April 30, 2026
அரசியல் கட்டுரைகள்

ஏக்கய ராஜ்யத்தின் நீட்சியும் ஜே.வி.பி. அரசாங்கத்தின் மாற்றம் பற்றிய கொள்கையும்?

இலங்கைத் தீவின் அரசியலில் மீண்டும் ஒரு அரசியலமைப்பு பற்றிய விவாதம் தொடங்கியிருக்கிறது. இந்த அரசியல் அமைப்பு முன்னைய அரசாங்கம் முதன்மைப்படுத்திய ஏக்கய ராஜ்யம் என்ற ஒற்றையாட்சி முறைமையை மீளவும் அமுல்படுத்துவது பற்றி இடதுசாரி அரசாங்கம் திட்டமிடுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்துவருகிறார். அதனை ஆதாரப்படுத்தும் விதத்தில் சுவிஸ் நாட்டுத் தூதரகத்துடனான உரையாடலை குறிப்பிடுகின்றார். இது மட்டுமன்றி தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏக்கய ராஜ்ய அரசியல் அமைப்பை அமுல்படுத்தப் போவதாக திட்டவட்டமான பிரகடனத்தை முன்வைத்திருந்தது. எனவே இவற்றை ஆதாரமாக கொண்டு நோக்குகின்ற போது புதிய அரசாங்கம் பழைய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் உறுதிப்படுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய உரையாடலின் நியாயப்பாட்டையும் தேடுவதாக அமையவுள்ளது.

இலங்கை தீவானது அரசியல்யாப்புக்களால் நிறைந்து போயிருக்கின்ற ஒரு நாடாகவே காணப்படுகிறது. 1833ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையும் ஒவ்வொரு அரசாங்கமும் புதிய புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்குவது பற்றி உரையாடல் வெளிப்படுத்துகிறது. மூன்றில் இரண்டு(2/3) பெரும்பான்மை ஜே.வி.பி அரசாங்கத்துக்கு உண்டு என்ற அடிப்படையில் புதிய அரசியல் யாப்பை அல்லது பழைய அரசியல் யாப்பின் புதிய வடிவத்தை சாத்தியப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் புதிய அரசாங்கம் கடந்த ஒரு வருடகாலமாக அனைத்திலும் புதியவற்றை பற்றியும் மாற்றத்தைப் பற்றியும் பொது வெளியில் உரையாடிவருகிறது. அத்தகைய மாற்றங்கள் அனைத்தும் புதியதற்கான பிரகடனமாகவே இருந்து வந்துள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்து அரசாங்கம் வரை புதிய மாற்றத்தை காண்பதோ அல்லது மாற்றம் ஒன்றே ஜே.வி.பி. இன் இலக்கணமாக விவாதித்து வருகிறது. அப்படியாயின் அரசியலமைப்பில் மட்டும் பழையதை புதியதாக மாற்றுவதற்கு ஏன் ஜே.வி.பி. திட்டமிடுகிறது. அவ்வாறானால் இந்த அரசாங்கமும் மாற்றம் ஒன்றும் புதியதென்றும் கூறுவது அனைத்தும் போலித்தனமானதாக உள்ளனவா? ஏன்பது கேள்வியாகுவது தவறானதாக தெரியவில்லை. போலித்தனமான இடதுசாரிக்குள் தன்னை அடையாளப்படுத்த முயலுவது போன்று மாற்றம் என்பதை போலித்தனமாக இலங்கை மக்களுக்கு வழங்க முயல்கிறதாகவே தெரிகிறது. அவ்வாறாயின் புதிய அரசாங்கத்தின் அல்லது இடதுசாரி அரசாங்கத்தின் அல்லது ஜே.வி.பி. அரசாங்கத்தின் நடைமுறை சார்ந்த எண்ணங்கள் எதுவென்பது பிரதான கேள்வியாகும். இனப்பிரச்சினை பொறுத்து அது அரசாங்கம் பின்பற்றுகின்ற கொள்கைகளும் புதியது என்ற போர்வையில் பழையதில் நீட்ச்சி என்பதை கோடிட்டுக் காட்டுவது போல் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதனை ஈழத் தமிழர்கள் கடந்த ஒரு வருடங்கள் ஆட்சியில் அடையாளம் கண்டுள்ளனர். அப்படியாயின் புதிய அரசாங்கமும் மாற்றமற்ற போலியான வடிவம் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதனை விரிவாக தேடுதல் அவசியமானது.

முதலாவது ஏக்கய ராஜ்யம் என்பது பற்றிய விவாதங்கள் நல்லாட்சிக் காலத்தில் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டது. தமிழரசு கட்சி ஏக்கய ராஜ்யத்திற்கு முலாம்பூசிக் பாதுகாத்துக் கொண்டது. அது பெயரில் மட்டுமே ஒற்றை ஆட்சித் தன்மை கொண்டது என்றும் நடைமுறையில் அது சமஸ்டி பண்பை பிரதிபலிக்கிறது என்றும் முலாம்பூசி தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் அது அமுல்படுத்தாமல் போனமை அதன் விளைவுகளை தமிழ் மக்கள் எதிர்கொள்ளாது முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது அது நடைமுறைக்குரிய அதிக வாய்ப்புகளை கொண்டிருக்கின்றது. மீண்டும் தமிழரசு கட்சி அதன் போலி தன்மையை முலாம்பூசி ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை கொண்டு செல்லப்போகிறதா? அல்லது ஓர் எதிர்ப்பலையை ஜனநாயக ரீதியில் ஏற்படுத்தி அதன் தேவைப்பாட்டை நிராகரிக்கப் போகிறதா என்ற விவாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் எழுப்பப்படுகிறது. தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் கோரிக்கை நியாயமானதாகவே தெரிகிறது. ஆனால் அது படிப்படியாக தமிழ் மக்களின் எண்ணங்களுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டிய ஒன்றாக வேண்டும். காரணம் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது ஒரு அரசியல் அமைப்பை இலங்கை தீவில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்வதன் மூலம் காணாமல் செய்து விட முடியும். ஏற்கனவே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றியதன் மூலம் தமிழ் மக்கள் தமக்கு ஆணை தந்துள்ளதாக ஜே.வி.பி. பிரச்சாரப்படுத்திவருகிறது. ஏக்கய ராட்சியத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களாயின் இனப்பிரச்சினை என்பது ஒன்று இலங்கை தீவில் இல்லை என்பதையும் தமிழர்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்பதையும் நிறுவுவதற்கான வாய்ப்பு தென்னிலங்கை சக்திகளுக்கு கிடைத்துவிடும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கான அடிப்படை வடக்கு கிழக்கு தாயகம் என்ற அடிப்படைய தேசிய இனம் என்ற அடிப்படை பலவீனமடைந்து போக வாய்ப்பு உண்டு. தேசிய மக்கள் சக்தி இடதுசாரி என்பதை கண்மூடித்தனமாக இலங்கை தீவு ஏற்றுக்கொள்வது போன்று எக்கய ராஜ்யத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

இரண்டாவது புதிய அரசாங்கம் மிக நீண்ட கால போராட்டத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. இது ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பு. ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு மிதவாத அரசியலுக்குள்ளால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியது. அதன் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பிரதமர் ஜனாதிபதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே ஏற்கனவே இருந்த ஆட்சி அதிகார முறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட விதத்தில் சமத்துவமாகவும் சகோதரத்துடனும் இயங்குவதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் சமத்துவத்திற்கும் சகோதரத்திற்கும் சுதந்திரம் அவசியம் என்பதை ஏற்றுக் கொள்ள தயங்குகின்றனர். எல்லாவற்றிலும் அடிப்படை மாற்றங்களை செய்யப் போவதாகவும் தேர்தல் வாக்குறுதியிலும் அதன் பின்னரும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் நடைமுறையில் முன்னைய ஆட்சியாளர்கள் வரைந்து கொண்ட அரசியலமைப்பை சிறிய சிறிய மாற்றங்களுடன் அவ்வாறே அமுல்படுத்துவது என்பது எந்த அளவுக்கு இலங்கை தீவின் அரசியலில் பொருளாதாரத்தில் சமூக மட்டத்தில் மாற்றத்துக்குரியது என்ற கேள்வி தவிர்க்க முடியாது. அரசியலமைப்பு வரைவு என்பது அடிப்படையான மூலாதாரமான அம்சமாக அதற்கான கருதுகோளும் கோட்பாட்டு புரிதலும் முன்னிறுத்தப்பட வேண்டும். அவ் இலக்கை அடைவதற்கான பரிமாணங்களைக் கட்டமைத்து வரையப்படுவது அரசியல் அமைப்புசார் வடிவமாகும். ஒரு நாட்டில் வாழுகின்ற மக்களின் வாழ்வியலும் அதனை அனுபவிப்பதற்கான உரிமையும் பண்பாட்டு அடையாள கூறுகளும் பாதுகாக்கப்படுகின்றதை உறுதிப்படுத்துவதே அரசியலமைப்பாகும் என்றும் எல்லா மக்களையும் அவர்களது நலன்களும் அரசியல் அமைப்பில் பிணைத்துக் கொள்ளுகின்ற வடிவத்திற்கு உட்படுத்தப்படுவதே ஆரோக்கியமான அரசியல் யாப்பு என பிரித்தானிய அரசியலமைப்பு புலமையாளரான ஏச்.ஆர்.கிறிவ்ஸ் (H.R.G.Greaves) என்பவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழுகின்ற மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் இரத்தமும் சதையுமாக பின்னிப்பிணைந்திருப்பதே அரசியலமைப்பு என அவர் மேலும் குறிப்பிடுகின்றார். அத்தகைய அடிப்படைகளுக்குள் ஜே.வி.பி அரசாங்கம் செயல்படவும் இல்லை. அதற்கான வரைவுகளை கொண்டதான அரசியலமைப்பை கட்டமைக்கவும் இல்லை. இதனை ஓர் அரசியல் அமைப்பு சார்ந்த விதத்தில் புதியது ஆரோக்கியமானது என கருதுவது கடினமானது. ஜே.வி.பி. அரசாங்கத்தின் வார்த்தையில் கூறுவதானால் அது இனவாதிகளால் கட்டமைக்கப்பட்ட அரசியலமைப்பு.

எனவே ஜே.வி.பி. அரசாங்கம் புதியதென்று கூறுவது பழையது பற்றியது. பழையதன் இன்னொரு வடிவத்தை அன்றி மாற்றத்துக்கானதை ஜே.வி.பி. அரசாங்கம் குறிப்பிடவில்லை. மாற்றம் என்பது வளர்ச்சிக்கானது. முன்னோக்கிய நகர்வுகளைக் கொண்டது. முன்னய அரசாங்கங்களின் நீட்சியே ஜே.வி.பி.அரசாங்கமும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ் தினக்குரல்)