அரசியல் கட்டுரைகள்

தென் இலங்கையின் அரசியலும் இந்திய எதிர்ப்புவாதமும்?

இந்திய வெளிவிவகார அமைச்சரது இலங்கை விஜயம் அதிக அதிர்வலைகளை தென் இலங்கையிலும் வடக்குக்கிழக்கிலும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒப்பீட்டடிப்படையில் அவருடனான தமிழ் தேசியக் கட்சிகளது சந்திப்பு தமிழர் அரசியலை முன்னோக்கி நகர்த்துவதாக தெரிகிறது. அதில் வழமையான முரண்பாடுகளும் கட்சிக்குள் நிலவும் குத்துவெட்டுக்களும் தெறிப்படைந்தாலும் ஆரோக்கியமான நகர்வும் தென்படுகிறது. இந்தியாவுக்கு புதிய செய்தியொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்ச்சி நிரலையும்(1987 உடன்படிக்கை) சட்டவிடயத்தையும்(13வது திருத்தம்) ஒன்றுசேர அமுல்படுத்த வேண்டிய பொறுப்புக்குள் இந்தியா தள்ளப்பட்டதென்பது உரையாலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாக விளக்கம்தந்த இந்திய கொள்கைவகுப்பாளருக்கு முதல்தடவையாக தமிழர் தரப்பபின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பொதுவேட்பாளரை முதன்மைப்படுத்துகிறார்கள் என்பதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டுமே சந்திப்பின் தனித்துவமான விடயங்கள். ஆனால் அமைச்சர் ஜெய்சங்கரின் விஜயத்தின் நிறைவுக்குப் பின்னர் ஆண்டகை மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்தே கவனததில் கொள்ள வேண்டியதாகும். இக்கட்டுரை அத்தகைய கருத்து நிலைப்பாடு சார்ந்து தெளிவை பெற முயலுகிறது.

குறிப்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் தனது விஜயத்தின் நிறைவில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்தியா எதிர்காலத்திலும் இலங்கையின் நம்பிக்கையான நண்பனாக செயல்படும் எனத் தெரிவித்திருந்தார். இலங்கைக்கான பொருளாதார நெருக்கடியின் போது அதிக உதவிகளை வழங்கிய இந்தியா அயல்நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையின் பிரகாரம் செயல்பட்டுவருகிறது. அதில் ஏனைய தென்னாசிய நாடுகளைவிட தென் இலங்கையுடன் அதிக நெருக்கமாக செயல்பட்டுவருகிறது. இந்தியா அதிக விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைத் தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்ற நிலையிலேயே மீளவும் அத்தகைய நகர்வொன்றை இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை அமைந்திருந்தது. ஆனால் அவரது விஜயம் நிறைவுற்ற காலப்பகுதியிலேயே ஆண்டகை மல்கம் ரஞ்சித் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை வெளிபபடுத்தியுள்ளார். அவர் மட்டுமல்ல தீவிர அரசியலை வெளிப்படுத்தும் தென் இலங்கை அரசியல்வாதிகளும் இந்தியா பொறுத்து அத்தகைய குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால் அது இலங்கையின் இறைமையையும் சுதந்திரத்தையும் இல்லாமல் செய்துவிடும் எனக்குறிப்பிட்ட மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கைத் தீவின் வரலாறு தென் இந்தியாவிலிருந்து வருகைதரும் படையெடுப்பாளார்களினால் காலத்திற்கு காலம் இலங்கையை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளதாகவே விளங்கியது. இலங்கை மன்னர்களும் அதன் படைகளும் அவர்களுடன் போரிட்டு நிலத்தை விடுதலை செய்துள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தனது அதிகாரத்தின் கீழ் திட்டமிட்டுள்ள தமிழகத்திற்கும் -இலங்கைக்குமான நிலத்தொடர்ச்சிக்கான பாலம் அமைப்பதானது தமிழ் நாட்டுடனான அலகாக இலங்கை அமைவதற்கான நடவடிக்கையாகவே உள்ளது. இது முற்றாகவே இலங்கையின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் இல்லாமல் செய்துவிடும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதுவே ஈழத்தமிழரது அரசியல் துயரத்திற்கான அடிப்படையாகும். இந்தியா அதிலும் தமிழகம் புவிசார் அரசியல் ரீதியில் தமிழர் வாழும் பிரதேசத்திற்கு அண்மையில் அமைந்திருப்பதனால் தென் இலங்கையர்கள் அச்சமடைகிறார்கள். இந்தியப் படையெடுப்புகளுக்கு ஈழத்தமிழர் காரணம் என்றும் ஈழத்தமிழர் உதவியுடனேயே இந்தியப்படையெடுப்புக்கள் இலங்கைத் தீவில் வரலாற்றுக்காலம் முதல் நிகழ்வதாகவும் கருதுகிறார்கள். அதனையே மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டுகின்றார். இத்தகைய அச்சம் வரலாற்றுக் காலத்தில் மட்டுமல்ல தற்போதும் உள்ளது. அத்தகைய அச்சமே அவர்கள் ஈழத்தமிழர்களைக் படுகொலை செய்யவும் ஈழத்தமிழர் பிரதேசங்களில் குடியேற்றங்களை நிகழ்த்தவும் ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்ளவும் வழிவகுத்தது. ஈழத்தமிழர் வரலாற்றுக் காலம் முதல் எதிர்கொள்ளும் அனைத்து அழிவுகளுக்கும் இந்தியாவும் -தமிழ் நாடுமே காரணமாகும். இன்னோர்வகையில் கூறுவதானால் இந்தியாவுக்காக ஈழத்தமிழர் படுகொலைகளுக்கும் அழிப்புகளுக்கும் உள்ளாகின்றனர்.

1918-1920 களில் சேர் பொன் இராமநாதன் எதிர்காலத்தில் இந்தியாவின் ஒரு மாகாணமாக இலங்கை அமைவது சிறப்பானது என்று குறிப்பிட்டார். அதனை பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்கள் விரும்பாமையினால் தமது பிரித்தாளும் கொள்கையை முன்வைத்து அத்தகைய முயற்சியை தோற்கடித்தார்கள். இதே அணுகுமுறை 1940 களில் மீள நிகழ்ந்தது. 1940 யூலை 20 திகதி இலங்கைத் தேசிய காங்கிரஸ் சார்பில் ஜே.ஆர்.ஜெயவர்தனா இந்தியத் தலைவர் ஜவர்ஹர்லால் நேருவுக்கு சுதந்திர இந்தியாவுடன் சுதந்திர இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சி முறையையோ அல்லது நெருக்கமான கூட்டாட்சி முறையையோ அமைப்பது பற்றி உங்களுடன் நாங்கள் கலந்துரையாட விரும்புகிறோம் எனக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதே கருத்தை டி.எஸ். சேனநாயக்கா டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு அளித்த நேர்காணலில் பெரிய பலம் பொருந்திய இந்தியா சமஷ்டி அமைப்புக்குள் ஓர் அங்கமாக இலங்கை இணைவது இலங்கையின் நலனுக்கு உகந்தது என்றார். இதனையும் மீளவும் பிரித்தானியர் கையாண்டு முடிபுக்கு கொண்டுவந்தனர். அதில் டி.எஸ் சேனநாயகாவின் ஆலோசகரான ஐவர் ஜென்னிங் முக்கியமானவராக விளங்குகிறார். இதனை அடுத்த ஏற்பட்ட இலங்கை ஆட்சி முறையானது பிரித்தானியருடன் நெருக்கமான உறவை பேரம்பேசல் மூலம் வலுப்படுத்திக் கொண்டு இந்திய எதிர்ப்புவாதத்தை முதன்மைப்படுத்த ஆரம்பித்தது. பிரித்தானிய-இந்திய உறவில் காணப்பட்ட விரிசல் இலங்கை-பிரித்தானிய நட்புறவில் தங்கியிருந்தது. இதன் நீட்சியே இலங்கை-இந்திய நிலத் தொடர்ச்சிக்கான நடவடிக்கை மீதான எதிர்ப்புவாதமாகும்.

இலங்கை இந்தியாவுக்கிடையிலான இராமர்பாலம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு-இலங்கை பாலம் என்பதாக உரையாடப்படுகிறது. இது விரைவில் ஈழத்தமிழர்-தமிழக உறவுக்கான பாலம் என்று உரையாடப்படும். புவியியல் அமைவிடம் அதனை தென் இலங்கை பலப்படுத்த அதிக வாய்ப்பினைக் கொடுத்துள்ளது. இதனை ஆழமாக நோக்குவது அவசியமானது.

ஒன்று, இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் பாக்கநீரிணையே இலங்கையை தீவாகவும் ஓரரசாகவும் பேணுவதற்கு வழிவகுத்துள்ளது. பாக்குநீரிணையில்லையேல் இலங்கையின் அரசியல் இருப்பு கேள்விக்குரியதே. ஆதன் அடிப்படையில் உருவானதே இலங்கை-இந்திய அரசியல் உறவு. அது தனித்து தென் இலங்கையின் அரசியலை மட்டுமல்ல வடக்கு கிழக்கின் அரசியல் இருப்பையும் சார்ந்தது. வெளிப்படையாக நோக்குவோமாயின் பாக்கு நீரிணையே ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டத்திற்கும் தனித்துவமான அரசியல் இருப்புக்கும் மூலாதாரமானது. அதுவே ஈழத்தமிழரது இந்திய –தமிழ் நாட்டுடனான உறவுக்கும் வலுவான காரணியாகும். இத்தகைய கேந்திர முக்கியத்துவம் பொருந்திய கடற்பகுதியையே வல்லரசு நாடுகளும் தென் இலங்கையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முனைகின்றன. இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் முனைப்பான அரசியல் பாக்கு நீரிணைசார்ந்ததாகவே காணப்படுகிறது. இதனை முறியடிக்கும் விதத்திலேயே இராமர் பாலம் அரசியல் முக்கியத்துவத்தை கொடுக்கின்றது. தரைவழி நீட்சி தனித்து இலங்கைத் தீவுடனான உறவை மட்டுமல்லாது பக்குநீரிணை மீதான ஈடுபாட்டு சார்ந்தும் வடிவமைக்கப்படுவதையே கண்டுகொள்ள கூடியதாக உள்ளது. அதாவது தென் இலங்கையின் அரசியல் மட்டுமல்லாது இந்துசமுத்திரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் சர்வதேச சக்திகளது நலனையும் பாதிப்பதாக தெரிகிறது. அதனையும் நோக்கியே அத்தகைய எதிர்ப்புவாதம் மேல் எழுகிறது. எதிர்ப்புவாதத்தை மேற்கொள்ளும் தென் இலங்கை சக்திகளை அவதானித்தால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஒரு காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்களது நலன்சார்ந்து இந்திய-இலங்கை புரிதல் எப்படி முரண்பாட்டுக்குள் நகர்த்தப்பட்டதோ அவ்வாறே தற்போதும் அந்நிய சக்திகளது நலனுக்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டு, இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதென்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என்பது வெளிப்படையான தெரிவாக உள்ளது. ஆனால் ஆழமாக உற்றுநோக்கினால் பொருளாதார வளர்ச்சி என்பது அரசாங்கத்தின் திட்டமிடலாக அமைந்தாலும் தென் இலங்கையின் தீவிர அரசியல் சக்திகளது நகர்வு வேறுவிதமானதாக உள்ளது. இலங்கை பொருளாதார மீட்சி பெறாதுவிட்டாலும் பறவாயில்லை இந்தியாவின் அரசியலுக்குள் அகப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டு அரசியல் பொருளாதார அடிப்படைக்கான நூற்றாண்டாக விளங்கினாலும் தென் இலங்கை அரசியல் சக்திகள் இந்திய எதிர்ப்புவாதத்தின் மூலம் இன உணர்வை முதன்மைப்படுத்த முயலுகின்றதைக் காணமுடிகிறது. இது இலங்கையின் எதிர்காலத்தை ஆரோக்கியமானதாக அமைக்கும் நோக்கில் இல்லை என்பதை கோடிட்டுக்காட்டுகிறது. ஈழத்தமிழருடன் அதிகாரத்தை பகிர்வதில் எத்தகைய உத்தியும் இல்லாத அரசியல் சக்திகளது இருப்பும் வடக்கு கிழக்கு சார்ந்த இந்திய அரசின் அணுகுமுறையும் இலங்கைத் தீவின் அரசியலை வேறு திசைக்குள் நகர்த்த முனையும் என்பதையே காட்டுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது அதீதமானதாக மாறியுள்ள நிலையில் அதன் ஏனைய வளர்ச்சிகள் எதிர்கால பிராந்திய அரசியலை கட்டமைக்க கூடியதாக அமையும். இந்தியாவின் பிராந்தியங்கள் முதன்மை என்பது அதன் முக்கியத்துவததையே காட்டுகிறது. அதற்கான முக்கியத்துவம் பிராந்திய நாடுகளால் அனுசரிக்கப்படாத நிலை ஏற்படும் போது விளைவுகள் முரண்நிலையை தோற்றுவிக்கும்.

எனவே இலங்கைத் தீவின் இந்திய எதிர்ப்புவாதம் ஒன்றும் புதியதோ நிகழாததோ ஒன்றல்ல. மாறாக இன்றைய உலக ஒழுங்கு முறையில் அத்தகைய எதிர்ப்புவாம் ஏற்படுத்தக் கூடிய அரசியல் இலங்கைத் தீவுக்கானதாவே அமைய வாய்ப்புள்ளது. இலங்கைத் தீவின் பொருளாதாரம் மட்டமல்ல அரசியலும் அதற்குள் நெருக்கடிக்குரியதாகவே தென்படுகிறது. இத்தகைய நகர்வகளை இந்திய கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் சக்திகளும் கருத்தில் கொள்வதென்பது முக்கியமானதே. அதற்கான நடவடிக்கைகள் அதிகம் இலங்கைத்தீவில் நிகழ்வதாகவே தெரிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)