சுதந்திர இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தந்திரோபாயமானதாக காணப்படுகிறது. எல்லா காலங்களும் இலங்கை பூகோள அரசியலை மட்டுமின்றி புவிசார் அரசியலின் பிரதான சக்தியாக விளங்கும் இந்தியாவையும் தனித்துவமாக கையாளும் திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அருகாமையிலும் இந்துசமுத்திரத்தின் மத்தியிலும் நிலையான அரசாக நிலைத்திருப்பதற்கு ஆட்சியாளர்களின் வெளியுறவு கொள்கை அடிப்படைக் காரணமாக தெரிகிறது. பிராந்திய அரசியலை அல்லது புவிசார் அரசியலை மட்டுமன்றி பூகோள அரசியலையும் கையாளுகின்ற திறன் இலங்கை ஆட்சியாளர்களுக்கு காணப்பட்டிருக்கின்றது. உள்நாட்டில் நிலவுகின்ற பிரச்சனைகளினை தீர்க்கும் அங்கமாக வெளிவிவகாரக் கொள்கை அமைந்திருக்கின்றது என்ற கருதுகோளுக்கு அமைவாக இலங்கையின் ஜே.வி.பி. அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் கனடாவின் இலங்கைக்கான தூதுவரை சந்தித்த போது உரையாடிய விடயம் முக்கியமானதாகும். கனடாவுக்கும் ஈழத்தமிழர்களுக்குமான நெருக்கமான உறவின் எதிரொலிப்பை சந்திப்பு புலப்படுத்தியிருந்தது. இக்கட்டுரையும் கனடா ஈழத்தமிழர்-ஜே.வி.பி. அரசாங்கம் பொறுத்து ஏற்பட்டிருக்கும் முன்மொழிவுகளை தேடுவதாக அமையவுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜிதஹெரத் இலங்கைக்கான கனடாவின் தூதுவரை சந்தித்து உரையாடிய விடயத்தை முதலில் நோக்குவது அவசியமானது. அதன் பிரகாரம் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை கனேடிய அரசு அங்கீகரிக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார். அவர் கனேடிய தூதுவருடன் உரையாடும் போது மேலும் முன்மொழிந்த விடயமாக விடுதலைப்புலினளின் சின்னங்களை அங்கீகர்த்தல் மற்றும் இலங்கையிலுள்ள இனசமூகங்களிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படும் விடயங்களை தடுப்பதற்கான அவசியத்தை தூதுவர் இசபெல் கத்தரீன் மார்ட்டினிடம் தெரிவித்தார். கனடாவில் நிகழும் அத்தகைய செயல்பாடுகளால் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முரணானதாக அமைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கனேடிய தூதுவரோடு உரையாடியதற்கான முக்கியத்துவத்திற்கான விளைவு புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதனை அவதானிப்பது அவசியமானது.
முதலாவது உரையாடப்பட்ட விடயம் பிரிவினை சார்ந்து விடுதலைப்புலிகள் சார்ந்த அதிகமான அச்சத்தை வெளிப்படுத்துவதாக அமைந்ததோடு இனங்களுக்கிடையில் சுமூக உறவை பாதிப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களது வாழ்விடங்கள் மீதுபௌத்த மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளை அதிகமான சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ஈழத்தமிழர்களின் நிலங்களை நோக்கி பௌத்த மதத்தின் பெயரால் பெரும்பான்மை மக்களும் அவர்களது கலாச்சார சின்னங்களும் நகர்த்தப்படுகின்ற போது இனங்களுக்கு இடையிலான நெருக்கடி ஏற்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழர்கள் தமது வாழ்விடத்தை பாதுகாக்க நினைப்பதும் வாழ்வாதாரத்தை நிராகரிக்கும் நடவடிக்கைகளை எதிர்ப்பதும் தவறான அல்லது பிரிவினை என்று கருத்தில் கொள்ள முடியுமா என்ற கேள்வி எதார்த்தமானது. இங்கு பிரிவினைக்கான எந்த முகாந்திரமும் இல்லாத சூழலில் கனேடிய தூதுவரோடு இலங்கையின் வெளியுறவு அமைச்சர் உரையாடியிருப்பது அதிகம் குழப்பகரமாகவுள்ளது. ஓர் இடதுசாரி அரசாங்கம் ஒன்றின் போலித் தன்மையும் அதன் அணுகுமுறைகள் வெளிப்படுத்தும் பலவீனமான உரையாடல்களும் இலங்கைத் தீர்வில் ஈழத்தமிழர்களின் இருப்பினை கேள்விக்கு உட்படுத்துகிறது. முன்னேய ஆட்சியாளர்கள் நோக்கியது போல் ஜே.வி.பி. அரசாங்கமும் பிரிவினைவாதம் என்பதற்குள்ளால் ஈழத்தமிழரின் இருப்பனை நிராகரிகிறதாகவே தெரிகிறது. ஆயுதப் போராட்ட வழிமுறைக்குள்ளால் அரசியலை கைப்பற்றிய ஜே.வி.பி. யின் வெளிவிவகார அமைச்சர் முன் வைக்கும் குற்றச்சாட்டு போலித்தனமானதாக உள்ளது. பிரிவினைவாதம் பற்றிய உரையாடலை முன்வைத்தே கடந்த கால ஆட்சியாளர்கள் தமது ஆட்சியை தக்கவைத்தது மட்டுமன்றி தமிழ் மக்களை ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளறியிருந்தனர். இடதுசாரி அரசாங்கத்தின் ஆட்சியாளர்களும் ஈழத்தமிழர்களின் அடிப்படை கோரிக்கைகளான அடிப்படை உரிமைகளை, மனிதாபிமான சட்டங்களை, சுதந்திரமான இறைமை படைத்த மக்களின் சுயநிர்ணயத்தை கொண்ட இருப்பைக் கோருவதை பிரிவினைவாதம் என்ற முகாந்திரமற்ற உரையாடல் மூலம் பலவீனப்படுத்த முயலுகின்றனர்.
இரண்டாவது 2009 களில் விடுதலைப் புலிகளின் தலைமையும் அதன் ஆயுத பிரிவுகளும் அளிக்கப்பட்ட சூழலில் விடுதலைப்புலிகள் தொடர்பில் ஜே.வி.பி. அரசாங்கம் அச்சமடைவதும் கனடா மண்ணில் விடுதலைப்புலிகள் சின்னங்களை பிரயோகிப்பதை நிராகரிப்பதும் அரசியல் வறுமையாகத் தெரிகிறது. ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் முற்பது வருட காலப்பகுதியை முழுமைப்படுத்திய விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனித்தல் என்ற உரையாடலுக்கு பின்னர் எத்தகைய தாக்குதல் நடவடிக்கைகளையும் இதுவரை காலமும் மேற்கொள்ளவில்லை. அதற்கான கட்டமைப்பு எதுவும் இல்லாத சூழல் உண்டு என்டபது அரசாங்கத்pதிற்கு நன்கு தெரியும். ஜே.வி.பி. இராணுவ சீருடையுடன் தேசிய வீரர்கள் தினத்தை கொண்டாடியதை நினைவில் கொள்வது சிறப்பானது. அவ்வகையான ஒரு சூழலில் விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி அரசாங்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் கனடாவில் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு கனேடிய அரசாங்கம் செவிசாய்க்க முயலக் கூடாது என்றும் உரையாடுவது மிகவும் பலவீனமான அரசியலாக தெரிகிறது. போராட்டத்தின் வலியை நன்கு அனுபவித்த தரப்பு ஜே.வி.பி. அரசாங்கம் என்ற அடிப்படையிலேயே இத்தகைய கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. ஈழத்தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பின் மீது கொண்டிருந்த ஈடுபாடு இயல்பானது. இலங்கை தீவின் வரலாறு ஒரே வகையான நியமங்களுக்குள் இயங்குகிறது என்பதை வெளிவர அமைச்சர் உரையாடல்கள் உணர்த்தி நிற்கின்றது.
மூன்றாவது ஈழத்தமிழர்கள் புலம்பெயர் தேசிய வாதத்தை அல்லது தூர தேசியவாதத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு இலங்கைத் தீவின் இருப்பை அல்லது ஒருமைப்பாட்டை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இறையாண்மையை பலவீனப்படுத்தி விடுவார்கள் என்று கருதுவது இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்ற முடியாது என்பதை கோடிட்டுகாட்டுகிறது. இலங்கை தீவின் இருப்பு என்பது ஈழத்தமிழர்களின் இருப்புக்கும் உரித்தானது. சுய நிர்ணயத்தின் பால்பட்ட இறைமை கொண்ட பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு உரித்துடைய உரிமைகள் அனைத்தும் ஈழத்தமிழருக்கும் உண்டு. இதனைப் புரிந்து கொள்ள தவறும் ஆட்சியாளர்கள் கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று செயல்பட முனைபவர்களாகவே தெரிகிறது. சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்கள் அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள். அவர்கள் முதன்மைப்படுத்துகின்றன கடந்த வரலாறு முழுவதும் தமிழ் மக்களின் நிலம் வாழ்விடம் வாழ்வாதாரத்துக்குரிய அடிப்படைகள் சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது அல்லது சூறையாடப்பட்டுள்ளது. இதன் விளைவு இலங்கைத்தீவின் இன முரண்பாட்டுக்கு இனப்பூசல்களுக்கும் அடிப்படை காரணமாகும். அதனையும் கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று ஜே.வி.பி.உம் கண்டு கொள்ளவில்லை என்பதும் அதன் பலவீனம் கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று உள்ளது என்பதும் வெளிவிவகார அமைச்சன் உரையாடல் உணர்த்தி நிக்கின்றது.
எனவே ஜே.வி.பி.ஆட்சியாளர்களும் கடந்தகால அரசாங்கங்களின் கொள்கையிலிருந்து மாறாதவர்களாகவே உள்ளனர். தமிழ் மக்களின் இருப்பையும் இறைமையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் பாதுகாக்க தவறுகின்றபோது அந்த மக்கள் தங்களுடைய இருப்பை பாதுகாக்க பேராடுவது தவறானதாக கொள்ள முடியாது. இயல்பாக தமிழ் மக்களுக்கு இருக்கும் உணர்வுகளை அங்கீகரிப்பதுடன் அதனை ஏற்றுக்கொள்ளுகிறபோது மட்டுமே இன நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் அடைய முடியும். மாறாக தூதரங்களையும் வெளிநாடுகளையும் இத்தகைய அணுகுமுறைக்குள் உட்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாது. சிங்கள பெரும்பான்மை மக்களும் அதன் ஆட்சியாளர்களும் பௌத்ததுறவிகளும் ஈழத்தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்கான சுமூகமான உறவை சாத்தியப்படுத்தும் போது மட்டுமே இன முரண்பாடு முடிபுக்கு வரும். தமிழ் மக்கள் ஒருபோதும் தமது மத அடையாளங்களை அல்லது இன அடையாளங்களை தென்னிலங்கையின் பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி நகர்ந்த வில்லை. பெரும்பான்மை மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
