உலக அரசியலில் அமெரிக்க ஜனாதிபதியின் மீள் வருகை அதிகமான முரண்பாடுகளை வளர்த்து வருகிறது. உக்ரைன்க்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அதிகமான குழப்பங்களை ஏற்படுத்தி இருப்பதோடு போரின் உண்மையான வடிவத்தை அம்பலப்படுத்துவதிலும் கணிசமான பங்கினைத் தந்துள்ளது. உலகளாவிய போர்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் பொருளாதாரத்தின் பரிமாணத்தைக் கொண்டது என்பது புரிந்து கொள்வதற்கு உக்ரையின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தும் உரையாடல்கள் தெளிவுபடுத்தி நிற்கின்றன. அரசியல் பொருளாதாரத்தை கற்றுக் கொள்ளுகின்ற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பாக பயிற்சி களமாக சமகால அரசியல் நகர்வுகள் அடையாளப்படுத்துகின்றன. இக் கட்டுரையும் உக்ரைன்-ரஷ்சிய போர் ஏற்படுத்தியிருக்கின்ற விளைவுகளை தேடுவதாக உள்ளது.
குறிப்பாக உலகளாவிய ரீதியில் கண்டறியப்பட்ட கனிம வளங்களின் அதிகமாக காணப்படுகின்ற பிராந்தியமாகவும் நாடாகவும் உக்கரையின் அளவிடப்படுகிறது. உக்ரைனின் கண்டறியப்பட்ட கனிம வளங்களின் எண்ணிக்கை சுமாராக 22க்கு மேற்பட்டவை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.உலகளாவிய ரீதியில் ஏறக்குறைய 132க்கு மேற்பட்ட கனிமங்கள் அடையாளம் கண்டு இருப்பதாகவும் அவற்றில் கணிசமானவை பயன்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரியவருகிறது. இதில் உக்ரையின் கண்டறியப்பட்ட கனிமவளங்களை கைப்பற்றுவதற்காகவே உக்ரையின்-ரஷ்சியப் போரை அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் நிகழ்த்தி வருகின்றன என்பது உக்ரையின் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி மீது வைக்கும் விமர்சனங்களிலிருந்து கண்டு கொள்ள முடிகின்றது. அமெரிக்கா இத்தகைய வளங்களில் அல்லது கனிமங்களின் 50 சதவீதத்தை தான் பெற்றுக்கொள்ளவும் அதற்கான பதிலாகவே உக்ரையினுக்கான நிதி உதவிகளையும் பொருளாதார உதவிகளையும் ஆயுத தளவாடங்களையும் வழங்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யுத்தம் தொடங்கி இன்று வரையான காலப்பகுதியில் அமெரிக்கா பாரியாளவிலான நிதியையும் ஆயுத தளபாடங்களையும் தொழில் நுட்பம்சார் ஆயுதங்களை வழங்கி வருகின்றது. இது மட்டுமின்றி பாரியளவிலான நிதி உதவிகளை மேற்கொண்டும் வருகிறது. ஆனால் உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்காவுடனான உடன்பாடு என்பது உத்தரவாதம் அளிக்கப்பட்ட விதத்தில் அமெரிக்காவின் கோரிக்கையை விட ஐந்து விதமான கனிமங்களை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு தாம் உடன்பட்டதாகவும் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய உக்ரைனில் காணப்படும் கண்டறியப்பட்ட கனிமங்களின் பெறுமானம் 11ரில்லியன் அமெரிக்க டாலர் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய கனிமங்களை கைப்பற்றுவது தொடர்பிலே ஐரோப்பிய நாடுகளும் ரஷ்சிய மீதான போரை நிகழ்த்துகின்றன என்ற விடயம் தெளிவாக உள்ளது. அதற்கான அடிப்படைகளை அல்லது விளைவுகளை தேடுவது அவசியமாகும்.
முதலாவது, அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வருகின்ற போது ரஷ்சியா-உக்ரைன் போரை முடித்துக் கொண்டு வரப்போவதாக தேர்தல் பிரச்சாரங்களில் தெரியப்படுத்தி இருந்தார். அதன் பிரகாரம் அவர் மேற்கொண்டு வரும் சமாதான முயற்சி முதல் கட்டமாக சவுதிஅரேபியாவில் அமெரிக்க மற்றும் ரஷ்சிய வெளிவிவகார அமைச்சுகள் சந்தித்து உரையாடியுள்ளன. அந்த உரையாடலின் பின்னரான அமெரிக்க ஜனாதிபதியின் பிரதான பிரச்சாரம் உக்ரையின் ஜனாதிபதி மீதான எச்சரிக்கைகளாகவும் அழுத்தங்களை மேற்கொள்வதாகவும் அமைந்துள்ளது. உக்ரையின் ஜனாதிபதி சர்வாதிகாரி என்றும் அவர் சமாதான உடன்பாட்டுக்கு தயாராக இல்லாதவர் என்றும் போரை முதன்மைப்படுத்தியதே உக்ரைன் ஜனாதிபதி தான் என்றும் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் உக்ரையினிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மோதல் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு பிரிவு வெளிவார அமைச்சின் பிரிவு என்பன ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன் கூற்றுக்களை அங்கீகரித்து செயல்படுவது போன்றே காணப்படுகின்றது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்க்கே ரூபினியோ ரஷ்சிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் உடன் மேற்கொண்ட உரையாடல் அதனை உணர்த்துகிறது. இரு தரப்பும் சுமூகமான உரையாடலை மேற்கொண்டு ரஷ்சியாவின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வது போன்றும் அது நியாயமானது என்றும் வெளிப்படுத்தியது. இங்குதான் ஆழமான முரண்பாடு ஒன்று காணப்படுகின்றது. இப்போருக்கான அடிப்படை உக்ரையின் நேட்டோவோடு இணைவதாகவே அமைந்திருந்தது. நேட்டோவின் பிரதான அங்கத்துவ நாடு அமெரிக்காவாகும். ஐரோப்பிய நாடுகள் அதன் அங்கத்துவத்தை பெற்றிருந்தாலும் நேட்டோவின் தொழிற்பாடு என்பது அமெரிக்காவின் நிதி உதவி மற்றும் இராணுவ திறனிலேயே அதிகம் தங்கி இருக்கின்றது. அமெரிக்கா கருதுகின்ற பட்சத்தில் நேட்டோவின் இருப்பை பலவீனப்படுத்தவோ பலப்படுத்தவோ முடியும். நேட்டோவுக்கு வழங்கும் நிதியினை அமெரிக்கா மட்டுப்படுத்துமாயின் நேட்டோவில் இணைய முனையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல நேட்டோவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்படும். அது மட்டுமின்றி கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மீது மேற்கு நாடுகளின் நேட்டோ விஸ்தரிப்பு என்பது கிழக்கு ஐரோப்பாவில் காணப்படும் கனிமங்களையும் வளங்களையும் கையகப்படுத்துகின்ற உத்தியோடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாக இனங்கானமுடிகின்றது. நேட்டோ ஒர் இராணுவ கூட்டு என்ற உரையாடல் காணப்படுகின்ற அதே நேரம் நேட்டோவால் நிகழ்த்தப்படும் போர்களும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் பின்னால் தெளிவான அரசியல் பொருளாதாரம் மறைந்துள்ளது. போர்கள் அனைத்துமே பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற சிந்தனையை கார்ல் மார்க்ஸ் தனது வரலாற்று பொருள்முதல் வாதத்தில் அடையாளப்படுத்தியிருந்தார். அத்தகைய பெறுமானத்துக்குள்ளேயே நேட்டோ இப்போரினையும் கிழக்கு நாடுகள் மீது நிகழ்த்துகிறது. இதுவே நேட்டோவின் கீழைத்தேச நாடுகள் மீதான ஈடுபாடு அமைந்திருக்கின்றது. இதனால் ஜெலன்ஸ்கி கனிமங்களை கைமாற்றுவதற்கு தயங்குவாராயில் அமெரிக்காவினதும் நேட்டோ இலக்கு தோல்வியடையும். அத்தகைய தோல்வி உக்ரையின் தோல்வியை தவிர்க்க முடியாதக்கும். தற்போது ரஷ்சியா போரை அமெரிக்காவிடம் ஒப்படைத்து இருக்கிறது. அமெரிக்காவும் உக்ரையினும் முரண்படத் தொடங்கி இருக்கின்றனர் என்ற செய்தி ஒரு பக்கமானது இல்லை. கராணம் பிரிட்டன் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கியது மட்டுமின்றி போலாந்திலிருந்து உக்ரையின் அழைக்கப்படும் போது போரில் ஈடுபடுவதற்கு 2500 படைகளை பயிற்சியில் ஈடுபடுத்தி இருப்பதாக தெரியவருகிறது. இது சாத்தியப்படுமாயின் நேட்டோ என்ற அமைப்பு காணாமல் போகும் சூழல் ஐரோப்பாவையும் மேற்குலகத்தையும் முழுமையாக பலவீனப்படுத்தும். இத்தகைய பலவீனமான சூழல் என்பது சாத்தியப்படும் என்பதில் மேற்கு நாடுகள் அதிக கவனம் கொள்ள முயற்சிக்கின்றன. டொனால்ட் ட்ரம்ப்மினுடைய ஆட்சி காலப்பகுதி என்பது ஐரோப்பியர்களுக்கு சவால்மிக்க ஒன்றாக மாற இருப்பது மட்டுமின்றி கிழக்கு நாடுகள் மீதான அணுகுமுறை வேறு விதமானதாக அமைய வாய்ப்புள்ளது.
இரண்டாவது, ரஷ்சியாவைப் பொறுத்தவரை உக்ரையின் மீதான போரை நேட்டோ விஸ்தரிப்பாகவே முதன்மைப்படுத்தி இருந்தார். ஆனால் உக்ரையின் தனது வளங்கள் தொடர்பில் தெளிவான புரிதலும் எண்ணமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உக்ரையின் மீதான போரை ரஷ்சியா தொடக்கும் போது கிழக்கு ஐரோப்பாவை பாதுகாப்பதற்கான உத்தியாகவே அமைந்திருந்தது. கிழக்கு ஐரோப்பாவின் வளங்களையும் அவற்றின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகவே மேற்கொள்ளப்பட்தென்பது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தலைவர்களுக்கு செய்தியாக மாறி உள்ளது. அதையே செய்திக்காக நீண்ட காலம் உக்ரைன் மேற்குலக உறவைவை ரஷ்சியா விமர்சித்ததோடு ஐரோப்பா மீதான நடவடிக்கைகளையும் ரஷ்சியா வெளிப்படுத்தியிருந்தது. மேற்கு நாடுகளின் கரிசனை என்பது வளங்கள் மீதான கவனமே அன்றி மக்கள் மீதானதோ; நாடுகளின் இறைமை மீதானதோ; தேசங்களின் சுயநிர்ணயம் சார்ந்ததோ கிடையாது. மாறாக வளங்களும்; சந்தையும்; வர்த்தகமே மேற்கு உலகத்தின் பிரதான இலக்கு என்பது தெளிவாக உணர முடியும். அல்லது உணர்த்தியுள்ளது. அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரையின் உடனான உறவை தெளிவாக கனிம வளங்கள் சார்ந்து கட்டமைத்துள்ளது. அதற்கு பதிலாகவே ரஷ்சியாவுக்கு எதிரான போரை நகர்த்துவதற்கான ஆயுத தளபாடங்களையும் நிதி உதவிகளையும் மேற்கொண்டுள்ளது. ஏறக்குறைய மேற்கு நாடுகளின் நலன்களுக்கும் அந்த நாடுகளின் உள்ள மக்கள் சுகபோக வாழ்க்கையை அல்லது பொருளாதாரப் பலத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளவும் உக்ரைனிய-ரஷ்சிய மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி தவிர்க்க முடியாது. இங்கு தான் உக்ரையின் ஜனாதிபதியின் பலவீனமும் அந்த மக்களின் அயல்நாடு மீதான புவிசார் அரசியல் புரிதல் என்பதையும் தெளிவுப்படுத்துகிறது. எத்தகைய நியாயப்பாடுகளை உக்ரைனிய மக்கள் முன்வைத்தாலும் அடிப்படையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சேவை செய்பவர்களாகவே அல்லது பலியிடப்படுபவர்களாகவே காணப்படுகின்றனர்.
எனவே உக்ரையின்-ரஷ்சியப் போர் முடிவுக்கு வருகிறது என்பதை கடந்து கிழக்கு ஐரோப்பா காணப்படும் வளங்களை பாதுகாப்பதில் எச்சரிக்கையுடன் அந்த நாட்டுத் தலைவர்களும் மக்களும் செயல்படுவதற்கான சூழல் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படுத்தி இருக்கின்றார். அமெரிக்காவின் உள்நோக்கங்கள் எதுவாக இருந்தாலும் இத்தகைய வெளிபாடு என்பது ரஷ்சிய அமெரிக்க உறவை பலப்படுத்துவது மட்டுமின்றி எதிர்காலத்தில் ஐரோப்பா நேட்டோ போன்ற அமைப்புகள் எதிர்கொள்ள உள்ள சவால்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமானது. ஐரோப்பா பாதுகாக்கப்பட வேண்டுமாயின், நேட்டோவின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமாயின், அமெரிக்காவின் ரஷ்சியா உடனான உரையாடல் வெற்றிகரமானதாக அமைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது ஒர் அரசியல் பொருளாதாரம் பொறிமுறைக்கான நியமங்களை விளங்கிக் கொள்ள உதவுகிறது. உலகத்தின் இயங்கியல் போக்கு என்பது பொருளாதாரத்தை அதன் மையவோட்டானது வளங்களை முதன்மைப்படுத்தியது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)