November 7, 2025
அரசியல் கட்டுரைகள்

ரணில் விக்கிரமசிங்ஹாவின் கைதும் ஜே.வி.பி.அரசாங்கத்தின் மாற்றத்தை நோக்கிய தோல்வியும்?

தென் இலங்கை அரசியல் அதிக குழப்பத்துக்குள் உள்ளாகி இருக்கின்ற காலப்பகுதியாக தற்போதைய காலப்பகுதி அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ கைது செய்யப்பட்டது. பின்னர் பிணை வழங்கப்பட்டது என்பன தென்னிலங்கையின் அரசியல் செல்நெறியை புரிந்து கொள்வதற்கான இன்னொரு சம்பவமாக தெரிகின்றது. கொழும்பை மையப்படுத்திய உயர் வர்க்கத்தின் அரசியல் இருப்புக்கும் சாதாரண மக்களின் அரசியலுக்குமான இழுப்பறி ஒன்றின் நகர்வுகள் காட்சிப்படுத்தப்பட்ட வடிவத்தை அந்த சம்பவம் மூலம் அவதானிக்க முடிந்தது. இதில் ஜே.வி.பி. அரசாங்கம் தனது இயலாமையை அடையாளப்படுத்திக் கொண்ட இன்னொரு சம்பவமாகவும் இதனை புரிந்து கொள்ள முடியும். உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கு எழுந்த ஆதரவும் உயர் வர்க்கத்தின் அணுகுமுறையும் நீதித்துறையின் எல்லையையும் உணர்த்துவதாக முன்னாள் ஜனாதிபதின் பிணை வழங்கல் நிகழ்ந்துள்ளது. இக்கட்டுரையும் முன்னாள் ஜனாதிபதி மீதான அரசு சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தி கொண்டது தொடர்பில் எழுந்த நகர்வுகளை தேடுவதாக அமையவுள்ளது.

ரணில் விக்ரமசிங்கஹா பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்த சட்டமா அதிபர் திணைக்களம் இறுதியில் நெருக்கடி காரணமாக தவிர்க்க முடியாது பிணை வழங்கும் நிலை ஏற்பட்டதை தெரிந்து கொள்ள முடிகிறது. இலங்கைத் தீவின் நீதித்துறையும் மருத்துவதுறையும் அரசியல்துறையும் உயர் வர்க்கத்தின் நலங்களுக்கானது என்பதை மீண்டும் ஒரு தடவை நிறுவியுள்ளது. அதனை ஆழமாக புரிந்து கொள்ளுதல் அவசியமானது.

முதலாவது, எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து முன்னாள் ஜனாதிபதியின் கைதினை எதிர்த்து தீவிர நடவடிக்கையை மேற்கொண்டனர். ஜே.வி.பி.அரசாங்கத்தின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என்ற கருதுகோளுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தனர். அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருக்கும் போது மேற்கொள்ளும் எத்தகைய மோசடிக்கும் குற்றசெயலுக்கும் இன்னொரு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு இலங்கை தீவின் அரசியல் கலாசாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. அரசியல் பழிவாங்கல் என்ற நியதிக்குள்ளால் எதனையும் கடந்து செல்லுகின்ற மரபென்று வளர்ச்சி அடைந்துள்ளது. ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகளும் ஆக்கிரமிப்புகளும் அழிப்புகளும் போர்களும் அதனையே கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் சார்ந்து ஏற்படுத்தியிருந்தது. ஜே.வி.பி. அரசாங்கம் ஊழலை ஒழிப்பது அதன் பிரதான அரசியல் கொள்கையாக இருந்த போதும் ஊழல்களையும் நிதி மோசடிகளையும் மேற்கொண்ட எந்த தரப்பையும் இதுவரையில் அரசாங்கத்தினால் தண்டனைக்கு உட்படுத்த முடியவில்லை. மாறாக கைதுகளும் பிணை வளங்களும் வழக்குகளும் என முன்னய அரசாங்கங்களின் மரபுசார்ந்த கண்துடைப்பு நடவடிக்ககையாகவே தெரிகிறது. தென்னாசியப் பிராந்தியத்தில் ஊழல் பொறுத்து தண்டனை பெற்ற ஒரே ஆட்சியாளராக இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மட்டுமே காணப்படுகின்றார். ஏனைய ஆட்சியாளர்கள் தப்பிக்கொள்பவர்களாகவும் அதற்கான வாய்ப்புகளைக் கொண்ட அரசியல் அமைப்புக்களுமே காணப்படுகின்றன. இலங்கைத்தீவின் அரசியல் அத்தகைய தரப்புகளை பாதுகாப்பதும் அதற்கான வாய்ப்புக்களை வழங்குவதும் அதனை ஒரு குற்றச்செயலாக கருதமுடியாத நிலையும் கொண்டிருக்கின்றது. இலங்கை தீவை பொறுத்தவரையில் ஈழத்தமிழர் மீதான அணுகுமுறை அதற்கான அடிப்படையை ஆட்சியாளர்களுக்கு கொடுத்திருந்தது. அரசாங்க சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியாவது ஈழத்தமிழர் அரசியல் இருப்பை அழித்துவிடுவதென்ற நெறிக்குள் அனைத்து ஆட்சியாளர்களும் தப்பிக் கொண்டனர்.

இரண்டாவது, இலங்கையின் நீதித்துறையை பொறுத்தவரையில் அது ஒட்டுமொத்தமாகவே உயர்வர்க்க நலங்களுக்கான கட்டமைப்பாகவும் சிங்கள பெரும்பான்மை மக்களின் நலனை பேணுவதற்கான நிறுவனமாகவும் விளங்குகிறது. சிங்கள சாமானியனையோ அல்லது இதர தேசியங்களையோ அது ஒரு நியாயாதிக்கத்துக்குள் அணுகுவதாக கடந்த கால அனுபவம் இல்லாதுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளதும் மேல்தட்டு வர்க்கத்தினதும் நலன்களுக்கு உட்பட்டதாக விளங்குகிறது. நீதித்துறையில் தனித்து எடுக்கு முடிவுகள் ஆட்சேபனைக்கு உட்படுத்தப்படுகின்ற போது சட்ட விதிகளில் காணப்படும் பலவீனங்களையும் அதன் மீதான வியாக்கியானங்களையும் கொண்டு நியயாதிக்கம் கணாமல் செய்யப்படுகிறது. இதற்கான மூலத்தை வடக்கு கிழக்கு மீதான படுகொலைகள் மற்றும் தாக்குதல்களோடும் அத்தகைய நீதி முற்றாகவே காணாமல் போயிருந்தது. 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்திற்கான நியாயாதிக்கம் சரியான முறையில் வழங்கப்பட்டிருக்குமாயின் இலங்கை தீவு நீண்டதொரு வன்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. நீதித்துறையின் நியாயாதிக்கத்தில் அரசியல் தலையீடும் அதன் சுயாதிக்கத்தை காணாமல் செய்துள்ளது. அது மட்டுமன்றி உயர் வர்க்கத்தின் நலனுக்கும் பெரும்பான்மை தேசியத்தின் நலனுக்கும் உட்பட்டதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை மீறுகின்ற எத்தகைய அரசாங்கமும் அதன் அரசியல் இருப்பை பாதுகாப்பது கடினம்.

மூன்றாவது, முன்னாள் ஜனாதிபதி குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது உலகில் உள்ள அல்லது ஆசியாவில் உள்ள அரசியல்வாதிகள் போன்று மூப்பின் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலைக்குள் உட்படுத்தப்பட்டார். அதிலிருந்து வேகமாக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தேசிய வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் அவரின் மீதான மருத்துவ சிகிச்சைக்குரிய தேவையை கோரிக்கையாக நீதித்துறைக்கும் அரசாங்கத்துக்கும் பொது மக்களுக்கும் வெளிப்படுத்தினார். இலங்கையின் மருத்துவத்துறை உயர் வர்க்கத்தின் நலன்களை அல்லது அரசியல்வாதிகளின் நலன்களை எவ்வாறு பாதுகாக்கும் என்பதற்கு டெய்லிமிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தேசிய வைத்தியசாலைக்கான விஜயம் உணர்த்தி நிற்கிறது. அது மட்டுமின்றி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது முன்னாள் ஜனாதிபதியின் உடல் மொழியும் பின்னர் அவர் தேசிய வைத்தியசாலையில் அமர்ந்திருக்கும் போது காட்டப்படும் உடல் மொழியையும் ஒப்பிடுகின்ற போது அதிக வேறுபாடு எதனையும் கண்டுகொள்ள முடியாதுள்ளது. இலவச மருத்துவத்துறையில் முதன்மைப்படும் இலங்கைத் தீவு மேல்தட்டு வர்க்கத்தின் நலன்களை எவ்வாறு பாதுகாக்கக் கூடியது என்பதை உணர்த்துவதாகவே அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

நான்காவது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹா கைது செய்யப்பட்ட போது நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். முன்னாள் ஜனாதிபதியை விடுதலை செய்யுமாறு மேற்கு நாடுகளில் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதெல்லாம் சாதாரணமானவை என்றும் தயவாக குறிப்பிட்டிருந்தார். இது வெளிப்படையாக ரணில்விக்ரம்சிங்காஹா ஆதரிக்கும் விதத்தில் இராஜதந்திர ரீதியான அணுகுமுறையை வெளிப்படுத்தி இருந்தது. எரிக் இராஜதந்திர ரீதியில் ரணில்விக்ரமசிங்ஹாவை கைது செய்ததும்; ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சித்ததும் தவறானது என்பதை தெரிவித்திருந்தார். இலங்கைத்தீவின் அரசியலோடு அதிக செல்வாக்கை கொண்டிருந்த எரிக் கடந்த கால பேச்சுவார்த்தையின் முடிவுகளை இலங்கை ஆட்சியாளருக்கு சார்பாக நகர்ந்தப்பார் என்பதை புரிந்து கொள்ள உதவும். அரசு சொத்துக்களை தவறாக பயன்படுத்தியது குற்றச்செயல் இல்லை என நோர்வே நாட்டவர் குறிப்பிடுகின்றார். அதே கருத்து சில தமிழ் அரசியல் வாதிகளிடமும் உண்டு என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இவை அனைத்தும் சிறிய குற்றங்களாகவே தமிழ் அரசியல் வாதிகள் உரையாடி வருகின்றனர்.

எனவே இலங்கைத்தீவின் ஜனநாயகத்தை தேடுகிற போதும் ஊழலை ஒலிக்கின்றது போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கின்ற போதும் அரசியல் துறை நீதித்துறை மருத்துவத்துறை சட்டத்துறை அனைத்தும் ஒன்றாகவே திரட்சி பெற்று இயங்குகின்ற திறனை கொண்டது. முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்தது ஜே.வி.பி. அரசாங்கத்தின் மாற்றத்துக்கான அறிகுறியாக இருந்தாலும் அதனால் அந்த இலக்கை வெற்றிகரமாக சாத்தியப்படுத்த முடியவில்லை. இதுவே கடந்த கால அரசியல் வரலாறு. ஈழத் தமிழர்களுடனான உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் இவ்வகையான அணுகுமுறை கூடாகவே தோற்கடிக்கப்பட்டது. இத்தகைய நிலையை மாற்றுவதென்பது இலங்கை தீவில் சாத்தியமாகாது என்பதை இச்சம்பவம் மீளவும் தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை தீவின் மாற்றம் என்பது ஜே.வி.பி. கருதுவது போல் நிகழ்த்தக் கூடியது ஒன்றல்ல. ஜே.வி.பி. ஆயுதப்போரினால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் அது சில மாற்றங்களை செய்யத் திட்டமிடலாம். ஆனால் நடைமுறை அத்தகைய மாற்றங்களுக்கு ஒரு போதும் இடமளியாது. அது மேல்நிலையிலிருந்து சாத்தியமாகாது. வேண்டுமாயின் சாமானியனிடமிருந்து மாற்றங்களை உருவாக்க வேண்டும். அதுவே மாற்றத்திற்கான சாத்தியக் கூறாகும். இதன் அடிப்படையிலே இலங்கையில் மாற்றம் பற்றிய உரையாடல் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதனைவிடுத்து ஜே.வி.பி. அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரச்சாரம் செய்வது போல் ஏதும் நிகழ்ந்துவிடவும் இல்லை. எதிர்காலத்தில் நிகழப் போவதுமில்லை. மாறாக தமிழ் அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் வேலையை இலகுவாக செய்யலாம். சரிக்கும் பிழைக்கும் அப்பால் இந்த அரசாங்கத்தால் தமிழ் அரசியல்வாதிகளை ஊழல் குற்றச்சாட்டிலும் ஏனைய குற்றச் செயல் சார்ந்தும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்கு மூலகாரணமானவர்களை ஒரு போதும் கண்டறிந்தாலும் தண்டிக்க முடியாது. அவ்வாறு ஏதாவது நிகழ்ந்தால் இலங்கைத் தீவில் மாற்றம் நிகழ்வதாக கருதலாம்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)