December 12, 2024
அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழரது அரசியலில் சம்பந்தனின் இந்தியா பொறுத்த வகிபாகம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சம்பந்தன் மறைவு இக்காலத்தில் குறிப்பிடத்தக்க பதிவாக மாறியுள்ளது. அவரது அரசியல் வாழ்வென்பது நீண்டதானாலும் 2009களுக்கு பின்பே முக்கியத்துவம் கொண்டதாக அமைந்திருந்தது. 2009களுக்கு பின்னான கடந்த 15 வருடங்கள் ஈழத்தமிழரது அரசியலில் சம்பந்தனின் செயல்பாடுகள் தவிர்க்க முடியாது மதிப்பிடப்பட வேண்டிய அரசியலாக உள்ளது. இக்காலப்பகுதியானது தனித்துவமானதும் வாய்ப்புக்கள் கொண்டிருந்ததும் சம்பந்தன் அதனை பயன்படுத்த தவறியதும் நினைவு கொள்ளப்பட வேண்டியதாகும். காரணம் ஈழத்தமிழ் அரசியலில் ஈடுபட்டுள்ள எஞ்சிய வாதிகளுக்கும் வரப்போகும் அரசியல் வாதிகளுக்கும் சம்பந்தனின் அனுபவம் பகிரப்பட வேண்டும். சம்பந்தன் ஈழத்தமிழரின் அரசியல் தளத்தில் இருந்து கொண்டு தென் இலங்கையோடு, பிராந்திய அரசான இந்தியாவோடு, சர்வதேச சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனாவோடு, எத்தகைய வகிபாகத்தை பின்பற்றினார் எனத் தேடுதல் செய்வது பொருத்தமானதாக அமையும். இதில் ஈழத்தமிழரது அரசியல் தளத்தில் நின்றுகொண்டு சம்பந்தனின் இந்தியா பொறுத்த வகிபாகத்தை அதிகம் முதன்மைப்படுத்த இக் கட்டுரை முயல்கிறது.

போரின் இறுதிக்கணங்கள் முள்ளிவாய்க்காலில் அரங்கேறும் போது சம்பந்தன் இந்தியாவில் இருந்துள்ளதற்கான ஆதாரங்களுடன் அதிகம் பேசப்பட்டுள்ளது. சம்பந்தன மட்டுமல்ல ஏனைய கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் கூட வெளிநாடுகளில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் கட்சிகளை கட்டமைத்து அதன் தலைவராக அடையாளப்படுத்திய விடுதலைப்புலிகளும் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய தமிழ் மக்களும் பாரிய நெருக்கடிக்குள் அகப்பட்டு இருந்த போது சம்பந்தன் இந்தியாவில் இருப்பதென்பது அவர் மீதான விமர்சனத்தின் தொடக்கப்புள்ளி அல்ல. அவர் இந்தியாவில் இருந்து கொண்டு போரை தடுத்து நிறுத்துவதற்கு எத்தகைய எத்தனமும் மேற்கொள்ளவில்லை. மாறாக இறுதிக்கட்ட தொலைபேசி உரையாடல்களைக்கூட தவிர்த்திருந்தார் என்பது மறக்க முடியாத செய்தியாகும்.

தனக்கு வாக்களித்த மக்களை பாதுகாக்க எண்ணியிருந்தால் சம்பந்தன் சென்னையிலேயோ, புதுடில்லியிலேயோ ஒரு பெரும் போராட்டத்தை திட்டமிட்டிருக்க முடியும். அது புதுடில்லி மட்டுமல்ல உலகமோ கவனத்தில் கொண்டிருக்கும். ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவித் ஈமிழர்கள் கொல்லப்படும் துயரததை தவிர்த்திருக்க வாய்ப்பு இருந்தது. சத்தியாக்கிரகப் போராட்டங்களாலும், உண்ணாவிரப் போராட்டங்களாலும் பிரித்தானிய குடியேற்றத்திற்கு எதிராக மகாத்மா போராடினார் என்பதைவிட குடியேற்றவாதிகள் முன்னெடுத்த நடவடிக்கைகளை இந்திய மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தோற்கடித்தார். அத்தகைய அகிம்சைத் தேசத்தில் நின்று கொண்டு ஈழத்தமிழர்களை சம்பந்தன் பாதுகாக்கத் தவறியிருந்தார். இன்னோர்வகையில் கூறுவதானால் ஈழத்தமிழர் மீதான படுகொலைக்கு சம்பந்தன் துணைபேனார் என்றே கணிப்பிட வேண்டியுள்ளது. அவரது மௌனமும் அசமந்தப் போக்கும் அதனையே வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு பின்னர் பதவிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தும் வாய்ப்பு காணபபட்ட போதும் அதனை சரிவரப பயன்படுத்த சம்பந்தன் தவறியிருந்தார். இரு தடவை நரேந்திர மோடி இலங்கை வருகைதந்த போதும் அதில் ஒருதடவை யாழ்ப்பாணம் வருகை தந்தபோதும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயல்பட்டு தீர்வை நோக்கி நகர சம்பந்தன் முயலவில்லை. தென் இலங்கைத் தலைவர்களின் வாய்வார்த்தைகளை நம்பி இந்தியாவை சரிவரப் பயன்படுத்தாது செயல்படட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் வருகைதந்த போது அதனை ஒரு கொண்டாட்ட நிகழ்வாகக் கூட்டமைப்பு கருதியதே அன்றி தீர்வுக்கான உரையாடலை நோக்கி பிரதமரது விஜயத்தை சம்பந்தன் பயன்கொண்டதாக மாற்றவில்லை. கூட்டமைப்பாக டில்லி சென்ற போதும் அதன் நீட்சியை பேணவில்லை என்பது மட்டுமல்லாது தீர்வை எட்டுவதற்கான சாத்தியமான வழிமுறைகளை இந்தியத் தரப்புக்கு முன்வைக்கவில்லை. 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்குள் செயல்பட முனைந்த இந்தியாவை அதனைத் தாண்டி செயல்படுத்த முனைவில்லை. அது மட்டுமல்லாது அரசியலமைப்பிலுள்ளதை அமுல்படுத்த தூதுவர்களும் வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தையும் சந்திப்புகளும் தேவையா என்ற எண்ணத்தை சம்பந்தன் ஒருதடவை ஏனும் பிரதிபலிக்கவில்லை. 13 ஐ அமுல்படுத்த கூட்டமைப்பிலுள்ள இதர கட்சிகள் இந்தியாவுக்கு கடிதம் எழுத முயன்ற போது அதனை சரிவரக்கையாளாது ஒப்புதல் வழங்கிய துயரத்தை சம்பந்தன் கொண்டிருந்தார்.

2022ஆம் ஆண்டு இந்தியா கூட்டமைப்பாஅழைத்து போது பலகாரணங்களை தெரிவித்து சம்பந்தன் இந்திய விஜயத்தை நிராகரித்திருந்தார். ஒரு புவிசார் அரசியல் சக்தியின் அழைப்பினை புறந்தள்ளும் அரசற்ற சமூகத்தின் தலைமையின் நகர்வென்பது எவ்வளவு மோசமானது அரசியல் இராஜதந்திரம் என்பதை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். இந்தியாவைக் பயன்படுத்தி தென் இலங்கை ஈழத்தமிழரை எவ்வாறு கையாளுகிறது என்ற சதாரண புரிதல்கூட இல்லாது சம்பந்தனின் இந்தியா பொறுத்த நகர்வு காணப்பட்டது. இந்தியாவுக்கு இலங்கைத் தீவு முழுமையாக தேவை என்ற அடிப்படையில் அதன் நகர்வுகள் அமையும் என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால் அதனை எப்படி ஈழதிதமிழருக்கு இசைவானதாகப் பயன்படுத்துவதென்பதே முக்கியமானது. தென் இலங்கை உண்மையாக இந்தியாவுடன் இல்லை என்பதும் தெரிந்த விடயம். இதற்குள் இந்த-யாவை அரவணைத்து செயல்பட வேண்டிய பொறுப்பு தமிழ் தலைமைகளுக்கு இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியது. இதில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பு இயங்குவதென்ற சில தரப்பின் குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவர்கள் புவிசார் அரசியலின் கேந்திர முக்கியத்தவத்தை புரிந்து கொள்ளாதவர்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியாததென்றும் கிடையாது. ஆனால் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை வைத்த தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவை கையாளுவதில் சம்பந்தனின் தலைமை தவறிளைத்ததாகவே கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் என்பது ஒர் இராஜதந்திரக் கலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் நாட்டைக் கடந்து எடுக்கப்படும் நகர்வகள் ஒவ்வொன்றும் இராஜதந்திர அணுகுமுறைக்கு உட்பட்டது. இந்தியாவிடம் அடிமையாக செயல்படுத்தல் என்பது வேறு இந்தியாவை அரவணைத்து செயல்படுவதென்பது வேறு. இந்தியாவை புறந்தள்ளுதல் என்பது ஈழத்தமிழரது அரசியல் அடிமைத்தனத்திற்கு வழிவகுப்பதுடன் ஈழத்தமிழரது அரசியல் தற்கொலைக்கு வித்திடக் கூடியது.

ஜனநாயக அரசியலில் எதிர்கட்சித் தலைமை என்பது வலுவான இராஜதந்திரப் பதவியாகும். சும்பந்தன எதிர்கட்சித் தலைவரான பின்னர் இந்தியாவுக்கு எத்தனை தடைவை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார் என்று பார்த்தால் அதன் பெறுமானம் புரிந்து கொள்ள முடியும். அதாவது அந்தப் பதவி ஏன் சம்பந்தன் அமர்த்தப்பட்டார் என்பது விளங்கிக் கொள்ள முடியும். தென் இலங்கையுடன் இணைந்து இந்தியாவை தவிர்க்க முயன்றார் என்பதைக் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இந்தியாவுக்கு சென்றிருந்தாரே அன்றி தமிழர்களது நலன் பொறுத்து எதிர்கட்சித் தலைவராக இந்தியாவை அணுகவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமான பேச்சுக்களின் போது அப்போதைய எதிர்கட்சித் தலைவரான ரணில்விக்கிரமசிங்ஹா இந்தியாவுக்கு ஆறுதடவைக்கு மேல் விஜயம் செய்திருந்தார். பேச்சுவார்த்தைக் காலத்தில் மட்டும் என்பது கவனத்திற்குரியது. எரிக்சொல்ஹெய்ம் ஒருபுறம் ரணில்விக்கிரமசிங்ஹா மறுபுறமும் என இந்தியாவுக்கு இரு தரப்பும் பேச்சுவார்த்தை சார்ந்து உரையாடல்களை மேற்கொண்டிருந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தென் இலங்கைத் தலைவர்கள் மட்டுமல்ல பேச்சுவார்த்தைக்கு தலைமைதாங்கிய நோர்வே நாட்டுத் தூதுவர்களும் இந்தியாவின் புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தை புரிந்துள்ளனர் என்பதே அதன் சாரம்சமாகும். ஆனால் பயன்படுத்த வேண்டிய ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்ப்புவாதத்தையும் முரண்பாட்டையும் வளர்த்து தீர்வற்ற சூழலை மட்டுமல்ல முழுமையாகவே ஈழத்தமிழரின் அரசியல் அழிவிற்கு வழிவகுக்கின்றனர்.

2009களுக்கு பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிடம் காணப்பட்டது. மிதவாத அரசியலில் இந்தியாவுடன் சமதரப்பாக இருந்து கொண்டு செயல்படக் கூடிய பாராளுமன்ற பலமும் கூட்டுப்பலமும் கூட்டமைப்பிடம் காணப்பட்டது. தமிழகத்துடனும் புதுடில்லியுடனும் இணைந்து செயல்படும் உத்திகள் எதனையும் வகிக்காது தென் இலங்கையுடன் கூட்டுச்சேர்ந்து இயங்கியதன் விளைவே ஈழத்தமிழரது தற்போதைய அரசியல் வறுமைக்கு அடிப்படையாகும்.தமிழகம் மக்கள் திரட்சி கொண்ட ஈழத்தமிழருக்கு ஆதரவான மக்களைக் கொண்ட நட்புச்சக்தி என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். தமிழகத்தை தளமாகக் கொண்டு புதுடில்லியை கையாள முடியும் என்ற அனுபவம் அவசியமானது. இத்தகையவிடயங்களை கைவிட்டு தென் இலங்கையுடனான கூட்டுக்குள் இசைந்து செயல்பட்டதனால் இந்தியாவையும் ஜெனீவாவையும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு கைவிடுவதற்கு வழியமைத்தது. ஆனால் தென் இலங்கை சம்பந்தனை ஏமாற்றிக் கொண்டு இந்தியாவுடனும், மேற்குலகத்துடனும் நல்லறவை வளர்த்துக் கொண்டதுடன் போர்குற்றச்சாட்டுக்களை நீத்துப் போகச் செய்வதில் வெற்றி கண்டுள்ளது. இவை தொடர்பில் எல்லாக் காலமும் எச்சரிக்கை செய்த போதும் அவை எதனையும் கருத்தில் கொள்ளாது செயல்பட்டதன் விளைவே ஈழத்தமிழரது அரசியலில் சம்பந்தன் அவர்கள் ஏற்படுத்திவிட்டுள்ளார்.

எனவே, அமரத்துவம் அடைந்துள்ள சம்பந்தன் இந்தியாவுடனான ஈழத்தமிழரது உறவை இராஜதந்திர ரீதியிலோ அல்லது தந்திரோபாய ரீதியிலோ அணுகத் தவறியிருந்தார். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிவரை இந்தியாவுடன் பயணித்த சம்பந்தன் அதன் பின்னர் முழுமையாக தென் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயல்பட முனைந்தார். அப்போது இந்தியாவை புறந்தள்ள ஆரம்பித்தார். இந்தியா ஒரு புவிசார் அரசாக மட்டுமல்லாது பூகோள அரசாகவும் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் இந்தியாவை பகைத்துக் கொள்வது ஈழத்தமிழரது அரசியல் இருப்புக்கு அபாயமானதாகவே தெரிகிறது. சம்பந்தனின் அனுபவம் அடுத்துவரும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைவதுடன் இந்தியாவை அரவணைத்துக் கொண்டு செயல்படும் கொள்கை அவசியமானது. இதன் அர்த்தம் இந்தியாவிடம் அடிமையாவதல்ல. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குவதுமல்ல. மாறாக தமிழ் தேசிய அரசியலை ஒரு தரப்பாகக் கொண்டு இந்தியாவை அணுகுவதாகும். சும்பந்தன் அவர்களிடம் விடுதலைப்புலிகள் தமிழ் தேசிய சக்திகளை ஒரு தரப்பாக கொள்ளும் வாய்ப்பினை உருவாக்கி ஒப்படைத்திருந்தனர். அதனை அவர் பேணத்தவறியன் விளைவே தற்போதைய ஈழத்தமிழரது அரசியல் இருப்பின் பலவீனமாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)