அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழர் அரசியல் இருப்பும் இந்தியாவுடனான இலங்கையின் எட்கா உடன்படிக்கையும்

இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கு 2600 வருட வரலாறு உண்டு என்பது மறுக்க முடியாததென்றாகும். உலகிலுள்ள நாடுகளில் அத்தகைய பாரம்பரியத்தைக் கொண்ட நாடுகள் ஒரு சிலவே உள்ளன. அதில் முதன்மையானது இலங்கைத் தீவாகும். அத்தகைய வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை அதில் அனேகமான காலத்தை இந்தியாவைக் கையாளவே பயன்படுத்தியுள்ளது. தேவநம்பியதீசன் தலைமீது இருந்த மகுடத்தை இறக்கி அசோகச்சக்கரவர்த்தியின் முடிதரிக்கப்பட்டதிலிருந்து அத்தகைய பாரம்பரியம் இந்தியாவை கையாளத் தொடங்கியது. அத்தகைய வெளியுறவின் வடிவம் பௌத்தமதத்தை மையப்படுத்தியே தொடங்கியது. மகிந்தரும் சங்கமித்தையும் அதன் தொடக்கப்புள்ளிகள் என்றால் மிகையாகாது. அத்தகைய வரலாற்றிலிருந்து இன்றுவரை இலங்கையின் வெளியுறவின் பிரதான அங்கமாக இந்தியாவே உள்ளது. அத்தகைய களம்மொன்றுக்கான யுகமாக தற்போதைய போக்கும் அமைந்துள்ளது. இக்கட்டுரையும் தென் இலங்கையின் எட்கா (ETCA-Economic and Technology Cooperation Agreement) உடன்படிக்கைக்கான திட்டமிடலும் ஈழத்தமிழ் மீனவரின் கறுப்புக் கொடிப் போராட்டத்தையும் விளங்கிக் கொள்ள முயலுகிறதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள எட்கா உடன்படிக்கை பற்றி வீண் அச்சம்கொள்ள வேண்டியதில்லை. அந்த உடன்படிக்கையினால் இலங்கையின் ஊழியர் படையணிக்கு பாதிப்பு ஏற்படாது என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடும் போது இந்திய முதலீட்டாளர்கள் இந்தியத் தொழில்துறை மற்றும் தொழில் நுட்பம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதனால் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமான வர்த்தக உறவை வைத்துள்ளன. எனவே இந்திய தரப்பிலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் பொருளாதார பங்களிப்பையே கவனம் கொள்ள வேண்டும். போட்டித்தன்மைக்கு முதலீட்டாளர்கள் இலங்கைக்குள் முதலீடு செய்ய வேண்டும். அப்போதே ஏற்றுமதிப் பொருளாதாரம் நோக்கி நகரலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட கடற்பகுதிகளில் கறுப்புக் கொடிப் போராட்டம் ஒன்றை 03.03.2024 இல் மேற்கொள்ள யாழ்ப்பாண மாவட்ட கடல் தொழிலாளர் சங்கங்களின் சமாசம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சிறிகாந்தவேள் புனிதப் பிரகாஷ் அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடலில் கறுப்புக்கொடிகளைத் தாங்கி ஈழத்தமிழ் கடற் தொழிலாளர்களின் துக்கத்தை வெளிப்படுத்தவுள்ளோம். இந்திய மீனவர்களால் வடக்கு மீனவர்களின் வாழவாதாரமும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டுவருகின்ற நிலையில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய-இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறித்த இரண்டு விடயங்களிலும் உள்ள அடிப்படைகள் நியாயமானவையாக அமைந்துள்ளன என்பது தெளிவானதே. அதிலும் வடக்கு மீனவர்கள் மீதான இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் ஈழத்தமிழரது வாழ்வாதாரத்தை முற்றாகவே பாதிக்கச் செய்துள்ளது. இது இந்திய மீனவர்களால் மட்டுமல்ல தென் இலங்கை மீனவர்களாலும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. வடக்கு கிழக்கின் கடல்வளம் பாரியளவில் ஈழத்தமிழ் மீனவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அரசியல் அதிகாரமற்ற பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களால் ஈழத்தமிழருக்கு ஏற்படும் மீறல்கள் இத்தகையதாகவே அமைகின்றன. இதனை அரசியல் அதிகாரத்தினாலேயே கட்டுப்படுத்தவோ தீர்வுகாணவோ முடியும் என்பதை அரசியல் தரப்புக்கள் மட்டுமல்ல அனைத்து தரப்புக்களும் உணர வேண்டும். இதனை சற்று விரிவாக விளங்குதல் அவசியமானது.

ஒன்று, இலங்கை அரசாங்கங்கள் இந்தழியாவுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கையையே அடிப்படையில் கொண்டுள்ளன. கடந்தகாலம் முழுவதும் அதனையே பின்பற்றியுள்ளது. தற்போதும் அதனையே பின்பற்றுகிறது. ஆனால் இந்தியாவை கையாளும் உத்தி அதனிடமுண்டு. அதனிடம் இராஜதந்திரம் என்ற பகுதி வலிமயானது. வெளியுறவும் இராஜதந்திரமும் நாணயத்தின் இரண்டு பகுதிகள் போன்றது. இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு எதிரான வெளியுறவை வைத்துக் கொண்டு அதே நேரம் இந்தியாவை பகைத்துக் கொள்ளாது இந்தியாவின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது போல் நகர்ந்து மூலோபாயத்தை அடைவதில் தேர்ச்சிமிக்கவர்கள். அத்தகைய பாரம்பரியத்தை தேவநம்பியதீசனிலிருந்து கண்டு கொள்ள முடிகிறது. இதனை அணைத்துக் கையாளுதல் என்ற கருத்தினால் புரிந்து கொள்ள முடியும். அணைத்துக் கெடுத்தல் என்பதன் இன்னோர் அணுகுமுறையாக அணைத்துக் கையாளுதல் இராஜதந்திரத்தில் பிரயோகப்படுத்தப்படுகிறது. இதனையே இலங்கை இந்தியா பொறுத்த வெளியுறவின் பாரம்பரியமென கொண்டுள்ளது. எட்கா உடன்பாடு வெற்றி பெறுகிறதோ இல்லையோ வேறுவிடயம். ஆனால் அத்தகைய உடன்பாடு ஒன்றினை இந்தியா சந்திரிக்கா குமாரதுங்கா ஆட்சியில் இருக்கும் போதே உரையாட ஆரம்பித்தது. பின்னர் மைதிரிபால சிறிசேன-ரணில் அரசாங்கத்திலும் அத்தகைய உடன்பாடு வரையப்பட்டது. தற்போது மீளவும் நிகழத்திட்டமிடுகிறது. அதன் உள்நோக்கங்கள் பல காணப்படுகிறது. இலங்கை ஆட்சியாளரைப் பொறுத்தவரை இந்தியாவைத் திருப்திப்படத்த வேண்டும். 13 வது அரசியல் சீர்திருத்தத்தை நீக்க முயன்றால் அதனை இந்தியா மௌனமாக பார்த்துக் கொள்ள வேண்டுமாயின் ஏதாவது உத்தரவாதங்களை இந்தியாவுக்கு கொடுக்க இலங்கை தயாராக உளதென காட்டிக் கொள்ள வேண்டும். 2007 சிறப்பான அனுபவமாகும். வடக்கு கிழக்கு பிரிக்கும் போது இந்தியா விமர்சனம் எதனையும் வெளிப்படுத்தவில்லை என்பதாகும். தற்போது தென் இலங்கையில் 13 திருத்தச்சட்டத்தை நீக்குவது பற்றிய உரையாடல் பலமாக சிங்கள தீவிரவாத சக்திகளால் உரையாடப்படுகிறது. அதற்கான நகர்வுகளில் ஒன்றாகவே முன்னாள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மிலிந்த மொறகெட செயல்பட்டார். அதன் தொடர்ச்சி பலமானதாகவே தென்படுகிறது. பொருளாதாரமாக இலங்கை இந்தியாவுடன் அதிக ஒத்துழைப்பினை கொண்டால் இந்தியா உள்நாட்டில் எடுக்கும் நகர்வகளில் தலையிடாது என்ற எதிர்பார்க்கை காணப்படுகிறது. அது மட்டுமன்றி வடஇந்தியாவின் இந்துத்துவமும் தென் இலங்கையின் பௌத்தமும் ஒன்றானதே. மன்னன் தேவநம்பியதீசன் பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளேயே ஆட்கொள்ளப்ப்பட்டார். இலங்கை-இந்திய உறவு அல்லது இலங்கையின் வெளியுறவு பௌத்தப் பாரம்பரியத்திலிருந்து ஆரம்பமானது. அதனையே இன்றுவரை பின்பற்றுகிறது. சீத்தா எலியாவிலிருந்து இராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட புதிதகல் சொல்லும் செய்தியும் இலங்கையின் வெளியுவின் பாரம்பரியமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இரண்டு, ஈழத்தமிழரது இருப்பு பாக்கு நீரிணையினால் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டாலும் அதுவே ஈழத்தமிழர் இந்திய உறவை தீர்மானிக்கு விடயமாக உள்ளது. இலங்கைத் தீவின் புவிசார் அரசியல் கொண்டுள்ள நெருக்கம் ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டத்திற்கு முதலீடாக அமைந்திரந்தது. அது இந்தியாவுக்கும் இலங்கைத் தீவை கையாள பொருத்தமாக அமைந்திருந்தது. பாக்குநீரிணையை மையப்படுத்தியே இந்தியாவும் தனது தொடர்புகளை பலப்படுத்திவருகிறது. ஈழத்தமிழரது இருப்பும் எழுச்சியும் வீழ்ச்சியும் பாக்குநீரிணையிலேயே தங்கியுள்ளது. அதனை மையப்படுத்தியே இலங்கை-இந்திய இழுபறி நிலவுகிறது. தற்போது எழுந்துள்ள மீனவர் அத்துமீறலும் அத்தகைய கடல்சார்ந்த முக்கியத்துவத்திற்கானதே. அதனை இலங்கை அரசு அணுகுவது ஈழத்தமிழரிடமிருந்து பாக்குநீரிணையை தமது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதாகும். அதனாலேயே இருதரப்பு மீனவர்களது மோதலை முடிவுறுத்த முயலாதுள்ளதென்பது தெளிவாகிறது. தென் இலங்கை இத்தகைய முரண்பாட்டை ஒரு போதும் தீர்க்கும் எனக்கருத முடியாது. அதனால் ஈழத்தமிழ் அரசியல் தளத்தில் இயங்கும் சக்திகளே அல்லது அதன் அமைப்புக்களே ஒரு சுமூகமான தீர்வை நோக்கி நகர்த்த வேண்டும். பகைமையை வலுப்படுத்தாத உறவை நோக்கி இரு தரப்பு மீனவர்களும் நகர்வதே அவசியமானது. ஈழத்தமிழ மீனவர்கள் எல்லாச்சூழலிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாது. அவர்களது வாழவாதம் பாரியளவில் பாதிக்கப்படுகிறது. ஆனால் ஈழத்தமிழரது கடல்சார் அரசியலும் இதற்குள் அடங்கியுள்ளது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஈழத்தமிழருக்கும் தமிழகத்திற்குமான பகைமை இந்தியாவுக்கானதாக மாற்றும் உத்தியை எப்படி கையாளுதல் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

எனவே இலங்கைத் தீவின் அரசியலில் தவிர்க்க முடியாத உடனடி அயல் நாடாகவும் புவிசார் நாடாகவும் இந்தியாவே உள்ளது. அதிலும் ஈழத்தமிழரது அரசியல் இருப்புக்குள் ஓரங்கமாக இந்தியாவின் புவிசார் அரசியல் உள்ளது. அதற்காக ஈழத்தமிரது கடல் வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடிக் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை அணுகும் பாரம்பரியத்திற்குள்ளால் நகர்த்துவது அவசியம். தென் இலங்கை எத்தகைய பகைமைக்குள்ளால் தனது நலன்களை இந்தியாவிடமிருந்து ஈட்டிக் கொண்டு நகர்கிறதென்பதை அடையாளம்காணுதல் வேண்டும். ஈழத்தமிழ் அரசியல்வாதிகளை விடுத்து சமூகங்களாக உரையாடல் இருதரப்பக்குள்ளும் நிகழ வேண்டும். அதுவே ஆரோக்கியமான இருதரப்பின் இருப்பை சாத்தியமாக்கும். அது ஈழத்தமிழர் ஓர் அரசியல் சமூகமாக நிலைத்திருப்பதற்கு வழிவகுக்கும்

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)