October 6, 2024
அரசியல் கட்டுரைகள்

சுயநிர்ணய உரிமையும் ஈழத்தமிழரின் அரசியலும்?

2024 க்கான ஜனாதிபதி தேர்தல் களம் தென் இலங்கையைவிட தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்திலேயே அதிகம் சூடுபிடித்துள்ளதாகவே தெரிகிறது. கடந்த மே மாதம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹாவும் யூன் மாதத்தின் 10-13 திகதிகளில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸாவும், மக்கள் சக்தியின் சார்பில் அதன் ஜனாதிபதி வேட்பாளர் அநுராகுமார திசநாயக்காவும் வருகை தந்து பிரச்சாரங்களையும் உத்தரவாதங்களையும் வழங்கிவருகின்றனர். அதே நேரம் வடக்கு கிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பொதுச்சபையாக தம்மைப்பிரகடனப்படுத்திக் கொண்டு தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதென தீர்மானித்துள்ளன. அதற்கு அதரவாக பல தமிழ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் ஒருபிரிவினர் ஆதரவாகவும் இன்னோர் பிரிவினர் எதிராகவும் செயல்பட்டுவருகின்ற தன்மையை அவதானிக்க முடிகிறது. இக்கட்டுரையும் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை சார்ந்து நோக்கப்படவுள்ளது.

சுயநிர்ணய உரிமை பற்றிய கோட்பாடு சோஸலிஸ்டுகளால் அதிகம் முதன்மைப்பட்டது. அதிலும் ரஷ்சியப் புரட்சியை வழிநடாத்திய வி.ஐ.லெனியே அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார். 1896இல் சோஸலிஸ தொழிலாளர்களும் தொழில் சங்கங்களினதும் கூட்டின் வெளிப்பாடாக லண்டனில் கூடிய சர்வதேச காங்கிரஸ் தீர்மானத்தின் படி உலகிலுள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணயத்திற்கான முழு உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்தியது. 1960 களில் ஐக்கிய நாடுகள் சபையின் சிவில்-அரசியல்-சமூக-பொருளாதார-பண்பாட்டு உரிமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரகடனம் தேசியங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரித்தது. தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்றே அதன் அர்த்தப்படுத்தலும் பொருள்மையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்தே ஈழத்தமிழரின் சுயநிர்ணயம் என்ற பிரயோகம் செய்யப்படுகிறது. தேசிய இனங்களின் சுயநிர்ணம் என்பாதை வரலாற்றுப்-பொருளாதார கருத்துநிலையிலிருந்து நோக்கினால் அது அரசியல் சுயநிர்ணயம், அரசு சயாதீனம், தேசிய இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும்.

தேசியங்களின் சுயநிர்ணயம் என்பதன் அர்த்தத்தை லெனிடமிருந்தே புரிந்து கொள்வது பொருத்தமானது. அவரது வார்த்தையின் படி, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது பிரத்தியேகமாக அரசியல்ரீதியில் சுயேட்சை பெறும் உரிமையை, ஒடுக்கும் தேசிய இனங்களிலிருந்து அரசியல் ரீதியில் சுதந்திரமாகப் பிரிந்து செல்லும் உரிமையைக் குறிக்கிறது. ஸ்தூலமாக அரசியல் ஜனநாயகத்தின் சுயநிர்ணயக் கோரிக்கையின் உட்பொருள் பிரிந்து செல்வதற்காக கிளர்ச்சி செய்ய முழுச்சுதந்திரம் இருக்க வேண்டும். என்பதும், பிரிந்து செல்லும் தேசிய இனத்தின் பொதுவாக்கெடுப்பு மூலமாகப் பிரிந்து செல்வது பற்றிய முடிபை மேற்கொள்ள வேண்டும் என்பதுமாகும்.

இது பற்றி லெனின் மேலும் குறிப்பிடும் போது, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசியவாதத்திற்கும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசியவாதத்தமிற்கும் இடையே ஒரு பெரிய இனத்தின் தேசியவாதத்திற்கும் ஒரு சிறிய இனத்தின் தேசியவாதத்திற்கும் இடையே வேறுபாடு காணவேண்டும் என்பது அவசியமானது. பிரிந்து செல்லும் உரிமை எல்லாத் தேசியங்களிலிலும் அங்கீகரிப்பது. பிரிந்து செல்வது ஒவ்வொரு ஸ்தூலமான பிரச்சினையையும் எல்லா அசமத்துவங்களையும் எல்லா தனியுரிமைகளையும் எல்லாத் தனித்தன்மைகளையும் அகற்றுவது என்ற கருத்துக் கோணத்திலிருந்து மதிப்பிடுதல் வேண்டும் என்றார்.
சோஸலிஸ மரபிலிருந்து கொண்டு தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தை அமுலாக்க மறுப்பது சோஸலிஸத்திற்கு துரோகம் செய்வதாகும் என்றார் லெனின். லெனின் மிகத் தெளிவாக சுயநிர்ணயம் என்பது பிரிந்து செல்வதுடன் கூடியது என்று குறிப்பிட்டார். பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக் கோட்படானது எவ்வாறு பிரிந்து செல்வதென்ற கேள்விக்கு ஜனநாயகபூர்வமாக பதிலையும் தந்துள்ளது. வரலாற்றின் போக்கு அத்தகைய வளர்ச்சியை ஜனநாயகத்தின் வெற்றியாக கொள்ளுகிறது. பிரச்சினைக்குள்ளாகும் தேசிய இனம் பிரிய விரும்புகின்ற தேசிய இனத்தின் மத்தியில் எடுக்கப்படும் பொதுசன வாக்கெடுப்பின் (Plebiscite) அதனைத் தீர்மானிப்பதாகும்.

பொதுசன வாக்கெடுப்பு என்பது நவீன வரலாற்றில் பிரஞ்சுப் புரட்சியின் விளைவாய் தோன்றியதாகும். Plebiscite என்பது ஒரு பிரஞ்சுப்பதமாகும். இது Itum என்ற இலத்தீன் மூலச்சொல்லிலிருந்து பிறந்ததாகும் Plebis என்றால் பொது மக்கள் என்றும் Scitum என்றால் ஆணை அல்லது தீர்ப்பு என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இதன் நீட்சியே பொது வாக்கெடுப்பு என்றும் பொது மக்கள் தீர்ப்பு என்றும் வரலாற்று வளர்ச்சி அடைந்தது.

பொதுசன வாக்கெடுப்புக்கு இரு பரிமாணங்கள் உண்டு. ஒன்று, தேசியக் கொள்கை சார்ந்து நாடுதழுவிய விதத்தில் ஆம் அல்லது இல்லை வாக்களிப்பு மேற்கொள்ளப்படுவது. எடுத்துக்காட்டாக மூன்று தடவை கனடாவிலிருந்து கீயூபெக் மாநிலம் பிரிந்து தனியரசாவதற்காக மேற்கொண்டு தோல்வியடைந்த முயற்சியை குறிப்பிடலாம். இரண்டு, ஒரு மக்கள் பிரிவினர் ஓர் அரசிடமிருந்து பிரிந்து செல்வதா அல்லது இரல்லையா என்ற விதத்தில் வாக்களிப்பது அல்லது ஒரு மக்கள் பிரிவினர் அல்லது ஓர் அரசோ இன்னோர் அரசுடன் சேர்வதா இல்லையா என்பதன் பொருட்டு வாக்களிப்பது. ஒரு தேசிய இனத்தின பிரிந்து செல்வது பற்றிய விவகாரத்தில் குறித்த தேசிய இனத்தை முழுமையாக ஓர் அலகாக கொண்டு அத்தேசிய இனத்திற்குள் மட்டும்தான் வாக்கெடுப்பை மேற்கொள்ளலாம். 1905 இல் சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்து செல்வதற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பை மேற்கொண்டு வெற்றி கண்டது.
அமெரிக்க ஜனாதிபதி வூட்றோ வில்சன் 1918 ஆம் ஆண்டு பதின்னான்கம்ச பெப்ரவரிப் பிரகடனத்தில் சுயநிர்ணயக உரிமைக் கோட்பாடு அங்கீகரிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதன் படி சுயநிர்ணய உரிமையானது அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்க விடயமாகும்.

இத்தகைய தளத்தில் ஈழத்தமிழர் வட்டுக்கோடடைத் தீர்மானத்திலும் திம்புக் கோட்பாட்டிலும் அத்தகைய சுயநிர்ணயக் உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தனர். அதுவே தமிழ் மக்களின் ஆணையாக கருதப்பட்டு நீண்ட ஆயுதப் போராட்டமும் நிகழ்ந்து முடிந்தது. ஆனால் அத்தகைய ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுத அமைப்புக்கள் பிரிந்து செல்லும் உரிமையை முன்மொழிந்தாலும் அகச்சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வுகாணவும் முயன்றதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறன.

குறிப்பாக நோர்வேயின் தலைநகரில் விடுதலைப்புலிகளுக்கும்- இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் சமாதானப் பேச்சுக்களில் இரு தரப்புடன் சேர்ந்து நோர்வே வெளியிட்டட நிலைப்பாட்டு ஆவணத்தில் அகச்சுய நிர்ணயம் அல்லது உள்ளக சுயநிர்ணயம் பற்றிய முடிபுகள் எடுக்கப்பட்டதாகவும் அதன் பிரகாரம் கண்டறியப்பட்ட தீர்வினை ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையில் உள்ளக சுயநிர்ணயத்தினை பின்பற்றி ஆராய்வதற்கு இருதரப்பும் உடன்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. இத் தீர்மானமானது இலங்கைத் தீவிலுள்ள அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளாத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதையும் இருதரப்பும் ஏற்றுக் கொண்டதாக நோர்வே அறிக்கையிட்டுள்ளது.

2009களுக்கு பின்னர் சுயநிர்ணய உரிமைக் கோட்டின் அடிப்படையிலான அணுகுமுறைகளைக் காட்டிலும் இலங்கைத் தீவுக்குள் தீர்வினை எட்டும் முயற்சிகள் தமிழ் அரசியல் கட்சிகளால் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 1987 ஆண்டில் இலங்கை-இந்திய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தச் சட்டமூலத்தை மையப்படுத்தியே அதிகம் பேச்சுவார்த்தைகளும் வரைபுகளும் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் இணைந்து தீர்வுக்கான வற்புறுத்தல்கள் அதிகமாக முன்வைத்ததோடு சமஷ்டி மற்றும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான பேராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளன. இரண்டு எழுக தமிழ் போராட்டத்தையும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையுமான போராட்டத்தையும் வடக்கு கிழக்குப் போராட்டத்தையும் அத்தகைய தரப்புக்கள் முன்னெடுத்திருந்தன. அதன் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவை வடக்கு மாகாண சபை மற்றும் கட்சிகள் அடிப்படையில் பல தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் தமிழ் அரசியல் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புக்களும் இந்தக் காலப்பகுதியிலேயே இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும், 13வது திருத்தத்தையும், இமாலயப்பிரகடனத்தையும் முன்வைத்திருந்தன.

எனவே தேசிய இனங்களின் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலான போராட்டத்தை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா தொடக்கி வைத்த போதும் அதன் நீட்சியை ஆயுதப் போராட்ட அமைப்புக்களே அதிகம் முன்னெடுத்தன. அதன் முழுமையை விடுதலைப் புலிகள் அமைப்பு அதீதமாக தனியரசுக்கான செயல்பாடுகளை கொண்டியங்கியது. அது 2009களுக்குப் பின்னர் முடிபுக்கு வந்த பின்னர் சுயநிர்ணயத்திற்கான பேச்சுக்களும் அறைகூவல்களும் நிகழ்கிறதே அன்றி முழுமையான போராட்டம் எதனையும் முழு அளவில் கண்டு கொள்ள முடியவில்லை. உள்ளக சுயநிர்ணயத்தையும் கைவிட்டு 13 க்குள் தீர்வை எட்டும் தரப்புக்களும் அதற்கான உழைக்கும் தமிழ் தரப்புக்களையுமே காணக்கூடியதாக உள்ளது. ஆனாலும் தமிழ் மக்களிம் அத்தகைய சுயநிர்ணயத்திற்கான எண்ணம் வலுவானதாக உள்ளதென்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதில் அதிக தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் பற்றுதியோடு செயல்படுவதைக் கண்டு கொள்ள முடிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)