November 7, 2025
அரசியல் கட்டுரைகள்

இலங்கை ஜனாதிபதியின் ஐ.நா.உரையும் மனித உரிமைப் பேரவையின் தீர்மானமும்?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் ஈழத்தமிழரின் அரசியல் இருப்பு தொடர்பில் அதிக விவாதங்களை கையாண்டு வருகிறது. பொதுச் சபையில் இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்காவின் உரையும் மனித உரிமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஆரம்ப அறிக்கையில் திருத்தங்களும் அதிக குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 16 வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களையும் மனிதாபிமான சட்டத்துக்கு எதிரான அணுகுமுறைகளையும் இந்த அடிப்படையிலே பின்பற்றியிருந்தது. இத்தகைய அணுகுமுறையே ஈழத்தமிழரது உரிமையை முழுமைப்படுத்த முடியாத நிலையைக் கொண்டிருக்க காரணமாக இருந்துள்ளது. எதிர்காலத்திலும் ஐ.நா.சபையின் அணுகுமுறை அவ்வாறானதாக அமைவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு என்பதை ஈழத் தமிழர்கள் பல தடவை அடையாளம் கண்டுள்ளனர். இக்கட்டுரையும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் போக்கையும் அதன் அணுகுமுறையில் காணப்படும் முன்பின் முரணான உபாயங்களையும் அடையாளம்காண முயற்சிக்கிறது.

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதியின் உரை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதில் முதன்மை பெற்றதோடு காசாவில் கொல்லப்படும் குழந்தைகள் பற்றியும் அங்கு நிகழும் இனப்படுகொலை சார்ந்தும் துயரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. அதைக் கடந்து வறுமை, ஊழல் ஒழிப்பு, சமாதானம், மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது. போருக்கு பின்னரான அமைதியை அதிக வலியுறுத்த முயற்சித்த உரையாடல் ஈழ தமிழ் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், பெண்களுக்கும், தாய்மாருக்கும், வயோதிபருக்கம் இழைக்கப்பட்ட அநீதி பற்றிய உரையாடலை வெளிப்படையாக தரத்தவறியிருந்தது. காசாவின் இனப்படுகொலை போன்று முள்ளிவாய்க்காலில் பாரிய இனப்படுகொலையின் அரங்கம் ஒன்றை இலங்கை தீவு அல்லது ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தனர். அதற்கான எந்த நியாயமும் இதுவரையில் வழங்கப்படாத ஒரு துயரத்தை புதிய அரசாங்கமும் வெளிப்படுத்தவோ ஏற்கவோ தயாரில்லை என்பதை அழகாக நிறுவியுள்ளது. அதனை ஜனாதிபதி பொதுச் சபையில் உரையாற்றுகின்ற போது உலகத்தின் முன் கண்டுகொள்ள முடிந்தது. பொதுச் சபையின் முன் உரையாற்றுகின்ற அனைத்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் போன்றே ஜனாதிபதி அநுராவின் உரையும் அமைந்திருந்தது. பலஸ்தீன மக்களுக்கும் குழந்தைகளும் கொல்லப்படுவதற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் 2009 களில் ஈழத்தமிழர்களுக்கு நிகழ்ந்தபோதும் அதன் பின்னரும் வழங்கப்படவில்லை. அப்போது அரசின் பங்காளியாகவும் தற்போது அதிகாரத்தின் நிறைவேற்ற பணிப்பாளராகவும் காணப்படும் ஜனாதிபதியின் உரையின் பலவீனமான பக்கங்கள் இலகுவாகவே அடையாளம் காண முடிகிறது. இதனையே ஐக்கிய நாடுகள் சபையும் அரங்கேற்றி வருகின்றது. அதனை ஆழமாக நோக்குதல் அவசியமானது.

முதலாவது மனித உரிமை பேரவை செம்மணியை மையப்படுத்தி ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான அணுகுமுறைகளை அதிகம் பிரதிபலிப்பது போன்று அதன் ஆரம்பகட்ட அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறையும் நாடுகளுக்கு இடையிலான உறவின் தனித்துவமும் அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்துள்ளதுடன் அத்தகைய அறிக்கை பலவீனத்தை முதன்மைப்படுத்த ஆரம்பித்தது. தீர்மானங்களில் ஈழத்தமிழருக்கு சார்பான உள்ளடக்கங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு புதிய விடயங்கள் சமரசத்துக்கு உடன்பட கூடிய விடயங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அதன் செயல்பாட்டு ஆதரவான விடயங்கள் அதிகம் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அமைதிகாக்கும் ஒத்துழைப்பு செயல்பாடுகளை அதிகரிப்பதற்கு இலங்கையுடன் ஐ.நா.சபை இணங்கியுள்ளமை, இலங்கையில் இடம்பெறும் ஐ.நா. வின் திட்டங்களுக்குள் இலங்கை இராணுவத்தின் ஈடுபாடு பற்றியும் அவதானம் செலுத்துவது, இலங்கையின் அமைதிகாக்கும் திறனை வலுப்படுத்துவது, மற்றும் பிரத்தியோக நீதிப் பொறிமுறையை அறிகையிலிருந்து நீக்கியமை, பொறுப்புக்கூறல், பயங்கரவாத தடைச்சட்டம் சார்ந்த விடயங்களில் திருத்தம் நிகழ்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஈழத்தமிழர் மீதான அநீதிக்கான நியாயப்படுத்தலை வலியுறுத்துவதை விடுத்து இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறைகளை அதன் மனித உரிமை சார்ந்த நடவடிக்கைகளையும் அங்கீகரிப்பது போன்றே அறிக்கை உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டது. இதனை அனுசரணை நாடுகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அதற்கு தலைமை தாங்குகின்ற பிரிட்டன் முதன்மை நாடாக விளங்குகிறது. அனுசரணை நாடுகள் இவ் அணுகுமுறையில் காணப்பட்ட போக்குகளை நீக்கி அரசுகள் அரசுகளோடும் மேற்கொள்ளும் சமரசத்தன்மையை நாடுகளின் சபையில் முன்மொழிந்திருக்கின்றன. இதனையே கடந்த 16 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள்சபையும் அதற்கான அனுசரணை வழங்கும் நாடுகளும் ஈழத்தமிழர் விடயத்தில் செயல்பட்டுள்ளனர். அத்தகைய செயல்பாட்டின் பிரதிபலிப்புகள் ஈழத்தமிழர்களுடைய நியயாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அநீதிகான செயல்பாடுகளை தண்டிப்பதற்கு இச்சபை முன்வராத போக்கை அடையாளம் காணமுடிகிறது. இதனையே கடந்த 16 ஆண்டுகளாக ஐ.நாசபையும் மனித உரிமை பேரவையும் நிகழ்த்தி வந்தது. புதிய அரசாங்கம் மீது அதிக நம்பிக்கையை நல்லாட்சி காலத்தில் முன் வைத்தது போன்று மனித உரிமை பேரவை வெளிப்படுத்துகின்றது.

இரண்டாவது ஈழத்தமிழர்கள் அரசியல் ரீதியிலும் மனித உரிமை அடிப்படையில் உலகத்திடம் எதிர்பார்க்கும் அல்லது ஐக்கிய நாடு சபையிடம் எதிர்பார்க்கும் நியாயத்தினை பெற்றுக் கொள்வதற்கான உபாயத்தை தெளிவாக கொண்டிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. கடந்த 16 வருடங்களாக ஐ.நா.சபையின் பங்காளர்களும் ஈழத் தமிழர் பங்காளர்களும் அதனையே பின்பற்றியுள்ளனர். இதில் ஒரு மாற்றத்தை நிகழ்த்துவதற்கான செய்முறை எதனையும் ஈழத்தமிழர் சார்பானவர்கள் ஏற்படுத்தவில்லை. மாறாக ஒரே வகையான அணுகுமுறைகளும் உரையாடல்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அன்றி அதில் எத்தகைய மாற்றமும் அடையப்படவில்லை. இது தமிழருடைய அரசியல் வறுமை ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் ஈழத்தமிழர் தொடர்பான அரசியலை முன்னிறுத்திக் கொண்டு செயல்படும் சக்திகளுக்கு இலாபகரமானதாகவும் ஈழத்தமிழர் சார்ந்த விடயம் உலக தளத்தில் பேசப்படுவதற்கும் மட்டுமே வழிதந்துள்ளது. அதனை கடந்து 16 வருடங்களில் ஓர் அடியேனும் ஈழத்தமிழர்களின் அணுகுமுறை வெற்றிகரமாக அடையவில்லை. இது ஈழத்தமிழரின் நியாயத்தை பெறுவதற்கான அமைக்கப்பட்ட, அநீதியில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்துள்ளது. அணுகுமுறையின் மீழமைப்பும் திருத்தமும் புதிய உத்திகளின் வழிமுறைகளும் கொண்டிருக்காத சந்தர்ப்பத்தில் எத்தகைய மாற்றத்தையும் ஈழத்தமிழர்கள் அடைய முடியாது. இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக கடந்தகால ஆட்சியாளர்கள் போன்று புதிய அரசாங்கம் அதே அணுகுமுறையை வெற்றிகரமாக நகர்த்துகிறது. கடந்த ஆட்சியாளர்களையும் ஆட்சியின் ஆலோசகர்களையும் ஆலோசனைகளையும் வைத்துக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையை புதிய அரசாங்கம் எதிர்கொள்கிறது. பலஸ்தீன மக்களுக்கும் காசாவின் துயரத்துக்கும் உலகில் உள்ள எல்லா மனிதர்களும் அரசாங்கங்களும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் ஈழத்ததமிழருக்கு அதே போல் ஒரு துயரத்தை நிகழ்த்திய அரசாங்கமும் ஆட்சியாளர்களும் இழைக்கப்பட்ட அநீதிக்கு எத்தகைய தீர்வும் வழங்காமல் இலங்கை அரசின் நலன்களை மட்டுமே முன்னிலைப்படுத்துவது நியாயமான பொறிமுறையாகவோ அல்லது இடதுசாரி அரசாங்கத்தின் அணுகுமுறையாகவோ இருக்க முடியுமா என்ற கேள்வி முக்கியமானது. இதனை அங்கீகரிக்கின்ற ஐ.நா.சபையிலும் அனுசரணை நாடுகளுக்கும் முன்வைக்கப்படும் அதே வியாக்கியானம்பொருத்தமானதாகவே தெரிகிறது.

எனவே ஈழத்தமிழர்கள் சர்வதேச நாடுகளிடமும் சர்வதேச நிறுவனங்களிடம் நியாயத்தை பெற்றுக் கொள்ளுதல் என்பதில் கவனம் கொள்வது மட்டுமன்றி எதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் கவனம் கொள்வது அவசியமானது. மேலும் எவ்வாறு அதனை அணுகுதல் என்பதிலும் கவனம் கொள்ளுதல் வேண்டும். ஒரே உத்தியை 16 வருடங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கின்ற ஓரினமாக ஈழத்தமிழர்கள் காணப்படுகிறார்கள் என்பதும் அத்தகைய முயற்சிக்கு நாடுகள் அல்லது அரசாங்கங்கள் ஒரே வகையான பதிலை மேலும் வழங்குகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானது. ஈழத்தமிழர் தமது அணுகுமுறையில் மாற்றமொன்றை மேற்கொள்ள தவறுவார்களேயானால் அடிப்படை அனைத்தையும் இழந்துவிடுவார்கள். இதனை உருவாக்க தவறுகிற சூழல் என்பது ஈழத்தமிழரின் அரசியல் வறுமை மட்டுமின்றி பலவீனமானது என்பதையும் அடையாளப்படுத்துகிறது. இது ஒரு அபாயமான அரசியல் சூழலாகவே காணப்படுகிறது. அரசியல் செயல்பாடன்றியோ, அதற்கான விழிப்புணர்வு இல்லாமலோ எத்தகைய நகர்வும் சாத்தியப்படாது என்பது ஈழத்தமிழர் புரிந்து கொள்ளப்படும் வரை நூற்றாண்டுக்கணக்கான தோல்வியை தடுத்து நிறுத்த முடியாது.

-போராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-