தமிழ் மக்களின் தேசிய அரசியலை இயங்க முடியாத நிலைக்குள் கடந்த 15 ஆண்டு நிகழ்வுகள் நகர்த்தியுள்ளது. அதில் பயணித்த அனைத்து அரசியல் வாதிகளும் அதற்கு பொறுப்பானவர்களாகவே உள்ளனர். அவர்கள் அனைவரது நடவடிக்கைகள் எதிரிக்கு சேவை செய்வதாகவே அமைந்திருந்தது. எந்த திசையிலும் தமிழ் மக்களது தேசிய அரசியல் நகர முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுப்பதற்குரிய தலைமையே தற்போது தமிழ் மக்களுக்கு அவசியமானதாகத் தெரிகிறது. அதனை தனி ஒரு தலைமைத்துவத்தால் சாத்தியப்படுத்த முடியாது அதனை உணர்ந்து கொண்ட மக்கள் கூட்டமும் சமூக செயல்பாட்டு அணிகளும் இளம் தலைமைகளும் தூரநோக்குடைய உபாயங்களுமே தேவையாக உள்ளன. அதனை நோக்கி செயல்பட தவறும் பட்சத்தில் தமிழ் மக்கள் சாதி, மத, பிரதேச அடிப்படையில் குழுக்களாக மாற்றப்பட்டு மோதி அழிவடையும் நிலையே ஏற்படும். இத்தகைய நிலைமையைக் கடக்க தூரநோக்கும் தீர்க்கதரிசனமும் கொண்ட அரசியல் அவசியமானது. கடந்த காலங்களில் தமிழ் அரசியலின் மேற்கொண்ட தவறுகள் எப்படியான விளைவைத் தந்துள்ளது என்பதை விளங்கிக் கொள்ளவே இக்கட்டுரை முயலுகிறது.
இலங்கைப் படையினர் மீது தமிழ் மக்களுக்கு கோபமுள்ளதெனில் எனக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கமாட்டார்கள் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மாஷலும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே போர் நடைபெற்றது. போரின் இறுதிக்கட்டத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை. மனிதாபிமான நடவடிக்கையின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனக்கூறப்படுவதனை ஏற்க முடியாது. போரை திரிபுபடுத்தி நன்மையடைய முயலும் சிலரது கருத்து மட்டுமே.போர் முடிபடைந்து ஆறுமாங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது தமிழ் மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். தமிழ் மக்கள் அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் இப்படி ஆதரவு வழங்கியிருப்பார்களா? என பென்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். இராணுவத்தின் மீது கோபம் இருந்திருந்தால் இப்படி வாக்களித்திருப்பார்களா? என்றார்.
சரத் பென்சேகாவின் விவாதம் நியாயமானதாகவே தென்படுகிறது. அது ஒரு தர்க்க ரீதியான விவாதம் மட்டுமே. ஆனால் அத்தகைய விவாதத்தின் மறுபக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது முடிபுகளின் தூரநோக்கற்றதும் தீர்க்க தரிசனமில்லாத முடிபின் விளைவென்பதே தெரிகிறது. அரசியலில் தூரநோக்கும் தீர்க்க தரிசனமும் அடிப்படையானது. அதிலும் ஓரினத்தின் விடுதலைக்கு தலைமை தாங்கும் தரப்புக்கள் தமது முடிபுகளை எடுக்கும் போது எதிர்காலத்தின் இருப்பு முக்கியமானது. அத்தகைய இருப்பை கணிப்பிடாது எடுக்கப்படும் முடிபுகளுக்கு ஓரினமே துயரப்பட வேண்டிய நிலை ஏற்படும். அதனையே தற்போது தமிழ் இனத்திற்கு சில தலைவர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.
பீல்ட் மாஷல் எனும் விருதை வழங்கியது மட்டுமல்லாது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளையும் வழங்கியமை வரலாற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் என்றுமே மறுக்க முடியாத அரசியல் தவறாகவே அமையவுள்ளது. தமிழ் மக்களை கொல்வதற்கு தலைமை தாங்கிய தளபதி ஒருவருக்கு பெரும் ஆதரவை வழங்குமாறு தமிழ் மக்களுக்கு கோரிக்கை முன்வைத்தமை தற்போது எத்தகைய அரசியல் தவறென்பது தெரிகிறது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் ஒரு இலட்சத்தி நாற்பத்தாறாயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதாக குறிப்பிட்ட அறிக்கையை கடந்து ஐக்கிய நாடுகள் சபையால் முன்வைக்கப்பட்ட நாற்பதாயிரம் பொதுமக்கள் இறுதி போரில் கொல்லப்பட்ட என்ற செய்தியைக் கூட தமிழ் தேசியக கூட்டமைப்பின் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மறுக்கிறார்.
பீல்ட் மாஷல் என்பது இன்னோர் நாட்டுடன் போர் புரிந்து வெற்றியை அடைந்த தளபதிக்கு வழங்கப்படும் விருதாகவே கருதப்படுகிறது. உலக வரலாற்றில் அத்தகைய பீல்ட் மாஷல் விருது அவ்வாறான வீரச்செயலுக்கே வழங்கப்படுகிறது. அவ்வாறு 2009 இறுதிக்கட்டப் போரை இன்னோர் நாட்டுடன் நிகழ்த்தியதெனவும் இன்னோர் வலுவான இராணுவத்துடனும் நிகழ்த்தியதெனவும் கருத வாய்ப்புள்ளது. இது ஒரு தர்க்க ரீதியான விவாதமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்தியாவின் வரலாற்றிலேயே இதுவரை இருவர் மட்டுமே பில்ட் மாஷல்களாக அறியப்பட்டுள்ளனர்.ஒருவர் (Sam Maneksaw) 1973 இல் 1971 ஆண்டு நிகழந்த இந்திய-பாகிஸ்தான் போருக்காக பீல்ட் மாஷல் வழங்கப்பட்டது. இன்னொருவர் (K.M.Cariappa) 1986 இல் அறியப்பட்டார். அதுவும் இந்திய-பாகிஸ்தான போரில் 1947 இல் இராணுவத் தளபதியாக விளங்கியதற்காக வழங்கப்பட்டது. நல்லாட்சிக்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே சரத் பென்சேகாவுக்கு பீல்ட் மாஷல் வழங்கப்பட்டது என்பது கவனத்திற்குரியது.
தற்போது அத்தகைய பீல்ட் மாஷலின் விவாதங்கள் தமிழினத்தின் அரசியலையே கேள்விக்குட்படுத்துமளவுக்கு மோசமடைந்துள்ளது. தமிழ் மக்களது துயரத்தையோ வலியையோ உணராத ஒருவருக்கு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 63 சதவீத வாக்குகளும் வன்னித் தேர்தல் தொகுதியில் 66 சதவீத வாக்குகளும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 68 சதவீத வாக்குகளும் திருகோணமலையில் 54 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்ட வரலாற்றுத தவறை தமிழ் மக்கள் மேற்கொள்ள வழிவகுக்கப்பட்டிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவும் அதன் தலைமையினாலும் எடுக்கப்பட்ட முடிபு ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரானதாக பார்க்கப்பட்டது. அது மட்டுமன்றி தமிழ் மக்களின் அரசியலாகவோ தமிழ் மக்களின் விடுதலைக்கான அரசியலாகவே கருதவில்லை என்பது கவனத்திற்குரியது.
2010 இல் மட்டும் தமிழ் தேசியக் கூட்’டமைப்பு அதன் தலைமையை தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தி தேர்தலை எதிர்கொண்டிருந்தால் தற்போதைய தமிழ் மக்களின் கையறு நிலை அரசியல் தோன்றியிருக்க மாட்டாது. மாறாக தமிழ் மக்களின் அரசியலே மேலோங்கியதுடன் இலங்கைத்தீவின் அரசியல் பொருளாதாரமே பலமானதாகவும் பாதுகாப்பனதாகவும் அமைந்திருக்கும். விடுதலைப் புலிகளுக்குப் பின்னான இலங்கைத் தீவின் அரசியலை நியாயத்தன்மையுடன் நகர்த்திச் செல்வதற்கான வாய்ப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தது. தென் இலங்கைக்கு மிதவாத வலுவினால் தமிழ் மக்களின் பலமான அரசியல் நியாயப்படுத்தலை ஏற்படுத்தி அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைத்த போது பயன்படுத்திக் கொண்டு செயல்பட்டிருக்க முடியும்.தமிழ் தலைமைகளின் பலவீனமே தென் இலங்கை அரசியல் தலைமைகளுக்குக் கிடைத்த வாய்ப்பாக அமைந்திருந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு தென் இலங்கை வெற்றிகரமான நகர்வுகளை மேற்கொண்டது. அத்தகைய நிலையிலேயே மீளவும் தமிழ் மக்களை நிறுத்த பல தமிழ் அரசியல்வாதிகள் முயலுகின்றனர்.
இலங்கைத்தீவின் அரசியல் மீளவும் தமிழ் அரசியலுக்கு வாய்ப்பான சூழலை கொடுத்துள்ளது. தற்பொதைய ஜனாதிபதித தேர்தலை தனித்துவமாக எதிர் கொள்வதன் மூலம் தென் இலங்கையின் அரசியலில் வடக்கு கிழக்கின் முக்கியத்துவத்தை உணரவைக்க முடியும். வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வைக்க வேண்டுமாயின் தமிழரது அரசியல் பலப்படுத்தப்பட வேண்டும். வலுவான ஒருமைப்பாட்டுடனான இருப்பை தக்கவைக்க வேண்டிய பொறுப்பாண்மை தமிழ் மக்களது அரசியலுக்கு அவசியமானது.
கடந்தகாலம் முழுவதும் தென் இவலங்கையுடன் பல தளத்தில் தமிழ் மக்கள் பயணித்துள்ளனர். அதில் உடன்பாடுகள், ஒத்துழைப்புகள், விட்டுக் கொடுப்புகள், வாக்களிப்புகள் என பலவிடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால் எதிலும் தமிழ் மக்கள் எத்தகைய விளைவையும் எட்ட முடியவில்லை. மாறாக துயரங்களையும் ஆக்கிரமிப்புகளையுமே தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளனர். இதற்கான அடிப்படை தமிழ் அரசியலில் காணப்பட்ட பலவீனமே. அத்தகைய பலவீனத்தை மாற்றிக் கொள்வது ஒன்றும் இலங்கைத் தீவின் அரசியலுக்கு எதிரானதுமல்ல. இலங்கைத் தீவின் அரசியலில் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்கானதே. அதன் மூலம் இலங்கைத்தீவை பாதுகாப்பதாகவே இருக்கின்றது. இலங்கைத்தீவு தனித்து ஓரினத்திற்கு மட்டுமல்லாது அனைத்து இனங்களுக்கும் உரிய இறைமையைப் பாதுகாப்பதற்காகவே. அமெரிக்கா நூற்றுக்கணக்கான தேசியங்களால் கட்டப்பட்ட நாடு. எல்லாத் தேசியங்களுக்கும் சமவாப்பைக் கொடுக்கும் அதே நேரம் தமது தனித்துவங்களைப் பாதுகாக்கும் பொறுப்புடைமையையும் கொண்டுள்ள அரசியல் அமைப்பை பகிர்ந்துள்ளது.
எனவே இலங்கைத்தீவின் அரசியலை பல்லினத் தேசிய அரசியலாக மாற்றவதற்கான அடியை தமிழ் மக்கள் முன்வைக்க வேண்டும். அதற்காகவே தமிழ் மக்கள் தமது பண்பாட்டையும் மரபுகளையும் பிரதேசத்தையும் பாதுகாப்பதற்கான எத்தனங்களை முன்னகர்த்த வேண்டும். அதற்கான தனித்துவங்களோடு நகர்த்த வேண்டும். தமிழ் மக்களின் ஒருமைப்பாடே அத்தகைய பலத்தை உறுதிப்படுத்த வழிவகுக்கும். தனிமனித வழிபாடுகளையும் கட்சிக்கதம்பங்களையும் விட்டுவிட்டு ஐக்கியமாக எழுச்சியடைவதன் மூலமே ஜனநாயக அரசியல் வெளியை பயன்படுத்தி கொள்ள முடியும். ஜனநாயகம் என்பது பெரும்பான்மை முடிபுகளோ தேர்தலோ மட்டுமல்ல. அதனையும் கடந்து புத்திபூர்வமான தந்திரோபாயமான, ஒன்றுமைக்கான உபாயங்களைக் கொண்டதும் ஜனநாயகமே. அது அரசியலை மட்டுமல்ல பொருளாதாரத்தையும், சமூகத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கக் கூடியது. ஜனநாயகத்தின் பலம் திரட்சியிலும் கூட்டுத்தன்மையிலும் அதிகம் தங்கியுள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
