அரசியல் கட்டுரைகள்

தமிழ் மக்களின் உப்புத் தேசியமும் தேசிய மக்கள் சக்தியும்?

இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் இனவாதம் பிரதான உரையாடலாகவே அமைந்துள்ளது. ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது தென் இலங்கையின் ஆட்சியாளர்கள் சிங்கள மக்களை பெரும்பான்மை இனத்தின் பெயரால் தூண்டி விடப்பட்டதன் விளைவுகளாக படுகொலைகளும் இனப்படுகொலைகளும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் அரங்கேற்றப்பட்டன. அத்தகைய ஒரு நீண்ட துயரத்தின் விளைவில் புதிதாக ஆட்சிக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியும் இனவாதத்தை முற்றாகவே ஒழித்து கட்டுதல் என்ற பிரச்சாரத்தோடு வடக்கு கிழக்கு மீதும் இலங்கை தீவின் மீதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி பிரயோகித்து வருகின்றது. இனவாதம் என்பது ஓரினம் இன்னோர் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளும் அழிப்புகளும் அதன் மீதான அச்சுறுத்தல்களும் உள்ளடக்கப்படும். அவ்வாறு பாதிக்கப்படும் ஒர் இனத்தின் மீது அந்த இனத்தின் பண்பாட்டை, மொழியை அதன் இருப்பு மீதான ஆக்கிரமிப்பை பொருளாதாரம் மீதான தடைகளை உள்ளடக்குவது இனவாதமாகும். உலகளாவிய ரீதியில் இனங்கள் தமது அடையாளத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு தேசிய உணர்வுகளை மேல்நிலையைபடுத்தி தேசியவாத உணர்வுகளை உருவாக்கி தமது நிலத்தின் மீது பிற இனத்தின் ஆக்கிரமிப்பை தடுப்பது என்பது நியதியாகவே உள்ளது. இங்கு ஒர் இனத்தின் மீது இன்னுமொரு இனம் ஆக்கிரமிப்பு செய்வது இனவாதம் என அடையாளப்படுத்திக் கொள்ளப்படுகிறது. இக்கட்டுரையும் அமைச்சர் பிமல் ரட்நாயக்க உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது வவுனியாவில் ஆற்றிய உரையின் உண்மைத்தன்மை தேடுவதாக அமையவுள்ளது.

அமைச்சர் பிமல் ரட்நாயக்காவின் உரையின் பிரதான உள்ளடக்கத்தை முதலில் நோக்குவது பொருத்தமானது. ஆணையிறவு உப்பு உற்பத்தியை தேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஆரம்பித்துள்ளோம். உப்பு பாக்கெட்டில் பெயர் பிழையாக சிங்களத்தில் அமைந்துள்ளது என வடக்கின் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். உப்பிலே பார்ப்பது சுவையையா? அல்லது பெயரையா? இவ்வாறு சிறிய விடயங்களுக்கு இனவாதத்தை தூண்டுவதற்கு வடக்கிலும் தெற்கைப் போன்று அரசியல் வாதிகள் உள்ளனர் என்றார். மேலும் அவர் குறிப்பிடுகின்ற போது இலங்கையிலுள்ள மிகப்பெரிய தமிழ் கட்சி தேசிய மக்கள் சக்தியே. வன்னி, யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய தமிழ் கட்சி தேசிய மக்கள் சக்தியே என்று குறிப்பிட்டுள்ளார். ரட்நாயக்காவின் அரசாங்கம் நீண்ட ஆயுதப் போராட்டத்தை நடத்திய சோஸலிஸ சிந்தனையால் கவரப்பட்ட இடதுசாரிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியல் கட்சியின் அடிப்படையில் இருந்து எழுந்த கருத்தியலாகும். அத்தகைய எண்ணம் பொருத்தப்பாடு உடையதா என்பதை விளங்கிக் கொள்வது அவசியமானது. இதனை அரசியல் இலக்கணம் என்ற நூலை எழுதிய ஹரோல் லக்ஸ்கியின் வார்த்தைகளில் இருந்து விளங்கிக் கொள்ள முயற்சிப்பது பொருத்தப்பாடு உடையது.

உலக வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டு தேசியத்தின் வளர்ச்சி காலமாக விளங்குகிறது. நவீன தேசியம் என்பது பரந்ததொரு பார்வையில் பிரிவினையைத் தாண்டி எழுச்சி பெறவில்லை. அதற்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஓர் இறையாண்மை படைத்த அரசின் பொறுப்புக்கள் தேவைப்படுவதால் தனது கருத்தியல் அமைந்துள்ள பழைய எல்லாவித வடிவங்கள் இருந்தும் வேறுபடுகிறது. அதனால் சுய போதாமையின் தெளிவான அறிகுறிகளை அது நாடுகிறது. ஒவ்வொரு தேசியத்துக்கும் தன்னாட்சி கொண்டதும் சார்பற்றதுமான ஒர் அரசாங்கத்தை வேண்டுகிறது. இத்தாலியன் ஆஸ்திரியக்காரனுக்கு சேவை செய்ய மாட்டான் பல்கேரியன் துருக்கியனுக்கு வேலை செய்ய மாட்டான். மிக நுணுக்கமான பாதுகாப்பை வேண்டுகின்ற எல்லைகளை தேசிய இனங்கள் தேடுகின்றனர். ஜெர்மனியின் படையெடுப்பை தடுக்க பிரான்சுக்கு ரைம்நதி எல்லை தேவைப்படுகிறது. இவை யாவும் ஒரு தேசியம் முதிர்ச்சி அடைந்து விட்டது என்பதை காட்டுகின்றது. எல்லா விதத்திலும் அந்தந்த பகுதி வாழ் மக்களே அமெரிக்காவைப் போல ஆக்கிரமிப்புக்கு எதிராக மூடுபோர்வையில் இருந்து விடுபாட்டை தேடி வருகின்றன. அவை முழுக்கவசம் அணிந்த தேசிய அரசாக எழுச்சி பெற்றுள்ளன. தேசியம் என்ற கருத்தை இனம் என்பது சந்தேகத்துக்குரிய முக்கியத்துவம் கொண்டது என்பதை அமெரிக்காவில் எழுச்சி தெளிவுபடுத்தி உள்ளது. உண்மையாகவே பழைய ஐரோப்பிய தேசங்கள் எதுவும் இனத்தூய்மைக்கு தீவிரமாக சொந்தம் கொண்டாட முடியாதவைகளாக உள்ளன. மொழி பண்பாடு பொருளாதாரம் என்பன ஒர் இனத்தின் அடையாளத்தை தெளிவுபடுத்துவதோடு வரலாறு தேசிய அளவிலான சார்பை கொண்ட ஒர் இனத்தின் வடிவமாக விளங்குகின்றது. ஒரு தேசத்தை பிரிப்பதற்கு சொந்த நாடு உடைமை என்ற கருத்து முக்கியம் பெறுகிறது. யூதர்கள் போன்று தேசியம் என்பதற்கு மிக அவசியமான நட்புடமை என்பதை விட திரும்பபெறுவதை நோக்கிய எழுச்சி முக்கியமானதாக கொள்ளப்படுகிறது. பரந்த பார்வையில் இனத்தின் அடையாளம் பிற மக்களிலிருந்து தங்களை பிரித்தறியக் கூடிய சிறப்பு தகமையை தேசியம் உண்டாக்கியுள்ளது. அதன் விளைவு ஒரு பொது வரலாறு பொது அடைவுகள் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட மரபுகள் ஆகியவற்றால் ஆக்கப்படுகிறது. மனிதர்களை ஒன்றாக இணைக்க கூடிய ஒர் உறவு உணர்ச்சியாக வளர்கிறது. தங்கள் ஒற்றுமைகளை அவர்கள் உணர்கிறார்கள். பிற மனிதர்களிடமிருந்து தங்களை அல்லது தங்கள் வேறுபாட்டினை வலியுறுத்துகிறார்கள். ஒரு மனிதன் தனது சொந்த பண்பினை தனது வீட்டுக்கு நுழைப்பது போல் அவனுடைய சமூக பாரம்பரியத்துக்கும் வாழ்வியலுக்கும் அவர்களுக்கு உரிய தனித்தன்மை கொண்டதாக வடிவமைக்க முயலுகின்றார்கள். அவர்களுக்கு என பிரதேசங்களில் இருந்து வேறுபட்டு பிரித்தறியக்கூடிய ஒரு கலை, ஒரு இலக்கியம், ஒரு பொருளாதாரம் ஆகியவை உள்ளடக்கப்படுகிறது. தேசியம் என்பது மொழியால் இன அடையாளத்தால் பொருளாதாரத்தால் கூடி வாழும் தன்மையை குறிப்பது என விபரிக்கின்றார்.

அரசியல் இலக்கணத்தை முன்னிறுத்திய லஸ்கியின் வார்த்தைகள் இனத்தின் இருப்பையும் அதன் அடையாள அவசியத்தையும் கோடிட்டு காட்டுகிறது. ஓர் இனத்தின் அடையாளம் அந்த இனத்தின் வளங்களிலும் அதாவது பொருளாதார குறிகாட்டிகளிலும் தங்கியுள்ளது என்பது லஸ்கியன் அரசியல் இலக்கணம் குறிப்பிடும் ஒரம்சமாகும். இன வாதம் என்பது அந்த இனத்தின் மீது இன்னும் ஒர் இனம் மேற்கொள்ளுகின்ற ஆக்கிரமிப்பையே குறிப்பதாகும். அத்தகைய ஆக்கிரமிப்பு எத்தகைய வடிவில் நிகழ்ந்தாலும் அது இனவாதமாகவே கருதப்படும். இலங்கை தீவின் கடந்த கால வரலாறு முழுவதும் நில ஆக்கிரமிப்பாக, பண்பாட்டு மீதான ஆக்கிரமிப்பாக, மொழி மதம் மீதான ஆக்கிரமிப்பாக விளங்கியதோடு தற்போது அவற்றின் மேல் அதிகமான கட்சி அரசியல் ஆக்கிரமிப்போடு நீட்சி பெறுகிறது. வடக்கு கிழக்கு என்பது ஒரு தேசிய இனத்தின் நீண்ட கால இருப்பின் வடிவம் என்பதை இலங்கைத்தீவில் மட்டுமல்ல உலக வரலாற்றிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய அடையாளப்படுத்தல் மீது வைட்கப்படுகின்ற விமர்சனமும் விவாதமும் அத்தகைய அரசியல் மீதான ஆக்கிரமிப்பு வாதமாகவே கொள்ளப்பட வேண்டும். ஆட்சியில் இருக்கும் சக்திகள் தமது நலன்களையும் வாய்ப்புகளையும் முன்வைத்து மக்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும். அதனை மேற்கொள்ளுகின்ற அணுகுமுறைகளிலும் அவை பின்பற்றப்படுகின்ற முறைமைகளையும் அவதானித்தால் அது ஒரு வகையில் கட்சி அரசியல் ஆக்கிரமிப்புக்கான விடயமாகவே தென்படுகிறது. அத்தகைய ஆக்கிரமிப்பு முழுமைப்படுத்தப்பட்ட அல்லது அடையாளப்படுத்தப்பட்ட இனத்தின் வடிவத்தை பலவீனப்படுத்துவதாகவும் அழிப்பதாகவும் விளங்குகிறது. இதனால் ஆக்கிரமிப்பு நீட்சி என்பது எல்லா வடிவத்திலும் இனவாதமாகவே உள்ளது. இது வட கிழக்கு மீதான இனவாதத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பாக அமைவதோடு இன்னொரு வகையில் கட்சி அரசியல் ஆக்கிரமிப்பிக்கான வடிவமாக இதனை புரிந்து கொள்ள வேண்டிய தேவை எழுந்து.

முதலாவது ஆனையிறவு உப்பு என்பது வடக்கு மக்களின் பிரதான உற்பத்தி பொருட்களில் ஒன்றாகும். இந்த மக்களின் உற்பத்தி பொருள் ஒன்றை இன்னொரு மொழியில் அடையாளப்படுத்துவது என்பது ஆக்கிரமிப்புக்கு சமமானதாகும். இத்தகைய உற்பத்தி பொருளை இந்த மக்கள் தமது நுகர்வுக்கும் தமது பொருளாதார தேவைக்கும் பிரயோகப்படுத்துவதே யதார்த்தமான வளத்தின் பிரயோகத் தன்மையாகும். மாறாக அத்தகைய பொருளை இன்னொரு மொழியில் அடையாளப்படுத்துவது என்பது அந்த இனத்தின் பொருளாதாரத்தை அதன் அடையாளத்தை இனத்தின் அடையாளத்தை சிதைப்பதற்கு ஒப்பானது. அதே போன்று வடக்கு கிழக்கு இருக்கும் வளங்கள் வடக்கு கிழக்கு மக்களுக்கு உரித்துடைய அடையாளத்தை முதன்மைப்படுத்துவதோடு அதன் பங்களிப்பை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் அமைந்திருத்தல் வேண்டும். அதனை மீறுகின்ற ஒவ்வொரு செயலும் வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை அதன் பெயரால் கட்டமைக்கப்பட்ட இன அடையாளத்தை அழிப்பதாகவே அமையும். இது இனவாதத்தின் இன்னொரு நீட்சியாகவே தென்படுகிறது. அவ்வகைப் பொருள் ஒன்றின் உற்பத்தியும் அதன் பெறுமானமும் அதன் விற்பனையும் அந்த இனத்தின் அடையாளத்தின் பெயரினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்படுகின்ற போதே அந்த இனத்தின் அடையாளம் அங்கீகரிக்கப்படுவதாக கருதப்படும். அதுவே சமத்துவத்தின் அடிப்படையாகும். இந்திய விடுதலைப் அபோராட்டத்தின் போது மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கரகப் போராட்டம் இந்தியர்களை ஒன்றிணைத்தது மட்டுமல்ல இந்தியர்களின் வளங்கள் மீதான வெள்ளையரின் ஆக்கிரமிப்பையும் எதிர்த்த போராட்டமாகும்.

இரண்டாவது வடக்கு கிழக்கு பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகள் பிரதேச அடிப்படையில் எழுச்சி பெற்றிருக்கின்றன. அத்தகைய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் தலைமைகளாக விளங்குகின்றன. தமிழ் மக்களின் இலட்சியங்களை கொண்ட கொள்கைகளை அடைவதற்கான வழிமுறையாக தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் தேசிய மக்கள் சக்தி என்பது ஜேவிபி என்று அழைக்கப்படும் ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட தென்னிலங்கையில் எழுச்சி பெற்ற சோஷலிச முகர்மை பிரதிபலிக்கின்ற ஒன்று என்பது இலங்கை வரலாற்றில் தெரிந்த ஒரு விடயமாகும். அத்தகைய கட்சி ஒன்று தமிழ் கட்சியாக அலங்கரிக்கப்படுவது என்பது அரசியல் கட்சி என்பதை தெரிந்து கொள்ளாத பதிலாகவே தெரிகிறது. ஒரு கட்சி ஒர் இனத்தையும் பிரதேசத்தையும் அந்த மக்கள் கூட்டத்தையும் பிரதிபலிக்கின்றதென்றாகும். குட்சியானது இனம் மொழி பண்பாடு சார்ந்த கொள்கை என்பன அதன் அடையாளக் கூறுகளாக விளங்குகின்றன. இலங்கையில் இடதுசாரி கம்யூனிச கட்சிகள் இருப்புக் கூட இனத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, ஒரு கட்சி அரசியல் என்பதன் அடிப்படைகளின் புரிதல் என்பது இங்கு அவசியமானது வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சியாக அடையாளப்படுத்தப்பட வேண்டுமாயின் அதன் இலட்சியம் அடைவதற்கான வழிமுறை அதன் தலைமை அதன் கொள்கை கோட்பாடு வடக்கு கிழக்கு தமிழர்களின் உரிமை சார்ந்த உள்ளடக்கங்களை பிரதிபலிப்பபதாக அமைதல் வேண்டும். அவ்வாறு அன்றி ஒரு சூழலை அல்லது தேர்தலை மையப்படுத்திக் கொண்டு கட்சி அரசியலை உரையாடுவது மோசமான அரசியல் நாகரீகமாகவே தெரிகிறது.

எனவே, உலக வரலாற்றில் இடதுசாரிகள் தேசிய இனங்களின் விடுதலை நோக்கிய கோட்பாட்டையே முதன்மைப்படுத்தியுள்ளனர். முதலாளித்துவாதிகள் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை உதட்டளவில் உச்சரித்த நிலையில் அதன் நடைமுறை வடிவத்தையும் அதன் பெயரால் தேசிய இனங்களின் இணக்கப்பாட்டை உருவாக்குவது இடதுசாரிகள் முதன்மையானவர்கள். அதற்கான வரலாற்று பதிவுகளும் அனுபவங்களும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதல் கொண்டு முன்னாள் சோவியத்யூனியன் வரையும் கண்டு கொள்ள முடிகிறது. அத்தகைய மரபுக்குள்ளால் தம்மை அடையாளப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி இன அடையாளம் மற்றும் இனவாதம் என்பதை புரிந்து கொள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் காணப்படும் போக்கினை அதிர்ச்சியோடு நோக்க வேண்டியுள்ளது. ஒர் இனத்தின் அடையாளமே அந்த இனத்தின் நிலம் பண்பாடு மொழி பொருளாதாரம் போன்றவற்றின் தங்கியுள்ளது. ஆனையிறவு உப்பை அதற்குரிய பெயரில் முன்மொழிய முடியாத அரசியல் கட்சி தமிழ் கட்சியாக எப்படி ஆக முடியும் என்பது முக்கியமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி:தினக்குரல்)