July 10, 2025
அரசியல் கட்டுரைகள்

தமிழ் கட்சிகளின் உடன்பாடுகளும் கூட்டுக்களுக்கான நகர்வுகளும் வெளிப்படுத்தும் செய்தி?

ஈழத் தமிழர் அரசியலில் வினோதமான அறிவுபூர்வமில்லாத உரையாடல்கள் அதிகரித்த காலப்பகுதியாக சமகாலப் பகுதி காணப்படுகிறது. தமிழ் மக்கள் எல்லையற்ற நெருக்கடிகளையும் துயரங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அவர்கள் சார்ந்திருக்கும் பொது வெளியில் உரையாடுகின்ற விடயங்களும் அதிக குதர்கமானதாக காணப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் தெளிவற்ற பெரும்பான்மை அனைத்து கட்சிகளுக்கும் வடக்கு கிழக்கில் வழங்கியிருந்தது. ஆனாலும் தமிழ் தரப்புக்களிடமே அதிக ஆசனங்கள் பெறுவதற்கான வாக்குகளை தேர்தல் தந்திருந்தது. ஆனால் தமிழ் கட்சிகள் அரசியல் நடத்தையானது கடந்த காலப் போக்கினை மீளவும் நினைவுபடுத்தும் விதத்திலேயே நிகழ்கின்றன. தமிழ் மக்கள் இத்தகைய மோசமான அரசியல் கட்சிகளின் நடத்தைக்கூடாக ஏதும் மாற்றத்தை அடையலாமா? என்ற கேள்வியே அதிகம் ஏற்படுத்தி உள்ளது. இக் கட்டுரையும் தமிழ் மக்களின் அரசியலை நகர்த்தும் தரப்புகள் மேற்கொள்ளுகின்ற கூட்டுக்களும் உடன்படிக்கைகளும் தரப்போகும் விளைவுகளை தேடுவதாக அமைந்துள்ளது.

அணிசேர்தல், அல்லது கூட்டுச்சேர்தல் என்பன உலக வரலாற்றில் ஒரு தரப்பின் வலுவை மேலும் பலமடையச் செய்யும் எண்ணக்கருவாகும். எதிரிக்கு எதிராக அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் கூட்டுக்கள் அல்லது அணிசேர்தல்கள் நிகழ்வது வழமையானது. பொருளாதார அர்த்தத்தில் அணிசேர்தலானது அபிவிருத்தியையும் தேசிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டது. உலகம் முழுவதும் அணி சேர்த்தல் என்பதன் மூலமே வெற்றிகரமான மாற்றங்கள் எட்டப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் உலகத்திற்கு கொடுமைகளையும் அணிசேர்தல் உருவாக்கிவிட்டுப் போகிறது. பாஸிசம் ஒரு கூட்டு என்பது எல்லோருக்கும் புரிந்து ஒரு அம்சம். பாஸிசம் (Facism) என்ற சொல் சிறு சிறு குச்சிகளை திரட்டி அவற்றை கூட்டி ஒன்றாக கட்டுவதன் மூலம் பலமாக இருத்தல் என்பதே அதன் அர்த்தமாகும். அத்தகைய பலம் இரண்டாம் உலக யுத்தத்தில் இனப்படுகொலைக்கான பலமாக தீர்ந்து போனது. உலக வரலாறு முழுவதும் இவ்வகை உடன்பாடுகள் அல்லது அணிசேர்தல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அதற்கு எதிரான தரப்புகளும் அணிகளாகி அத்தகைய தரப்புகளை முறியடிப்பதும் வெற்றிகான்கின்றமையும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அரசியல் இலக்கு என்பது தான் முதன்மையானது. அரசியல் இலக்கை ஓர் தேசிய இனத்தோடு கட்டமைக்க முயலுகின்றபோது அது தேசிய இனத்தின் திரட்சி மிக முதன்மையானது.

ஈழத்தமிழர்கள் ஒரு சிறிய தேசிய இனமாக இருந்து கொண்டு தமக்கள் முரண்படுவதும் பகைத்துக் கொள்வதும் அபாயகரமானது என்பதை வரலாறு முழுவதும் சொல்லிக் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் இருந்து இன்றைய அனுபவங்களும் உடன்படிக்கைகளும் எட்டப்படுகிறது. அணிசேர்தல் அரசியல் ரீதியில் தந்திரோபாயமான வியூகம் என்று கருத முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட சக்திகள் ஒரு விடையத்தில் ஈடுபடுதல் என்பது அணிசேர்தல் என்ற அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறது. கடந்த 02.06.2025 அன்று தமிழ்த் தேசியப் பேரவையும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் ஓர் உடன்படிக்கையில் ஒப்பமிட்டிருந்தனர். ஆனால் அந்த உடன்படிக்கை கடந்த கால அனுபவங்களிலிருந்து நோக்கப்படவில்லை என்ற விமர்சனம் தவிர்க்க முடியாதது. பிரெஞ்சு சிந்தனையாளர் ஒருவர் குறிப்பிடுவது போல் ஒப்பந்தங்களின் ஒப்பமிட்ட பேனாவின் மை காயமுன்னர் அதன் அடிப்படைகளை தகர்க்கும் நடத்தைகள் அரங்கேறுகின்றது என்பது போலவே இங்கும் நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக ஓர் அணியோடு நிகழ்த்தப்படும் உடன்பாடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்த அணியோடு பேண வேண்டிய உறவும் புரிதலும் அரசியல் வியூகமாக மட்டுமல்லாது அதனை கடந்து தேசத்தின் நலன் சார்ந்ததாகவும் பரிமாணம் பெறுகிறது.

ஜனநாயக தேசிய அணியினர் பொறுத்த வரை அவர்கள் எப்போதும் உடன்பாடுகளை மதித்து செயல்படுபவர் அல்லர். ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளருக்காக எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை உதறிவிட்டு இலங்கையின் ஜனாதிபதியையும் பிற கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்தமை நினைவு கொள்ளத் தக்கது. சந்தித்தது மட்டுமன்றி அதற்கு நியாயம் கற்பிக்கவும் அவர்கள் தவறவில்லை. அவர்களுடைய நியாயம் (அப்போதைய) ஜனாதிபதி அழைத்திருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் சந்திப்பது தமது கடமையாகும் என ஒருதரப்பினரும், அதிலுள்ள இன்னோர் தரப்பினர் முதல் முதலாக எங்களை ஜனாதிபதி அழைத்திருப்பதனால் சந்திப்பது தவிர்க்க முடியாததென்றும் குறிப்பிட்டு தப்பிக் கொள்ளப் பார்த்தார்கள். ஆனால் தமிழ் பொது வேட்பாளர் பொறுத்து செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையே ஜனாதிபதிக்கும் தென் இலங்கையின் அரசியல் அணுகுமுறைக்கும் எதிரானதே. அதாவது தமிழ் மக்கள் ஜனாதிபதி அதேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல. அது முடியாதது என்று தெரியாமல் அல்ல. அத்தகைய முட்டாள்களாக ஒப்பமிட்டவர்கள் இல்லை. தமிழ் மக்களுக்கு எதிரான பொது எதிரியின் செயல்பாட்டுக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தி அதனை ஒரு பொதுவாக்கெடுப்பாக கட்டமைக்கவே அத்தகைய உடன்பாடு. இதனை அவர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை. இலங்கை ஜனாதிபதியை சந்தித்து உரையாடுவது என்பது அத்தகைய பொது எதிரியின் காலடியில் செய்யப்பட்ட புரிந்துணர் உடன்படிக்கை போடுவதற்கு சமமானது என்பதை அவர்கள் தற்போதும் புரிந்து கொள்ளவில்லை. உடன்படிக்கையில் ஒப்பமிட்ட சிவில் பிரதிநிகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் தனிப்பட்ட அழைப்பு விடுத்ததென்பதை நினைவு கொள்ள வேண்டும். அக் கட்சியினர் எப்போதும் அதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள். இதுவே அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கான அடிப்படையாகும். ஆயுதப் போராட்ட காலத்திலும் அதன் பின்பான அரசியலிலும் அவர்களுடைய போக்கை தமிழ் மக்கள் அளவீடு செய்வதில் ஒருபோதும் தவறில்லை. ஆனால் இதில் தமிழ் தேசியப் பேரவை அத்தகைய உடன்படிக்கையை முன்வைக்கின்ற போது கடந்த காலத்தை ஒரு தடவை கருத்தில் கொண்டிருந்தால் அந்த உடன்படிக்கையின் வடிவத்தை காத்திரமானதாக அல்லது அதன் எதிர்காலம் பொறுத்து தெளிவான வடிவங்களை கட்டமைத்திருக்க முடியும். ஜனாதிபதி தேர்தல் பொறுத்த பொது வேட்பாளர் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை சிவில் அமைப்புகளால் அரசியல் கட்சிகளோடு மேற்கொள்ளப்பட்டது. இது அரசியல் கட்சிகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் சிவில் தரப்புகளின் ஒத்துழைப்போடு இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனம் தவிர்க்க முடியாது. அதற்கான அடிப்படை ஒப்பமிடும் தரப்புகளை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்துகின்ற போது மடடுமே அதனை தக்கவைக்க முடியும். மக்களோடு சேர்ந்து அதற்கான வெளிபாடுகள் இருத்தல் வேண்டும் என்பதே அதன் இலக்கணம். அது மட்டுமின்றி கடந்த காலத்தில் ஏதேதோ குழுக்களாக இருந்தவர்கள் இன்று கூட்டுக்குழுக்களாக மாறி இருக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட முடியாத செய்தியாக உள்ளது. அரசியலின் யதார்த்தம் எடை போடப்பட வேண்டியது. ஆரசியல் என்பது உணர்ச்சிகளுக்கு உட்பட்டதல்ல. தனிப்பட்ட விருப்புகளுக்கும் அவாக்களுக்கும் ஆசைகளுக்குமானதல்ல. ஒருசிலரது ஆலோசனைக்குள்ளால் நகர்வதைவிடுத்து கூட்டான ஆலோசனைகளும் கட்சிகளுக்குள் உரையாடல்களும் தீர்மானமாக அமைதல் வேண்டும்.

தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததன் விளைவுகளை உணர்ந்து செயல்படுகின்ற சூழலுக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அரங்கேற்றப்பட்டது. உள்ளூராட்சிமன்ற தேர்தல் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு கிழக்கில் அதிக நெருக்கடியை கொடுத்தது. அது தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே இருக்கும் பதிவாகும். அத்தகைய பதிவை அல்லது அத்தகைய உணர்வை தமிழ் கட்சிகள் ஆட்சி அமைப்பதிலும் அதிகாரத்தை தக்கவைப்பதிலும் பேணுகிறார்களா? என்பது சந்தேகத்திற்குரியதாக மாறிவருகிறது. தமிழ் அரசியல் வாதிகளின் அருவருப்பான அரசியல் நடத்தை தமிழ் மக்களது எண்ணங்களை பாதிப்பதாகவே உள்ளது. அதற்கு ஆலோசனை வழங்குபவர்கள் மீது அதிருப்தி கொண்டவர்களாக உள்ளனர். அதிகாரத்தை கைப்பற்றுவதே அவர்களின் அரசியல் இலக்காகவுள்ளது. தமிழ் மக்களின் அரசியலைக் ஒன்றிணைந்து கட்டமைப்பது அவர்களது இலக்காக தென்படவில்லை. மாறாக தமிழ் மக்கள் அளித்த வாக்குகளை வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு கூட்டணி அமைத்து ஆட்சி பிடித்து அதிகாரத்தைச் செயல்படுத்துகின்ற வெறியோடு அவர்கள் நடந்து கொள்ளுகின்றார்கள். தமிழ் மக்களின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சி கிளிநொச்சி தவிர்ந்த வடகிழக்கு பகுதிகளில் ஆட்சி அமைப்பதற்கான அணுகுமுறைகள் விட்டுக்கொடுப்புக்களை பார்க்கும் போது எந்தத் தரப்புடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைக்க தயாராகிறார்கள் என்ற விமர்சனத்திற்குள் உள்ளாகின்றார்கள். இதிலிருந்து வெற்றிகரமாக தப்பிக்கொள்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முயன்றபோதும் அதன் கடந்த காலம் அதன் மீதான விமர்சனத்தை மேலும் அதிகரித்திருக்கின்றது. ஆனால் அரசியலில் தமிழ் கட்சிகள் கட்சி நலனைக் கடந்து மக்களின் நலன் சார்ந்த பயணிப்பதற்கான சூழல் ஒன்றை கட்சிகளின் தலைமைகள் கட்டமைக்க முயல வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை தமிழ் மக்களை நோக்கிய அரசியலுக்கான விட்டு கொடுப்புகளுக்கு வந்திருப்பது வரவேற்கப்படும் விடமாகவே தெரிகிறது. இது தமிழ் மக்களை அந்த அணியின் மீது கவனம் கொள்ள வழிவகுத்துள்ளது. அதனை நோக்கி தமிழ் மக்களுடைய அரசியல் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற விருப்பு காணப்பட்டாலும் அது ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் மீதான கடந்தகால விமர்சனங்கள் மற்றும் தலைமைக்குரியவர்களாகவும் கொள்கையு டையவர்களாகவும் தம்மைக் காட்டிக் கொள்ளும் நடத்தையும் அவர்களை கேள்விக் குட்படுத்துகிறது. தமிழ் மக்கள் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் இணைந்து உள்ளூராட்சியமைக்கும் எண்ணத்தையே அதிகம் கொண்டுள்ளார்கள். பொது எதிரிக்கு எதிராக ஒண்றிணைவதே அரசியல் கூட்டுக்களின் வியூகமாக அமைதல் வேண்டும்.

எனவே இது ஆட்சியை அமைப்பதற்கான கூட்டுக்களும் பதிலுக்கு பதில் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் நிகழ்த்தப்படுகின்ற அரசியலாகவே தெரிகிறது. இது அரசியலில் தமிழர்களின் இருப்பை மோசமாக அவமதிப்பதாக உள்ளது. இது தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியைச் தெளிவாகச் சொல்கிறது. அதாவது தற்போதைய அணிகளும், கூட்டுக்களும், அதன் தலைமைகளும் ஆரோக்கியமான அரசியலை தரக்கூடியவை அல்ல என்பது. தமிழ் கட்சிகள் தெளிவான வியூகம் வகுத்து கட்டமைக்க வேண்டிய அரசியலையும் பொது எதிரிக்கு எதிரான அரசியலையும் ஒரு போதும் கருத்தில் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. மாறாக தனக்குள்ளே மோதி முடிவுக்கு வரும் நிலையை நோக்கிய நகர்வார்கள். இதிலிருந்து மீள்வது என்பது புதிய தளத்திற்கும் புதிய அரசியல் சிந்தனைக்கும் தமிழ் மக்கள் நகர வேண்டிய ஒரு தேவைக்குள் அல்லது வலியுறுத்தலுக்குள் உள்ளனர் என்பதாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி:தினக்குரல்)