இலங்கை-இந்திய உறவு சார்ந்து ஈழத்தமிழரது அரசியல் தீர்மானிக்கப்படுவது யதார்த்தமானது. இந்தியாவை நிராகரித்துவிட்டு ஈழத்தமிழர் அரசியல் இருப்பு சாத்தியமாகாது என்பதை கடந்த காலம் முழுவதும் ஈழத்தமிழரை இந்தியா உணரவைத்துள்ளது. ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தையும் முடிபையும் வரைந்த இந்தியா அதன்பின்பான ஈழத்தமிழரது அரசியலையும் கட்டமைக்க திட்டமிடுகிறது. ஆனால் அவை அனைத்தையும் தனது நலனுக்குட்பட்ட விதத்திலேயே செயல்பட முனைவதையே ஈழத்தமிழர்-இந்தியா விரிசலுக்கு காரணம் என விளங்கிக் கொள்ள முடியும். அதனை சரிவரப் பயன்படுத்தும் தென்இலங்கையின் தந்திரோபாயம் ஈழத்தமிழரது அரசியல் தலைமைகளின் பலவீனமானது சேர்ந்தும் விரிசலை வலுப்படுத்திவருகிறது. இந்த விரிசல் அனைத்தும் ஈழத்தமிழரது அரசியலை அழிவுக்கு தள்ளியதுடன் அனைத்து துயரங்களுக்கும் வழிசமைத்துள்ளது. இக்கட்டுரையும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வடக்குக்கு மேற்கொண்ட விஜயத்தின் பிரதிபலிப்புக்களை தேடுவதாக அமையவுள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதவர் கோபால் பாக்லோ வடக்குக்கு வருகைதந்து (1-3.12.2023) பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களையும் அதற்கான உரையாடலையும் முன்வைத்ததோடு நிவாரண உதவிகளையும் நெருக்கடிக்கு உட்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தார். குறிப்பாக நெடுந்தீவு மற்றும் நயினாதீவு ஆலயம் மற்றும் விகாரைகளுக்கு விஜயம் செய்த தூதுவர் அவர்களது கோரிக்கைகளை தீர்ப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். தலைமன்னார்-தனுஸ்கோடி தரைவழிப்பாதை அமைப்பதற்கான முன்னகர்வுகள் தொடர்ந்து நிகழ்வதாகவும் அதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார். வடக்கை இணைத்து இலங்கை – இந்தியா எரிபொருள் குழாய் செயற்றிட்டம் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் தலைமன்னார்-இராமேஸ்வரத்திற்குமான கப்பல் சேவை குறித்து அடுத்த கட்ட நகர்வுகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதேவேளை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சியில் 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த தூதுவர் 100 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக முதல்கட்டமாக மூன்று மில்லியன் ரூபாவை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் மாணவ பிரதிநிதிகளிடமும் கையளித்தார். அத்துடன் இந்து கற்கைப்பீடத்தின் இரு விரிவுரையாளர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கலாசாரப் பேரவையின் உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டத்தினூடாக இந்தியாவுக்கான புலமைசார் பயணத்துக்கான கடிதத்தையும் கையளித்தார். அது மட்டுமன்றி வடக்கில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணமும் தூதுவரால் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு நிவாரண அரசியலை இலங்கைக்கான இந்தியத் தூதுவரால் வடக்கு விஜயத்தின் மூலம் நிகழ்ந்துள்ளது. இத்தகைய நிவாரண அரசியலை தூதுவர் மேற்கொள்வதற்கான அடிப்படைகளை தேடுவது அவசியமானது. ஏனெனில் தூதரகங்களின் இத்தகைய செயல்கள் இயல்பான நகர்வாக அமைந்தாலும் நடைமுறையில் இந்தியத் தூதுவரது தற்போதைய நடவடிக்கை விசேடமானதாக தெரிகிறது. ஏற்கனவேயும் தூதுவர் வடக்குக்கு பலதடவை விஜயங்களை மேற்கொண்டுள்ளார். அப்போது இல்லாத அக்கறையும் நகர்வும் தற்போது நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்கள் குறிப்பிடுவது போல் அவரது காலப்பகுதி நிறைவடைவதைப் பொறுத்து இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டாலும் அதற்குள்ளும் ஒரு விசேடத்துவம் காணப்படுகிறது. கடந்தகாலங்களில் பல தூதுவர்கள் பணிபுரிந்த போதும் மாற்றமுற்று செல்லும் மரபில் நிவாரண அரசியல் எதனையும் அதிகம் முதன்மைப்படுத்தியதாக தெரியவில்லை. அவ்வாறு நிகழ்ந்திருந்தாலும் தற்போது கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.
ஒன்று, இலங்கைக்கான சீனத்தூதுவரான ஷி சென் ஹொங் நவம்பர் மாதம் வடக்குக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவரது வருகையின் பிரகாரம் மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசியலை மேற்கொண்டிருந்தார். அவரது வருகையை அடுத்து இந்திய நிதியமைச்சரின் வருகை அமைந்திருந்தது. அதனை அடுத்து சீனாவின் விசேட தூதுவர் குழுமம் இலங்கைக்கு வருகை தந்திருந்தது. ஆனால் அத்தரப்பு வடக்குக்கு விஜயம் செய்யவில்லை. ஆனாலும் இலங்கைத் தீவுக்கான வருகையில் இரு நாடுகளும் முதன்மை வகிப்பதுடன் போட்டித் தன்மையுடன் நகர்வதாகவே தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்பின் பிரகாரம் இந்தியத் தூதுவரது வடக்கு விஜயம் அமைந்திருக்க வாய்ப்பு அதிகமுள்ளதாகவே தெரிகிறது. சீனாவின் வடக்கு மீதான கவனமும் கரிசனையும் அதீதமாகவே உள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது சீனாவின் பிரவேசம் வடக்கு மாகாணத்தை நோக்கி அதிகரித்துள்ளது. அபிவிருத்தித் திட்டங்கள் பொருளாதார ஒத்துழைப்புகள் நிவாரண நடவடிக்கைகள் என பலவிடயங்களில் சீனாவின் செயல்பாடு வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ளது. அதிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டை அடிப்படையாகக் கொண்டு சீனா செயல்படுகிறது. அதற்கான அடிப்படை இந்தியாவின் நிலப்பரப்பிற்கு அண்மைய நிலப்பகுதியாக யாழ்ப்பாணக் குடாநாடு அமைந்திருப்பதே காரணமாகும். இதன் நியதி பாதுகாப்புச் சார்ந்தது. அத்தகைய இந்தியப் பாதுகாப்பின் எல்லைக்குள் இலங்கைத் தீவு மட்டுமல்ல அதன் பகுதியான யாழ்ப்பாணக் குடாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் சீனாவின் செல்வாக்கை வடக்குப் பகுதியில் வளரவிடாது தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திய தூதுவரது நகர்வு அமைந்துள்ளது. முழுமையாக இந்தியாவின் நகர்வே அதுவாகவே உள்ளது. ஆனால் வெளிப்படையாக சீனாவை இந்தியா பார்த்துக் கொள்ளும் அது பற்றி ஈழத்தமிழர் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற விதத்தில் இந்தியத் தூதுவரே பலசந்தர்ப்பங்களில் உரையாடியுள்ளார். தற்போது ஈழத்தமிழர் குறிப்பிட்ட அதே எல்லைக்குள் இந்தியத் தூதுவர் செயல்படுகின்றார். ஏறக்குறைய 1990களின் நடுப்பகுதியிலிருந்து ஈழத்தமிழர்கள் சீனா பற்றிய விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் கொண்டவர்கள் என்பது நினைவு கொள்ள வேண்டும். அப்போதெல்லாம் மௌனம் காத்துக் கொண்ட இந்தியத் தரப்பு தற்போது விழிப்பதால் எத்தகைய விளைவையும் ஏற்படுத்திவிடலாம் எனக் கருதிவிட முடியாது. இலங்கைத் தீவில் சீனா நிலைகொண்டுவிட்டதாகவே தெரிகிறது. இதனை உடைப்பதென்பது இலங்கைத் தீவின் இறைமையை பாரதீனப்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும். அதற்கான வாய்ப்பு சாத்தியமாகுமா என்பது பிரதான கேள்வியாகும். அதற்காக இந்தியா இந்திராகாந்தி யுகத்தை நோக்கி நகர வேண்டும். அதற்கு இந்தியாவின் ஆளும்வர்க்கம் தயாராக இருப்பதாக தெரியவில்லை. வேண்டுமாயின் இப்படியான எண்ணத்தை திட்டமாக கொள்ளலாமே அன்றி அதனை சாத்திப்படுத்தலாமா என்பது கடினமானதாகத் தெரிகிறது.
இரண்டு, இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் தரைவழிப்பாதை தொடர்பில் வடக்கில் இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ள கருத்து மிக முக்கியமானது. அதிலும் வடக்கை மையப்படுத்தி அத்தகைய தரைவழிப்பாதை பற்றிய உரையாடல் திட்டமிடப்படுகிறது. அது ஈழத்தமிழரது அரசியல் இருப்பிற்கான பலமாக அமைந்தாலும் அதனால் தென் இலங்கை ஏற்படுத்தப் போகும் அரசியல் நகர்வு எதுவாக அமையும் என்பது கடந்தகாலத்தில் தெரியாததொன்றல்ல. ஏனைய விடயங்களில் இந்தியாவின் திட்டமிடலுக்கு தென் இலங்கை ஒத்துழைப்பு வழங்கினாலும் தரைவழித் தொடர்புக்கு ஒத்துழைக்குமென கருதுவது கடினம். அத்தகைய திட்டமிடல் தென் இலங்கையின் இனவாத உணர்வுக்கே வழியமைக்கும். ஈழத்தமிழர் மீதான தென் இலங்கையின் கோபத்திற்கு இந்தியாவே காரணம் என்ற கருதுகோள் பலமாக நிறுவப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் இலங்கைத் தீவில் நிகழ்ந்த அனைத்துப் படுகொலைக்களுக்கும் கலவரங்களுக்கும் அடிப்படையில் இந்தியா மீதான அச்ச உணர்வே காரணம் என்ற வாதம் நியாயமானதாகவே தெரிகிறது. இந்தியாவின் கடந்த கால அணுகுமுறைகள் அனைத்துமே தென் இலங்கையை அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளது. மிகப்பிந்திய காலத்தில் அதாவது 1987 இல் இந்திய விமானங்கள் உணவுப் பொதிகளை வடமராச்சியில் போடும் போது இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் பதுங்கு குழிகளில் இருந்ததாக தகவல்கள் உண்டு. இராணுவ பலத்தால் இந்தியாவை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்ட தென் இலங்கை புத்திபூர்வமான அணுகுமுறைகளால் இந்தியாவை கையாள ஆரம்பித்தது. அதில் வெற்றியும் கண்டு கொண்டது. அதனை காலம் காலமாக ஆட்சியாளர்களும் மகாசங்கத்தினரும் பின்பற்றி வருகின்றனர். ஈழத்தமிழரது தோல்விக்கும் இந்தியாவின் நெருக்கடிக்கும் தென் இலங்கையின் தந்திரோபாயமே பிரதான காரணமாகும். இந்திய ஆட்சியாளர்கள் இலங்கைத் தீவை சிறிய நாடெனக்கருதுகிறார்களே அன்றி மரபார்ந்த தந்திரோபாயத்தையும் வலுமிக்க இராஜதந்திர வரலாற்றைக் கொண்ட நாடு எனக்கருத தவறுகின்றனர். அது மட்டுமன்றி நிவாரண அரசியலில் வடக்கு மீனவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களது இயந்திரப் படகுகளாலும் சீனாவின் கடலட்டை வளர்ப்பினாலும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நிவாரணம் வழங்குவதனால் அவர்களது வாழ்வாதாரமோ கடல் மீதான இறைமையோ பாதுகாக்கப்படப் போவதில்லை. இவை அனைத்தும் ஈழத்தமிழரை ஆழ்கடல் மீன்பிடியிலிருந்து அகற்றும் நகர்வுகளாகவே தெரிகிறது. தென் இலங்கை மட்டுமல்ல இந்தியா, சீனாவும் அத்தகைய நகர்வுக்கு உதவுவதாகவே தெரிகிறது. ஈழத்தமிழர் கோருவதெல்லாம் தமது கடலையும் நிலத்தையும் பிற சக்திகள் தலையிடாது அல்லது ஆக்கிரமிக்காது பாதுகாத்து கொள்வதற்கான அரசியல் அதிகாரமேயாகும். அத்தகைய அதிகாரம் கிடைக்குமாயின் ஏனைய அனைத்தையும் ஈழத்தமிழர் உருவாக்கிக் கொள்ளும் திறனுடையவர்களாகவே உள்ளனர்.
எனவே இலங்கைக்கான இந்தியத் தூதுவரது வடக்கு நோக்கிய நகர்வு சீனாவின் நிவாரண அரசியலை முறியடிப்பதாக அமைந்தாலும் வடக்கை தனித்துவமானதாக ஆக்குவதில் கவனம் கொண்டிருப்பது போல் தெரிகிறது. அதேநேரம் தென் இலங்கையின் ஆட்சியில் சில மாற்றங்களை நோக்கி இத்தகைய நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. குறிப்பாக தற்போதுள்ள ஜனாதிபதியின் ஆட்சி இந்தியாவுக்கு அதிகம் சௌகரியமானதாக அமையாதுள்ளது என்பது இந்தியாவின் நகர்வுகளைக் கொண்டு உணரமுடிகிறது. அதனால் இதில் ஒரு மாற்றத்தை வடக்கு தொடர்பில் இந்தியா கொள்ளுகின்ற கொள்கை ஏற்படுத்தலாம் என்ற விவாதம் நியாயமானதாகவே தெரிகிறது. அதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாகவே தெரிகிறது. அப்படியாயின் இந்தியா மீண்டும் ஒரு நெருக்கடிக்குள் அகப்படும் நிலை ஏற்படும் என்பதைவிட ஈழத்தமிழர் தோல்வியில் இன்னோர் பதிவு சாத்தியமாக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)