June 23, 2024
அரசியல் கட்டுரைகள்

சூடான் இராணுவ – அரசியல் பாரம்பரியமும் உள்ளக மோதலும்!

அரசியல் என்பது அதிகாரத்தை மையப்படுத்திய அலகாகவே காணப்படுகிறது. இவ்அதிகாரப் போட்டிக்குள் வரலாறு தோறும் ஜனநாயகத்துக்கு முரணான அதிகார கைப்பற்றுகைகளும் பதிவாகியே வருகின்றது. இவ்வரலாற்று பதிவில் சூடான் தொடர்ச்சியாகவே கொதிநிலையான அரசியல் வரலாற்றை பதிவு செய்யும் அரசாக நிலைபெறுகின்றது. 2021இன் பின்னரைப்பகுதியில் சதிப்புரட்சியூடாக இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இன்று, இராணுவ ஆட்சியாளர்களிடையே அதிகாரத்தை பொதுமக்களிடம் கையளிப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாகவே மோதல்கள் மூண்டுள்ளன. உள்நாட்டு மோதலாக பரிணமித்துள்ள சூடான் மோதலுக்கு பின்னால் சர்வதேச அரசுகளின் நலன்களும் பிணைந்துள்ளன. சூடான் மோதல் என்பது சர்வதேச அதிகாரப்போட்டியின் ஒரு பகுதியாகவும், அதன் வேர்கள் அந்த நாட்டின் குழப்பம் மிகுந்த அரசியலுடன் தொடர்புபட்டவையாகவும் அமைகின்றன. இக்கட்டுரை சூடான் மோதலின் அரசியல் தாற்பரியத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

வளங்கள் நிறைந்த ஆனால் வறிய நாடான சூடானின் அதிகாரத்திற்காக திடீரென இராணுவத்திற்குள் மோதல் வெடித்துள்ளது, கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட (400 எனவும் செய்திகள் உண்டு) குடிமக்களைக் கொன்றது மற்றும் ஜனநாயகத்தின் மீதான அதன் நம்பிக்கையைத் தகர்த்து, சுற்றியுள்ள நாடுகளின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் ஒரு கடுமையான உள்நாட்டுப் போராக மாற்றமுறும் அச்சத்தை எழுப்புகிறது. நாட்டின் இராணுவ தலைமைக்குள் காணப்படும் அதிகாரப்போட்டி காரணமாகவே சூடான் மோதல் வெடித்துள்ளது. தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சண்டைகளால் மில்லியன் கணக்கானவர்கள் மோதலுக்குள் சிக்கினர். 2021 இல் இடம்பெற்ற சதிப்புரட்சிக்கு பின்னர் சூடானை இரு தரப்பு இராணுவ அதிகாரிகள் குழுவொன்று நிர்வாகம் செய்கின்றது. இதில் இடம்பெற்றுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகளே தற்போதைய வன்முறைகளுக்கு காரணமாக உள்ளனர். இராணுவ தலைவரான ஜெனரல் அப்தெல் பத்தா அல் புர்கான் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். சூடானின் துணை ஜனாதிபதியாக முகமட் ஹம்தான் டக்லோ பதவிவகிக்கின்றார் இவர் ஆர்.எஸ்.எப் (Rapid Support Forces) துணை இராணுவக்குழுவின் தலைவராகவும் காணப்படுகின்றார்.

நாடு சென்றுகொண்டிருக்கும் திசை மற்றும் பொதுமக்களிடம் ஆட்சியை வழங்குவது போன்ற விடயங்கள் குறித்து இருவர் மத்தியிலும் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. மேலும் 100,000 வலிமையான ஆர்.எஸ்.எப்-ஐ இராணுவத்தில் சேர்க்கும் திட்டங்கள் மற்றும் புதிய படையை யார் வழிநடத்துவார்கள் என்பதும் இரு இராணுவ அதிகாரிகளின் மோதலிலும் பிரதான காரணியாக காணப்படுகின்றது. ஆர்.எஸ்.எப் துணை இராணுவக்குழு 2013இல் உருவாக்கப்பட்டது மற்றும் அதன் தோற்றம் ஜான்ஜவீட் போராளிகளால் டார்பூரில் கொடூரமாக கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடியது. அங்கு அவர்கள் இனச் சுத்திகரிப்புக்கு குற்றம் சாட்டப்பட்டனர். அப்போதிருந்து, யேமன் மற்றும் லிபியாவில் மோதல்களில் தலையிட்ட ஒரு சக்திவாய்ந்த துணை இராணுவக்குழுவை ஜெனரல் டக்லோ உருவாக்கியுள்ளார். சூடானின் சில தங்கச் சுரங்கங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பொருளாதார நலன்களையும் அவர் வளர்த்துள்ளார். 2019-ஜூனில் 120க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்களை படுகொலை செய்தது உட்பட மனித உரிமை மீறல்களில் ஆர்.எஸ்.எப் துணை இராணுவக்குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு வெளியில் இத்தகைய பலம் வாய்ந்த படையொன்று நாட்டில் என்றும் ஸ்திரமற்ற தன்மையை தோற்றுவிக்கும் காரணியாகவே காணப்பட்டுள்ளது. அதன் சான்றாகவே தற்போதைய மோதலும் காணப்படுகின்றது.

சூடான் மோதலை எளிமையாக உள்ளக மோதலாகவும், ஜெனரல் அப்தெல் பத்தாஅல் புர்கான் மற்றும் முகமட் ஹம்தான் டக்லோ ஆகியோரின் அதிகார நலனுக்கான போட்டியாகவும் கருதிவிட இயலாது. சூடானின் மோதலுக்கு பின்னால் சூடானின் தொன்மையான இராணுவ அரசியல் கலாசாரமும் வரலாறும் உண்டு. அதுவே இன்னோர் பரிமாணமான சர்வதேச அரசுகளின் நலன்களுடன் இணைந்து ஆழமான செல்வாக்கு செலுத்துகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, சூடானின் நீண்ட கால அரசியல் வரலாறு இராணுவ ஆட்சியினுள்ளேயே காணப்பட்டு வந்துள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரியான ஒமர் அல் பஷீர் 1989இல் இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார். இவரது ஆட்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு மக்கள் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஆவணத்தில் ஒப்புக்கொண்டு சிவிலியன்- இராணுவ கூட்டமைப்பு ஒன்று இடைக்கால அரசாங்கமாக பதவியேற்றது. சூடானின் இறையாண்மை சபை சிவிலியன்- இராணுவ கூட்டுறவில் கட்டமைக்கப்பட்டது. இக்கூட்டுறவு இடைக்கால அரசாங்கத்தில் அப்தல்லா ஹம்டோக் பிரதராகவும், ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் இராணுவ முகவராகவும் செயற்பட்டனர். இரண்டு வருட காலப்பகுதியில் பொதுத்தேர்தல் ஒன்றினூடாக முழுமையாக ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதாக உறுதி பூண்ட போதிலும், 2021 ஒக்டோபர்- 25 அன்று ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவக்குழு முழுமையாக ஆட்சியை கைப்பற்றியது. முழுமையான இராணுவ ஆட்சி ஏற்பட்டதை தொடர்ந்தே அதிலிருந்து ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் மற்றும் ஜெனரல் டக்லோவுக்கும் இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ளது. இப்பின்னணியில் 2019இல் ஒமர் அல்-பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் சமீபத்திய அத்தியாயமாகவே இன்றைய இராணுவக்குழுக்களிடையேயான மோதல் அவதானிக்கப்படுகின்றது. இது இராணுவ ஆட்சி பாரம்பரியத்தின் வெளிப்பாடே ஆகும்.

இரண்டாவது, கடந்தகால மனித உரிமை குற்றச்சாட்டு வரலாறுகள் பொதுமக்களிடம் அதிகாரத்தை பகிர்வதில் இராணுவக்குழுக்களிற்கு தடையாக அமையும். முன்னாள் ஜனாதிபதி பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு 2019-/2021 இடைக்கால சிவிலியன்- இராணுவ கூட்டமைப்பு அரசாங்கம் கொள்கையளவில் உறுதிபூண்டுள்ளது. டர்பூர் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களில் பஷீர் தங்களைக் குற்றவாளிகளாகக் குறிப்பிடுவார் என்ற அச்சம் பஷீர் நிர்வாகத்தின் கீழ் லெப்டினன்ட்களாக செயற்பட்ட ஜெனரல் புர்ஹான் மற்றும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படையின் தலைவர் ஜெனரல் முகமட் ஹம்டான் டக்லோ ஆகியோருக்கு உள்ளது. அத்துடன் சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான படை புர்ஹான் மற்றும் டக்லோ ஆகிய இருவரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தாவிடினும் சூடான் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்க்கை காணப்படுகின்றது.

இவ்அச்சப்பின்னணியே கடந்த டிசம்பரில் பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பு ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், விவரங்களை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இராணுவ வீரர்களும், அவர்களது ஆதரவாளர்களும், தங்கள் அதிகாரப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டால், தங்களின் செல்வம் மற்றும் செல்வாக்கு என்னவாகும் என்ற கவலையில் இராணுவத்தலைவர்கள் உள்ளனர்.

மூன்றாவது, சூடானின் புவிசார் அரசியல் மூலோபாயம் சர்வதேச மற்றும் பிராந்திய அரசுகளின் நலனுக்கான களமாக காணப்படுகின்றது. சூடான் ஒரு முக்கியமான பிராந்திய அரசியல் சக்தியாகும். மேலும் மூலோபாய துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விரும்பப்படும் தங்கம் மற்றும் எண்ணெய் போன்ற பரந்த இயற்கை வளங்களையும் கொண்டுள்ளது. அமெரிக்கா பாரம்பரியமாக சூடானில் மட்டுப்படுத்தப்பட்ட செல்வாக்கைக் கொண்டிருந்தது. இருப்பினும் அல்-பஷீர் வெளியேற்றப்பட்ட பின்னர் இது மாறத் தொடங்கியது. சீனா பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் பொருளாதார முதலீடு கடன்கள் தற்போதைய ஆட்சியாளர்களிற்கான ஆதரவு போன்றவற்றின் மூலம் கிழக்கு ஆபிரிக்காவில் நண்பர்களை உருவாக்க முயல்கின்றது. அத்துடன் கண்டம் முழுவதும் மத்தியஸ்தராக தன்னை நிலைநிறுத்துவதற்கான இலட்சியங்களை சீனா கொண்டுள்ளது. சூடான் மோதலிலும் அத்தகைய வெளிப்பாடுகளையே சீனா வெளிப்படுத்தி வருகின்றது. சூடான் மோதல் தொடர்பில் கருத்துரைத்துள்ள பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திரப் பள்ளியின் பேராசிரியர் சாங் வெய், ‘சூடானின் சமூக ஒப்பந்தம் பழங்குடியின உறவுகள் மற்றும் இன உறவை அடிப்படையாகக் கொண்டது. இது இராணுவ குழுக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான மோதல்களை சமரசம் செய்வது மிகவும் கடினம். ஆப்பிரிக்க நாடுகளில் சமூக மோதல்கள் மேற்கு-வடிவமைக்கப்பட்ட மாதிரிக்கு தவறான சரிசெய்தல் மற்றும் கண்டத்தில் மேற்கு நாடுகளின் ஆர்வங்களின் மோதல்களால் மேலும் தூண்டப்பட்டன’ எனத் தெரிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில், மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட முன்வருவதையும், பணக்கார நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுக்காக வடிவமைத்த மாதிரியை அவர்கள் மீது திணிப்பதையும் சாங் குறிப்பிட்டார். சூடானின் மூலோபாய முக்கியத்துவத்தினால் சர்வதேச அரசுகள் தமது நலனுக்குள்ளேயே சூடான் மோதலை அவதானிக்கும் நிலைப்பாடு காணப்படுகின்றது.

எனவே, சூடான் உள்நாட்டு மோதுகையானது சூடான் இராணுவ பாரம்பரியத்தின் தொடர்ச்சியானதாக அமைகின்ற போதிலும், அதன் புவிசார் அரசியல் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் கொந்தளிப்பான சூழலையே உருவாக்கியுள்ளது. குறிப்பாக சண்டையானது நாட்டை மேலும் துண்டாடலாம், அரசியல் கொந்தளிப்பை மோசமாக்கலாம் மற்றும் அண்டை அரசுகளில் இழுக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. 2019 ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு சூடான் நிலையானதாக இல்லை, இப்போது நாடு மாறுதல் செயல்பாட்டில் இருக்கும்போது மற்றொரு சதி முயற்சி ஏற்பட்டுள்ளது. சீனா உட்பட பல பெரிய நாடுகளின் பெரிய முதலீடுகளைக் கொண்ட ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் இந்த நிலைமை பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் சூழலே காணப்படுகின்றது. தற்போதைய மோதலில் ஆழமாக ஈடுபடுவதைத் தவிர்க்கவும், அமைதியான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கவே உலகம் அதிகம் முனைய வேண்டும். மாறாக ஒவ்வொரு தரப்புக்காக சர்வதேச சக்திகள் பிளவுறின் ரஷ்சியா-உக்ரைன் போரினால் உலகம் எதிர்கொள்ளும் அபத்தங்களை சூடான் மோதலும் வேறு ஒரு முனையில் அபாயமாக மாற்றமடைய வாய்ப்புள்ளது.

-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)