இலங்கை ஜனாதிபதியின் ஜப்பானிய விஜயம் (29-30.09.2025) மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் ஜெனீவா விவகாரம் அதிக நெருக்கடியான சூழலை இலங்கைக்கு ஏற்படுத்தியிருந்து. அதிலிருந்து மீண்டு வருவதற்கான அணுகுமுறைகளை கச்சிதமாக நிறைவேற்றிய ஜே.வி.பி. அரசாங்கம் அதன் ஜனாதிபதியும் முறைமை மாற்றம் தொடர்பில் உரையாடுவதற்கு பொருத்தமற்றவர்களாகவே தென்படுகின்றனர். அதேவேளை ஜனாதிபதி அநுர குமாரதிஸநாயக்காவின் ஜப்பானிய விஜயமும் ஜப்பானுடன் மேற்கொண்ட உடன்பாடுகளும் இலங்கை தமிழர் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகவே தெரிகிறது. மன்னார் தீவில் தமிழ் மக்களது போராட்டத்திற்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கை அரசாங்கத்தின் உண்மை முகத்தை அடையாளப்படுத்தியது போன்றே ஜப்பான் விஜயத்திலும் ஜனாதிபதியின் அணுகுமுறை முறைமைமாற்றத்தை நோக்கிய புதிய அரசாங்கத்தின் போலித்தன்மையை காட்டுகிறது. இக்கட்டுரையும் ஜனாதிபதியின் ஜப்பானிய விஜயத்தின் அரசியலைத் தேடுவதாக உள்ளது.
இரு நாட்கள் ஜப்பானுக்கான அரசு முறை பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர முக்கிய உடன்பாடுகளையும் இலங்கையில் ஜப்பானிய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வர்த்தக மற்றும் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி அநுர மற்றும் ஜப்பானிய பிரதமதர் ஷிகெரு இஷிபா முன்னிலையில் உடன்படிக்கைகள் எட்டப்பட்டன. மிக முக்கியமாக அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டம் மற்றும் பால் பண்ணைத் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசொமதா மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த OSA திட்டத்தின் கீழ், 500 மில்லியன் யென் தொகையில், அவதானிப்பு, கண்காணிப்பு மற்றும் பேரிடர் நிவாரணத்திற்காக இரண்டு வகையான அதிநவீன ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா வான்வழி விமானங்கள் (UAV) இலங்கை கடற்படைக்கு வழங்கப்படும். இந்த திட்டம் இலங்கையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்திய உறுதித்தன்மையைப் பராமரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் படைகான ஆளில்லாத விமானங்களை பொறுவதற்கான உடன்பாடு முக்கியம் பெறுகிறது. இதனை வரிவாக நோக்குதல் வேண்டும்.
முதலாவது, இலங்கை தமிழரை பொறுத்தவரையில் வடக்கு-கிழக்கில் இருக்கும் இராணுவத்தின் பிரசன்னம் இராணுவ முகாம்களின் எண்ணிக்கை போருக்கு பின்னரும் இராணுவம் பொதுமக்களினுடைய காணிகளை வைத்துக் கொள்வதும் மக்களிடம் ஒப்படைக்காததையும் எதிர்த்தே போராட்டங்களும் கோரிக்கைகளும் அமைகின்றன. புதிய அரசாங்கம் அவற்றை குறைக்க போவதாகவும் இராணுவ முகாங்களை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தேர்தல் காலங்களிலும் அதற்கு பின்னரும் பிரச்சாரம் செய்து வருகின்றது. மறுபக்கத்தில் இலங்கை இராணுவத்தின் தொகையையோ அல்லது அதற்கு வழங்குகின்ற பயிற்சிகளையும் ஒத்திகைகளையோ குறைத்துக் கொண்டதாக தென்படவில்லை. இதே விடயத்தை ஜப்பானிய வர்த்தக குழுமங்களோடு உரையாடுகின்ற போது இலங்கையின் ஜனாதிபதி முதன்மைப்படுத்தி இருப்பதோடு இராணுவத்தின் பிரசன்னத்தை வடக்கு-கிழக்கில் மட்டுப்படுத்தப் போவதாகவும் ஊழல் ஒழிப்பு அரச கட்டமைப்பு பலப்படுத்துதல் பொருளாதார ரீதியான விருத்தியை நோக்கி இலங்கையைக் கொண்டு செல்லுதல் போன்ற பல விடயங்களை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டாவது ஜப்பானிய அரசாங்கத்தோடு இலங்கையில் கடல் படைக்கு ஆளில்லாத விமானங்கள் கொள்ளளவு செய்வதற்கான உடன்பாடு ஒன்றை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். போர் முடிந்து 16 வருடங்களை கடந்த நிலையில் இராணுவத்தின் வலுவும் அதன் வளர்ச்சிப் போக்கும் அதற்கான கட்டமைப்புகள் என்பன தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்ற செய்முறை ஒன்றை முன்னைய அரசாங்கங்கள் போன்று புதிய அரசாங்கமும் பின்பற்றி வருகிறது. அதற்கான ஒரு நடவடிக்கையாகவே ஜப்பானுடன் உடன்பாடு வெளிப்படுத்துகின்றது. இலங்கைத்தீவின் கடற்படையின் முக்கியத்துவம் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தில் அதிகம் உணரப்படுகின்ற ஒரு சூழலில் கடல் படை நவீனமயப்படுத்தப்படுகின்ற அணுகுமுறை ஒன்றை புதிய அரசாங்கமும் பின்பற்றுகின்றது. இது ஒட்டுமொத்தமான இராணுவத்தின் வலுவையும் பலப்படுத்துவதாகவே தெரிகிறது.
மூன்றாவது, போர் நிறைவு பெற்று 16 வருடங்களுக்கு பின்னரும் வடக்கு-கிழக்கு இராணுவத்தின் பிரசன்னம் மட்டுப்படுத்தப்படாத போக்கும் தொடர்ச்சியாக இராணுவ ரீதியில் வளர்ச்சியை நோக்கி கட்டமைக்கப்படுகின்ற தன்மையும் தெளிவாக உணர முடிகின்றது. இலங்கைத் தீவின் பாதுகாப்புப் படைகளின் வளர்ச்சி திட்டமிட்டே அரசாங்கங்களால் முதன்மைப்படுத்தப்படுகின்றது. இலங்கைத் தீவின் எதிர்கால இருப்பின் வளர்ச்சியும் இராணுவத்தில் தங்கியிருப்பது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்த முனைகின்றது. அதன் ஊடாக இந்தியாவுடனும் உலக நாடுகளுடனனும் பாரிய அளவிலான கடல் படை கப்பல்களில் போர் கப்பல்களில் பிரசன்னம் இலங்கைத் தீவை நோக்கி அதிகரித்திருப்பது போர்ப் பயிற்சிகள் தொடர்வதைக் கண்டு கொள்ள முடிகிறது. இதன் மூலம் கடல் படை மேலும் பலப்படுத்தப்படுகின்ற செயல்பாடு ஒன்றை அவதானிக்க முடிகின்றது.
நான்காவது இலங்கைத்தீவின் முறை மாற்றம் என்று கூறிக்கொண்டு இடதுசாரி அரசாங்கம் செயல்படுத்துகின்ற அனைத்து முன்னைய அரசாங்கங்களின் நடவடிக்கைகளாகவே உள்ளன. தமிழ் மக்களுடன் மோதல்களும் முரண்பாடுகளையுமே அதிகம் கொண்டுள்ளது. அரச இயந்திரத்தின் போலீஸ் மற்றும் இராணுவம் வடக்கு-கிழக்கு தமிழர்கள் மீதான அடக்குமுறைகளில் அதீதமான மாற்றம் எதனையும் ஏற்படுத்தவில்லை என்பதை மன்னார் சம்பவம் உணர்த்துகின்றது. மன்னார் தீவில் காற்றாலை அமைப்பது சார்ந்து எழுந்துள்ள போராட்டம் தவறான புரிதலை ஏற்படுத்தி இருப்பதோடு காற்றாலையை மேற்கொள்வதன் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கான தீர்வுகளை அரசாங்கம் முன்வைக்காத நிலையில் அதற்கு எதிரான போராட்டத்தை சட்டம் கொண்டும் இராணுவம் கொண்டும் அடக்குவதற்கு முயற்சிக்கின்றது. இது ஒரு வகையில் இராணுவத்தின் தொடர்ச்சியான அணுகுமுறை மாற்றமற்ற சூழலைகாட்டுகிறது. இதிலிருந்து பாதுகாப்பை உருவாக்குவது என்பதும் மக்களின் அடிப்படைத் தேவைகளை கையாளுகின்ற தன்மை என்பதும் கடந்த கால ஆட்சியாளர்கள் போன்று காணப்படுகிறது.
ஐந்தாவது வடக்கு-கிழக்கின் இராணுவ பிரசன்னம் மட்டுப்படுத்தப்படாத நிலையில் ஒரு புறம் அமைய மறுபக்கத்தில் வடக்கு-கிழக்கின் விவசாய உற்பத்தி பொருட்கள் கடல் வளங்கள் அவற்றுக்கான சந்தைபடுத்தல்கள் உற்பத்தி நடவடிக்கைகள் போன்ற எல்லாவற்றிலும் இராணுவம் ஒரு தனியான அலகாக இயங்க முயற்சிக்கிறது. வடக்கு-கிழக்கினுடைய உற்பத்திகளை கொள்ளளவு செய்வதிலிருந்து உற்பத்தியின் அளவை தீர்மானிப்பது வரையும் இராணுவத்துக்கு அதிக பங்கு காணப்படுகிறது. இது பாகிஸ்தான், சீனா போன்று இராணுவத்தின் சிவில் நடவடிக்கையாகவே தெரிகிறது. மக்களுடைய நிலங்களை கையகப்படுத்தி உற்பத்தி நடவடிக்கையிலும் நீண்ட நிலைத்திருக்கக் கூடிய இராணுவ குடியேற்றங்களையும் அதிகம் கொண்டு காணப்படுகின்றன. இவை முழுமையான இராணுவ பிரசன்னத்தை உத்தரவாதப்படுத்த தொடங்கியிருக்கின்றது. நகரங்கள் கிராமங்கள் விவசாய நிலங்கள் போக்குவரத்துக்கான பிரதேசங்கள் மக்களுடைய வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி நடவடிக்கைகள் என்பனவே எல்லாமே இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே காணப்படுகிறது. வெளிப்படையாக முகாங்கள் மறைக்கப்பட்டிருப்பதும் அவற்றுக்குள் நிகழும் உற்பத்தி நடவடிக்கைகளும் சந்தைப்படுத்தலும் அதற்கான முதலீட்டு நடவடிக்கைகளும் பெருமளவுக்கு வெளியே தெரியக்கூடியதாக இல்லாத சூழல் ஒன்றை அவதானிக்க முடிகிறது. இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் வடக்கு-கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை கட்டுப்படுத்துமாறு பொதுமக்களின் கோரிக்கை காணப்படுகிறது. இராணுவம் நிலங்களை வைத்திருத்தல் என்பது அல்லது இராணுவம் கட்டுப்படுத்தி வைத்திருத்தல் என்பது அதற்கான உற்பத்தியும் அதனுடைய வளங்களும் பொதுமக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்படுகிறது. இத்தகைய அந்நியப்படுத்தல் படிப்படியாக வடக்கு-கிழக்கிலிருந்து இளம் தலைமுறை அந்நியப்படுத்துவதற்கான அடிப்படையாக காணப்படுகிறது.
ஆறாவது உள்நாட்டிலும் உள்நாட்டின் நெருக்கடியான சூழலிலும் இராணுவத்தின் பிரசன்னமும் தேவைப்பாடும் அவசியமானது என்ற விவாதம் தேசிய பாதுகாப்பு பொறுத்து இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் முக்கியத்துவத்தை கொண்டிருப்பது அவசியமானது. ஆனால் அது வடக்கு-கிழக்கில் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பையும் மக்களின் வளங்களை மக்கள் பயன்படுத்த முடியாமல் சுரண்டுவதும் வடக்கு-கிழக்கு பொறுத்து பாரிய நெருக்கடியாக மாறி வருகின்றது. வடக்கு-கிழக்கு பாரிய அடிப்படைத் தேவைகளுக்கான விநியோகித்தர்களாக இராணுவத்தினரும் இராணுவ கட்டமைப்பும் காணப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது என்பது அல்லது இவற்றின் மீது மாற்றங்களை கொண்டு வருதல் என்பது வடக்கு-கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதாகவே அமையும். வடக்கு-கிழக்கு மீது மேற்கொள்ளப்படுகின்ற ஆக்கிரமிப்புகள் மக்களின் வளங்களை இராணுவம் கைப்பற்றுவதோடு அதற்கான வாய்ப்புகள் தமிழ் மக்களுக்கு இல்லாமல் போவதாகவே அமைந்திருக்கின்றது.
எனவே இலங்கைத்தீவில் அரசியல் மாற்றம் என்பது எட்டாததென்றாக காணப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. முன்னைய ஆட்சியாளர்கள் போன்றே இடதுசாரி அரசாங்கமும் முறைமைமாற்றம் என்பதை குறிப்பிட்டு கொண்டு நடைமுறையில் மாற்றமற்ற செய்முறையை முதன்மைப்படுத்துகின்றது. இலங்கைத் தீவின் நல்லிணக்கமும் சமாதானமும் சாத்தியப்பட வேண்டுமாயின் வடக்கு-கிழக்கினுடைய இராணுவ பிரசன்னத்தை மட்டுப்படுத்தி வாய்ப்புக்களை சமமாக பங்கீடு செய்து ஆரோக்கியமான மக்கள் பங்கேற்புடனான ஒரு அரசியலை கட்டமைப்பது சாத்தியமான வழிமுறையாகும். அத்தகைய வழிமுறை நோக்கி அரசாங்கம் செயல்படுவதற்கான முன்முயற்சிகளை எதனையும் கொண்டிக்கவில்லை என்பது தெரிகிறது. முன்னைய ஆட்சியாளர்களை குற்றம் சாட்டுவதும் அவர்கள் பாதையில் தொடர்வதும் இந்த அரசாங்கத்தின் மாற்றமற்ற செய்முறையாக காணப்படுகின்றது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
