இலங்கைத்தீவின் அரசியல் பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் கொண்டுள்ள உறவுகளை பேணுவதன் மூலம் அல்லது வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதன் மூலம் உள்நாட்டில் நிலவும் அனைத்து முரண்பாடுகளையும் தீர்த்துக் கொள்ளும் ஒன்றாக உள்ளது. ஈழத்தமிழருக்கும் தென்னிலங்கை ஆட்சிக்கும் இடையிலான மோதல் என்பது அத்தகைய வெளியுறவினாலேயே கையாளப்பட்டது. ஆனால் சர்வதேச அரசியல் புதிய பரிமாணத்தை சமகாலத்தில் நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. இலங்கை தீவின் அரசியலோடு நேரடியாக அதிகம் தொடர்புபட்ட இந்தியாவும்-சீனாவும் அமெரிக்க வரி தொடர்பான கொள்கையினால் பங்கேற்பு (Engagement) உறவை கட்டமைக்க ஆரம்பித்துள்ளன. இத்தகைய நெருக்கம் இலங்கை தீவின் தென் இலங்கையும், வடக்கு-கிழக்கும் அரசியலில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை நோக்கி இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய-சீன நட்புறவு பலமான நெருக்கத்தை ஏற்படுத்தி வருவதற்கான அடிப்படைகளை வகுத்து வருகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய வருகையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் சீன பயணமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கின்றது. வெளிப்படையாக பார்க்கின்றபோது இரு நாடுகளும் வர்த்தக ரீதியான உறவை பலப்படுத்துவது போன்று தெரிந்தாலும் வர்த்தக உறவைக் கடந்து படிப்படியாக அரசியல் புரிந்துணர்வுசார் உறவையும் கட்டமைக்க திட்டமிடுகிறது. அதற்கான ஆதாரமாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களது கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் ஜீ (Wang Yi) குறிப்பிடும் போது, சீன-இந்திய உறவுகள் ஒத்துழைப்புக்கு திரும்புவதற்கான நேர்நிலைப் போக்கினைக் காட்டுகின்றன. இரு நாடுகளும் ஒன்றை ஒன்று போட்டியாளர்களாக அல்லாமல் கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும். சீனா-இந்தியா இடையே தூதரக உறவு ஏற்பட்டு 75 வருடங்களாகிவிட்டன. நாம் கடந்த காலங்களிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இரு நாடுகளும் சரியான உத்திகளை கொண்டிருக்க வேண்டும். ஒரு நாடு மற்றெரு நாட்டை வாய்ப்பாக பார்க்க வேண்டும். வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் தங்கள் வளங்களை இரு நாடுகளும் முதலீடு செய்ய வேண்டும் என்றார். இதே நேரம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் (S.Jasihankar) குறிப்பிடும் போது, இரு நாடுகளுக்குமிடையிலான உறவு நெருக்கமடைவதற்கான தேவை எழுந்துள்ளது. கடந்தகாலத்தில் நிலவிய சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் என்பது நலன்களுக்கு உட்பட்ட உறவு என்ற அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் சார்ந்தது. உலக அரசியல் முழுவதும் உறவின் அடிப்படையாக அவதானிக்கப்படுகிறது. கொடுக்கல் வாங்கலுக்கான கட்டமைப்பு அரசியலிலும் பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் சந்தையிலும் ஏன் அனைத்து அம்சங்களிலும் உறவினை தீர்மானிக்கிற விடயமாகும்.
இந்திய சீன பங்காளிகள் ஆக்குகின்ற செய்முறை ஒன்றுக்குள் செயல்பட தொடங்கி இருக்கின்றன. இந்த சூழலில் இலங்கை தீவில் பிரதானமான வெளியுறவுக் கொள்கை இவ்விரு நாடுகளையும் மையப்படுத்திய கடந்த இரு தசாப்தங்கள் காணப்பட்டுள்ளது. அதிலும் 2009க்கு பின்னர் மேற்குலக நாடுகளை விட சீன-இந்தியா நோக்கிய வெளியுறவின் பரிபாசையே இலங்கை தீவின் அரசியலைத் தீர்மானித்த முக்கிய அம்சமாக காணப்பட்டது. அவ்வப்போது மேற்குலகம் அல்லது அமெரிக்கா இலங்கை அரசியலுக்குள் ஊடுருவையும் செல்வாக்கையும் ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டி இருக்கிறது. ஆனாலும் இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளையும் எதிர்த்துருவங்களாக கணித்தே தென்னிலங்கையின் ஆட்சி மீதான விமர்சனங்களை ஈழத்தமிழர்கள் கொண்டிருந்தனர். குறிப்பாக ஈழத்தமிழர்களின் புலமைத்தளத்தில் இருந்தவர்கள் ஊடகத்தினர் எழுத்தாளர்கள் எல்லோருமே இந்திய-சீன எதிர்ப்புக்குள்ளால் இலங்கை தீவின் இருமுனை அரசியலை கட்டமைக்க முயன்றனர். ஆனால் இன்றைய நிலை இரு அரசுகளின் நட்புறவின் விளைவுகளை சார்ந்ததாக மாறுகின்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதனை விரிவாக தேடுதல் அவசியமானது
முதலாவது தென்னிலங்கை அரசியல் சக்திகளை பொறுத்தவரையில் சீனாவும் இந்தியாவும் சமதூரத்தில் அணுகப்படும் அரசியல் செல்நெறியைக் கொண்டிருந்தது. அடிப்படையில் சீனா மீதான பற்றுதி நடைமுறையில் இந்தியாவை அணுகுகின்ற அல்லது எதிர்கொள்ளுகின்ற மனோநிலை தென் இலங்கை ஆட்சியாளர்களிடம் தெளிவாக இருந்தது. இலங்கையின் நவீன வெளியுறவு கொள்கை கட்டமைத்த செல்டன் கெடிகார (Shelton U. Kodikara) அத்தகைய வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் முக்கியத்துவத்தை தெளிவாகவே இலங்கை ஆட்சியாளர்களுக்கு முன்வைத்திருந்தார். அதனை பின்வந்த காலப்பகுதியில் தென் இலங்கை ஆட்சியாளர்கள் பிரயோகப்படுத்தினார். சமகாலம் வரையும் இந்தியாவை மீறாத வகையில் ஆனால் இந்தியாவுக்கு எதிரான உபாயங்களை கொண்டு இந்தியாவை அணுகுகின்ற வெளியுறவுக் கொள்கையை தெளிவாக முன்னோக்கி நகர்த்தினர். அத்தகைய நகர்வுகளின் விளைவுகள் இந்தியாவையும் சீனாவையும் சமதூரத்தில் வைத்துக் கொள்வதற்கு அவர்களது வெளியுறவுக் கொள்கை வாய்ப்பை கொடுத்திருந்தது. ஆழமாக குறிப்பிடுவதால் சீனாவுடன் உறவை இந்தியாவுக்காக விட்டுக் கொடுக்காமல் இந்தியாவுடன் உறவை சீனாவுக்காக விட்டுக் கொடுக்காமலும் கட்டமைத்திருந்தனர். அடிப்படையில் சீன நட்பினை அவர்களது வெளியுறவு கடந்த இரு தசாப்த்தங்களில் வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் இந்தியாவை அணுகுவதும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதும் ஈழத்தமிழர் சார்ந்து இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்ற நோக்கமும் தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் தெளிவாகவே காணப்பட்டது. இதனால் இருதரப்பையும் தென்னிலங்கை முரண்பாடுகள் மத்தியில் ஒருங்கிணைவான அணுகுமுறையை கொண்டு செயல்பட்டது. தென் இலங்கை அணுகுமுறை அனைத்தும் இந்திய சீன தரப்புகளுக்கும் உடன்பாடாகவே இருந்தது. அத்தகைய உடன்பாட்டுக்குள்ளால் இலங்கையின் வெளியுறவு தீர்மானிக்கப்பட்டது. ஒருபுறம் ஈழத்தமிழருடைய அரசியல் மறுபக்கத்தில் இலங்கை தீவின் பொருளாதார விருத்தி ஆகிய இரு பரிமாணங்களும் தெளிவாகவும் நேர் நிலைக்குள்ளும் வெளியுறவை வடிவமைத்தது. இந்தியாவை பகைத்துக் கொள்ளாமல் சீனாவை அணுகியதும் சீனாவின் அருகிலிருந்து கொண்டு இந்தியாவை கையாண்டதும் பரஸ்பரம் ஒரு நெருக்கமான வெளியுறவுத் தன்மையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் இலங்கையின் வெளியுறவு முழுமையான இலக்கை நோக்கி நகர்ந்தது. இதனால் இலங்கைத் தீவின் தென்னிலங்கை ஆட்சி நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் அதனை வெற்றிகரமாக்கியது.
இரண்டாவது ஈழத்தமிழர் இந்தியாவையும் சீனாவையும் அணுகிய முறைமை மிகப் பலவீனமானதாகவே காணப்படுகிறது. அதற்கான அடிப்படை இந்தியா மீது நெருக்கமும் இந்தியா ஈழத் தமிழர் பொறுத்துக் கொண்டிருந்தது. இந்தியாவை கடந்து சீனாவுடனான நட்புறவை பற்றிய உரையாடலை ஏற்படுத்த தவறியது. அதற்கான அடிப்படை அரசற்ற சமூகங்கள் என்ற அடிப்படையில் ஏதோ ஒரு வல்லரசோடு அல்லது பிராந்திய அரசோடு அல்லது அரசோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற நியமத்துக்குள் ஈழத்தமிழர்களுடைய அணுகுமுறை காணப்பட்டது. அது மட்டுமன்றி சீனாவும் ஈழத்தமிழர்களை அல்லது இலங்கை தீவை வர்த்தக அடிப்படையிலான பரிமாணத்துக்குள்ளேயே அடக்கி விடுவதற்கு அல்லது பயன்படுத்திக் கொள்வதற்கு திட்டமிட்டது. இதனால் பரஸ்பரம் முரண் நிலை சீனாவோடு இயல்பாக வளர்ந்தது. இலங்கை தீவில் ஈழத்தமிழர்கள் முன்னெடுத்த ஆயுதப்போராட்டமும் விடுதலைப் பற்றிய உரையாடலும் சீனாவுடனான உறவை பலப்படுத்தி இருக்க வேண்டிய தேவைபாட்டைக் கொண்டிருந்தது. ஆனால் புவிசார் அரசியல் ரீதியில் காணப்பட்ட வலுவான நெருக்கமானது ஈழத்தமிழரை இந்தியாவை கடந்து வேறு அரசுகளை அணுகுவதற்கு தயக்கம் காட்டியது. இதனால் இந்தியாவை கடந்து ஏனைய அரசுகளோடு உறவு வைத்துக் கொள்ளாமை மட்டுமின்றி இந்தியாவுடனான உறவுகளும் பகைமை போக்கை 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலை ஏற்படுத்தியிருந்தது. அதனால் இந்திய தரப்பை ஈழத்தமிழர்கள் 2009 க்கு பின்னர் அணுகுவதிலும் அதற்கு முற்பட்ட அணுகுமுறை அல்லது விடுதலைப்புலிகள் கொண்டிருந்த அணுகுமுறையை பின்பற்ற முயன்றனர். அதில் ஈழத்தமிழர் மத்தியில் இருந்த தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய இரு தரப்புகளுக்கு இடையிலும் இழுபறிநிலை காணப்பட்டது. இது இந்தியாவுடனான ஈழத்தமிழரின் உறவில் பலவீனத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒட்டுமொத்தத்தில் சீனா-இந்தியா ஆகிய இரு சக்திகளோடும் ஈழத்தமிழர்கள் ஆரோக்கியமான உறவை கொண்டிருக்கவில்லை. ஆரம்பத்தில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியதும் ஆயுதங்கள் வழங்கியதும் அங்கீகாரம் கொடுத்ததும் இந்தியாவாக இருந்த போதும் பிற்பகுதியில் இந்தியா மீதான அணுகு முறையில் மாற்றம் ஈழத்தமிழர் ஆயுதப்போராட்டத்தில் ஏற்பட்டது. அது ஒரு தெளிவான இந்திய எதிர்ப்புவாதத்தை இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தின் போது ஏற்படுத்தியிருந்தது. இதனால் 2009 முள்ளிவாய்க்கால் நெருக்கடி என்பது இந்தியா விடுதலைப்புலிகளுக்கு எதிரான அணுகுமுறையாக அமைந்ததோடு அதனை அழித்தொழிப்பதில் இந்தியாவின் பங்கு தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. அதன் நீட்சி தற்போதும் காணப்படுகிறது. சமகாலத்தில் இந்திய எதிர்ப்புவாதம் கடந்த காலத்தில் கருநிலை அரச (Proto-State) கட்டமைப்பையும் வலுவான ஆயுதப்போராட்டத்தையும் கொண்டிருந்த போது நிலவிய அதே விம்பங்களோடு நீடிக்கிறது. ஆனால் ஈழத்தமிழரிடம் எத்தகைய வலுவும் அற்ற சூழலில் இந்திய எதிர்ப்பு வாதம் பேணப்படுகிறது. இது அரசியல் ரீதியில் ஈழத்தமிழரது தற்கொலைக்கு ஒப்பானதாகவே காணப்படுகிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையானது இந்தியா- சீனா -அமெரிக்கா- பிரித்தானியா- பாகிஸ்த்தான்- இஸ்ரேல்; போன்ற பல நாடுகளின் ஒத்துழைப்போடு தென்னிலங்கை அரங்கேற்றி இருந்தது. அதில் பிரதான பங்காளிகள் சீனாவும் இந்தியாவும். அத்தகைய ஒரு காலத்தை அரசியல் ரீதியில் மீளவும் சந்திக்கின்ற ஒரு நிலை ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி நிலவுகிறது. இந்திய எதிர்ப்பு வாதம் மட்டுமன்றி தென்னிலங்கையோடு உறவு கொண்டிருக்கும் இந்தியாவும் சீனாவும் ஒன்று சேருகின்ற போது அதன் தாக்கங்கள் ஈழத்தமிழருக்கானதாகவே அமைய வாய்ப்புள்ளது. முடிவாய்க்காலை இந்தியாவும் சீனாவும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டனவோ அதே சூழல் ஒன்று முள்ளிவாய்க்காலுக்கு வெளியே இலங்கை தீவுக்குள்ளும் இந்துசமுத்திரப் பிராந்தியத்துக்குள்ளும் பூகோள அரசியலுக்குள்ளும் ஏற்பட்டுள்ளது. அது பகை-முரணுடன் நிகழ்ந்தது. தற்போது பங்கேற்ப்பு உறவுடன் நிகழவிருக்கிறது. ஆகவே இன்னொரு முள்ளிவாய்க்காலை நோக்கியா சூழலை ஈழத்தமிழர்கள் எதிர்கொள்வதற்கான காலமாகவே இக்கால பகுதி தென்படுகின்றது. தென் இலங்கை-இந்தியா-சீனா கூட்டு சாத்தியமாக உள்ளது. இதனை எதிர்கொள்வதே ஈழத்தமிழருடைய அரசியலில் ஏற்படக் கூடிய அடிப்படையாகும். ஈழத்தமிழர் அரசியலில் ஒரு வடியும் தெளிவாக தென்படுகிறது. அதாவது இந்திய சீன கூட்டு என்பது அமெரிக்க எதிர்ப்பு வாதத்தை மையப்படுத்தியதாக அமைகின்றதனால் ஈழத்தமிழர் அமெரிக்க சார்பு நிலைக்குள்ளால் ஒரு மாற்றத்தை அடைய முடியுமா என்பது பிரதான அம்சமாகும். அதனை நோக்கி தெளிவான அரசியல் நடவடிக்கைகளை திசைப்படுத்த வேண்டும். அத்தகைய சூழல் பூகோள அரசியலுக்கு ஊடாக ஏற்பட வாய்ப்புள்ளது. தென்படும் வாய்ப்பினை பயன்படுத்தக் கூடிய வலிமை ஈழத்தமிழர்களின் அரசியல் பக்கத்தில் இருக்கிறதா என்பதும் இன்னொரு கேள்வியாகும். அவ்வகை வாய்பொன்று இருக்கிறது என்பதை அவதானிப்பதன் மூலம் அதனை அடைய முயற்சிப்பது அவசியமானது.
எனவே இரு பெரும் அரசுகள் முழு உலக மக்கள் தொகையில் 35 சதவீதத்தை கொண்டிருக்கும் இந்தியாவும் சீனாவும் உலக சந்தையினை நிர்ணயிக்கும் வலிமை இருப்பதோடு இந்திய சீன நட்பு என்பது வர்த்தகத்தைக் கடந்து அரசியல் பரிமாணத்திலும் நட்புறவை சாத்தியப்படுத்தும் போது அதிக அபாயத்தை தென்னாசிய நாடுகள் எதிர்கொள்ள நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எவ்வாறு சோவியத்யூனியன் வீழ்ச்சி அமெரிக்க-இந்திய உறவை பலப்படுத்தியதோ அத்தகைய நிலை ஒற்றுக்குள் சீன-இந்திய உறவு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதில் தென்னிலங்கை தப்பிக்கொள்ள முன்னேற்பாட்டுடன் நகருகின்றது. ஈழத்தமிழர்கள் மீண்டும் நெருக்கடியை எதிர்கொள்ளுகின்ற நிலை ஏற்பட அதிகமான சந்தர்ப்பங்கள் காணப்படுகிறது. ஈழத்தமிழர் கொண்டிருக்கும் இந்திய எதிர்ப்பு வாதமும் அமெரிக்காவின் இந்திய எதிர்ப்பு வாதமும் ஓரிடத்தில் சந்திக்குமாயின் ஈழத்தமிழர் அரசியல் மாற்றத்திற்கு உள்ளாகும். அதனை பயன்படுத்தக் கூடிய பலத்திலேயே ஈழத்தமிழர் அரசியல் தங்கியுள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
