகமது அமைப்பின் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து நிகழ்த்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இது பாகிஸ்தானுடன் இந்தியா பெரிய இராணுவ மோதலுக்கு வழிவகுத்தது. 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் நெரிசல் உள்ள புதுடில்லியின் பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் ஒரே நேரத்தில் மூன்று குண்டு வெடிப்புகள் தொடராக நிகழ்த்தப்பட்ட போது 70 பேர் கொல்லப்பட்டதுடன் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். லக்ஷரி-ஈ-தொய்பா அமைப்பு மேற்கொண்டதாக தெரியவந்தது. 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மத நிகழ்வொன்றிலும் சனநடமாட்டம் அதிகமான சந்தை பகுதியில் இடம்பெற்ற ஐந்து ஒருங்கிணைந்த குண்டு வெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்ததும் இந்தியாவில் இயங்கும் முயாப்தீன் பிரிவு நிகழ்த்தியதென்றும் அததாக்குதலுக்கு பின்னர் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டு வெடிபில் மேலும் மூவர் கொல்லப்பட்டதும் புதுடில்லியில் நிகழ்ந்த நடவடிக்கைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைவிட 2011 செப்ரெம்பர் புதுடில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நிகழ்ந்த குண்டு வடிவில் 15 பேர் கொல்லப்பட்டவுடன் 12 பேருக்கு மேல் காயம் அடைந்திருந்தனர். இதனைகல்கத் ஹக்கெட்-அல்-ஜிஹாத் இஸ்லாமிய அமைப்பு மேற்கொண்டதாக தெரியவந்தது.

இரண்டாவது புதுடில்லிக்கு வெளியே இந்தியாவின் இதர பகுதிகளில் இவ்வாறு பாரிய தாக்குதல்கள் பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக மும்பாய் நகரத்தின் மையப்பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் 250 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் புகையிரதத்தில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 2006 செப்ரெம்பர் மகாராடிரா மாநிலத்தின் மலோஹான் பகுதியில் ஒரு மசூதி அருகே நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டனர். 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கரியான மாநிலத்தில் இந்தியாவை பாகிஸ்தானையும் இணைக்கும் புகையிரதத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மே 2008 ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் பகுதியில் ஒரு தொடர் குண்டு வெடிப்பில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் 17 குண்டுகள் வேறுபட்ட மேற்கு மாநில நகரங்களில் நிகழ்ந்த தாக்குதலில் 56 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நவம்பர் 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் 170 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவ்வாறு இந்தியா பாரிய நெருக்கடிகளை எதிர் கொள்கின்ற போது பதிலுக்கு போர் பற்றிய எண்ணத்தை அதிகம் வெளிப்படுத்த முயலுகிறது.

மூன்றாவது, இரு நாடுகளும் அணுவாத நாடுகள் என்ற அடிப்படையில் போருக்கான வாய்ப்புக்களை உலக நாடுகள் தடுத்து நிறுத்த முயலுகின்றன. இந்திய பாகிஸ்தான் போருக்கான அடிப்படை மத வேறுபாடு எனக் கூறிக் கொண்டாலும் பரஸ்பரம் பாதுகாப்பு அச்சுறுத்தலே அடிப்படையானதாக தெரிகிறது. எல்லையை மையப்படுத்தி நிகழும் அச்சுறுத்தலும் அதனூடாக நிகழ்ந்துவரும் பாதுகாப்புச் சார்ந்த நெருக்கடியுமே பிரதான காரணமாக காணப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக செயல்பட முடியாத சூழல் என்பது பரஸ்பரம் பாதுகாப்பு ரீதியாக எழுந்திருக்கும் எல்லை தகராறுகள் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் முதன்மையானவையாக விளங்குகின்றன. இவற்றுக்கான தீர்வு நோக்கிய சமாதானம் பற்றிய உரையாட முதன்மைப்படுத்தப்பட வேண்டியதாக தெரிகிறது.

எனவே வெளிப்படையாக பார்த்தான் இரு நாடுகளும் அணு ஆயுத பலத்தை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் போருக்கான வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படுவதாக இராணுவவாதிகள் குறிப்பிட முயலுகின்றனர். ஆனாலும் பிராந்தியரீதியான பதட்டமும் எச்சரிக்கைகளும் பரஸ்பரம் ஆபத்தான சூழலை நோக்கி தெனாசியா வடிவமைக்கப்படுகின்ற நிலை ஒன்றை காண முடிகிறது. தேன்னாசிய நாடுகளான இலங்கை வங்களாதேஷ; நேபாளம் போன்ற கொதிநிலை அரசியல் ஒன்றுக்கான சூழல் இந்திய பாகிஸ்தானிலும் ஏற்படக்கூடிய நிலையில் போருக்கான வாய்ப்புகள் பற்றி அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மே மாதத்தில் நிகழ்ந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலை அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இனியொரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் அதனை போர்ப் பிரகடனமாகவே கருதப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். அத்தகைய நிலையை நோக்கி இந்தியா செல்வதாகவும் பாகிஸ்தான் தயாராகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனாலும் தாக்குதல் ஒன்றுக்கான வாய்ப்பு உள்ளது என்பது மட்டுமே தற்போது தெரிகிறது. அதில் மீளவும் தற்கொலைத்தாக்குதலாகவோ அல்லது கார்க் குண்டுவெடிப்பாகவோ அமையலாம். அது போராக நிலைத்திருப்பது பிராந்திய சர்வதேச சக்திகளது கட்டுப்பாட்டில் உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)