இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் பல விடயங்கள் உள்ளாக்கப்பட்டாலும், இனப்பிரச்சினை பொறுத்து மேற்கொள்ளப்பட்ட வெளியுறவுக்கொள்கையே அடிப்படையானதாகும். இலங்கைத்தீவின் ஆட்சியாளர்கள் சுதந்திர காலப்பகுதியிலிருந்து அல்லது அதற்கு முற்பட்ட வரலாற்று காலத்திலிருந்து இந்திய எதிர்ப்புவாதத்தையே கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அத்தகைய பாரம்பரியத்தில் பிரித்தானியாவுடனான வெளியுறவுக்கொள்கை, பின்னர் அமெரிக்காவுடனான வெளியுறவுக்கொள்கை, 2005களுக்கு பின்னர் முழுமையான சீனசார்பு வெளியுறவுக்கொள்கை என்ற அடிப்படையை வெளியுறவுக்கொள்கையில் அவதானிக்க முடிகிறது. இத்தகைய வெளியுறவுக்கொள்கையினால் ஏற்பட்ட நெருக்கடியாகவே உள்நாட்டு அரசியல் பொருளாதார சூழல் காணப்படுகின்றது. இக்கட்டுரையும் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் சீனாவுடனான உறவு சார்ந்து அதன் விளைவுகள் சார்ந்தும் உள்ளடக்கம் கட்டமைக்கப்படுகிறது.
புதிய இடைக்கால ஜனாதிபதி பதவியேற்ற சூழலில், முதலில் அவரது பாராளுமன்றத்திற்கூடான தெரிவை முதலில் அங்கீகரித்த நாடாக சீனா விளங்குகின்றது. சீனாவை அடுத்து ரஷ்சியாவும் புதிய இடைக்கால ஜனாதிபதியை வரவேற்று வாழ்த்து தெரிவித்ததோடு ரஷ்சிய ஜனாதிபதி புடின் இலங்கையுடனான ரஷ்சிய உறவு பாரம்பரியமானதெனவும், அரசியல் பொருளாதாரரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததென்றும் குறிப்பிட்டிருந்தார். அதனை அடுத்தே அயல்நாடான இந்தியா இலங்கையின் ஜனாதிபதியை வரவேற்று வாழ்த்து தெரிவித்திருந்தது. அதற்கு முன்னர் இந்திய தூதுவரும் அமெரிக்க, பிரித்தானியா போன்ற மேற்கு நாட்டு தூதுவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இக்கட்டுரை எழுதப்படும் சூழல் வரை அமெரிக்க தூதுவர் ஜூலி சூன் புதிய இடைக்கால ஜனாதிபதியை இரு தடவை சந்தித்து உரையாடியதோடு இரு நாடுகளும் இணைந்து பொருளாதாரரீதியில் பயணிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவது பற்றி உரையாடியிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேநேரம் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பார்கே புதிய அரசாங்கத்தின் பிரதமர் திணேஸ் குணவர்த்தனவை சந்தித்து பொருளாதார அபிவிருத்தி, சுற்றுலாத்துறை விருத்தி, நேரடி முதலீடுகள் தொடர்பாக உரையாடியதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே இவற்றை அவதானிக்கின்ற போது இலங்கையின் வெளியுறவுக்கொள்கையில் மீண்டுமொரு நெருக்கடிக்கான சூழல் ஏற்படுவதாகவே தெரிகின்றது. இத்தகைய தகவலுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் புதிய இடைக்கால ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார் என்றும் சர்வதேச நாணய நிதியம் சீனாவுடன் இலங்கை அரசாங்கம் கடன் மற்றும் நிதி உதவிகள் பொறுத்து உரையாட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளமை அதிக கரிசணை கொள்ள வேண்டிய பகுதியாக காணப்படுகிறது. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகும்.
முதலாவது, புதிய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கு முகமுடையவர் என்றும் அவர் தாராண்மைவாதியென்றும் விவாதிக்கப்பட்ட மரபு அவர் பதவியேற்ற பிற்பாடு மாற்றம் கண்டுள்ளது. புதிய ஜனாதிபதி தனது பதவியை தக்கவைப்பதற்காக எத்தகைய கொள்கை மாற்றத்தையும் ஏற்படுத்துவார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியில் நெருக்கடி ஏற்பட்ட போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தன கட்சி தாவ திட்டமிட்டிருந்தாரென 1970களின் இறுதியில் பிரபலமாக உரையாடப்பட்டது. அதனை ஆதாரப்படுத்தும் விதத்தில் மேர்வின் டி சில்வா லங்கா கார்டியனில்(Lanka Gurdian) எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். இதுசார்ந்து மேலும் விளங்கிக்கொள்ள வரலாற்றாசிரியரான குமாரி ஜெயவர்த்தன தேசியம் தொடர்பான தனது ஆய்வில் அசல் முதலாளித்துவ வர்க்கத்தின் அடையாளப்படுத்தல் நிகழவில்லையெனவும், அரசியல் விஞ்ஞான பேராசிரியரான ஜெயதேவ உயாங்கொட இலங்கையில் தாரண்மைவாத அரச கட்டமைப்பின் வடிவமொன்றை காணமுடியாது உள்ளதென்றும் ‘இலங்கையில் தாராண்மைவாதம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த வரிசைக்குள்ளேயே ரணில் விக்கிரமசிங்காவின் தாராண்மைவாத முகத்தை காணவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைத்தீவின் சோசலிசம், மாக்ஸியம், கொம்யூனிசம், முதலாளித்துவம், தராண்மைவாதம், நவதாரண்மைவாதம் போன்ற கருத்தியல்களின் அடையாளங்கள் அனைத்தும் அதற்குரிய அர்த்தங்களோடு பின்பற்றப்படுவதில்லையென்பது வெளித்தெரிகின்றது. அந்தவரிசையிலேயே புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தாராண்மைவாத முகமும் காணப்படுகின்றது. மேற்குலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க பதவிநிலையை தக்கவைப்பதற்காக மேற்கை நிராகரித்து கிழக்குடனான உறவை அதிலும் சீனா-ரஷ்சியாவுடனான உறவை பலப்படுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களுக்கு நிகராக மாறியுள்ளார்.
இரண்டாவது, கிழக்கு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க சீனாவை நோக்கி தனது முதல் வெளியுறவு பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு சாத்தியப்படுமானால் மேற்கின் எதிர்ப்புவாதத்தையும் இந்தியாவுடனான முறுகலையும் எதிர்கொள்ளவேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். 2005களுக்கு பின்னர் சீனா சார்பு வெளியுறவுக்கொள்கையானது இறுதிக்கட்ட போரையும் போரின் விளைவுகளையும் எதிர்கொள்ளும் நோக்கு நிலையிலேயே வடிவமைக்கப்பட்டது. அதன் மறுவலமான விளைவே மேற்குநாடுகளின் பொருளாதார உதவியும் ஒத்துழைப்பும் கைவிடப்பட்டதோடு உலகளாவியரீதியில் எழுந்திருந்த மேற்கு-கிழக்கு மோதல் அல்லது அமெரிக்க-ஐரோப்பா எதிர் சீன-ரஷ்சிய முரண்பாடு இந்நிலைக்கு காரணமாகியது. இலங்கைத்தீவின் பொருளாதார இருப்பென்பது அதன் வெளியுறவு கொள்கையிலேயே தங்கியுள்ளது. அத்தகைய வெளியுறவுக்கொள்கை மேற்கையும் கிழக்கையும் மையப்படுத்தியதாக இருக்கின்ற போது பாதுகாப்பானதாகவும் நிலைத்திருக்கக்கூடியதாகவும் அமைந்தது. இதிலிருந்து மாறுபட்ட சீனா சார்பு கொள்கை இலங்கையின் அரசியல் பொருளாதார இருப்பை அடியோடு தகர்த்தியுள்ளது. வடக்கு-கிழக்கு மீதான போரை கூட மேற்கும் கிழக்கும் சேர்ந்தே மேற்கொண்டது. போரின் வெற்றிக்கான அடிப்படை காரணியாகவும் அதுவே உள்ளது. இத்தகைய சூழலை 2005களுக்கு பின்னர் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கோத்தபாய ராஜபக்ஷவும் மட்டுமல்ல சிறிசேனா-ரணில் அரசாங்கமும் அதனையே மேற்கொண்டது. சீனாவின் ஒரே சுற்று ஒரே பாதையில் 99வருட ஹம்பாந்தோட்டை குத்தகையிலும் சிறிசேனா-ரணில் அரசாங்கமே மேற்கொண்டது. ஏறக்குறைய 2005களுக்கு பின்னர் இலங்கையின் வெளியுறவுக்கொள்கை சீனா சார்பு நிலைப்பாட்டிலேயே இயங்குகின்றது.
மூன்றாவது, புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்தின் உள்நாட்டு கட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கமாகவே காணப்படுகின்றது. பிரதமர் உட்பட அமைச்சரவையும் அமைச்சுக்களின் செயலாளர்களும் புதிய முகங்களாக அடையாளப்படுத்தப்பட்டாலும் அவை முழுக்க முழுக்க பொதுஜன பெரமனாவை சார்ந்த அரசாங்கமாகவே காணப்படுகிறது. காலிமுகத்திடல் போராட்டத்தை முன்னுறுத்தி முன்னைய ஆட்சியாளர்களை வெளியேற்றிய அதே சூழலை நிராகரிக்கும் போக்கு அவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகளும் புதிய அரசாங்கத்தின் பழைய முகத்தையே காட்டுகின்றது. இதில் மேற்கு நாடுகளும் அவற்றுக்கான நிறுவனங்களும் அதன் தூதரக அதிகாரிகளும் புதிய அரசாங்கம் மீதான நம்பிக்கையீனத்தையே வெளிப்படுத்துகின்றனர். அத்தகைய நம்பிக்கையீனத்தை அடையாளப்படுத்தும் விதத்தில், புதிய ஜனாதிபதியின் தூதுவர்களுடனான முதல் சந்திப்பு வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி மனித உரிமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் அமெரிக்க செனட்டும் அதீதமான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
நான்காவது, புவிசார் அரசியல் முக்கியத்துவமும் பொருளாதாரரீதியிலான உதவிகளை வழங்கிய அயல்நாடாகிய இந்தியா புதிய ஜனாதிபதியை வரவேற்பதில் காலமாதத்தை இராஜதந்திர செய்முறையாகவே விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். முன்னைய சந்தர்ப்பங்களில் தொலைபேசியில் உரையாய இந்திய பிரதமர் கடித பரிமாற்றத்தினூடாக சீனா-ரஷ்சிய ஜனாதிபதிகளின் வாழ்த்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தியமை கவனிக்கத்தக்க விடயமாகும். இக்கட்டுரை எழுதப்படும் வரை இலங்கைக்கான இந்திய தூதுவர் ஜனாதிபதியுடனான தனிப்பட்ட சந்திப்பை மெற்கொள்ளவில்லையென்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
எனவே, இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி என்பது அதன் வெளியுறவுக்கொள்கை சார்ந்தது. ஆட்சியை தக்கவைப்பதற்கான மேற்கொள்ளப்படும் எத்தகைய செய்முறையும் பலமான மீளெழுச்சியக்கான வாய்ப்பை இலங்கைத்தீவுக்கு தந்துவிடாது இலங்கையின் உயரிவாழ்வு அதன் வெளியுறவுக்கொள்கையிலேயே தங்கி உள்ளது. இந்தியாவை நிராகரித்தாலும் மேற்குலகத்தை பகைக்காத கிழக்குடனான அதீதீவிர நெருக்கமற்ற உறவு இலங்கைத்தீவின் அரசியல் பொருளாதார இருப்புக்கு ஆரோக்கியமானதாக அமையும். இந்தோ-பசுபிக் உபாயமும், குவாட் கட்டமைப்பும் சீனா எதிர்ப்புவாதத்தையே பிராந்திய சர்வதேச அரசியலில் கொண்டுள்ளது. சீனா-ரஷ்சியாவுடனான கூட்டு என்பது மேற்குலகத்தின் நிராகரிப்பு என்பது தவிர்க்கமுடியாத உலக அரசியல் பொருளாதர ஒழுங்காகும். உரிய நாடுகள் உடன்பாட காண்பதம் மோதிக்கொள்வதும் போல் இலங்கைத்தீவு அந்த நாடுகளோடு உறவு வைத்தக்கொள்ள முடியாது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
