இலங்கையின் சுதந்திரமானது இறைமையினால் கட்டமைக்கப்படுவதென்றாகவே அரசறிவியல் கற்கை உணர்த்துகிறது. இக்கருத்து நிலை உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்துமாக இருந்தாலும் சந்தையும் வர்த்தகமும் அத்தகைய இறைமையை பலவீனமானதாக மாற்றியுள்ளதாகவே தெரிகிறது. இத்தகைய எண்ணக்கரு ஏனைய நாடுகளைவிட இலங்கைக்கு அதிகம் பொருந்துவதாகவே உள்ளது. காரணம் இலங்கைத் தீவின் அமைவிடமும் எதிர்நோக்கும் அரசியல் பொருளாதார நெருக்கடியும் அத்தகைய நிலையை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக இலங்கைத் தீவு வல்லரசுகளால் ஆளப்படும் தீவாக விளங்குகிறது. இலங்கைத்தீவு சுதந்திரமாக (Freedom) சுதேசிகளால் ஆளப்படுவதைக் காட்டிலும் எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து வெற்றிகரமாக விடுதலை (Liberty) பெறுவதையே ஆட்சியாளர்கள் ஆளுதல் எனக்கருதுமளவுக்கு நிலமை காணப்படுகிறது. இக்கட்டுரையும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்கா-சீனா அதிகாரத் தலையீட்டை அனுசரித்து ஆட்சி செய்யும் போக்கை தேடுவதாக அமையவுள்ளது.
முதலாவது, இலங்கைப் பாராளுமன்ற தேசிய பாதுகாப்பு கண்காணிப்புக் குழு இலங்கையின் உள்விவகாரங்களில் கருத்துக்களை வெளியிடுவதையும் தலையீடு செய்வதையும் தவிர்க்குமாறு அமெரிக்க தூதுவர் ஜீலி சங்கிற்கு பரிந்துரை செய்துள்ளது. பாராளுமன்றத்தில் பாதுகாப்புச் செயலாளர், முப்படைத்தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஒன்று கூடி இத்தகைய தீர்மானம் எடுத்துள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர். இதில் ஆளும் கட்சியினர் மட்டுமன்றி எதிர் தரப்புக்கள் கலந்து கொண்டுள்ளதுடன் தீவிர அமெரிக்க எதிர்புவாதத்தை முன்வைத்துள்ளனர். அது மட்டுமன்றி மே 2022 அமெரிக்கத் தூதுவர் முன்வைத்த கருத்துக்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாவது, சீனா இலங்கைத் தீவை இராணுவ தளமாக விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் இராணுவ மையமான பென்டகன் தனது வருடாந்த பாதுகாப்பு அறிக்கையொன்றின் தெரிவித்துள்ளது. சீனா தனது இராணுவத்தளங்களை விஸ்தரிப்பது தொடர்பில் 18 நாடுகளை தெரிவு செய்துள்ளதாகவும் அதில் இலங்கை முதன்மையானதாக அமையவுள்ளதாகவும் வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் 2023 ஆரம்பத்திலும் அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது. மேலும் அவ்வறிக்கையில் இராணுவ நடவடிக்கையின் தேவை எழும்போது சீன இராணுவம் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய தளங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துகிறது. இதில் தென்னாசிய நாடுகளில் இலங்கை, வங்களாதேஷ், பாகிஸ்த்தான் மற்றும் மியான்மார் முக்கியமானவையாக உள்ளதாவும் தென்கிழக்காசிய நாடுகளில் தாய்லாந்து, சிங்கப்பூர், மற்றும் இந்தோனேசியா முக்கியமான நாடுகளென்றும் பென்டகன் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொலைதூரத்தில் சீனா தனது இராணுவவலிமையை வெளிப்படுத்துவதற்கு உதவும் விதத்தில் வெளிநாடுகளில் இராணுவ உட்கட்டமைப்புகளை மற்றும் வினியோக வசதிகளை விஸ்தரிக்க தொடங்கியுள்ளது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை குழப்புவதாகவே அமையுமென அவ்வறிக்கையில் பென்டகன் எச்சரித்துள்ளது.
மூன்றாவது, பென்டகனின் அறிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் சீனா தனது விமானம்தாங்கி கப்பல் உட்பட ஆறு கப்பல்களை ஏடன் துறைமுகம் நோக்கி 26.10.2023 இல் நகர்த்தியுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேலியப் போர் தீவிரமான நிலையை அடையும் தறுவாயில் அமெரிக்க- சீனப் போர்க்கப்பல்கள் மேற்காசியாவை நோக்கி நகர்வதென்பது பிராந்திய அதிகாரச் சமநிலையை நோக்கியதாக கருதினாலும் சீனாவின் இராணுவ விஸ்தரிப்பு நகர்வாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. இது அமெரிக்காவின் இஸ்ரேலிய ஹமாஸ் மீதான போருக்கு ஆதரவானதாக அமையும் போது சீனாவின் நடவடிக்கை இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கு எச்சரிக்கையானதாகவே தெரிகிறது. ஏற்கனவே சீனாவின் இராணுவத் தளமாக ஜிபூட்டியில் (Djibouti) 2016ஆம் ஆண்டு முதல் இயங்கிவருவது தெரிந்தவிடயமே. கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள ஜிபூட்டியானது இந்துசமுத்திர நாடு என்பதுடன் இந்துசமுத்திரத்தின் கேந்திரப்பகுதியை அண்மித்ததென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமன்றி சீனாவின் நிதி உதவியில் அமைக்கபட்ட துறைமுகங்களில் சிலவற்றை சீனா 99 வருட குத்தகைக்கு பெற்றுவருகிறது. அவை அனைத்துமே சீனாவின் இராணுவத் தளங்களாக மாறுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது என்ற விவாதம் 2012 ஆண்டு முதல் முன்வைக்கப்பட்டு வருகிறது. வோசிங்டன், புதுடில்லி மற்றும் ஈழத்தமிழர் சார்ந்து ஆய்வுகளும் வெளியீடுகளும் அதிகம் வெளிவந்துள்ளது.
இத்தகைய நிலையிலேயே இலங்கைப் பராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் அமெரிக்கத் தூதுவருக்கு எதிரான எச்சரிக்கை வெளியாகியுள்ளது. கடந்தவாரம் இப்பகுதியில் ஜனாதிபதி ரணில்விக்கிரசிங்ஹாவின் அமெரிக்கா மற்றும் மேற்குக்கு எதிரான நடவடிக்கைகளையும் அதன் உள்நோக்கத்தையும் வெளிக்கொணர்ந்திருந்தது. தற்போது மீளவும் அதற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் தேசியபாதுகாப்புக் குழுவின் எச்சரிக்கை அமைந்துள்ளது. அதே நேரம் அக்குழுவின் உறுப்பினராக உள்ளவர்கள் பலர் அரகளையவின் புரட்சி(?) நிகழும் போது அமெரிக்க தூதுவரின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் முன்னாள் ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பை அசட்டை செய்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. குறிப்பாக இலங்கையின் அப்போதைய முப்படைத் தளபதி முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷhவின் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்காது அமெரிக்க தூதுவருடன் உரையாடியதாக பகிரங்கமாக தெரிவந்திருந்தது. அத்தகைய இராணுவமும் அதன் படைத்தளபதிகளும் தற்போது தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஏன் அமெரிக்க தூதுவருக்கு எதிராக எச்சரிக்கை செய்துள்ளது என்ற கேள்வி நியாயமானதாகவே தென்படுகிறது. அதற்கான பதிலைத் தேடுவது அவசியமானது.
பிரதானமாக இலங்கைத் தீவின் அரசியல் சீன-அமெரிக்க பொறிக்குள்ளே அகப்பட்டுள்ளது. தென் இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்கு சீன-அமெரிக்காவிடம் சுதந்திரத்தை இழந்துவருகின்றனர். அவர்கள் எத்தகைய சுதந்திரத்தை இழந்தாலும் இந்தியாவையும் ஈழத்தமிழரையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றே தெரிகிறது. இந்தியா பாரியளவான பொருளாதார, இராணுவ மற்றும் புலனாய்வுத் தகவல்களை போரின் போதும் அதன் பின்னரும் வழங்கிவரும் நிலையில் தென் இலங்கை சீன-அமெரிக்க நெருக்கத்தையே அதிகம் கொண்டு செயல்பட முனைகிறது. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா அமெரிக்க நட்புடன் செயல்பட ராஜபக்ஷக்கள் சீன சார்ப்பில் செயல்பட உள்நாட்டில் இருநாட்டுக்குமான அணிகளது இழுபறி நிலவுவதாகவே தெரிகிறது. ஆனால் அதன் ஆழம் அனைத்து தென் இலங்கை ஆட்சியாளர்களும் சீனா பக்கமிருந்து கொண்டு அமெரிக்காவையும் இந்தியாவையும் பயன்படுத்துவதாகவே தெரிகிறது. தென் இலங்கை ஆட்சியாளர்கள் சில சந்தர்ப்பத்தில் சீன-இந்திய பக்கமிருந்து கொண்டு அமெரிக்காவையும், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சீன-அமெரிக்க பக்கமிருந்து கொண்டு இந்தியாவையும் கையாளுவதைக் கண்டுகொள்ள முடியும். ஆனால் தென் இலங்கை ஒருபோதும் சீனாவை கைவிடுவதில்லை என்பதை காணமுடிகிறது. 1952 ஆண்டு முதல் தற்போது வரை இலங்கைக்கும் சீனாவுக்குமான இராஜீக நட்புறவு முரண்பாட்டையே சலசலப்பையோ ஏற்படுத்தவில்லை. மாறாக சீன-இலங்கை உறவை இந்தியா அல்லது அமெரிக்கா குழப்ப முனைந்த போது சில விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாமே அன்றி வேறு எந்த சந்தர்ப்பத்திலும் இரு நாட்டு நட்புறவும் முரண்பாடடையவில்லை என்றே தெரிகிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் (1952 ரப்பர்-அரிசி உடன்படிக்கை) உபாயத்திற்குள்ளால் கட்டமைக்கப்பட்ட இலங்கை-சீன நட்புறவு சிறிமாவோ பண்டரநாயக்காவாலும் பின்னர் சந்திரிக்கா குமாரதுங்கா மற்றும் ராஜபக்ஷக்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனை ரணில்விக்கிரமசிங்ஹா உறுதியானதாக மாற்றியுள்ளார். இங்கு கட்சி அரசியலைவிட தேசிய அரசியலே முதன்மையானதாக உள்ளது. உள்நாட்டில் கட்சிகள் மோதிக் கொள்ளலாம் ஆனால் தேசிய நலன் என்று ஏற்பட்டுவிட்டால் அதற்கே அனைத்து ஆட்சியாளர்களும் முதன்மை வழங்கவதைக் காணமுடிகிறது. இது அதிகம் புரிந்து கொள்ள குழப்பமான விடயமாகும். ஆனால் அத்தகைய குழப்பமான வடிவத்திற்குள்ளாலேயே தென் இலங்கையின் ஆட்சி மட்டுமல்ல இலங்கைத்தீவின் அரசியலே பயணிக்கிறது. இலங்கைத்தீவின் அமைவிடம் சீன-அமெரிக்காவின் இந்துசமுத்திரப் போட்டியையும் பிராந்திய அரசியல் போட்டியையும் சாதகமாக்கியுள்ளது. இரு பூகோள அரசுகளும் இலங்கைத் தீவின் முக்கியத்துவம் கருதி புவிசார் அரசியல் சக்திகளாக மாறியுள்ளன. தென் இலங்கை ஆட்சியாளர்கள் எண்ணத்தில் புவிசார் அரசியல் நாடான இந்தியா அன்னியமாகவே உள்ளது. இதனை இந்திய ஆட்சியாளர்கள் கண்டு கொள்ள முன்னர் இரு நாடுகளாலும் இலங்கைத் தீவு காவுகொள்ளப்பட்டுவிடும். அதிலும் அமெரிக்காவினது வாய்ப்பினைக் காட்டிலும் சீனாவுக்கே அதிகமான சந்தர்ப்பம் உண்டு.
எனவே இலங்கைத்தீவின் அரசியல் தற்போது அமெரிக்க-சீனாவின் களமாகவே மாறியுள்ளது. அரகளய போராட்டத்திற்கு பின்னர் அமெரிக்காவின் கை ஓங்கினாலும் சீனாவின் சமநிலைப்பங்காளி என்பதில் மாற்றுக் கருத்தின்றி செயல்படுகிறது. அமெரிக்க எதிர்ப்புவாதம் தென் இலங்கை சிங்கள-பௌத்த பெரும்பான்மையின் வாக்குகளை சேகரிப்பதற்கான தற்காலிக உத்தியாகவும் நிரந்தரமாக சீன நட்பினைப் பாதுகாக்கும் நகர்வாகவுமே அமையவுள்ளது. அதனால் அடிபடப்போகும் இன்னோர் சக்தியாக இந்தியா உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். அமெரிக்காவை எச்சரிக்கும் போது இந்தியாவையும் இந்தியாவை எச்சரிக்கும் போது அமெரிக்காவையும் கையாளுவதில் தென் இலங்கை வலுவான நிலையிலுள்ளது. இத்தகைய அரசியல் நகர்வு நீடிக்குமா இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லாது கடந்த காலம் முழுவதும் தென் இலங்கை செயல்பட்டுள்ளது. அத்தகைய போக்கினை கண்டு கொள்ளவோ முறியடிக்கவோ அல்லது அவ்வாறு செயல்படவோ ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளால் முடியாததென்றாக உள்ளது. இதில் இந்தியாவுக்கும் பங்குள்ளதென்பது தவிர்க்க முடியாத பதிவாக தெரிகிறது. இலங்கைத் தீவு முழுவதையும் திருப்திப்படுத்த முயன்று இறுதியில் வடக்குக்கிழக்கையும் இழக்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இத்தகைய கையறு நிலை உண்டு என்பதை இந்திய ஆட்சியாளர்களும் கொள்கைவகுப்பாளர்களும் ஏற்றுக் கொள்ளவோ கண்டுகொள்ளவோ தயாரில்லை என்பது கடந்த காலம் முழுவதற்குமான அனுபவமாகவே தெரிகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
