December 7, 2022
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க தூதுக்குழுவின் அரசியல்: தென் இலங்கைக்கு பொருளாதார-இராணுவ ஒத்துழைப்பு! வடக்குக்கு வாய்வாக்குறுதி!

இந்திய-தென் இலங்கை உறவு விரிசலடைகிறது என்பதை மையப்படுத்தி பல கட்டுரைகள் இப்பகுதியில் முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கான இன்னோர் கட்டமாகவே இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரது பதவி நிலை அதிக குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் இராஜதந்திரிகளது இலங்கை வருகை அதிகரித்ததுடன் அவர்களது யாழ்ப்பாணத்திற்கான வருகையும் முக்கியமான அரசியல் களத்தை திறந்துள்ளது. இலங்கை அரசியலில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே களப்பயணத்தை மேற்கொள்கிறதா இல்லையா என்ற கேள்வி அதிகரித்துள்ள போதும் இரு நாடுகளது நடவடிக்கையும் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக அமைய அதிக வாய்ப்புள்ளதாக ஊகிக்கப்படுகிறது. இத்தகைய ஊகத்தைக் கடந்து யதார்தமான போக்கினை தேடுவது அவசியமானது. இக்கட்டுரையும் அமெரிக்கத் தூதுக் குழுவினரது இலங்கைத் தீவுக்கான விஜயத்தின் அரசியல் பக்கத்தை தெரிந்து கொள்வதற்கான நகர்வாக அமையவுள்ளது.

முதலாவது, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு (06.11.2022) இலங்கை வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பான பணியகத்தின் பிரதிச் செயலாளர் அப்ரீன் அக்தர் அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளையும் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியுள்ளார். இதில் தெற்காசியாவுக்கான அமெரிக்க நிதியத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. கடந்த வாரம் அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்தின் பிரதிநிதி ரொபேர்ட் கப்ரொத் வருகை தந்தது நினைவு கொள்ளத்தக்கது.

இரண்டாவது,07.11.2022 யாழ்ப்பாணம் விஜயம் செய்த அவ் அமெரிக்க தூதுக் குழுவினர் வலிவடக்கு பிரதேச சபைத் தவிசாளரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். அதில் தவிசாளர் படையினர் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள், இடம்பெயர்ந்த மக்கள் பல ஆண்டுகளாகியும் மீள்குடியேற்றப்படாமை மற்றும் அக்காணிகளில் படையினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பில் அமெரிக்க தூதுக்குழுவினருக்கு எடுத்துக் கூறியதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.1614 ஏக்கர் காணியை சுவீகரிப்பது தொடர்பில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சினால் பிரதேச செயலருக்கு அனுப்பட்ட கடிதம் தொடர்பிலும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டதுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அமெரிக்க பிரதிநிதிகள் பொது மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இதனை உயர்மட்ட அதிகார நிலைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.

மூன்றாவது, இலங்கையின் கடற்பிரதேசத்தின் இறைமையை பாதுகாக்கும் நோக்கில் P627 எனும் கடலோர கப்பலொன்றை (Vessel) அமெரிக்கா வழங்கியுள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்த அமெரிக்க கப்பலை வரவேற்ற இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இலங்கையின் கடல் இறைமையை பாதுகாக்கும் விதத்தில் மேலும் ஓர் ஒத்துழைப்பினை அமெரிக்கா வழங்கியுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நவீன ஆயுதங்களைக் கொண்ட கரையோரக் கப்பலானது 115 மீட்டர் நீளத்தைக் கொண்டுள்ளதுடன் 187 பணியாளர்கள் செயல்படக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த மூன்று விடயங்களும் ஒன்றோடு ஒன்று முரண்படுவதாகவும் நடவடிக்கையின் தனித்துவம் வேறுபடுத்தப்படுவதாகவும் தெரிகின்றது. அதாவது அமெரிக்காவின் இலங்கைத் தீவு மீதான கவனம் அதிகரித்துள்ளது. மிலேனிய உடன்பாடு நெருக்கடி கண்ட பிற்பாடு அதீத இராஜதந்திர செய்முறையை அமெரிக்க இராஜதந்திரிகள் அதிகரித்துள்ளனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கையாளும் விதத்தில் செயல்படும் அமெரிக்கா இலங்கைத்தீவின் அரசியலில் அதீத ஈடுபாட்டை மேற்கொண்டு வருகிறது. பொருளாதார ஒத்துழைப்பு என்ற பெயரில் அரசியல் செய்துவரும் அமெரிக்கா சீனாவின் இலங்கை மீதான செல்வாக்கை கையாள முனைகிறது. சீனாவின் அரசியலை முறியடிக்கும் விதத்தில் அமெரிக்கா செயல்படுகிறதென்பது அதன் நகர்வுகள் தெளிவுபடுத்துகின்றது.

குறிப்பாக சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மீதான செல்வாக்குக்கு பதிலாகவும் சீனாவின் நீர்மூழ்கி கப்பலின் வருகைக்கு பின்னரான மற்றும் அண்மையில் கொழும்புத் துறைமுகத்திற்கு பிரவேசித்த யுவான் வாங்-5 தொழில் நுட்பக் கப்பலுக்கு பதில் நடவடிக்கையாகவே அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ள கரையோர கடற்படைக்கப்பலின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இரு நாட்டுக்குமான ஒத்துழைப்பு அதிகரிக்கும் எனவும் அதனால் சீன-இலங்கை உறவை கையாளலாம் எனவும் அமெரிக்காவின் நகர்வுகள் உணர்த்துகின்றன. அவ்வாறே இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு முன்வைக்கும் நோக்கிலும் அமெரிக்க தூதுக் குழுக்களது நடவடிக்கைகளும் சந்திப்புகளும் காணப்படுகின்றன. இலங்கைக்கு பொருளாதார ரீதியில் நிதி உதவிகளை வழங்க முன்வரும் அமெரிக்கா சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையை நெருக்கமாக்கமான உறவு கொள்ளவும் முயன்று வருகிறது. இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை தனது செல்வாக்குக்குள் வைத்துக் கொள்வதே அமெரிக்காவின் முயற்சியாக தெரிகிறது. இந்தோ-பசுபிக் உபாயத்தை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் இலங்கைத் தீவு தேவை என்பதுடன் சீனாவின் பாதை மற்றும் பட்டி முன்முயற்சியின் நகர்வை முடக்குவதற்கு இலங்கைத் தீவு அமெரிக்காவுக்கு அவசியமாகிறது.இதன்வாயிலாக சீனாவின் தைவான் நகர்வையும் கையாண்டு கொள்ள முடியுமேன அமெரிக்கா கணக்குப் போட்டுள்ளது. தற்போது சீனாவுக்கு தைவானா இலங்கைத் தீவா என்ற இழுபறிக்குள் அமெரிக்க சீனாவை தள்ளிவிட்டுள்ளது.இதில் எதை இழந்தாலும் சீனாவுக்கு ஆபத்தானதே. அதாவது கடலாதிக்க சமநிலை பாதிப்படையக் கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. அமெரிக்காவுக்கும் அத்தகைய நெருக்கயுள்ளதாகவே தெரிகிறது.

இதில் அமெரிக்க தூதுக்குழுவினரது யாழ்ப்பாண விஜயம் அதிக குழப்பங்களைத் தந்துள்ளது. கொழும்புக்கு பாதுகாப்பையும் பொருளாதார வாய்ப்பினையும் வழங்கிய அமெரிக்கத் துர்துக்குழு யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பிரதேசசபை தவிசாளருடனான உரையாடலில் வாக்குறுதிகளை மட்டுமே வழங்’கிவிட்டு சென்றுள்ளனர். அவ்வாறாயின் அவர்களது வருகை எதற்கானதென விளங்கிக் கொள்வது.கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக அமெரிக்காவும் மேற்குலகமும் வாக்குறுதிகளையே வழங்குகின்றனவே அன்றி செயல்பாட்டில் எதனையும் வழங்கவில்லை. அதாவது கொழும்புக்கு விஜயம் செய்த தூதுக்குழு வடக்குக்கும் சென்று வருவதனால் எந்த விமர்சனமும் ஈழத்தமிழரால் அமெரிக்க துர்துக் குழுவுக்கு ஏற்படாது என்ற அடிப்படையில் யாழ்ப்பாண வருகை அமைந்துள்ளதாகவே தெரிகிறது. இது ஒரு அரசியல் கண்துடைப்பு நகர்வாகவே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. தென் இலங்கையிலுள்ள ஆட்சியாளர்களது உறவு அமெரிக்காவுக்கானதாகவே அமெரிக்கா கருதுகிறது. தற்போதைய ஜனாதிபதி தராளவாதி என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பாளராக விளங்குவார் எனவும் அவரது ஆட்சியை பாதுகாப்பதற்கான நகர்வை மேற்கொள்வது அமெரிக்காவின் நலனுக்கு ஆரோக்கியமானதெனவும் அமெரிக்கா கருதுகிறது. யாழ்ப்பாண வருகையின் மூலம் வடக்கிலிருந்து எழக்கூடிய அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் முறியடித்துவிட முடியுமென அமெரிக்க குழு கருதுகிறது. அது மட்டுமன்றி அத்தகைய தூதுக்குழுவினது விஜயம் தனித்து வலிகாமம் பிரதேச சபைத் தவிசாளரை நோக்கி அமைந்துள்ளது என்ற கேள்வியும் இயல்பானது. இதற்கு பின்னால் கடந்த ஆண்டு தமிழரசுக் கட்சியின் சட்ட நிபுணர்களது அமெரிக்க விஜயம் காரணமாக அமைந்துள்ளதென்ற சந்தேகமும் தவிர்க்க முடியாததாகவுள்ளது. ஆனால் மீளக்குடியேற்றப்படாமை, தனியார் காணிகளை இராணுவத்தின் கட்டுபடபாட்டில் உள்ளமை மற்றும் இராணுவத்தின் விவசாய நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னால் தமிழ் மக்களிடம் அரசியல் அதிகாரமின்மையே காரணம் என்பதை அமெரிக்க தூதுக் குழுவுக்கு எடுத்துக் கூறத் தவறியமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அடிப்படையில் அரசியல் அதிகாரத்தை நோக்கிய நகர்வே அவசியமானது.

எனவே அமெரிக்க தூதுக்குழுவினரது நகர்வானது இலங்கை ஆட்சியாளரைப் பாதுகாக்கவும் தமிழ் மக்களை கையாளவுமே அன்றி வேறு எதற்கானதாகவும் தெரியவில்லை. ஆனால் இலங்கைத் தீவின் ஆட்சியாளர் அனைவரும் சீனாவின் நண்பர்கள் என்பதை இந்தியா போன்று அமெரிக்காவும் காலதாமதமாகவே புரிந்து கொள்ளும் நிலையிலுள்ளது. இலங்கையின் ஆட்சியாளர்கள் எவரும் தற்போது தாராளவாதிகளல்ல. சீனா ஒரு கம்யூனிஸ நாடுமல்ல. அது சந்தை சோஸலிஸத்தை பின்பற்றுவதாக கூறிக் கொள்கிறது. நடைமுறையில் பொருளாதார சபீட்சத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டு சர்வாதிகாரமாக செயல்படுகிறது. அத்தகைய கொள்கையுடன் ஒத்துப் போகும் இயல்ihபயே இலங்கை ஆட்சியாளர்களும் பின்பற்ற முயலுகிறார்கள். சீனாவின் நட்பே இலங்கை ஆட்சியாளர்களது பாதுகாப்பாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)