அரசியல் கட்டுரைகள்

பாலஸ்தீனம் ஒரு தனித்தேசமாக அமைவதற்கான வாய்ப்புகள்?

2023ஆம் ஆண்டின் பின்னரையில் ஏற்பட்ட நீண்ட நெருக்கடியின் தொடர்ச்சியான இஸ்ரேல்-ஹமாஸ் போரின் வடிவம் நாளுக்கு நாள் வேறுபட்ட பரிணாமத்தை பெற்று வருகின்றது. ஆரம்ப நாட்களில் இஸ்ரேலை சுற்றி மேற்கு நாடுகளின் ஆதரவும், ஹமாஸை சுற்றி அரபு நாடுகளில் இயங்கிய போராட்டக் குழுக்களின் ஆதரவுகளுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. நீடிக்கும் போர் பாலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஆதரவுக்கான சூழலை கட்டமைத்து வருகின்றது. குறிப்பாக 2023ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை விவகாரத்தை தென்னாபிரிக்கா அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு நகர்த்தியுள்ளது. இதன் அரசியல் முக்கியத்துவத்தை கடந்த வாரம் இப்பகுதியில் உரையாடியிருந்தோம். இப்பின்னணியில் தற்போது சர்வதேச அரங்கில் பாலஸ்தீன ஆதரவு அலை ஒன்று எழுச்சி பெறுவதனை சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்கின்றனர். இக்கட்டுரை பாலஸ்தீனம் அரசு தொடர்பாக எழுச்சியுறும் சர்வதேச ஆதரவை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் இஸ்ரேல் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டு பாலஸ்தீனத்தின் சர்வதேச ஆதரவுக்கான முதன்மையான விடயமாக காணப்படுகின்றது. சர்வதேச நீதிமன்றம் அதிகாரமற்ற நீதித்துறை என்ற விமர்சனத்தை கொண்டுள்ள போதிலும், சர்வதேச ரீதியிலான அதிர்வலையை உருவாக்கக்கூடியதொரு களத்தை கொண்டுள்ளது. இதனை பாலஸ்தீன விவகாரத்தில் தெளிவாக அறியக்கூடியதாக அமைகின்றது. ஒக்டோபர்-07அன்று யூதர்களின் குடியேற்றங்கள் மீதான ஹமாஸின் தாக்குதiலை தொடர்ந்து காஸா நிலப்பரப்பில் 100 நாட்களை தாண்டி இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடம்பெற்று வருகின்றது. இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தைகள் உட்பட உயிர்களை இழந்துள்ளனர். எனினும் சர்வதேச அரங்கில் பாலஸ்தீன மக்களை பாதுகாப்பதற்கான வினைத்திறனான செயற்பாட்டை முன்னெடுத்திருக்க முடியவில்லை. அமெரிக்க தலைமையிலான மேற்கின் ஆதரவு தொடர்ச்சியாக இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதலுக்கு பலமான ஆதரவை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி வந்தது. இது பாலஸ்தீன மக்களின் உரிமைக்குரலை சர்வதேச அரங்கில் தடுத்திருந்தது. எனினும் சர்வதேச நீதிமன்றத்தில் பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் இனப்படுகொலையை அரங்கேற்றுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து பல நாடுகளும் தமது மௌனத்தை கலைத்து, பாலஸ்தீன மக்களின் நீதிக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

முதலாவது, மேற்கு ஆசியாவில் சமாதானத்தை உருவாக்குவது குறித்த உரையாடல் ஐரோப்பாவிலிருந்து வருகிறது. அங்கு பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்கள் மேற்கு ஆசியாவின் பிராந்தியத்தில் அமைதிக்காக தெருக்களில் குவிந்துள்ளனர். மேற்கு ஆசியா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் கொண்டுவருவதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என்று பிரஸ்ஸல்ஸில் நடந்த அணிவகுப்பாளர்கள் அழைப்பு விடுத்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்கள் போர்க்குற்றங்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் யூத-எதிர்ப்பு அல்லது இனவெறியை கண்டனம் செய்வதற்கும் அழைப்பு விடுத்தனர். அணிவகுப்பாளர்களின் இவ்அழைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றது. இனவாதம் மற்றும் யூத-விரோதத்தின் சட்டவிரோதம் மற்றும் அழிவுகரமான தன்மையை முன்னிலைப்படுத்துவதே பாலஸ்தீனர்களுக்கு பொருத்தமான நிரந்தரமான தீர்வுக்கான வழிவகையை ஏற்படுத்தக்கூடியதாகும். நாசிக்களின் இனவாத செயற்பாடுகளை பிரச்சாரப்படுத்தியே யூதர்களுக்கான இஸ்ரேல் எனும் தனித்தேசம் 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனியர்கள் தங்கள் இன அடையாளம் அல்லது கலாச்சாரத்தின் காரணமாக ஒருபோதும் பாகுபாடு காட்டக்கூடாது. அதேவேளை இஸ்ரேலியர்களுக்கும் அதுவே பொருத்தமானதாகும். அவ்வாறான சூழலே மேற்கு ஆசியாவின் அமைதிக்கும் வழிகோலக்கூடியதாகும். இவ்வாறான சூழமைவை தொகுத்தே மேற்கு ஆசியாவின் அமைதியை கோரி ஐரோப்பிய மக்களிடையே வலுவான கருத்தியல் எழுச்சி பெற்று வருகின்றது. இதனை வெளிப்படுத்தும் வகையில் மேற்காசிய மோதலில் ஐரோப்பிய அரசியல் இருகூறாக்கப்பட்டுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஸ்பெயினின் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள சிறுபான்மை இடதுசாரி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளன. ஸ்லோவேனியா பாலஸ்தீன உரிமைகள் கொதாடர்பான சர்வதேச நீதிமன்ற வழக்கு ஒன்றில் சாட்சியமாக ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. பெல்ஜிய அரசாங்கம் தென்னாபிரிக்க வழக்குக்கு ஆதரவு வழங்கியுள்ளது. இம்மாற்றங்கள் ஐரோப்பாவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டையே உறுதி செய்கின்றது.

இரண்டாவது, கடந்த ஜனவரி-20அன்று உகண்டாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிலும் இஸ்ரேலின் செயற்பாடுகளை கண்டிப்பதுடன், பாலஸ்தீனத்துக்கான தேச அங்கீகாரம் கோரப்பட்டுள்ளது. அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில், காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவப் பிரச்சாரத்தை சட்டவிரோதமானது என்றும், பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிரான கண்மூடித்தனமான தாக்குதல்கள், குடிமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் பாலஸ்தீனிய மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வதை கடுமையாக கண்டித்தனர். காஸா பகுதியை அணுகுவதற்கு மனிதாபிமான உதவிக்கு மிகவும் அவசியமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அதே வேளையில், 1967ஆம் ஆண்டு அரபு நாடுகளுடன் ஒரு சுருக்கமான போரில் இஸ்ரேல் காசா, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதற்கு முன்னரான எல்லைகளின் அடிப்படையில் இரு நாடுகளின் தீர்வுக்கு ஒரு கூட்டு அறிக்கையில் அழைப்பு விடுத்தது. அத்துடன் நாடுகளின் சமூகத்தில் அதன் சரியான இடத்தைப் பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக ஒரு பாலஸ்தீனிய நாடு அனுமதிக்கப்படுவதற்கான ஆதரவையும் அணிசேரா நாடுகளின் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பாலஸ்தீன தேச அங்கீகாரத்துக்கான கோரிக்கையை வலுவாக ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது, இஸ்ரேல் மீதான சர்வதேச நீதிமன்ற வழக்கில் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா முன்னணியில் உள்ளது.  நெதர்லாந்தின் ஹேக் நகரை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் முக்கிய நீதித்துறை அமைப்பில், இஸ்ரேலின் நீண்டகால ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பிரதேசம் தொடர்பாக ஒரு தனி நடவடிக்கையினை 2022ஆம் ஆண்டில் நகர்த்தியிருந்தது. டிசம்பர்-30, 2022அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘கிழக்கு ஜெருசலேம் உட்பட, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளால் எழும் சட்டரீதியான விளைவுகள்’ என்ற விஷயத்தில் ஐ.நா பொதுச் சபை சர்வதேச நீதிமன்றத்திடம் முறையாக ஆலோசனைக் கருத்தை கோரியது. சர்வதேச நீதிமன்றம் 2023இல் பொது எழுத்துப்பூர்வமற்ற அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, வழக்குக்கான வாய்வழி விசாரணைகள் 2024-பெப்ரவரியில் தொடங்கும். இதில் குறைந்தபட்சம் இந்தோனேசியாவும் ஸ்லோவேனியாவும் பங்கேற்கும். இந்தோனேசியாவின் வெளியுறவு மந்திரி ரெட்னோ மர்சுடி விசாரணையின் தொடக்க நாளான பெப்ரவரி-19 அன்று வாய்வழி அறிக்கையை வழங்குவதாக அறிவித்தார். மேலும் அவர் சமீபத்தில் ஜகார்த்தாவில் சுமார் 50 சர்வதேச சட்ட வல்லுநர்களைக் கூட்டி அறிக்கைக்குத் தயாராக உதவினார். அத்துடன் ஸ்லோவேனியாவின் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சர் டான்ஜா பஜோன், பெப்ரவரி-23 அன்று ஸ்லோவேனியாவும் விசாரணையில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்துக்கள் அரிதான விதிவிலக்குகளுடன் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை. வியன்னா சர்வதேச தந்திரோபாபயக் கல்லூரியில் உள்ள சர்வதேச மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் பேராசிரியரான ஹோல்கர் ஹெஸ்டர்மேயர், அவை இன்னும் சக்திவாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளார். அதாவது, சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்துக்கள் பெரிய சட்டப்பூர்வ எடை மற்றும் தார்மீக அதிகாரத்தைக் கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் தடுப்பு இராஜதந்திரத்தின் ஒரு கருவியாகும் மற்றும் அமைதி காக்கும் நற்பண்புகளைக் கொண்டுள்ளன. ஆலோசனைக் கருத்துக்கள், அவற்றின் வழியில், சர்வதேச சட்டத்தை தெளிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் அரசுகளுக்கு இடையே அமைதியான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கின்றன எனக்குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்துக்கான உரிமைக்குரல் வலுவாக எதிரொலிக்க ஆரம்பித்துள்ளமையையே சமகால அரசியல் நிகழ்வுகள் உறுதி செய்கின்றது. அமெரிக்கா முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற போதிலும், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் சார்பு அமெரிக்க கொள்கை தனித்து விடப்படும் போக்கே வலுப்பெற்று வருகின்றது. இப்பந்தியில் முன்னரும் அமெரிக்க தனித்து விடப்படுவது தொடர்பில் ஆழமாக உரையாடப்பட்டுள்ளது. அதேநேரம் 2024இன் ஆரம்பம் பாலஸ்தீன தனித்தேச அங்கீகாரத்துக்கான குரல் வலுவாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. முன்னரே 2023-ஜூன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸை அழைத்து உரையாடிய போது இரு நாட்டு தீர்வுக்கான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை 2022இல் நடைபெற்ற அரபு நாடுகள்-சீன உச்சி மாநாட்டிலும் கிழக்கு ஜெருசேலமை தலைநகராக கொண்ட சுதந்திர பாலஸ்தீன அரசை சீனா ஆதரிப்பதாக ஷி ஜின்பிங் தெரிவித்திருந்தார். இந்த பின்புலத்தில் சமகாலத்தில் அதிகரிக்கப்படும் பாலஸ்தீன தேச அங்கீகாரத்துக்கான உரையாடலை வலுவாக பற்றிக்கொள்ளக்கூடிய வியூகத்தை பாலஸ்தீன அரசும் தன்னகத்தே கட்டமைப்பதிலேயே இறுதி முடிவும் விளைவும் தங்கியுள்ளது. இது விடுதலைக்காக போராடும் ஏனைய தேசிய இனங்களுக்கும் படிப்பினையாக அமையும். அரபு போராட்டக் குழுக்களின் ஒற்றுமையான செயற்பாடு சர்வதேசத்தை பாலஸ்தீன தேச அங்கீகாரத்துக்கான ஆதரவு தளத்திற்கு திசை திருப்பியுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)