இலங்கையின் தற்போதைய அரசாங்கம் உள்ளகப்பொறிமுறையூடகாவே பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்பதையே தனது முன்னணி பிரச்சாரமாக கொண்டு செயலாற்றுகிறது. எனினும் தற்போதைய அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்மைகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகங்களின் தொடர்ச்சியான அழுத்தங்களாலும் சர்வதேச நிறுவனங்கள் இலங்கையின் தேசியப்பிரச்சினைக்கான தீர்வு பொறிமுறையுள் வெளியக பொறிமுறையின் ஈடுபாடு தேவைப்படுகின்றது என்ற வாதத்தை முன்வைக்க முயலுகின்றனர். இந்நிலையில் அரசாங்கம் சர்வதேச உரையாடல்களில் அதிகம் உள்ளகப்பொறிமுறையே இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு உகந்தது என்ற கருத்தை ஆழமாக திணிக்க முற்படுகின்றனர். இவ்வகையான உரையாடலையே இலங்கை ஜனாதிபதியும் ஐ.நா பொதுச்சபையில் ஆற்றிய உரையில் முதன்மைப்படுத்தியுள்ளார். இக்கட்டுரையும் உள்ளக பொறிமுறைக்கான சர்வதேச அங்கீகார கோரிக்கையாகவே ஜனாதிபதியின் நியூயோர்க் விஜயமும் ஐ.நா உரையாடலும் அமைகின்றதா என்பதை தேடுவதாகவே அமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76வது அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூபோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கடந்த செப்டெம்பர்-22 அன்று ஐ.நா பொதுச்சபையில் தனது உரையை நிகழ்த்தியிருந்தார். ஜனாதிபதி தனது உரையை உலகளாவிய கோவிட் நெருக்கடி, இலங்கையின் பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான இலங்கையின் நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் நீடித்த நிலைத்த தீர்வை உருவாக்குவதற்கான பொறிமுறை என பலதரப்பட்ட விடயங்களை தழுவி வடிவமைத்திருந்தார். எனினும் உரையில் இலங்கைக்கு அவசிய தேவையான விடயமாக அமைவது, இலங்கையின் நீடித்த நிலைத்த தீர்வை உருவாக்குவதற்கான பொறிமுறை ஆகும். அதில் ‘நீடித்த அமைதியை அடைய உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் அதிக பொறுப்புணர்வு, மறுசீரமைப்பு நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை வளர்ப்பது அவசியம்’ என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையானது சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களுடனான தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான பிரச்சாரத்தை பிரதிபலிக்கிறது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சமீபத்திய ஐ.நா மனித உரிமை பேரவையின் 46/1 தீர்மானத்தில் நிறுவப்பட்ட ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையில் வெளிப்புற அமைப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரித்தார். மேலும், ‘தேசியப்பிரச்சினை தீர்வு ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். உள்ளூர் நிறுவனங்கள் தங்கள் ஆணைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான இடம் தேவைப்படுகிறது. இந்த நிறுவனங்களால் செய்யப்படும் வேலையை வெளிப்புற அமைப்புகளால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது’ என்று கூறியுள்ளார். ஜனாதிபதியுடன் நியூயோர்க் சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தனது சந்திப்புக்களிலும் அதிகமாக இலங்கையின் தேசியப்பிரச்சினை தீர்வுக்கு தமது அரசாங்கம் முன்னிலைப்படுத்தும் உள்ளக பொறிமுறையின் சாதக தன்மைகள் தொடர்பிலேயே அதிகம் தெளிவுபடுத்துகின்றார்.
இலங்கையின் கடந்த கால வரலாற்று அனுபவங்கள் உள்ளகப்பொறிமுறையின் ஆரோக்கியத்தன்மையை சவாலுக்கு உட்படுத்துவதாக காணப்பகின்றது. குறிப்பாக 1919ஆம் ஆண்டு இலங்கை தேசிய இயக்க உருவாக்கத்தின் போது அதன் தலைவர்கள் தமிழர் மகா சபையினருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை 1921ஆம் ஆண்டு மீறி செயற்பட்டதிலிருந்து உள்ளக பொறிமுறையின் பலவீனமான அனுபவங்கள் உருவாக்கம் பெறுகின்றது. அதன் தொடர்ச்சியே 1957ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் முதல் 2015ஆம் ஆண்டு ரணில்-சம்பந்தன் இதயபூர்வ ஒப்பந்தம் வரை நீள்கிறது. தேசியப்பிரச்சினைக்கான தீர்வு பொறிமுறைகளில் உள்ளூர் தரப்புகளிடையேயான ஒப்பந்தம் மாத்திரமின்றி 1987ஆம் ஆண்டு பிராந்திய வல்லரசு சக்தியின் தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமும் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வின் பலனற்றதாகவே போயுள்ளது. இவ்வரலாற்று அனுபவத்திலேயே இலங்கை தமிழ் தரப்பு சர்வதேச சக்திகளின் ஈடுபாடுடன் கூடிய வெளியகப்பொறிமுறையில் அதிகம் நம்பிக்கை கொள்வதுடன் தற்போதைய அரசாங்கம் முன்னிலைப்படுத்தும் உள்ளகப்பொறிமுறையை தொடர்ச்சியாக எதிர்த்தும் வருகின்றனர்.
எனினும் உள்ளகப்பொறிமுறையூடாக மாத்திரமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வினைப்பெற முடியுமென ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்திய உரையில் சர்வதேச நாடுகளின் முன்னிலையில் பிரச்சாரத்தை முன்னெடுத்த ஜனாதிபதி தனது கருத்தை வலுப்படுத்த, ‘எவ்வாறெனினும், மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் மட்டுமே நிலையான முடிவுகளைப் பெறமுடியுமென்பதை வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது.’ என வரலாறு எனும் சொல்லை இராஜதந்திரரீதியிலான சொல்லாட்சியாக பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த வரலாற்று அனுபவத்தில் உள்ளகப்பொறிமுறையின் அநுபவங்களையும் நியாயாதிக்கத்தையும் நுணுக்கமாக அவதானித்தல் வேண்டும்.
முதலாவது, ஜனாதிபதி தனது உரையில் நீடித்த சமாதானத்திற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் அவசியமென வலியுறுத்தியுள்ளார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன இலங்கையின் இனப்பிரச்சினைக்கானதொரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பொறிமுறையாக 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த அன்றைய ஐ.நா பொதுச்செயலாளர் பான்கி மூன் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷா அவர்களின் கூட்டறிக்கை மூலம் உருவாக்கப்பட்டது. எனினும் 12 ஆண்டுகள் கடந்தும் இலங்கையில் பொறுப்புக்கூறலோ, நல்லிணக்கமோ எவ்வித முன்னேற்றங்களுமின்றியே காணப்படுகின்றது. இன்றும் வடக்கு-கிழக்கில் காணமலாக்கப்பட்டோரின் பெற்றோர்கள் பிள்ளைகளை தேடியும், மனைவிமார்கள் கணவன்மார்களை தேடியும், பிள்கைளகள் தந்தையை தேடியும் போராட்ங்களை முன்னெடுத்துக்கொண்டே தான் உள்ளார்கள். மறுபுறம் அரசியல் கைதிகள் சிறையிலும் கைதிகளின் உறவினர் வெளியேயும் போராடிக்கொண்டு உள்ளனர். இன்றும் தங்கள் நிலமீட்புக்காக ஒருதொகுதி மக்கள் போராடிக்கொண்டு உள்ளனர். இந்நிலையிலேயே இலங்கை அரசாங்கத்தின் உள்ளகப்பொறிமுறையூடான பொறுப்புக்கூறல் 12 ஆண்டுகளை கடந்துள்ளது. அவ்வாறே நல்லிணக்கத்தின் பெறுமதியை 2009-2021 வரை இடமபெற்றுள்ள சிங்கள முஸ்லீம் கலவரங்களும் இந்து ஆலயங்கள் பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள செய்திகளும் உறுதி செய்கின்றது.
இரண்டாவது, இன மத வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான வாழ்வே இலக்கு என்று ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தியுள்ள உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையிலேயே புத்தசாசனத்துக்கு தனியான அமைச்சரவை காணப்படும் அதேவேளை இலங்கையில் உள்ள ஏனைய மதங்கள் குறித்த பௌத்த மதத்தை முதன்மைப்படுத்திய அமைச்சரவையில் பொதுவான மத மற்றும் கலாச்சார அலுவல்கள் என இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் வரலாறு முழுவதும் பௌத்த மகா சங்கங்கங்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட பௌத்த சங்கத்துக்கு ஆட்சியாளர்கள் அளிக்கும் முக்கியத்துவம் அதிகமாக இருப்பதுடன் ஏனைய மதங்கள் மீதான ஆக்கிரமிப்பும் நிராகரிப்பும் ஜனாதிபதி உரையின் நியாயத்தன்மையை பலவீனப்படுத்துகிறது.
மூன்றாவது, மீண்டும் வன்முறை தலைதூக்காதிருக்க அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார். மீண்டும் இலங்கையில் வன்முறை ஏற்படாது தடுக்க வேண்டுமாயின் வன்முறை உருவாக்கம் பெற்றதற்கான மூல காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். இலங்கையில் பொதுமையாக 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு காரணம் அதனை மாற்றியமைப்பதன் மூலம் இனப்பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்ற உரையாடல் காணப்படுகிறது. அதனை நகர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையே ஜனாதிபதியும் இங்கு குறிப்பிடுவதை அறிய முடிகிறது. பொருளற்ற வகையில் யாப்பு மாற்றம் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க மாட்டாது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பினூடான பேரினவாத சக்திகளின் ஒடுக்குமுறை களையப்படுவதனூடாவே அடிப்படை பிரச்சினையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனினும் தற்போதைய அரசாங்கம் யாப்பு மாற்றத்தை ஆதரிக்கின்ற போதிலும் ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது இலங்கையின் இனப்பிரச்சினையை தவிர்க்க கூடிய வழிமுறையாக எதிர்பார்க்க முடியாது.
நான்காவது, ஜனாதிபதியின் உரையில் பயங்கரவாதம் உலக அச்சுறுத்தல் எனவும், கடந்த 30 வருட இலங்கை அதற்கு அகப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையே பயங்கரவாதத்தை வரையறுப்பதில் இன்றுமே சரியான தீர்வினை எட்டமுடியாது உள்ளது. பயங்கரவாதத்தின் பெயரில் 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய அமெரிக்கா அதே பயங்கரவாத சக்தியிடம் 20வருடங்களின் பின்னர் உடன்பாடு அடிப்படையில் ஆட்சியை ஒப்படைத்து வெளியெறியுள்ள அனுபவம் நிராகரித்து விடமுடியாத ஒன்றாகும். பயங்கரவாதத்தை வரையறுப்பதில் என்றுமே உலகம் முடிவை எட்ட முடியாத நிலையில் உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டள்ளது. அவ்வாறு பயங்கரவாதம் எனக்கருதும் தரப்பு 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது என்ற நிலையிலும் அதற்கு பின்னானதொரு தசாப்தகாலம் அதனை உச்சரிப்பதை விடுத்து ஆரோக்கியமான அரசியலை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இலங்கை ஆட்சியளார்களுக்கும் உலக நாடுகளுக்கும் உண்டு என்பது மறுக்க முடியாததாகும்.
ஐந்தாவது, வளமானதும் நிலையானதுமான நாடொன்று உருவாக்கப்படுவதற்கு தேசிய பாதுகாப்பும் இறையாண்மையும் அவசியமானதென ஜனாதிபதி தனது ஐ.நா சபையில் உரைத்திருந்தார். தேசிய பாதுகாப்பு என்பது, தேசத்தின் எல்லைகளையும் அதன் வளங்களையும் அத்தேசத்தில் வாழும் அனைத்து மக்களையும் பேணி பாதுகாப்பதும் பராமரிப்பதுமாகும். ஆத்தகைய தேசிய பாதுகாப்பு நிலவுகின்ற ஒருதேசத்தில் இறையாண்மையும் பாதுகாக்கப்படும். இறையாண்மை என்பது, மேலான அதிகாரத்தை எல்லைக்குட்பட்ட வளங்களையும் அம்மக்களின் நலன்களிலும் உத்தரவாதப்படுத்துதல் ஆகும். எனவே இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. இதனூடாக தனியொரு இனத்தின் ஆதிக்கத்தையோ, தனியொரு கட்சியின் செல்வாக்கையோ, தனியொரு நபரின் விருப்பையோ நிறைவேற்றுவது அல்ல. அவ்வாறு நிறைவேற்ற முயலுகின்ற போது ஐ.நா சபை தேசியங்களின் வழிமுறைகள் மற்றும் பாரம்பரியத்துக்கான நியாயங்களை கருதி அத்தேசியங்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை அங்கீகரித்துள்ளது. உலக நாடுகளில் ஆட்சியாளர்களின் மேலாதிக்கத்தையும் சர்வதிகார போக்குகளையும் தடுப்பதோடு பல்தேசியங்களின் அல்லது பிறதேசியங்களின் நலன்களை உத்தரவாதப்படுத்த முனைகின்றது என்பதையும் சுட்டிக்காட்டுதல் அவசியமாகும்.
எனவே, ஐ.நா சபையில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் உள்ளடக்கம் உள்ளக பொறிமுறையை அடிப்படையாக கொண்ட தீர்வுகளை இலங்கைக்கு ஏற்படுத்த முயல்வதாகவே தெரிகிறது. அதனை ஒரு பிரச்சாரமாகவே இலங்கை ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதற்கான ஒப்புதலை சர்வதேசத்திடம் பெறுவதொடு அதனை தற்போதைய ஆட்சிக்காலத்திலேயே நிறைவு செய்ய வேண்டுமெனவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பிரச்சாரத்தையே வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதியும், உலக நாடுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எற்படஉள்ள எதிர்காலம் இலங்கை தமிழர்களை பொறுத்தவரை ஆபத்தானதாகவும் நெருக்கடிமிக்கதாகவும் அமையுமென்பதை உள்ளகப்பொறிமுறையின் கடந்த கால வரலாற்று அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றது. இதேநேரம் மேற்கு நாடுகளும் இத்தகைய உள்ளகபொறிமுறைக்குள் தீர்வினை சாத்தியப்படுத்த அனுமதிப்பார்களாயின் இலங்கை மீதான மேற்கின் தலையீடும் காணாமல் போயிடும். ஆதனால் உள்ளக பொறிமுறைக்கான இலங்கை ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பை மேற்குலக நலன்களுக்காக நிராகரிக்கப்படுதற்கும் வாய்ப்புள்ளது. இதுவே இலங்கை தமிழர்களுக்கு உள்ள தற்போதைய உத்தரவாதமாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
