ஈழத்தமிழருடைய அரசியலில் இந்தியாவுடனான உறவு தனித்துவமானது. இந்தியாவை மீறி இலங்கையின் அரசியல் பரப்பு இயங்க முயற்சிக்கின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் அதிர்ச்சி தரும் நெருக்கடிகளை சந்திக்கும் ஒரு புவிசார் அரசியல் பரப்பு தொடர்ச்சியானதாக காணப்படுகின்றது. சமகாலத்திலும் இலங்கையின் நிதியமைச்சரின் இந்திய விஜயம் நெருக்கடிக்கு உள்ளானது போல் ஈழத்தமிழரின் அரசியல் தலைமை கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான இந்திய உறவு மீளவொரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சீன எதிர்ப்புவாதத்தை முன்வைத்தாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைகளின் அண்மைய நடவடிக்கை அதிக குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கட்டுரையும் இந்தியாவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கான புதுடில்லி அழைப்பும் அது ஏற்படுத்த உள்ள அரசியல் விளைவுகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது.
இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் எற்பாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை உட்பட பங்காளி கட்சிகளின் தலைவர்களை கடந்த 8,9ஆம் திகதிகளில் சந்திப்பதற்கான அழைப்பை விடுத்திருந்ததாக ஊடகத்தகவல்கள் உறுதிப்படுத்தின. அத்தகைய அழைப்பை பிற்போடுமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் இந்தியாவை கோரியதாக இன்னோர் தகவலும் வெளியாகியது. அதுமட்டுமன்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இந்திய பிரதமருடனான சந்திப்பை பிற்போடுவதற்கு பின்வரும் மூன்று காரணங்களை முன்வைத்திருந்தார். ஒன்று, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் அவர்களின் குடும்பத்தில் திருமண நிகழ்வு. இரண்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரின் கடவுச்சீட்டு காலாவதியானமை. மூன்று, வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்புக்கு வரவிருந்தமை.
மேற்படி காரணங்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தாலும், சரியான காரணம் இந்தியாவுடனான சந்திப்பை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தவிர்க்க முனைகிறதா என்ற சந்தேகம் மேற்படி காரணங்களை அடிப்படையாக கொண்டே உரையாடப்படுகிறது. மேற்படி காரணங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையாமை மட்டுமன்றி அத்தகைய காரணங்களை இலகுவில் தீர்த்துக்கொள்ளக் கூடியதாகவும் முக்கியமற்றதாகவும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை அவரை குறிப்பிட்டு கூறிய காரணத்தை நிராகரித்து பொருத்தமானவர்களுடன் இந்திய பிரதமருடனான சந்திப்பை நிறைவு செய்யுமாறு கோரியதாக உள்ளூர் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜதந்திரி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு மணித்தியாலங்கள் போதுமானது. அதுமட்டுமன்றி, 2/3 பெரும்பான்மை பாராளுமன்றத்தில் இருக்கும் அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அண்மையில் நிகழ்ந்த பாதுகாப்பு தொடர்பான வாக்கெடுப்பிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளிநடப்பு செய்திரந்தமை குறிப்பிடத்தக்கது. இதனாலேயே மேற்படி காரணங்களை விட வேறெதும் காரணங்கள் இருக்க வாய்ப்பிருப்பதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதாவது, இந்தியாவுடனான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறவு மைத்திரி-ரணில் அரசாங்க காலப்பகுதியிலேயே மோசமடைய ஆரம்பித்தது. திருகோணமலை மாவட்டத்தின் சம்புர் அனல் மின்நிலையம் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டது என்ற குற்றச்சாட்டு இந்திய தூதரக மட்டத்தில் நிலவுகிறது. அதுமட்டுமன்றி நல்லாட்சி காலப்பகுதியில் இந்தியாவிற்கு எதிரான அனைத்து நகர்வுகளிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராமுகமாக இருந்ததென்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
எனவேதான் சட்டவல்லுனர் குழுவை அமெரிக்காவிற்கு அனுப்பி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தீர்மானங்களில் அமெரிக்காவுடன் இணைந்து பயணிக்க முடியுமெனின், இந்தியாவின் அழைப்பை பிற்போடுவதற்கு முன்வைக்கின்ற காரணங்கள் போலித்தனமாகவும் இராஜதந்திரரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகவும் காணப்படுகிறது. இதனை ஆழமாக அவதானித்தல் அவசியமாகும்.
முதலாவது, இந்தியா புவிசார் அரசியல்ரீதியில் முக்கியமான நாடு. இலங்கைத்தீவை தனது பாதுகாப்பு அரணாக கருதும் இந்தியா பூகோள அரசியலிலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பலமான கட்டுமானங்களை கொண்ட அரசாக விளங்குகின்றது. சமகாலத்தில் இந்தோ-பசுபிக் உபாயத்திலும், குவாட் அமைப்புக்களிலும் பிரதான நாடாக இந்து சமுத்திரத்தில் இந்தியா விளங்குவதோடு, வளர்ந்து வரும் பொருளாதார நாடாகவும் அரசியல் உறுதிப்பாடுமிக்க நாடாகவும் காணப்படுகிறது. இந்தியாவை நோக்கி அமெரிக்கர்கள், ரஷ்சியர்கள், அவுஸ்ரேலியர்கள் தொடர்ச்சியாக விஜயங்களை மேற்கொள்கின்ற போது இராஜதந்திர உரையாடலை நிகழ்த்துகின்ற போது ஈழத்தமிழரின் அரசியல் தலைமையின் இந்தியா மீதான அணுகுமுறையில் மேற்கொண்ட தீர்மானம் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்வதற்கு வழிவகுத்துள்ளது.
இரண்டாவது, தமிழ்த்தேசியம் என்பது தமிழ் மக்களின் திரட்சியான அரசியல் பிரக்ஞைகளின் வெளிப்பாடாகும். நீண்ட துயரத்தை அனுபவித்த தமிழ் மக்கள் நாட்டின் எல்லைக்குள் தீர்வை எட்ட முடியாது என்ற நிலைக்குள் பிராந்திய மற்றும் சர்வதேச மட்ட சக்திகளை அணுக வேண்டிய சூழலுக்குள் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிடைத்த வாய்ப்பை தமது தனிப்பட்ட எண்ணங்களுக்காகவும் இலாபங்களுக்காவும் நிராகரித்துள்ளமை ஆபத்தான அரசியலுக்கான இன்னொரு படியாகவே தெரிகிறது. ஸ்ரீபெரம்பத்தூர் ஏற்படுத்திய விளைவின் இன்னொரு கட்டமாகவே சம்புர் சம்பவமும், இந்தியாவின் அழைப்பினை நிராகரித்தமையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, இந்தியாவின் சந்திப்புக்கான அழைப்பினை பிற்போட கோரியதற்கான காரணங்களின் பலவீனம் அழைப்பை நிராகரித்ததற்கு சமனாகவே தெரிகிறது. எனவே ஈழத்தமிழர்கள் மீண்டுமொரு வாய்ப்பினை தவறிவிட்டது என்பதை விட நெருக்கடிக்கு முகம்கொடுக்க தயாராகின்றனர் என்பதனையே கோடிட்டு காட்டுகிறது.
மூன்றாவது, தமிழ்த்தேசியம் தனிப்பட்ட நலன்களின் தேசியமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. தேர்தல் காலத்திலும், பொதுவெளியிலும், பாராளுமன்ற கட்டடத்தொகுதியிலும் தமிழ்த்தேசியம் தொடர்பில் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு தொடர்பானவை என்பதை மேற்படி காரணங்கள் உறுதிப்படுத்துகிறது. ஒரு தேசிய இனத்தின் அபிலாசைகளை அடைவதற்கான வாய்ப்புக்களை பயன்படுத்துபவர்களே அவ்இனத்தின் உண்மையான தலைவராவார். அத்தகைய வாய்ப்பு எதிரியால் வழங்கப்பட்டாலும், நட்பினால் வழங்கப்படாலும், மிகச்சிறிய அளவிலானதாக இருந்தாலும் அதனை பயன்படுத்துவோரே சிறந்த தலைவன் ஆவான் என ஜேர்மனி ஐக்கியத்திற்கு வழிவகுத்த பிஷ்மார்க் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அழைப்பு என்பது எதிரியினதோ, பலவீனமானதொன்றோ அல்லது பெரிய வாய்ப்புக்களை தரக்கூடியதல்ல என்றோ கருதி விட முடியாது. அப்படியாயின் இத்தகைய அழைப்பை நிராகரித்ததன் விளைவை அனுபவிப்பவர்கள் தமிழ் மக்கள் என்பதில் மாற்று எண்ணப்பாங்கிற்கு இடமில்லையென்றே கூற முடியும். முழுமையாக தனிப்பட்ட விருப்புக்களையும், கட்சியின் விருப்புக்களையும் நிறைவு செய்ய விளைந்ததாகவே அத்தகைய நகர்வு தெரிகிறது.
நான்காவது, சீனாவை இலங்கையிலிருந்து அகற்றுவதற்கான முனைப்புக்களே அமெரிக்கா மற்றும் இந்திய ஆகிய நாடுகளின் நகர்வுகளின் பிரதான விடயமாகும். அவ்விடயத்தில் ஈழத்தமிழரின் அரசியல் இருப்பும் அத்தகைய நலனோடு இணைந்து பயணிக்கக்கூடிய சூழலொன்று காணப்படுகிறது. அத்தகைய சூழலை பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அமெரிக்கா-இந்தியா-ஐரோப்பியா கூட்டினால் ஈழத்தமிழருக்கு கிடைத்தது. இந்தியாவை மீறி, இந்திய நலன்களை மீறி அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ ஈழத்தமிழருக்கு உதவப்போவதில்லை. எனவே, ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கூடாகவே அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் அணுகுவது அவசியமாகும். அதற்கான வாய்ப்பு இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகளுக்கூடாக நிறைவு செய்யக்கூடியதொன்றாகவே இந்தியாவின் அழைப்பு அமைந்துள்ளது.
எனவே, இந்தியாவின் அழைப்பு ஈழத்தமிழர்களுக்கு இராஜதந்திரரீதியிலான நகர்வை மேற்கொள்வதற்கானதொரு வாய்ப்பான சந்தர்ப்பமாகும். இத்தகைய விஜயத்தினூடாக இனப்பிரச்சினை தீர்த்து விடலாமென்று விவாதிப்பதை விட அதற்கானதொரு ஆரம்ப படியை உருவாக்கும் சூழல் காணப்படுகிறது. அதாவது, தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரத்தில் எற்பட்டுள்ள வல்லரசு போட்டித்தன்மை. அதில் இந்திய, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்களிப்பு சாதகமான சூழலை உருவாக்க வழிவகுத்திருந்தது. எனினும் பிராந்திய அரசாகிய இந்தியாவின் அழைப்பு நிராகரிப்பு அதிகளவு எதிர்விளைவுகளையே உருவாக்கக்கூடியதாகும். இந்த விளைவுகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையை விட தமிழ் மக்களுக்கானதாகவே அமைய உள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
