டித்வா புயல் (Ditwah) பாரிய அழிவை இலங்கை தீவில் தந்துள்ளது. வடக்கு கிழக்கு தனது தரைத்தோற்றத்தின் இயல்பினாலும் காற்றழுத்த தாளமுக்கத்தின் வலு குறைந்ததினாலும் அதிக இழப்பிலிருந்து தப்பிப் பிழைத்துள்ளது. தென்னிலங்கை முழுவதும் குறிப்பாக மலையகம் பாரிய அழிவை சந்தித்திருக்கிறது. அந்த மக்களின் உயிரிழப்பு மட்டுமன்றி முழுமையாகவே வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் அழிவடைந்துள்ளது. போக்குவரத்திற்கான உட்கட்டமைப்புகள் அனேகம் முடிபுக்கு வந்துள்ளது. இயற்கையின் சீற்றத்தை இலங்கைத் தீவு தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறது. இயற்கையின் சீற்றத்தில் இருந்து தப்பிப்பது என்பது கடினமான இலக்கானாலும் அதனை நோக்கி வெற்றிகரமான திட்டமிடல் இருந்திருந்தால் இழப்புக்களை குறைத்திருக்கலாம் என்பதை உலக நாடுகளின் அனுபவம் உணர்த்தியுள்ளது.
இடதுசாரி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையின் பொருளாதாரம் ஓரளவு சரிவிலிருந்து மீண்டுவருகின்ற சூழலில் மீளவும் பின்னடைவை இலங்கைத் தீவு எதிர்கொண்டுள்ளது. இயற்கை அழிவையும் துயரத்தையும் தடுக்க முடியாமல் விட்டாலும் உயிரிழப்புக்களையும் சேதங்களையும் தவிர்த்திருக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்கான அடிப்படை இலங்கையின் திட்டமிடலும் இயற்கை அழிவு பற்றிய விழிப்புணர்விலுமே தங்கியுள்ளது. பல எச்சரிக்கைகள் பல அறிவுறுத்தல்கள் முன்கூட்டிய விழிப்புணர்வுக்கான எண்ணங்கள் முன்வைக்கப்பட்ட போதும் எதனையும் முழுமையாக கருத்தில் கொள்ளாது இலங்கைத் தீவின் நிர்வாக கட்டமைப்பு அரசியல் தலைமைகள் மற்றும் பொது மக்களின் அசமந்தனமான போக்கு என்பன இத்தகைய விளைவுக்கு காரணமாக தெரிகின்றது.
குறிப்பாக டித்வா புயல் ஏற்படுத்திய அழிப்பு என்பது மலையகத்தையே அதிகம் சிதைத்துள்ளது. அந்த மக்களின் குடியிருப்பும் வாழ்க்கை முறையும் முற்றாகவே காணாமல் போய்விட்டது. அதற்குப் பின்னால் பிரித்தானியருடைய ஆட்சியில் தொழிலுக்காக குடியேற்றப்பட்ட மக்களின் இருப்பு என்பது உத்தரவாதப்படுத்த முடியாத நிலைக்குள்ளே காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இருந்து பல துயரங்களை எதிர்கொண்ட மலையக மக்கள் மீளவும் அதே துயரத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இது இயற்கை தொடர்பில் ஏற்பட்ட சீற்றத்தின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கின்றது. புயல் இலங்கை தீவை விட்டு விலகினாலும் அதன் விளைவுகள் மலையகத்தையோ இலங்கை தீவிவையோ விட்டு விலகப்போவதில்லை என்பது அதன் சிதைவுகள் உணர்த்துகின்றன. தொடர்ச்சியாக மண் சரிவுகளும் மனிதர்கள் காணாமல் போவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக எதிர்காலம் அமையப்போகிறது என்ற எச்சரிக்கைகள் எழுந்திருக்கிறது. இதில் அரசாங்கம் அந்த மக்களை தொழிலுக்காக அன்றி வாழ்விடங்களுக்கான மையங்களை நோக்கி நகர்த்துவது அன்றி அவர்களைப் பாதுகாக்க முடியுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கான அவசியப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது. உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பான வாழ்விடம் என்பதே அவர்களுக்குரிய அடிப்படை தேவையாக காணப்படுகிறது. அதனை நோக்கி அந்த மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாதது. தவறும் பட்சத்தில் அந்த மக்கள் மீது ஏற்படுகின்ற இழப்புகளும் அழிவுகளும் நாட்டின் பொருளாதாரத்தையும் மனிதநேயத்தையும் பாரிய பின்னடைவுக்கு தள்ளிவிடும். அரசாங்கத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான எச்சரிக்கை என்பதும் எச்சரிக்கைக்கு பின்னால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை மீளமைப்பது என்பதும் அவசியமான முன்னாயத்த நடைமுறையாகும். அத்தகைய முன்னாயத்த நடைமுறைகளை இலங்கை தீவில் உள்ள எந்த நகரங்களும் கொண்டிருக்க வில்லை. நகரங்கள் மட்டுமன்றி சமதரை அற்ற நிலப்பகுதி எதுவுமே சரியான முறையில் திட்டமிடப்படலின்றி கையாளப்பட்டிருக்கின்றது. சமதரையில் கூட நகரங்களின் குடியிருப்புகளின் எந்தவகை முன்னெச்சரிக்கையும் இன்றி இயற்கையின் சீற்றம் ஒன்றை எதிர்நோக்குவதற்குரிய வாய்ப்புகள் அனைத்தையும் இல்லாமல் செய்து விடுகிறது. அரசு அலுவலகங்களனாலும் அரசியல் தலைவர்களாலும் தாந்தோன்றித்தனமான செயல்பாடுகளாலும் அறிவின்மையின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. இயற்கையினுடைய சீற்றங்களை எதிர்கொள்ள முன்னோர்கள் திட்டமிடப்பட்ட வழிமுறைகளை முற்றாகவே அனைவரும் கைவிட்டுள்ளனர். நகரங்களை நோக்கி குடியிருப்புகளை அதிகரிப்பதும் புதிய நகரங்களை தோற்றுவிப்பதில் காட்டும் அசமந்தப் போக்கும் இலங்கை தீவில் அதிகமான நெருக்கடியை இயற்கை அனர்த்தத்திற்கு காரணமாகிறது. கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களுக்குள்ளேயே (2004, 2016, 2017) ஒன்றுக்கு மேற்பட்ட இயற்கை அனர்த்தங்களை இலங்கை தீவு எதிர்கொண்டிருக்கிறது. அத்தகைய நெருக்கடிகளில் இருந்து தம்மை பாதுகாக்க முடியாத திட்டமிடலற்ற தூரநோக்கு இல்லாத ஆட்சி முறையும் ஆட்சியாளர்களும் காணப்படுகின்ற நாடாகவே இலங்கைத் தீவு தற்போதும் உள்ளது. அனர்த்த முகாமைத்துவ சட்டவரைபுகள், தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) போன்ற நிறுவன கட்டமைப்புகள் காணப்பட்ட போதும் நெருக்கடியை எதிர் கொள்ள முடியவில்லை.
2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்காக சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட பாரிய நிதி அன்றைய ஆட்சியாளர்களால் மோசடி செய்யப்பட்டதன் விளைவுகளே இன்றைய நெருக்கடிக்கு பிரதான காரணமாக உள்ளது. சுனாமி பொதுக் கட்டமைப்பை (P-Tom) விடுதலைப் புலிகள் முன்வைத்த போது அதனை நிராகரித்த ஜே.வி.பி.உம் அநுர குமாரதிஸநாயக்காவும் தற்போது போராடினாலும் இயற்கை அனர்த்தத்தை கையாள முடியாது. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களை மீளமைப்பது மட்டுமல்ல எதிர்கால இயற்கை அனர்தத்திற்கான திட்டமிடலும் சுனாமி பொதுக் கட்டமைப்பில் காணப்பட்டது. சுனாமியின் பாதிப்புகளை சரி செய்வதற்கான உபாயம் எதுவும் இன்றிய சூழலே டித்வா புயலின் போதும் இலங்கை தீவு எதிர்கொண்டது. இலங்கை தீவின் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்வதற்கான நிர்வாகப் பொறிமுறை இல்லாத நிலை உள்ளது. முப்படைகளும் இலங்கையில் நாலா பக்கமும் குவிக்கப்பட்டு அனர்த்தத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க முடியவில்லை. காரணம் அனர்த்தத்தை எதிர் கொள்வதற்கு சரியான பயிற்சி வேண்டும். திட்டமிடலும் பயிற்சியுமின்றி முழுமையாக வெற்றி கொள்ள முடியாது. மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட இராணுவத்தை கொண்ட இலங்கையில் கூட 415 (இன்றைய தகவலின்படி) மேற்பட்ட உயிர்கள் அனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட துயரம் நிகழ்ந்துள்ளது. போருக்கு பயிற்றுவிக்கப்பட்ட படைகளால் இயற்கை அனர்த்தத்தை ஒருபோதும் முழுமையாக மீட்டெடுக்க முடியாது. அதனால் இலங்கை இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ள தனியான படைப்பிரிவை உருவாக்க வேண்டும். இலங்கை ஒரு தீவாக இருப்பதும் இயற்கையை பேணாத சூழலும் அத்தகைய படைப்பிரிவு அவசியமானது என்பதை உணர்த்துகிறது. ஆனால் படைகள் ஈடுபடுத்தாது விட்டிருந்தால் இதனைவிட மோசமான நிலையும் ஏற்பட்டிருக்கும். படைத்தரப்பும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர். அதனால் அனர்த்தத்தை எதிர் கொள்ள தனியான படைப்பிரிவொன்று உருவாக்கப்பட வேண்டும்.
எனவே இலங்கைத் தீவு எத்தகைய மாற்றங்களை நோக்கியும் பயணிக்க முடியாத ஒரு நெருக்கடி மிக்க நிலைக்குள் ஆட்சியாளர்களும் மக்களும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். கடந்த காலம் முழுவதும் வடக்கு-கிழக்கு மீதான போரும் இன உணர்வும் மட்டுமே தென்னிலங்கையின் இலக்காக இருந்ததனால் இலங்கைத் தீவின் கட்டமைப்பியோ அதனிருப்பியோ சரியாக திட்டமிடலுக்குள் கொண்டுவர முடியவில்லை. அத்தகைய இன உணர்வு தென் இலங்கையில் முடிபுக்கு வரவில்லை. இனபகைமை முடிபுக்கு வராத வரையும் அடிப்படை மாற்றம் எதுவும் நிகழாது. இலங்கை இயற்கை அனர்தங்களின் போதெல்லாம் உலகத்தின் தயவிலிருக்க வேண்டிய நிலையே தொடரும். அமெரிக்கா இந்தியா சீனா ஜப்பான் பாகிஸ்தான் என்று பல நாடுகளில் உதவிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையே ஏற்படும். இலங்கை சுனாமியின் போதும் கொவிட் தொற்றின் போதும் பொருளாதார நெருக்கடியின் போதும் போரின் போதும் உலகத்திடம் கையேந்துகின்ற மோசமான திட்டமிடலற்ற ஆட்சிகளும் அரசாங்கங்களுமே எஞ்சியுள்ளன. இதனையே பின்தொடுகின்ற மக்கள் கூட்டமாக இலங்கை மக்கள் காணப்படுகின்றனர்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
