January 19, 2025
அரசியல் கட்டுரைகள்

இதயத்தால் இணைந்த கூட்டமைப்பு வாய்ப்புக்களைப் போட்டுடைத்து விட்டது!

“தமிழ் அரசியல் தலைமைகள் கிடைக்கின்ற வாய்ப்புக்களை தவறவிடவும் அதனால் தமிழ் மக்களின் அரசியல் இருப்பு காணாமல் போவதும் இராஜதந்திரரீதியிலான செய்முறையின் பலவீனங்களே தோல்விகளை ஏற்படுத்தி உள்ளது.” அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்ர்வதன் ஷ்ரிங்லா யாழ்ப்பாணத்தில் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தார். குறித்த சந்திப்பில் பகேங்ற்றிருந்த யாழ்ப்பாணப்பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் உரிமை மின்னிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

 

யாழ்ப்பாணத்துக்கு சில தினங்களுக்கு முன் வருகை தந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வருகை பற்றி குறிப்பிட முடியுமா?
இந்திய வெளிவிவகார செயலாளரின் வருகை சமகாலத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. அவரது வருகை வடக்கு-கிழக்கை முதன்மைப்படுத்தியதோடு தென்னிலங்கையை கையாள்வதற்கான நோக்கமும் அடங்கியிருந்தது. சீன-இலங்கை உறவு இந்தியாவின் பாதுகாப்பை பொறுத்து அதிக எச்சரிக்கையை ஏற்படத்தியிருந்தது. அதிலிருந்து மாற்றத்தை உருவாக்கும் நோக்கோடு அவரது விஜயம் அமைந்திருந்தது. அதனை வலிமைப்படுத்தும் விதத்தில் அவரது முதல் பயணமாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை பார்வையிட்டதும் இரண்டாவதாக யாழ்ப்பாணம் வருகை தந்த இந்திய நிதியுதவியில் கட்டமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தைn பார்வையிட்டதும் அரசியல் கட்சிகள் உட்பட தமிழ் சிவில் அமைப்புக்களையும் ஊடகவியலாளர்களையும் புலமையாளர்களையும் சந்தித்தமை தென்னிலங்கைக்கான செய்தியை சரியான முறையில் எடுத்து சொல்வதற்கான உத்திகளாகவே தெரிகிறது. காரணம், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இந்திய தேசத்தின் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளும் இராஜதந்திரியாகவே விளங்கியதன் பிரதிபலிப்பே ஆகும்.

13ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு முயற்சியையே இந்திய வலியுறுத்தம் என்றும் தமிழ்த்தரப்பு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோணத்திலும் இந்திய வெளிவிவகார செயலாளரால் குறித்த விஜயத்தின் போது வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?
1987ஆம் ஆண்டு முதல் இலங்கை-இந்திய உறவில் பிரதான மையப்புள்ளியாக 13ஆம் திருத்த சட்டமூலம் காணப்படுகிறது. அதுவே இந்திய இலங்கை மீதான செல்வாக்கை கையாள்வதற்கான வாய்ப்பான விடயமாக உள்ளது. அதனை தாண்டி கடந்த 34 வருடங்களாக எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் இந்தியா 13ஆம் திருத்தத்தின் அடிப்படையிலேயே தீர்வுக்கான முயற்சிகள் பற்றி சிந்திக்க முடியும். கடந்த 34 வருடங்களாக இலங்கை தமிழர் அரசியல் தரப்பிடம் இந்தியா அதனையே வலியுறுத்தி வருகின்றது. 13க்கு அப்பால் செல்லுதல் என்பது தமிழ்த்தரப்பின் அணுகுமுறையே அன்றி இந்தியா தரப்பின் அணுகுமுறையென வாதிடுவது பொருத்தமற்ற விடயமாகும். வாய்ப்புக்கள் கிடைத்த போதெல்லாம் தமிழ்த்தரப்பு இதயபூர்வமான உடன்படிக்கை எனக்கூறிக்கொண்டு செயற்பட்டமையை நிராகரித்து விட முடியாது.

இந்திய வெளிவிவகார செயலாளரிடம் தமிழ்த்தரப்பு எத்தகைய கோரிக்கைகளை முன்வைத்திருக்க வேண்டும் என நீங்கள் நீங்கள் கருதுகிறீர்கள்?
இந்திய வெளிவிவகார செயலாளர் இந்திய தரப்பிலிருந்தே இலங்கை தமிழர் விடயம் தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார். இந்தியா இலங்கையில் தலையீடு செய்வதற்கான உரேயொரு அம்சமாக இலங்கை-இந்தியா உடன்படிக்கையின் கீழான 13அம் திருத்த சட்ட மூலமே உள்ளது. ஆனால் தமிழ்த்தரப்பு அத்தகைய 13இன் பலத்தையும் பலவீனத்தையும் கடந்த காலத்தில் மிகத்தெளிவாக அடையாளம் கண்டுள்ளது. அத்தகைய திருத்த சட்டத்தின் மூலமான மாகாண சபை வெறும் அரசியலை அலங்கரிக்கும் அதிகாரமற்ற சபையாக உள்ளது என்பதை முன்னிறுத்தி 13க்கு அப்பால் செல்ல வேண்டிய தேவைப்பாடுகளை வலியுறுத்தியிருக்க வேண்டும். அவ்வகை கருத்துக்கள் முதன்மைப்பட்டாலும் அரசியல் தலைமைகள் சிவில் தலைமைகள் ஒன்றுசேர்ந்து அதனையொரு உரையாடல் அம்சமாக வெளிவிவகார செயலாளர் முன் ஏற்படுத்தியிருக்க வேண்டும். தென்னிலங்கை ஆட்சியாளர்களோடு நெருக்கமான உறவை ஏற்படத்த முயலும் இந்திய தரப்பு தமிழர்களின் கோரிக்கையை செவிசாய்த்திருக்க வேண்டிய சூழல் ஒன்று காணப்பட்டது. அத்தோடு வடக்கு-கிழக்குக்கான விஜயத்தை நிறைவு செய்த பின்னர் தென்னிலங்கை தலைவர்களோடு இந்திய வெளிவிவகார செயலாளர் உரையாட முற்பட்ட சூழல் என்பது இராஜீக ரீதியில் அத்தகைய அணுகுமுறையை தமிழர் தரப்பு பயன்படுத்தியிருக்க வேண்டும். 13இன் அடிப்படையிலிருந்து அப்பால் செல்வதற்கான எண்ணப்பாங்கை தமிழர் தரப்பு விவாதப்பொருளாக உருவாக்கி அதிலிருந்து முடிவுகளை எட்டி அத்தகைய முடிவுகளை தென்னிலங்கையோடு உரையாட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியிருக்க முடியும். அது வடக்கு-கிழக்கை ஒன்றினைப்பதும் வடக்கு-கிழக்கில் காணப்படும் ஏனைய பிரச்சினைகளுக்குரிய முனைப்புக்களை தடுத்து நிறுத்தவும் தமிழ் மக்களை ஒன்றினைக்கவும் வாய்ப்பை கொடுத்திருக்கும்.

குறித்த விஜயத்தின் போது இந்திய தரப்பால் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய ஏதும் உறுதிமொழிகள் அவதானிக்கக்கூடியதாக உள்ளதா?
13க்கு அப்பால் இந்திய பிரதமர் மோடி வருகை தந்திருந்த சந்தர்ப்பத்திலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எண்ணத்திலும் இலங்கைக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகளாலும் மீள மீள ஒரு விடயம் வலியுறுத்தப்படுகிறது. இலங்கை தமிழர்கள் நீதியான கௌரவமான சமத்துவமான விடயங்களுக்கு உரித்துடையவர்கள் என்றும் அதனை இலங்கை தமிழர்களுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர். அத்தகைய வலியுறுத்தல்களின் எல்லைகள் பல்வேறு கோணத்தில் அளவிடக்கூடியன. ஆனால் அத்தகைய அளவீட்டை தமிழர்களின் அரசியலை உச்சரிக்கும் தமிரசியல் தரப்புக்கள் முன்னெடுத்த செல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பும் சூழலும் சீன-இலங்கை உறவு உச்சம் அடைந்திருந்த வேளையில் கிடைத்தது. ஆனால் அது தொடர்பில் பலவீனமான வாதங்களையும் தென்னிலங்கை ஆட்சியுடன் ஒத்துழைப்பை வெளிப்படுத்தியதன் மூலமும் ஒரு சில தமிழ்த்தரப்பு அதீத இந்திய எதிர்ப்பு வாதத்தை வெளிப்படுத்தியதாலும் வாய்ப்பை இல்லாமல் செய்துள்ளது.

தமிழ்மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கூட்டமைப்பு இந்திய மற்றும் மேற்குலக இராஜதந்திரிகளை சரியாக அணுகுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பான உங்கள் கருத்து?
அத்தகைய குற்றச்சாட்டு சரியானது. அரசியல் செய்முறை என்பது இராஜாதந்திர செய்முறை தான். அதிலும் இனமோதல்களும் அதற்கான முரண்பாடுகளும் புவிசார் பிராந்திய சர்வதேச அரசியலால் அத்தகைய பிரச்சினை எதிர்கொள்ளும் போது அதிகம் பிரயோகப்படுத்தப்பட வேண்டிது இராஜதந்திரமே. உலக அரசியல் களம் இராஜதந்திர உத்திகளாலும் அதன் நகர்வுகளாலும் கையாளப்படுவதோடு அதுவே அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படையாக விளங்குகின்றது. உலக வரலாறு முழுவதும் அத்தகைய இராஜதந்திர செய்முறையால் வெற்றிகொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் கிடைக்கின்ற வாய்ப்புக்களை தவறவிடவும் அதனால் தமிழ் மக்களின் அரசியல் இருப்பு காணாமல் போவதும் இராஜதந்திர ரீதியிலான செய்முறையின் பலவீனங்களே தோல்விகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெனீவாவிலிருந்து அயல் நாடான இந்தியா வரை இலங்கை தமிழரின் இருப்பையும் அதன் புவிசார் அரசியல் வலுவையும் மையப்படுத்தி இலங்கை அரசாங்கத்தை கையாளவும் இலங்கை அரசாங்கமோ தமிழர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்தியாவையும் உலக நாடுகளையும் கையாளுகின்ற ஒரு பொறிமுறை கடந்த 70வருடங்களுக்கு மேலாக நிகழ்ந்து வருகிறது. இதில் தமிழ் அரசியல் தலைமைகளின் பலவீனத்தால் தமிழ்த்தரப்பு தனது பூர்வீகமான வாழ்விடத்தையும் உரிமையையும் அடிப்படை தேவைகளின் வாய்ப்புக்களையும் படிப்படியாக இழந்து வருவதனை அவதானிக்க முடியும்.

(நன்றி: உரிமை மின்னிதழ்)